கெஸ்ட்ஹவுஸ்

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

லாவண்யா


எனக்கு அந்தக் கட்டிடத்தை முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை. புதிதாக பெயின்ட் செய்த பளபளப்பில் மின்னிக்கொண்டு, பக்கத்தில் இரண்டு பெயர்தொியாத மரங்களால் லேசாய் அணைக்கப்பட்ட குழந்தைபோல நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் என்னவோ என்னை உறுத்திக் கொண்டிருந்தது. நான் வழக்கமாய்த் தங்குகிற ஹோட்டல்களுக்கு உறைபோடக்கூட காணாது இந்த அசட்டுக் கட்டிடம்.

ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு கையில் ஒன்று, தோளில் ஒன்று என சூட்கேஸையும் பையையும் தூக்கிக் கொண்டேன். சாலையைக் கடந்து கேட்டருகில் வந்தபோது, அங்கிருந்த செக்யூாிட்டி ஒரு அவசர வணக்கம் போட்டுவிட்டு என் பெட்டியை வாங்கிக் கொண்டான். பக்கத்தில் இருந்த காலிங்பெல்லை இரண்டு முறை அழுத்திவிட்டு விறுவிறுவென்று மேலே நடக்க ஆரம்பித்தான். கொஞ்சம் தயங்கி அவனைப் பின்தொடர்ந்தேன். சூட்கேஸைவிட பை அதிகமாக கனக்கிறதாய்த் தோன்றியது – இதை அவனிடம் கொடுத்திருக்கலாம்.

படிகள் மிகக் குறுகியதாய் இருந்ததால், சிரமப்பட்டு ஏற வேண்டியிருந்தது. தோளில் இருந்த பையை கையில் எடுத்துக்கொண்டு கவனமாய் அடிமேல் அடிவைத்து மேலேறியபோது சூட்கேசை உள்ளே வைத்துவிட்டு அவன் திரும்பி வந்து பையையும் வாங்கிக் கொண்டான். கடைசி படியில் கால்வைத்தபோது வீட்டினுள் இருந்து ஒரு புதியவன் வந்து ‘குட்மார்னிங் சார் ‘ என்றான். அவனுக்கு சிநேகமாய்த் தலையசைத்தபடி உள்ளே நுழைந்தேன்.

வீடு சுத்தமாக இருந்தது. நுழைந்ததும் மூன்று சோபாக்கள் போட்டு அதன் நடுவே கண்ணாடி மேசையும் சிகரெட்டுக்காகக் காத்திருக்கும் சாம்பல் கிண்ணங்களும். ஹால் சிறியதுதான், அதன் மூன்று மூலைகளையும் தொட்டபடி எளிய கதவுகள் – அவைதான் கெஸ்ட் ரூம்களாக இருக்க வேண்டும் – ஒன்று மட்டும் திறந்திருந்தது. மீதமிருந்த சொற்ப இடத்தையும் ஆக்கிரமிக்கும் பொிய டைனிங் டேபிள், அதன்மேல் இயற்கைக்காட்சி விாிந்திருக்க இன்றைய ஹிந்து பேப்பாின்மீது ஒரு ஆப்பிள் வைக்கப்பட்டிருந்தது. அங்கங்கே அலங்காரமாய் தொட்டிகள் அமைத்து அவற்றில் செடிகள் இல்லை, சுவாில் புாியாத நவீன ஓவியங்களும், ஒரு காலண்டரும் தொங்கிக் கொண்டிருந்தது. அல(ங்கார)மாாியில் எப்போதாவது உபயோகப்படுகிற கண்ணாடிக் கோப்பைகளும், பீங்கான் தட்டுக்களும். ஓரமாய் கதவில்லாத கிச்சன், அதற்குப் பக்கத்திலேயே மரம் தவழ்கிற பால்கனியும், அதில் ஒரு அநாவசிய மின்விசிறியும்.

புதியவன் என்முன்னே ஒரு நோட்டைக் கொண்டுவந்து நீட்டினான். என் பெயரும், முகவாியும் ஏற்கெனவே எழுதப் பட்டிருந்தது. வந்து சேர்ந்த நேரத்தை எழுதிக் கையெழுத்திட்டேன். அவன் பேனாவை வாங்கிக்கொண்டு, ரெஜிஸ்டரை மூடியபடி ‘லஞ்ச் வேணுமா சார் ? ‘ என்றான் ஹிந்தியில். மணி பார்த்துவிட்டு, ‘வேணும் ‘ என்றேன்.

‘ஒன் ஹவர்ல ரெடி பண்ணிடறேன் சார், இதுதான் உங்க ரூம் ‘ என்று திறந்திருந்த அறைக்குள் அழைத்துப் போனான். ஓரமாய் என் சூட்கேசும், பையும் வைக்கப்பட்டிருந்தது. எதையோ சாிபார்ப்பதுபோல் அறையை ஒருமுறை சுற்றிவந்து, கட்டிலுக்குக் கீழே இருந்த ஏஸியை முடுக்கிவிட்டு சத்தமில்லாமல் கதவைச் சாத்திப்போனான். மெல்லமாய் இயந்திரக் குளிர்காற்று பரவியது.

