கேமராவிலிருந்து….

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

லதாமகன்


கழிவறையின் விட்டத்தைப் பார்த்தான்
தூக்கில் அவன் தொங்கப்போவதில்லை
எனினும் பார்த்தான்
– ஆத்மா நாம்

o
டொம் என இரும்பில் மோதிய சப்தம் கேட்பதற்கு முன் அவன் ரயில்வாசலுக்கருகே நின்று கொண்டிருந்தான். காற்று புதிய வாசத்துடன் முகத்தில் மோதிக்கொண்டிருந்தது. இன்று எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டது எனத் தோன்றியது. கல்லூரி மாணவனுக்கு என்ன பிரச்சினை என யோசித்தால் ஒன்றுமே இல்லையென்றும் தோன்றியது. மழை பெய்ததற்கு பின்பான நாளொன்றில் குளிர் காற்று மோத மின்சார ரயிலில் வாசலில் நின்றுகொண்டிருப்பது இயற்கைக்கு செய்யும் சீரிய வந்தனம் என நினைத்துக்கொண்டிருந்தான். உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே காதிற்குள் ஆப்பிள் ஒலிக்கருவியின் உதவியில் ஒலித்துக்கொண்டிருந்தது. சொந்தக் காரை வீட்டில் வைத்துவிட்டு ரயிலில் நண்பர்களுடன் சாதாரணனாய் செல்வது ஒரு பெருமிதத்தைக் கொடுத்திருந்தது. என்னடா மாப்ளே என இழுக்கும்போது டொம் என்ற சப்தம் கேட்டது. பிறகு அவன் கைகள் கம்பியை பிடித்துக்கொண்டிருந்தன. கைகள் மட்டுமே பிடித்துக்கொண்டிருந்தன. உடல் ரயில் பாதையின் அருகில் அந்த மின்கம்பிக்கு அருகில் கிடந்தது.

o

என் அப்பா மாதிரி ஒரு நல்லவர நீங்க பாத்திருக்கவே முடியாது சார். அவர் அம்புட்டு நல்லவர். கோடம்பாக்கத்தோட எல்லா கதவுகளையும் எனக்காகத் தட்டித் தடவி உடைச்சு விரிச்சு எடுத்துத் தந்தவர். இதே விஷயங்களை நானும் பண்ணியிருக்கேன். இதே காரணத்துக்காக. ஒரு கோடி சம்பளமும் ஊருக்கு ஒரு ரசிகர் மன்றமும் நினைச்சு நினைச்சு கையடிக்க ஒரு லட்சம் ரசிகரையும் சம்பாதிக்க எவ்வளவு பேருக்கு நான் என்னவெல்லாம் செய்யவேண்டி இருந்தது தெரியுமா சார்? உங்களுக்கு புரியாது சார். எங்கப்பா ஒரு காலத்துல ஒரு விடுதியில அவர் வார்த்தைல சொல்லணும்னா இணைப்பாளரா இருந்தவரு. வேற ஒண்ணும் இல்ல. இப்ப வாய்ப்புக்காக என்ன வச்சுச் செய்யுற அதே விஷயத்த அன்னிக்கு வயித்துக்காக இருப்பத்து நாலு பேர வச்சுச் செஞ்சாராமா. இதுல என்ன தப்பு இருக்குனு சொல்லுங்க. வயுத்துப்பாட்டுக்கு வரவனுக்கு சமைச்சதக் குடுக்குற மாதிரித்தானே சார் இதுவும். விடுங்க சார். இது ஒரு வியாபாரம். இங்க எதுவுமே விக்காம இலவசமா கிடைக்கிறதுக்கு பெரிய ஆள் சொந்தமா இருக்கணும். அது எனக்கு இல்ல. பெரிய ஆள் சிபாரிசு இருக்கணும். அதுக்கு இதெல்லாம் செஞ்சுதானே ஆக வேண்டியிருக்கு. ஒரு மேடையில ஆயிரம் பேர் இருந்த இடத்துல துணியில்லாம போய் நின்னேன். எல்லாம் இந்த கோ-ஆர்டினேட்டரோட மொழி செஞ்ச சதி. அவன் சொன்னது எனக்கு புரியல. நான் சொன்னது அவனுக்கு புரியல. சரி துணியில்லாம போய் நிக்க சொல்றானாக்கும்னு போய் நின்னேன். அந்த கூட்டத்துல இருந்தவனுங்கல்ல பாதி பேர் என்ன ஏற்கனவே முழுசா பார்த்தவந்தான் சார். இதுல என்ன வெக்கம். இப்படி அப்படி எப்படியெல்லாமோ வாழ்க்கைபோயி இன்னிக்கு தற்கொலை பண்ணி பன்னிரெண்டு வருஷமும் ஆகிப்போச்சு. இன்னிக்கு எவளையோ போட்டு என் வாழ்க்கையப் படமா எடுக்கணும்னு நீங்க வந்துருக்கீங்க. ஒளஜா போர்டுக்கு நன்றியோட ஒண்ணே ஒண்ணு கேட்டுகிறேன் சார். தயவு செஞ்சு அவ கதையையும் இன்னொருத்திய வச்சு எடுக்கிறா மாதிரி ஆக்கிறாதீங்க. அம்புட்டுதான் சொல்லுவேன்.

