கேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

அரவிந்தன் நீலகண்டன்


கேப்ராவின் இந்நூல் ஒருவிதத்தில் அவரது முந்தைய நூலான ‘Web of Life ‘ இன் பரிணாம தொடர்ச்சி என்றே கூறலாம். முதல் 80 பக்கங்கள் உயிர் மனம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றின் பரிணாமத்தையும் அவற்றின் இயற்கையையும் குறித்ததோர் பார்வையினை வழங்குகின்றன. பொதுவாக உயிரின் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிகளும் சரி பொதுப் பிரக்ஞையின் பார்வையும் சரி மைய மூலக்கூறுகளான DNA-RNA ஆகியவற்றின் பரிணாமம் மற்றும் உருவாக்க சாத்தியகூறுகளை குறித்தவையாகவே உள்ளன. கேப்ரா செல்களை சுற்றி அமையும் சவ்வமைப்புகள், அவற்றின் பண்புகள் மற்றும் அவை மற்ற செல்களோடும் சூழலோடும் உருவாக்கும் உறவுகள் அதனின்றும் உருவாகும் முகிழ்த்தெழும் பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் உயிரின் பரிணாமம் மற்றும் இயற்கை குறித்ததோர் பார்வையினை முன்வைக்கிறார். புகழ்பெற்ற உயிரி-இயற்பியலாளரும் வெப்ப-இயங்கியல் சார்ந்த அறிதல் மூலம் உயிரின் பரிணாம வளர்ச்சியை அறியும் சாத்தியகூறுகளை ஆராய்ந்த ஹெரால்ட் மோரோவிட்ச்சின் ஆய்வுகள் மற்றும் நூல்கள் இப்பார்வையை உருவாக்குவதில் கேப்ராவுக்கு நன்றாக கை கொடுத்திருக்கின்றன. (ஸ்பைனோச இறைத்துவத்துடன் இணைந்ததோர் இயக்கமாக பரிணாமத்தை சிந்திப்பவர் மோரோவிட்ச். ஆழ்மையான கவிதைத்தன்மை அவரது எழுத்துக்களில் பல இடங்களில் வெளியாவதை காணலாம். உதாரணமாக, ‘உள்ளுறை இறையின் கடவுத்தன்மையாக வெளிப்படுவதே நம் மனதின் பரிணாமம் ‘.)

மூலக்கூறு உயிரியலின் மையக்கோட்பாட்டிற்கும் அப்பாலான முழுமையானதோர் அமைப்பாக மரபணுக்கணத்தை (Genome)காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியவர் பார்பாரா மேக்கிளிண்டாக். குறுகியல் பார்வை ஒரு பார்வையே அன்றி அதுவே முழுமையான யதார்த்தம் என கொள்வது தவறு என்பதை மிகவும் வலியுறுத்திய மரபணுவியலாளர் அவர்.மரபணுக்கணத்தின் முகிழ்த்தெழும் குணாதிசயங்கள் ஆராய்ச்சி செய்யப்படவேண்டியவை மேக்கிளிண்டாக்கை போலவே கருதும் கேப்ரா அத்தகைய முழுமைப்பார்வையை இன்றைய உயிர்-தொழில்நுட்ப போக்குக்கு மாற்றாக முன்வைக்கிறார். மரபணு என கருதப்படுவது உண்மையில் அணு-அமைப்புத்தன்மை கொண்டது என்பதற்கு மாற்றாக ஒரு இயக்கத்தன்மை கொண்டது எனும் பார்வையும் கேப்ராவால் கூறப்படுகிறது. கேப்ராவினை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட ஒற்றைத்தன்மை கொண்ட பார்வையால் அத்திசையிலேயே வளரும் தொழில்நுட்பங்கள் நம்மை ஒர் உண்மையின் பல பரிமாணங்களுக்கு அழைத்துச்செல்ல தவறிவிடுகிறது. இதன் விளைவாக நாம் சமுதாய அளவில் தவறான, ஆபத்தான பாதைகளில் அழைத்துச் செல்லப்படுகிறோம். லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு செயல்படும் முதலாளித்துவ அமைப்புகளில் இம்முனைப்பு வெகுவாக காணப்படுகிறது. இன்றைய உலகமய சூழலில் பன்னாட்டு முதலாளித்துவ அமைப்புகளிலோ இது வளரும் நாட்டுச்சமுதாயங்களுக்கு உயிர் அபாயமாகவே விளங்குகிறது எனும் வாதத்தையும் கேப்ரா முன்வைக்கிறார். இதில் கேப்ரா கணக்கில் எடுத்துக்கொள்ளாத சில அம்சங்கள் உள்ளன. உதாரணமாக விவசாயத்தை எடுத்துக்கொள்ளலாம். ‘பசுமை புரட்சி ‘ எனும் வேதி-வேளாண்மையினால் ஏற்பட்டுள்ள தீமைகளை கேப்ரா கூறுகிறார். இன்று வேதி-வேளாண்மையின் முக்கிய அச்சான வேதி-உரங்களுக்கான விலைகளில் அரசு அளிக்கும் மானியங்களே வேதி-வேளாண்மையின் அதி-ஆற்றல் உள்ளிடப்படும் தன்மையை விவசாயிகள் அறியாவண்ணம் செய்கிறது. அரசு மானியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வேதிவேளாண்மையில் இந்த போலியான இலாபகர தோற்றமே மாற்று வேளாண் தொழில்நுட்பங்கள் பரவலாக முக்கிய தடையாக உள்ளது. இந்நிலையில் மானியங்களையும் சகாய விலைகளையும் நீக்க அரசு எடுக்கும் எந்த முடிவையும் எதிர்ப்பவர்கள் வளரும் நாடுகளைச் சார்ந்த (இட-வல பேதமின்றி) அரசியல்வாதிகள். கேப்ரா காட்டும் ‘பன்னாட்டு நிறுவனங்கள் vs வளரும் நாடுகளின் சமுதாயங்கள் ‘ எனும் சமன்பாடு உண்மையில் பல சிக்கலான (அதிகாரம் சார்ந்த) உறவுகளையும் உள்ளடக்கியது. மேலும் தைவான் மற்றும் தென் கொரிய நாடுகளின் முதலாளித்துவம் சார்ந்த வளர்ச்சியினையும் அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள சூழலியல் மாசுகளையும் தொடர்பு படுத்துகிறார் கேப்ரா. ஆனால் வளரும் நாடுகளின் சூழலியல் பிரச்சனைகளில் பல வறுமையால் ஏற்படுவன என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள்- உலக மயமாக்கல்-முதலாளித்துவம் ஆகியவற்றின் விளைவாக பண்பாட்டு பன்மையும், சமுதாய அமைப்புகளும் இன்று அபாயத்திற்குள்ளாகி இருப்பது தெளிவான அபாயம். ஒற்றைத்தன்மை கொண்ட பொருளாதார விதிகள் இன்று உலகெங்கிற்குமாக அமலாக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த உலகமயமாகி வரும் பொருளாதரத்தின் இயற்கையை மாற்றும் முகிழ்த்தன்மைகள் தகவல்தொடர்பு வலைப்பின்னல்களிலிருந்து எழும் வாய்ப்புள்ளதா ? எனும் சாத்திய கூறினை ஆராய்கிறார் கேப்ரா.