அதிகம் பழக்கப்படாத சென்னை வெய்யிலில் என் உடல்முழுக்க வியர்வை துளிர்த்திருந்தது. அறை முழுதும் குளிர் பரவ நேரமாகும் என்பதால் இரண்டு ஃபேன்களையும் முழுவேகத்தில் சுழலவிட்டேன். ஆசுவாசமாய் கட்டிலில் உட்கார்ந்துகொண்டேன்.

வெள்ளைவெளேரென்று மெத்தைக்கும், ஜன்னல்களுக்கும் உறை மாட்டியிருந்தார்கள். ஓரமாய் டிவி, எதிர்மூலையில் மேஜையும், குஷன் பதித்த நாற்காலியும். கட்டிலுக்குப் பக்கத்தில் சிறிய மேசை போட்டு அதில் ஃபோனும், ஒரு பாட்டிலில் ஜில்நீரும். அங்கேயும் ஒரு சாம்பல் கிண்ணம். இவர்களே என்னை சிகரெட் பிடிக்க வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது என்று நினைத்தபோது சிாிப்பு வந்துவிட்டது. சட்டையைக் கழற்றினபடி ஹேங்கர் தேடினேன். சுவாில் பதித்த மர அலமாாியுள்ளே இருந்தது. லுங்கிக்கு மாறிக்கொண்டு பாத்ரூமினுள் நுழைந்தேன்.

சிறிய குளியல் போடலாம் என்று நினைத்துப்போனது, உள்ளே வைத்திருந்த புத்தம்புதிய சோப்பு, ஷாம்பூ முதலான சமாச்சாரங்களைப் பார்த்ததும் நீண்டு பொிதாகிவிட்டது. திரும்பிவந்து உடைமாற்றிக்கொண்டபோது கிட்டத்தட்ட ஒருமணிநேரம் ஆகியிருந்தது. கதவு தட்டப்பட்டு திறந்ததும், ‘லஞ்ச் ரெடி சார், வாங்க ‘ என்றான் தட்டியவன். ‘கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் ‘ என்றேன். மீண்டும் படுக்கையில் சாய்ந்து கொண்டேன்.

முதலில் இருந்த அளவு இப்போது இந்த கெஸ்ட்ஹவுஸ் மேல் வெறுப்பு இருக்கவில்லைதான். ஆனாலும், சென்னை வரும்போதெல்லாம் கம்பெனி செலவில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி செளகர்யங்கள் அனுபவித்துவிட்ட மத்யமர் மனது இன்னும் சமாதானமாகவில்லை.

இந்த கம்பெனியில் சேர்ந்து சில மாதங்கள்தான் ஆகிறது. சென்னை, மும்பை என்று அடிக்கடி ஊர்சுற்றுகிற வேலை. வீடுவீடாய்ப் போய் பொருள்விற்கிற சேல்ஸ்கேர்ளுக்கும் எங்களுக்கும் அதிகம் வித்தியாசமில்லை. ஒவ்வொருமுறையும் வெவ்வேறு கஸ்டமர்கள், ஆனால் அதே பல்லிளிப்புகள், கூழைக் கும்பிடுகள், கான்ட்ராக்ட் கையெழுத்தாகிவிட்டால் சம்பிரதாய காக்டெயில் பார்ட்டிகள், கிடைக்காமல் போனால், ‘ஏன் தவறவிட்டாய் ? ‘ என்று மேனேஜர் நியமிக்கிற விசாரணைக் கமிஷன்கள், ‘அடுத்தமுறை கவனமாய் இரு ‘ என்று தலைக்குமேல் கத்தி தொங்கவிடுகிற அக்கறைத்தோல் போர்த்திய எச்சாிக்கைகள், எப்போதும் நெருப்பின்மேல் அமர்ந்ததுபோல தவிப்பான வாழ்க்கையாகிவிட்டது.

இந்த சிரமங்களுக்கு இடையே எனக்கு ரகசிய சந்தோஷம் கொடுத்த விஷயங்கள் – விமானப் பயணங்களும், நட்சத்திர ஹோட்டல்களும்தான். எனக்குத்தொிந்து என் உறவினர்களோ, நண்பர்களோ யாரும் விமானத்தில் போனதில்லை. பூமியிலிருந்து உயர்ர்ர்ர்ந்து பறக்கிறபோதும், கட்டிடங்களெல்லாம் சின்னச்சின்ன தீப்பெட்டிகள்போல காலுக்குக்கீழே தொியும்போதும் உலகத்தையே ஜெயித்துவிட்டதுபோல் ஒரு உணர்வு தோன்றும் பாருங்கள், அதற்கு இணைஇல்லை. அதுவரை நோில் பார்த்திராத பல கம்பீரமான கட்டிடங்களில்தான் ஒவ்வொருமுறை டூர் போகிறபோதும் என்னைத் தங்கவைத்தது கம்பெனி. விமானம் ஏறுகிற விநாடியிலிருந்து, திரும்பி வருகிற வரையில் எல்லாம் கம்பெனி செலவு. விதவிதமாய் சாப்பாடு, தேவைப்பட்டால் மதுபானங்கள், விரல் சொடுக்கினால் பணியாளர்கள் ஓடி வருகிற செளகர்யங்கள், ஊருக்குள் அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்துவர ஏஸி வாகனங்கள், அதுஇதென்று கம்பெனி விஷயமாக டூர் போகிறபோதெல்லாம் பைசா செலவில்லாமல் ராஜவாழ்க்கை வாழ்ந்து பார்க்கலாம்.