o

தூரத்தில் நிலவொளியில் அத்தனை அழகாய் இருந்தது கோவில். புறாக்கள் இரவு நேரத்தில் எங்கு போய்விடுகின்றன என்பது ஒரு தீராத புதிர். என் தொழில் இரவில் நிகழ வேண்டியது. கடற்கரையில் இரவு நேரம்தான் தோதானது. யாராவது துரை புரியாத மொழியில் பிதற்றிக்கொண்டே இங்கு வந்து சேருவான். காந்தி படம் இல்லாத ரூபாய்த்தாள்களைக் கொடுப்பான். ஆரம்பத்தில் மறு நாள் காலைக்கடன்களுக்கு கொஞ்சம் சிரமமாய் இருந்தது. இப்போது அதெல்லாம் பழகிவிட்டது. காசு மட்டுமே குறி. முக்குச்சந்தில் நரசிம்மனிடம் கொடுத்தால் காந்திப்பட ரூபாய்களைக் கொடுப்பான். அம்மா ஒரு தீய்ந்த புன்னகையுடன் வாங்கிக்கொள்வாள். மறு நாள் சாப்பாட்டுக்கு கவலை இல்லை. கவலையெல்லாம் மறு நாள் இரவும் துரைகள் வரவேண்டுமே என்பது மட்டும்தான். மொழி அத்தனை சிரிப்பாய் இருக்கும். மூக்கிலிருந்துதான் பேசுகிறார்களோ என சந்தேகப்படுமாறு வாயைத்திறக்காமல் பேசுவார்கள்.முதல் நாள் தொழிலுக்கு வந்தபோது வயது பத்து. வாயெல்லாம் இரண்டு நாளுக்குக் குமட்டுவதுபோல் இருந்தது. பின்புறம் எரிச்சல். இதில் அவர்களுக்கு என்ன ஆசை எனத் தெரியவில்லை. என்னவோ செய்துவிட்டுப்போங்கள். தங்கை கார்ப்பரேஷன் ஸ்கூலில் ஆறாவது படிக்கிறாள். சங்குமாலைகள் சிப்பிகள் அப்பாவின் போதைக்கே சரியாக இருக்கும் நிலையில் அவளும் தொழிலில் தள்ளப்படாமல் இருக்க எனக்குத் தெரிந்த என் நண்பர்களுக்குத் தெரிந்த என் அப்பாவிற்குத் தெரிந்த முக்குச்சந்து நரசிம்மனுக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான். முதுகு கிட்டத்தட்ட கூன் விழுந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. பரவாயில்லை. வாருங்கள். குனிந்து நிற்கிறேன்.

o

வாடா என் இவனே? அறிவுரை சொல்றல்ல? உங்கவீட்டுல வேலைக்காரியா இருக்குறேன் வரியாடா? என்னடா முழிக்கிற? ஒரு அஞ்சுரூபா கொடுக்கவக்கில்ல உனக்கு என்னாத்துக்குடா வெட்டி வீம்பு, உலகத்த திருத்துற ஆச? சரி என்ன வச்சுகிறியா? சரி வேண்டாம் கலீஜ் பேசுனா உனக்குப் புடிக்காது உத்தமபுத்திரன் கட்டிகிறியா? ஒரு பிரண்டுனு வீட்டுல அறிமுகப்படுத்துப்பாப்போம்? நான் இந்த மாதிரி மாறும்போது செஞ்சுகிட்ட ஆபரேஷனோட வீடியோ யூட்யூப்ல இருக்கு முடிஞ்சாபாரு. அதுக்கு எம்புட்டு காசு வாங்குனாங்கன்னு தெரியுமாடா நாயே? அது இந்த மாதிரி கைதட்டி ட்ரெயின்ல வாங்குன காசபோட்டு எங்கக்காமாரு கொடுத்த காசுதாண்டா. சரி எனக்கும் கம்ப்யூட்டர் தெரியும், ஒரு ஜெராக்ஸ் கடையில ரெண்டாயிரம் ரூபாக்கு வேலைக்கு சேர்த்துவிடுடா என் வாழ்க்கைபுல்லா உன் போட்டாவ என்னோட பூஜ ரூம்ல வச்சுகிறேன். ஆனா ஒன்னு அங்கயும் எவனாவது ஆட்டுனான்னா அறுத்துட்டுதான்டா மறு வேலை. நான் ஏற்கனவே அந்த மாதிரி அறுத்துட்டுதான் இவங்க கூட சேர்ந்தவ. தைரியம் இருக்காடா? குழந்தைக்கும் கிழவங்களுக்கும் ஆஸ்ரமம் கட்டி வாராவாரம் உதவி பண்றீங்களாமே? தெய்வத்துக்குதான் எங்களத்தெரியல. அது வானத்துல இருக்கு. உங்க முன்னாடி நீங்க போய்ட்டு வர ரயில்வேஸ்டேஷன்ல பஸ்டாண்டுல மார்கெட்டுல தெருவிலதான நாங்க சுத்துறோம். உங்களுக்கும் ஏண்டா எங்கள கண் தெரியல? என்ன பயம் உங்களுக்கு?