உயிரின் இயற்கையை அறிய கேப்ரா தன் வாசகர்களுக்கு முன்வைக்கும் மேதமை மோரோவிட்ச்சுடையதென்றால், உலகமயமாக்கலையும் முதலாளித்துவத்தின் இயற்கையும் வெளிக்கொணர அவர் மானுவேல் காஸ்டெல் எனும் சமூக அறிவியலாளரை பயன்படுத்துகிறார். தகவல் தொழில்நுட்ப புரட்சியுடன் இணைந்து பரிணமித்துள்ள புதிய முதலாளித்துவத்தின் முக்கிய குணாதிசயங்களாக மூன்று விஷயங்களை காஸ்டெல் முன்வைக்கிறார். அவையாவன: அ) உலகளாவிய பொருளாதார இயக்கம், ஆ) இவ்வமைப்பின் உற்பத்தித்திறன் மற்றும் போட்டியிடும் திறன் ஆகியவை படைப்பாக்கத்திறமை, அறிவு உற்பத்தி மற்றும் தகவலுருவாக்கும் திறன் ஆகியன சார்ந்தது இ) வர்த்தக வலைப்பின்னல்கள் வகிக்கும் முக்கிய பங்கு.

இத்தகையதோர் பொருளாதாரம் தன்னளவிலேயே நிலைத்தன்மையற்றதாக இருப்பதால் ஏற்படும் சலனங்களை உள்வாங்கி ஜீரணிக்கும் ஆற்றலை பெரும் நிறுவனங்கள் பெற்றுள்ளன என்பதையும் அந்த வசதியற்ற சமுதாயங்கள் உலகவங்கி மற்றும் சரவதேச பண அமைப்புகளின் கைமுறுக்கலுக்கு பணிய வேண்டி உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். உயிர் தொழில்நுட்பம் குறித்த கேப்ராவின் பார்வைகள் முக்கியமானவை. மரபணுக்கள் குறித்த நம் அறிவு, குறிப்பாக மரபணுக்கள் ஓர் உயிரின் வளர்ச்சியில் அது உருபெறும் விதத்தில் எவ்வித பங்காற்றுகிறதென்பது குறித்து நாம் அறியவேண்டியதன் அளவினை கேப்ரா கோடிட்டுக் காட்டுகிறார். மரபணுத்துவ தீர்மானித்தன்மையே (Genetic determinism) இன்றைய பெரும் வர்த்தக அமைப்புகளால் கைகொள்ளப்படும் மரபணு-உயிர் தொழில்நுட்பங்களுக்கு அடிப்படை அளிக்கிறது என்பதையும் அந்த அடிப்படை பார்வையே அறிவியலால் கேள்விக்குறியாக்கப்படுகிறது என அவர் விளக்குகிறார்.