இத்தனைக்கும் டூர் போகிறபோதெல்லாம் வேலை ரொம்ப அதிகமாய் இருக்கும் – ஒரு நாளைக்கு பன்னிரண்டுமணி நேரம் கஸ்டமர்களிடம் பேசி, அவர்களுடைய முட்டாள் கேள்விகளுக்கெல்லாம் கோபப்படாமல் பதிலளித்து, பத்து வார்த்தைக்கு பதினைந்து பொய்கள் சொல்லி, அவர்கள் கேட்கிற அனைத்தையும் தருவதாய் கையிலடித்து சத்தியம் செய்து, பணவிஷயம் பேசி … ஒவ்வொரு தினமும் நேரம் போதாமல் கழியும். சில நாள்களில் அறைக்குத் திரும்பி வந்தபிறகும் வேலை இருக்கும். அந்த சமயங்களில் ஐந்து மணி நேரம் தூங்கினாலே அதிசயம், கண்கள் எாிய மறுநாள் மீண்டும் கழுத்துப் பட்டை கட்டிக்கொண்டு அடுத்த கஸ்டமாிடம் கெஞ்சப் போகவேண்டியிருக்கும்.

இந்த கஷ்டங்களுக்கெல்லாம் கூலிதருவதுபோல, பாலைவன வெம்மைக்கு இடையே நிழல்மரமாய் இந்த ஹோட்டல்களும், விசேஷ கவனிப்புகளும். இத்தனையும் அனுபவித்துவிட்டு மீண்டும் பெங்களூர் சென்றுசேர்கிறபோதெல்லாம் தரையில் படுக்கிற வாழ்க்கையும், ஓட்டை வாகனத்தில் பயணமும் உறுத்தும். என்னதான் வேலைப்பளு அதிகமானாலும், அடிக்கடி டூர் போய்க்கொண்டிருக்கலாமே என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது.

இந்தமுறையிலிருந்து அந்த சந்தோஷத்தில் குறைபட்டுவிட்டது – சென்னையில் கம்பெனிக்கென்று சொந்தமாய் இந்த கெஸ்ட்ஹவுஸை வாங்கிவிட்டார்கள். இனி வேலைவிஷயமாய் சென்னை வரும்போதெல்லாம் இங்கேதான் தங்க வேண்டுமாம். கூடிய விரைவில் மற்ற நகரங்களிலும் கெஸ்ட் ஹவுஸ் வாங்கிவிடுவார்களாம். ராகவன் நேற்று மாலை நான் கிளம்புவதற்குமுன் இதையெல்லாம் சொன்னபோது எனக்குள் மளுக்கென்று ஏதோ முறிந்தது. கம்பெனியில் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார்கள் என்று தொியவில்லை, ஒருவேளை ஹோட்டல்களில் தங்கியபோதெல்லாம் ரொம்ப ஆடம்பரமாய் செலவு செய்துவிட்டோமோ என்று யோசித்துப்பார்த்தேன். அப்படியும் இருக்கலாம்.

காரணம் எதுவானாலும், இனி நட்சத்திர ஹோட்டல்கள் இல்லை. எந்நேரமும் உதட்டில் சாயமும், சிாிப்பும் அணிந்த பளீர் பெண்கள் வரவேற்பதற்கு இல்லை, காலை எழுந்தவுடன் சல்யூட் வைத்து நியூஸ் பேப்பர் இல்லை, எப்போதும் சீருடை அணிந்து பவ்யமாய் தலைகுனிந்து பேசுகிற பணியாளர்கள் கிடையாது, நினைத்தபோதெல்லாம் சுவர் ஃப்ாிட்ஜிலிருந்து லிம்கா எடுத்துக்குடிக்க முடியாது, மலேசியா, தாய்லாந்து, சைனா, ஃப்ரான்ஸ் என்று ரகம் ரகமாய் உலகஉணவுவகைகள் முயன்று பார்ப்பதற்கு இல்லை, கைவைத்தாலே உள்ளே புதைகிற மெத்மெத்தைகள் இல்லை, அவ்வளவு ஏன், லிஃப்ட்கூட கிடையாது, படிகளில் ஏறிதான் வரவேண்டும். அந்த நினைப்பே ரொம்ப கஷ்டமாய் இருந்தது. இனிமேல் முழு ஈடுபாட்டோடு வேலைசெய்யமுடியுமா என்றுகூட சந்தேகப்பட்டேன்.

பசித்தது. எழுந்து வெளியே வந்தபோது அவன் காத்துக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அவசரமாய் தட்டுக்களை ஒழுங்கு செய்து ஃபேனைப் போட்டான். எட்டுபேர் உட்காரமுடிகிற அந்த மேசையில் நான் ஒருவன் மட்டும் உட்கார்ந்திருப்பது கொஞ்சம் அசெளகர்யமாய் இருந்தது. ஒரு சமயத்தில் மூன்றுபேர்தான் தங்கமுடியும் இங்கே, எதற்கு எட்டு நாற்காலிகள் போட்டார்கள் என்று யோசித்தேன்.