ங் வரிசையில் எல்லா வார்த்தைகளையும் பிரயோகித்து அவள் அவனைத் திட்டிக்கொண்டிருந்தபோது கொஞ்சம் தள்ளி வாசலின் அருகே வந்து நின்று கொண்டேன். காற்று இதமாக வீசியது போல் இருந்தது. இயற்கை அன்னையைப்பற்றி ஒரு கவிதையை எழுதி எல்லாருக்கும் குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டேன்.

o

இன்றும் மழை வராமல் இருந்தால் போதுமெனத் தோன்றியது. தூரத்தில் நாயொன்று விளக்குக்கம்பத்தை முகர்ந்து பார்த்துவிட்டு ஓடிக்கொண்டிருந்தது. பின்னாலேயே வேறு சில நாய்களும் . அருகிலிருந்தவளின் காலை உரசிப்பார்த்தேன். தட்டிவிட்டுவிட்டு புரண்டு படுத்துக்கொண்டாள். கொசுவலையை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கட்டினேன். தரையை முதுகு தொடும்படி கிழிந்திருந்த சாக்கின் இடங்களை நேர் செய்து கொண்டேன். அப்பா அனேகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் ஒட்டிய பாதையில் இருக்கலாம். அங்கு கொசுக்கள் அதிகம். இருட்டும். சில விசயத்தில் உபயோகமாகவே இருக்கும். பல இடங்களில் தொந்தரவு. யோசித்துப்பார்த்தால் திருவான்மியூர் நல்ல ஊர் என்றுதான் தோன்றியது. வயசுப்பெண்கள் இல்லாததால் பெரிதாய் எந்தத் தொந்தரவும் இல்லை. மழை பெய்தால் சாக்கைச் சுருட்டிக்கொண்டு ஓடி ஒளிவதற்குத்தான் இடமில்லை. சிக்னலிலிந்து டைடல் ரயில் நிலையம் போவதற்குள் தெப்பலாக நனையவேண்டியிருக்கும். ரயில் நிலையத்திற்கு உள்ளேயோ வெளியேயோ படுக்கமுடியாது. அந்தச் சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு கவுரவக் குறைச்சல் போல் முகம் சுழிப்பார்கள். பயப்படுவார்கள். காவலர்களைவிட்டு விரட்டுவார்கள். படுக்க முடியாமல் இரவெல்லாம் நின்றுகொண்டிருக்க வேண்டியிருக்கும். சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தச் சாலையில் வேலைசெய்யும் எவனுக்காவது எவளுக்காவது தங்கத்தில் தொங்குகிறதா என கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். மேல் சாக்கை இழுத்துப் போர்த்திக்கொண்டபோது ஓட்டையின் வழியே நிலா தெரிந்தது.

o

”பிரேம் ரமேஷோட சொல்லிலிருந்து ஒரு சொல் இருக்காப்பா?” கேட்கும்போதும் சுரத்தின்றி அவன் பிரியாணி பொட்டலத்தை பிரித்துக்கொண்டிருந்தான். புத்தக அடுக்கின் மறைவு வசதியாக இருந்தது. தொண்ணூறு டிகிரியில் ஒரு காலை மடித்துவைத்திருந்தான்.