இறுதியாக அவர் முன்வைக்கும் பார்வை அனைத்து மானுடத்திற்கும் பயனளிக்கும் வளம் குன்றா வளமைக்கான பாதை தொழில்நுட்பம் சார்ந்ததன்று மாறாக மதிப்பீடுகள் சார்ந்தது என்பதே. எத்தகைய மதிப்பீடுகள் ? பன்மரபுசார்ந்த இயற்கையிலிருந்து வேர் பிரியா முழுமைத்தன்மை கொண்ட அறிவியல் மதிப்பீடுகள். இவற்றை நாம் பள்ளி நிலையிலேயே நம் அறிவியல் பாடங்களுக்கு அளிப்போமெனில், முழுமையான அறிதல் சார்ந்த வலைப்பின்னல்களை உருவாக்குவோமெனில் அதிலிருந்து முகிழ்த்தெழும் தன்மைகள் தொழில்நுட்பங்கள் பொருளாதார அமைப்புகள் வளங்குன்றா வளமையை ஏற்படுத்தலாம். இதுவே கேப்ராவின் இந்நூலின் மையகதியாக விளங்குகிறது. வளங்குன்றா வளர்ச்சி காண உழைக்கும் களப்பணியாளர்களுக்கும் அவ்வளர்ச்சிக்கான பார்வையை இலக்குகளை வடிவமைப்போர்க்கும் இந்நூல் உதவியாக விளங்கும். இந்நூலின் குறையாக அதிகமாக மேற்கு சார்ந்த சிந்தனைகளும், மேற்கத்திய சமுதாய-அரசியல்-சூழலியல் பிரச்ச்னைகளும் இடம் பெறுகின்றன. வளரும் நாடுகளில் (குறிப்பாக ஆசிய நாடுகளில்) கேப்ரா ஒரு கள-ஆய்வினை மேற்கொண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பாரதத்திலிருந்து வந்தனா சிவாவின் பார்வைகளே முன்வைக்கப்படுகின்றன. நம் குடியரசுத்தலைவரின் சமுதாயம் மற்றும் மதிப்பீடுகள் சார்ந்த தொழில்நுட்பம் குறித்த கருத்துக்கள் வளரும் நாடுகள் இன்றைய தகவல்-தொழில்நுட்ப புரட்சியையும் புதிய பொருளாதாரத்தை வளரும் நாடுகள் எதிர் கொள்வதையும் காட்டும் முக்கிய சிந்தனைகள். அவற்றினை கேப்ரா கணக்கில் எடுத்துக்கொண்டிருப்பாரேயெனில் இந்நூல் இன்னமும் சிறப்படைந்திருக்கும்.

இறுதியாக, முதலாளித்துவத்தின் அனைத்து குறைகளுக்கும் அப்பால் அது ஒரு திறந்த அமைவாக விளங்குகிறது. மார்க்சியத்தின் குறுகியல் அதற்கு இல்லை. எவ்வித சித்தாந்த பிடிப்பும் அற்றது அது. உதாரணமாக முதலாளித்துவத்திற்கு சித்தாந்த வேரளிக்க முற்பட்ட அயின்ராண்ட் எந்த மார்க்சியவாதியையும் போல புதிய இயற்பியலை எதிர்த்தார். ஆனால் முதலாளித்துவமோ தன் இயற்கையையே மாற்றியுள்ளது. மானுட விழுமியங்களை தன்னுள் இணைக்க முயலும் போக்கு மார்க்சியத்தைக் காட்டிலும் முதலாளித்துவத்தில் அதிகம் உள்ளது. ஆனாலும் இது போதாது. இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சியில் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை காணும் இன்றைய இடதுசாரி புல்லரிப்பிலோ அல்லது மும்பையில் அருந்ததி ராயின் நடிப்புத்தனமான ஆங்கில உரையில் காண்பது போன்றதான ஆழமற்ற உயர்குடித்தன சோஷலிச வேடங்களிலோ, முதலாளித்துவத்திற்கான மாற்று அல்ல. மாறாக ஆழமான (மத நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட) ஆன்மிக வேர் கொண்ட அறிவியல் பார்வையுடன் இசையும் தொழில்நுட்ப தேடல் அதற்கான அமைப்புகளை உருவாக்குதலில் அடங்கியுள்ளது. அதற்கு தேவை வாழ்க்கையையே சமர்ப்பண உணர்வுடன் சேவைக்கு அர்ப்பணிப்போர். உதாரணமாக லாரி பேக்கர், ஜெய்ப்பூரின் ஸ்ரீ ராமச்சந்திரா, அப்துல் கலாம் போன்றோர். கேப்ராவின் நூல் இதே கனத்துடன் பாரதம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு முழுமைத்தீர்வுகளை காட்டும் ஒரு நூலை தேட வைக்கிறது.

Frtijof Capra-The hidden Connections-2003 Harper Collins (India) Price: Rs 295/-

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்