என்முன்னே நான்கு பாத்திரங்கள் கமகமத்தது, ஒவ்வொன்றாய்த் திறந்துபார்த்தபோது, தாளித்த பருப்பு, இரண்டு வகைப் பொாியல்களும், சாதமும். ஓரமாய் ஒரு கிண்ணத்தில் தயிர் இருந்தது. சாதம் போட்டுக்கொள்ள நினைத்தபோது அவன் உள்ளேயிருந்த சுடச்சுட இரண்டு சப்பாத்திகள் கொண்டுவந்து வைத்தான். எண்ணை இல்லாமல் செய்த சப்பாத்திகள், அவற்றிலிருந்து இன்னும் ஆவி மிதந்து கொண்டிருந்தது. டேஸ்ட் பார்ப்பதற்காக ஒன்றைப் பிய்க்கப்போய் கையைச் சுட்டுக்கொண்டேன், கையையும், சப்பாத்தியையும் நன்றாக ஊதிவிட்டு மெல்லமாய் பிய்த்து வாயிலிட்டபோது பிரமாதமாய் இருந்தது. பக்கத்திலேயே ஒரு கிண்ணத்தில் பருப்பையும் ஊற்றி வைத்தான் அவன், அதைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டபோது காரமும், சுவையும் கலந்து அசரடித்தது. வடக்கத்திக்காரர்கள் இந்த விஷயத்தில் கில்லாடிகள்தான் – இப்படி ஒரு சப்பாத்தி நான் இதுவரையில் சாப்பிட்டதில்லை.

இரண்டாவது சப்பாத்தியை முடிப்பதற்குள் அடுத்த இரண்டைக் கொண்டுவந்தான் அவன், ‘உன் பேர் என்ன ? ‘ என்றேன் ஹிந்தியில்.

‘அசோக் ‘ என்றான்.

‘சப்பாத்தி பிரமாதம் அசோக் ! ‘

*********

இப்படியாக சப்பாத்தியில் தொடங்கிய எங்கள் பழக்கம், நான் சென்னையில் தங்கியிருந்த இரண்டு வாரங்களில் இன்னும் நெருக்கமானது. நான் திரும்பிவருவதற்கு இரவு எந்நேரமானாலும் விழித்திருந்து சுடச்சுட சமைத்துக்கொடுத்தான். நான் கேட்டபோதெல்லாம் காபி வந்தது – பிறகு நான் கேட்காமலே அந்தந்த நேரங்களில் வந்தது. காலை என் அலாரத்தை முந்திக்கொண்டு ஆறரைக்கே கதவைத்தட்டி நியூஸ்பேப்பர் கொடுத்துவிட்டு, ‘ப்ரேக்ஃபாஸ்ட் என்ன வேணும் சார் ? ‘ என்று கேட்டான். அறையில் குடிநீர் குறைந்தபோதெல்லாம் எப்படியோ அவனுக்கு உடனே தொிந்துபோய் ஜில்லென்று இன்னொரு பாட்டில் வந்தது. நான்குநாட்களுக்கு ஒருமுறை அவனாக என் துணிகளைக் கேட்டு வாங்கிப்போய் துவைத்துக் கொண்டுவந்தான், பாரதிக்கு எங்கிருந்தோ வந்த கண்ணனைப்போல எனக்கு இன்னும் நிறைய செய்தான் அவன். பரவாயில்லை, ஹோட்டல்கள் அளவுக்கு வசதி இல்லை என்றாலும், நன்றாகவே கவனிக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன்.

என்னதான் கெஸ்ட் ஹவுஸ் ஆனாலும், வீடு என்பது ஹோட்டலைவிட ஒருபடி மேல் என்பது அடுத்த வாரத்தில் ஒருநாள் புாிந்தது.

முதல் நாளிலேயே அசோக் செய்த சப்பாத்தி எனக்கு ரொம்ப பிடித்துப் போயிருந்தது. அதுமட்டுமில்லை, பெங்களூாில் சப்பாத்தி கிடைப்பதில்லை, கிடைத்தாலும் எண்ணை வடிய மினுமினுத்துக்கொண்டு, அப்போதும் சாியாய் வேகாமல் வயிற்றுவலி உண்டாக்கும் சாத்தியங்களோடுதான் இருக்கும். பூாி உண்டு – ஆனால் அதன் ஜாதகமே வேறு, புஷ்டியான குழந்தைகள்போல எப்போதும் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கிற பண்டம் அது, சப்பாத்தியின் அமைதியான சமத்து அழகு அதற்கு வருவதில்லை. ஆகவே அசோக்கின் சப்பாத்தி – தால் (பருப்பு) இரண்டும் என்னை வசீகாித்ததில் ஆச்சாியம் இல்லை. ஊருக்குப் போவதற்குமுன்னால் அவனிடம் சமையல்குறிப்பு கேட்டுக்கொண்டுதான் போகவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