‘அதெல்லாம் தெரியாது சார். நீயே தேடிப்பார்த்துக்கோ. தோ.. இங்க இருக்கிறதெல்லாம் இருபது. அது முப்பது. அந்தபக்கம் அம்பது” நிம்மதியா சாப்டக்கூட வுட மாட்றானுவோ. பிரியாணி அறுபது ரூபாயாமா.. குஸ்கா நாப்பது ரூபா.. இந்த நாதாரிங்க முக்கி முக்கி ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்குதான் வாங்குதுங்க. நமக்கு அம்பதுதான் கிடைக்குது.

‘தஞ்சைபிரகாஷ் கட்டுரைகள் பிளாட்பாரத்துலையே கிடைக்குதுன்னு லதாமகன் எழுதியிருந்தாருப்பா” இவனை என்ன செய்வதெனத் தெரியவில்லை. கண்காட்சிக்கு உள்ளே சொல்லிலிருந்து ஒரு சொல் 225. இங்கே வெறும் 50க்கு கிடைக்கும். கிடைத்துவிட்டால் நாமும் ஒரு விமர்சனம் எழுதிவிடலாம்.

“அய்ய! இன்னாசார் ரப்சர் பண்ற.. உன்னா மாதிரி ஆளுக்குத்தானே எதிர்ல அம்புட்டு பெரிய புக்ஸ்டால் போட்றுக்கானுங்க. அங்க போ சார். சொல்லாட்ட சொல்லா? எல்லா சொல்லும் கிடைக்கும். அங்கே போ சார்” ஒரு பீஸ்க்கு வழியில்லாம குஸ்காதின்றவண்ட வந்து கொலயாகொல்றாணுங்கப்பா!

o

சில நியாயங்களை வேடிக்கைபார்க்கும் நீங்கள் புரிந்து கொள்ளவே முடியாது. சில விஷயங்கள் ஏன் இப்படி இருக்கின்றன நீங்கள் யோசிப்பதே இல்லை. சில உண்மைகளை யாரும் பிறருக்கு விளக்கிவிடவே முடியாது. சில துரோகங்களை நிச்சயமாய் நீங்களும் செய்திருப்பீர்கள். சில பறவைகளின் வானம் யார் கண்ணுக்கும் படுவதே இல்லை. சில ரகசியங்களைச் சொல்லும்போது நான் என்றோ நாம் என்றோ சொல்லத்தயங்கி நீங்கள் என்றே சொல்லத் தலைப்படுகிறேன்.

o
கனவில் தற்கொலை செய்து கொண்டால் நினைவுலகத்திற்கு போய்விடலாம் என இன்செப்ஷன் பாடம். அதைத்தான் செய்யப்போகிறேன். இந்தக் கனவுலகம் எனைச்சித்ரவதை செய்கிறாது. எப்போதோ எடுத்து எல்லாவிருதுகளையும் வாங்கிக்கொடுத்த புகைப்படங்கள் இப்போது எனது கேமராவிலிருந்து தானாக விழத் தொடங்கியிருக்கிறது. சில பல மாற்றங்களுடன். தோள் சாய்ந்து புன்னகைக்கும் மனைவி எனக்குப்பைத்தியம் என வெள்ளை உடை பாதிரியாரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். வழுவழு முகத்துடன் இருக்கும் மகன் மீசை தாடியுடன் எனை அறையில் அடைத்துவைக்கிறான். என் கேமராமுன்னால் ராணுவத்தினரிடம் குண்டடி பட்டுச் செத்த சிறுமி ரத்தக்காயங்களுடன் கேமராவிலிருந்து வெளிவந்து சிரிக்கிறாள். நிர்வாணமாய் துப்பாக்கி முனையில் கைகள் கட்டப்பட்டு இருந்த அவன் என் கன்னத்தில் அறைகிறான். குழந்தைக்கு அருகில் பசியுடன் நின்றிருந்த கழுகு எனை நோக்கி சிறகசைக்கிறது. முதுகில் தீப்பற்ற அலறியபடி ஓடிவந்த ஐந்து வயதுச் சிறுமி கேமராவிலிர்ந்து முலைகள் குலுங்க எனை நோக்கி ஓடிவருகிறாள் குமரியாக. போபாலில் புதைக்கப்பட்டு வெள்ளைக்கண்களுடன் இருந்த குழந்தைக்கு கருவிழிகள் முளைத்து கண்ணீர் வழிகிறது அதிலிருந்து. மரணமடைந்தவர்கள் எல்லாரும் புகைப்படத்திலிருந்து வெளிவருகின்றனர் உயிருடன். என் மரணம் மட்டும் இந்தக் கனவிலிருந்து எனை விலக்குமென சுருக்குக் கயிற்றை சரி செய்கிறேன். புன்னகையுடன்.

o

Series Navigation

லதாமகன்

லதாமகன்