அங்கே இருந்தவரையில் மதியம், ராத்திாி – இரண்டு வேளையும் சப்பாத்தியோடுதான் என் சாப்பாடு துவங்கும். பத்து அல்லது பன்னிரண்டு சப்பாத்திகளையாவது சூடாக உள்ளே தள்ளியபிறகுதான் சாதம் சாப்பிடலாமா என்று யோசிப்பேன். பெயருக்கு கொஞ்சூண்டு சாதம் போட்டுக்கொண்டு தயிர் ஊற்றிக்கொள்வது, பொாியலையும் இரண்டு ஸ்பூனுக்குமேல் தொடுவதில்லை. அதற்குமேல் வயிற்றில் இடம் இருக்காது என்பதுதான் உண்மை. சில நாட்களில் அதுவும் முடியாமல், வெறும் தயிரைக் குடித்துவிட்டு நடக்கமாட்டாமல் நேராய்ப் போய் படுத்துக்கொண்டதும் உண்டு.

இப்படியே ஏழெட்டு நாட்கள் ஆனபிறகு ஒருநாள் இரவு, அப்போதுதான் சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்து படுத்திருந்தேன். கதவு மெல்லமாய் தட்டப்பட்டது. சோம்பலாய் எழுந்து கதவைத் திறந்தபோது அசோக் நின்றிருந்தான்.

‘என்ன விஷயம் அசோக் ? ‘ என்று சாதாரணமாய்க் கேட்டதும்தான் அவன் முகத்தில் ஒரு அடிபட்ட பாவனை இருந்ததைப் பார்த்தேன். ஏதோ சொல்லத்துடிப்பவன்போல அவன் உதடுகள் தயங்கி அசைந்தன. கண்களில் நீர் ததும்பி நின்றதையும் கவனித்தேன். என்ன ஆனது இவனுக்கு ?

அவன் என் கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘உங்களுக்குப் பிடிச்சது என்னன்னு சொன்னீங்கன்னா, அதையே சமைக்கறேன் சார் ‘ என்றான். எனக்கு ஒன்றும் புாியவில்லை. என்ன சொல்கிறான் இவன் ?

நான் பேசுவதற்குள் அவனே தொடர்ந்து, ‘எதுவா இருந்தாலும் பரவாயில்லை சார், சொல்லுங்க, யார்கிட்டேயாவது கேட்டுத் தொிஞ்சிகிட்டு செய்யறேன் சார் ‘ என்றான்.

‘என்ன சொல்றே அசோக், எனக்கு ஒண்ணும் புாியலை ! ‘ என்றேன். ஏதோ பொிதாய் நடந்திருக்க வேண்டும் என்பதுமட்டும் தொிந்தது.

அவன் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘டெய்லி நீங்க சப்ஜி சாப்பிடறதே இல்லை ‘ என்றான் மெல்லமாய். அவன் வாயால் அதைச் சொல்லிவிட்டதற்காக அவமானப்படுவதுபோல் அவன் தலை சட்டென்று தரையைப்பார்த்து விழுந்துவிட்டது.

என் ஹிந்தி அறிவு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான முப்பத்தேழரை வார்த்தைகளோடு நின்றுபோய்விட்டது. ஆகவே சப்ஜி என்றால் காய்கறி அல்லது பொாியல் என்பதைப் புாிந்துகொள்ளவே கொஞ்சநேரம் பிடித்தது எனக்கு. அதன்பிறகுதான் அவன் சொல்லவருவது விளங்கியது.

தினமும் சப்பாத்தியை மட்டும் சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்துவிடுகிறேனா, அதனால் எனக்கு அவன் செய்கிற சாப்பாடு பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டுவிட்டான். வடக்கில் ஒன்றிரண்டு சப்பாத்திகள் சாப்பிட்டுவிட்டு சாதமும் சாப்பிடுவார்களாய் இருக்கும். நான்தான் பட்டிக்காட்டான் பிட்சாக்கடை பார்த்ததுபோல் சப்பாத்திக்குள் விழுந்து எழுந்திருக்காமல் இருந்திருக்கிறேன்.

‘இல்லை அசோக், நீ செய்யற சப்ஜி நல்லாதான் இருக்கு ‘ என்றேன். என் குரல் எனக்கே பலவீனமாய்த் தோன்றியது. அவனும் சமாதானமாகவில்லை, ‘பரவாயில்லை சார், உங்களுக்கு எது பிடிக்கும்-ன்னு சொல்லுங்க ‘ என்றான் மீண்டும்.

எனக்கு கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. இவனுக்கு இருப்பது என்மேலான அக்கறையா, அல்லது தன்சமையல் நிராகாிக்கப்படுகிறதே என்கிற வருத்தமா ? வந்த விருந்தாளிக்கு சாிவர சமைத்துத்தர முடியவில்லை என்று நினைத்திருப்பான். பாவம்.

அவன் சமையலில் குறை இல்லை என்றும், பொதுவாகவே நான் சாதம், பொாியல் போன்றவை குறைவாகதான் சாப்பிடுவேன் என்பதையும் அவனுக்கு பொறுமையாய் சொன்னேன். அவன் நம்பியதாய்த் தொியவில்லை, ‘நிஜமாவா சார் ? ‘ என்றான் குழந்தைபோல கண்கள் விாித்து.

அப்பொதுதான் அவனை நன்றாக கவனித்தேன். சராசாிக்கும் குள்ளமான உருவம், நல்ல உடை அணிந்திருந்தும் கண்களில் ஏழ்மை இருந்தது. மீசை இல்லாமல் ஹிந்திபட மூன்றாவது ஹீரோ மாதிாி இருந்தான். கையில் ஒரு கரண்டி. நேராய் கிச்சனிலிருந்து வந்திருப்பானாய் இருக்கும்.

‘அசோக், டோன்ட் வொர்ாி ‘ – இதை எப்படி ஹிந்தியில் சொல்வது என்று எனக்குத் தொியவில்லை. ஆனால் அவனுக்குப் புாிந்துவிட்டது. ‘ஓகே சார் ‘ என்றான் மலர்ச்சியாய். நானே எதிர்பார்க்காத வேகத்தில் சமாதானமாகிவிட்டான் அவன். எதுவும் நடக்காததுபோல் ‘குட்நைட் சார் ‘ என்று சொல்லி அவனே கதவைச் சாத்திவிட்டான்.

கட்டிலில் வந்து படுத்தபோது மிகவிரைவாக நடந்துவிட்ட அந்த நிகழ்ச்சியை என்னால் நம்பவே முடியவில்லை. உள்ளே இனம்புாியாத நெகிழ்ச்சி பரவியிருந்தது. டூர் முடிந்து கிளம்புகிறபோது அசோக்குக்கு ஏதேனும் செய்துவிட்டுப்போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுநாள்முதல் சப்பாத்தியைக் குறைத்துக்கொண்டு சாதம் சாப்பிட ஆரம்பித்தேன். ரசம், குழம்பு எல்லாமே நன்றாகதான் செய்திருந்தான். தினமும் இரண்டு பொாியல் – காய்கறி அல்லது கீரை இருந்தது. பழரசம் இருந்தது, சுயசேணம் கட்டிக்கொண்ட குதிரைபோல இத்தனைநாளாய் இதையெல்லாம் கவனிக்காமல் இருந்திருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சாியம். இத்தனையும் என் பக்கத்திலேயே இருந்து அசோக் பாிமாறியபோது அவன் முகத்தில் தொிந்த சந்தோஷம் சிலிர்ப்பூட்டியது. அவன் நேசிப்பது அவனுடைய சமையலையா, பண்டங்களையா அல்லது என்போன்ற விருந்தாளிகளையா என்பது தொியவில்லை. ஆனால் ஒரு வேலைக்காரனாகமட்டும் இருந்து இதையெல்லாம் செய்யாமல், வருபவருக்கு விருந்தோம்புகிற ஒரு வீட்டுக்காரனின் மனோநிலையும், அக்கறையும் அவனுக்கு இருப்பது தெளிவாகப் புாிந்தது. சப்பாத்தி போலவே இதையும் இவனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

அதன்பிறகு நான்கைந்து நாட்கள்தான் நான் சென்னையில் இருந்தேன். கிளம்பும்போது அசோக்குக்கு நூறுரூபாய் கொடுத்தேன். மறுக்காமல் வாங்கிக் கொண்டது சந்தோஷமாய் இருந்தது. அடிக்கடி வருவேன் என்று உறுதி சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

*******

அடுத்த மாதமே சென்னையில் இன்னொரு வேலை வந்தது. அப்போது நான் வேறுவிஷயமாய் கொல்கத்தா போகவேண்டியிருந்ததால் எனக்குப் பதிலாக ரகுவரனை சென்னைக்கு அனுப்பினார்கள். மறக்காமல் அவனிடம் அசோக் பற்றி சொல்லி அனுப்பினேன்.

பத்துநாள் கழித்து திரும்பிவந்தபிறகு ரகுவரனும் அசோக் புகழ்பரப்பியாகிவிட்டான். சிக்கனும், மட்டனும், மீனும் அற்புதமாய் சமைக்கிறானாம் – எதுசெய்தாலும் வாயில் ஒற்றிக்கொள்ளலாம்போல் இருக்கிறதாம். சுக்குக் காப்பியிலிருந்து ஏஸி ாிப்பேர் வரைக்கும் என்ன கேட்டாலும் மறுக்காமல் செய்கிறானாம். ரகுவரனும், நானும் மாற்றிமாற்றி விளம்பரப்படுத்தியதில் எங்கள் ஆஃபீஸில் முகம் தொியாத அசோக் மிகப் பிரபலமாகிவிட்டான்.

இதெல்லாம் நடந்து ஆறுமாதமாவது ஆகியிருக்கும். ஒரு வெளிநாட்டு வங்கிக்கு மில்லியன் டாலர் மென்பொருள் விற்கிறவிஷயமாய் ரகுவரன் சென்னையில் பத்துநாளாய் டேரா போட்டிருந்தான். ஒரு கட்டத்துக்குமேல் அவனால் தனியாய் சமாளிக்க முடியவில்லை என்பதால் அவனுக்கு உதவுவதற்காக என்னை அனுப்பியது கம்பெனி.

அசோக்கை மறுபடி பார்க்கப் போகிற சந்தோஷம் எனக்குள்ளே இருந்தது. அப்போது குளிர்காலம் என்பதால் சகாயவிலையில் அவனுக்காக ஒரு ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டேன்.

********

டாக்ஸியில் நான் வந்து இறங்கியபோது செக்யூாிட்டி எங்கோ சாப்பிடப் போயிருந்தான். சூட்கேசை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு மேலேறினேன். இரண்டுமூன்றுமுறை காலிங்பெல் சத்தமிட்டபிறகுதான் கொஞ்சமாய்க் கதவு திறந்தது. தலையைமட்டும் வெளியே எட்டிப் பார்த்தது அசோக் இல்லை. தாடிவைத்துக்கொண்டு சந்தேகமாய் என்னை வெறித்தான் அவன். ‘யார் வேணும் ? ‘

‘மிஸ்டர். ரகுவரன் இருக்காரா ? ‘

அவன் பதிலேதும் சொல்லாமல் உள்ளே பார்த்துவிட்டு, ‘உங்க பேர் ? ‘ என்றான். எனக்குக் கோபம் வந்துவிட்டது.

‘ஹலோ, நானும் இங்கே தங்கறதுக்குதான் வந்திருக்கேன் ‘ என்றேன்.

‘முதல்ல உங்க பேரைச் சொல்லுங்க சார், எல்லாரையும் உள்ளே அலவ் பண்ண முடியாது ‘ என்று முறைப்பாய் சொன்னான் அவன். என்ன தைாியம் !

பாக்கெட்டிலிருந்து அடையாள அட்டையை எடுத்து அவன் முகத்தில் அறைவதுபோல் நீட்டினேன். எழுத்துக்கூட்டி என் பெயரைப் படித்துவிட்டு சட்டென்று முகத்தில் மலர்ந்த புன்னகையோடு, ‘வாங்க சார் ‘ என்று கதவை அகலத் திறந்தான் அவன். ‘காசில்லாதவன் வந்தால் கதவைச் சாத்தடி ‘ என்பதுபோல ஒரு பழம்பாடல் நினைவுக்கு வந்தது. அந்த விநாடியில், அது ஒரு வீடு இல்லை என்று தோன்றிவிட்டது எனக்கு.

கையெழுத்துப்படலம் முடிந்து என் அறைக்குப்போய் முகம்கழுவி உடை மாற்றிக்கொண்டேன். அந்த முரடன் மேலான என் எாிச்சல் இன்னும் குறைந்திருக்கவில்லை. யாாிடமாவது உடனடியாய் அதைக் கொட்டவேண்டும்போல் இருந்தது. வெளியே வந்து எதிர்ப்பக்கமிருந்த ரகுவரன் ரூம் கதவைத் தட்டினேன். ‘இட்ஸ் ஓபன் ‘ என்று உள்ளேயிருந்து குரல்மட்டும் வந்தது. தள்ளித் திறந்துகொண்டு உள்ளே போனபோது அரை டிராயர் அணிந்து கட்டிலில் சாய்ந்தபடி டிவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தவன் என்னைக் கண்டதும், ‘வாங்க சார் ‘ என்றான் சிாித்து.

அவனுடைய வரவேற்புக்கு பதில்மாியாதை செய்யும் பொறுமையெல்லாம் எனக்கு இருக்கவில்லை. கட்டிலின் இன்னொருமூலையில் அபத்திரமாய் உட்கார்ந்துகொண்டு, ‘ரகு, அசோக் எங்கே ? யார் இந்த தாடிக்காரன் ? ‘ என்றேன் நேரடியாய்.

அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தவன்போல் ரகுவரன் உடனடியாக மெளனமாகிவிட்டான். ஒரு நிமிடத்துக்குப்பிறகு, நான் பொறுமையில்லாமல், ‘ரகூஊ ‘ என்று சத்தமிட்டதும் நிமிர்ந்து, என்னை ஒருமுறை சங்கடமாய்ப் பார்த்துவிட்டு, ‘இவன்தான் கெஸ்ட் ஹவுசுக்கு புது சமையல்காரன், அசோக்கை சீட்டைக்கிழிச்சு அனுப்பிட்டாங்க ‘ என்று டிவியை அணைத்துவிட்டான். அமைதி அறையெங்கும் நிரம்பித் திணறியது.

‘வ்வாட் ? ‘ என் அதிர்ச்சியின் அளவு கொஞ்சநஞ்சமில்லை. அவன் சொன்னதை சுத்தமாய் நம்பமுடியவில்லை என்னால். கைவிரல்கள் நடுங்குவதுபோல் இருந்ததைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ‘என்ன ரகு சொல்றே, ஏன் அசோக்கை அனுப்பிட்டாங்க ? ‘ என்றேன்.

என்னுடைய உணர்ச்சிவெளிப்பாட்டையும் அவன் ஏற்கெனவே ஊகித்திருக்க வேண்டும். அதற்கான பதிலைக்கூட முன்பே தயாாித்துவைத்தவன்போல, முகத்தில் வெறுமையோடு பேசினான் அவன், ‘பொிசா ஒண்ணுமில்லை, போனவாரம் ஒரு சின்ன ப்ராஜக்ட் விஷயமா நம்ம ராதிகா இங்கே வந்திருந்தா, இதோ, அடுத்த ரூம்லதான் ரெண்டுநாள் தங்கியிருந்தா ‘

அவன் சொல்லிமுடிப்பதற்குள் என் கற்பனை எங்கெங்கோ பாய்ந்திருந்தது, ‘மஹாராணிக்கு அசோக் சாப்பாடு பிடிக்கலையா, உடனே ாிப்போர்ட் பண்ணி அவனை வெளியே அனுப்பிட்டாளா ? ‘, ஒரு ஆங்கிலக் கெட்டவார்த்தை என் வாயிலிருந்து அனிச்சையாய் உதிர்ந்தது.

‘அதெல்லாம் இல்லைப்பா, அவளுக்கும் அசோக் சமையல் ரொம்பப் பிடிச்சிருந்தது, என் ஹஸ்பண்ட் மட்டும் இதை சாப்பிட்டுப்பார்த்தார்ன்னா இங்கேயே பர்மனன்ட்டா தங்கிடுவார் ‘ன்னுகூட என்கிட்டே சொன்னா. ‘

நான் பொறுமையில்லாமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன், அசோக்கை வெளியே அனுப்புவதற்கு வேறு என்ன காரணம் இருக்கமுடியும் ? என் முகத்தைப் படித்துவிட்டவன்போல அவன் தொடர்ந்து சொன்னான், ‘உனக்குதான் தொியுமே, எப்போ டூர் போனாலும் ராதிகாவுக்கு ஒருநாளாவது ராத்திாி தண்ணியடிச்சாகணும். இங்கயும் ஒருநாள் அசோக்கைக் கூப்பிட்டு வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கா. அவன் மாட்டேன்னு சொல்லிட்டானாம். அதோட நிறுத்தியிருந்தா பரவாயில்லை, ‘ஆம்பளைங்கதான் தண்ணியடிச்சு கெட்டுப்போறாங்க, உங்களுக்கு எதுக்கும்மா இதெல்லாம் ‘ன்னு யோசிக்காம ஒரு அக்கறையிலே பேசிட்டான்போல. ராதிகாவுக்கு பயங்கர கோவம். பளார்பளார்ன்னு நாலஞ்சு அறை, கன்னாபின்னான்னு திட்டு. உடனடியா பெங்களூர்ல ராகவனுக்கு ஃபோன் பண்ணி இந்தப்பையன் என் பர்சனல் விஷயத்திலே தலையிடறான், ஒண்ணு இங்கே நான் இருக்கணும், இல்லை இவன் இருக்கணும்ன்னு ாிப்போர்ட் பண்ணிட்டா. இங்கேகூட வந்து கத்திட்டுப்போனா ‘

‘அப்புறம் ? ‘

‘அப்புறம் என்ன ? அடுத்தநாள் அசோக்கை போகச்சொல்லிட்டாங்க போலிருக்கு, நான் வேலைமுடிஞ்சு திரும்பிவந்தப்போ அவன் இல்லை. பாவம், எங்கே போனானோ தொியலை ‘ என்று சொன்னவனின் முகத்தில் நிஜமான சோகம் படர்ந்திருந்தது.

எனக்கு வருத்தப்படுவதா, கோபப்படுவதா என்று தொியவில்லை. எவ்வளவுதான் செய்தாலும் ஒரு வேலைக்காரனை, வேலைக்காரனாகத்தான் பார்க்கிறது உலகம். ஓரமாய் உட்கார்ந்து எல்லா வேலையும் செய்துகொடுத்துவிட்டு, வேறெதிலும் தலையிடாமல் அவனுக்குள்போய் கதவைச் சாத்திக்கொண்டுவிடவேண்டும். தான் வளர்க்கிற செடியின்மேல் பாசம்வைக்கிற தோட்டக்காரனின் உாிமைகூட அவனுக்கு இல்லை என்பது கொடூரமான வாழ்க்கை நியதியாகத் தோன்றியது.

கொஞ்சநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். திடாரென்று கதவு திறக்கப்பட்டது. ‘சாப்பாடு ரெடி ‘ என்று அறிவிப்புபோல சொல்லிவிட்டு உடனே கதவை சாத்திக்கொண்டான் தாடிக்காரன்.

ரகு வேகமில்லாமல் எழுந்து அலமாாியில் சட்டைதேட ஆரம்பித்தான், ‘நீ இன்னும் சாப்பிடலைதானே ? ‘ என்றான் எனக்கு முதுகுகாட்டியபடி.

‘எனக்குப் பசி இல்லை ரகு, நீ போய் சாப்பிடு ‘, நானும் எழுந்துகொண்டேன்.

கதவைத் திறக்கும்முன் யோசனையாய்த் திரும்பிப்பார்த்து, ‘இவன் சமையல் எப்படி இருக்கு ரகு ? ‘ என்றேன்.

ரகு கொஞ்சம் தயங்கினான். மூடின கதவை ஒருமுறை பார்த்துவிட்டு, ‘சகிக்கலை ‘ என்றான்.

எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அறைக்குத் திரும்பிவந்து ஏஸியை முழுவேகத்தில் திருப்பிவைத்துவிட்டு அசோக்குக்காக வாங்கிவைத்த ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு நன்றாகத் தூங்கினேன்.

***

Email : lavanya_baan@rediffmail.com

Series Navigation