கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

இளங்கோ


*
தெருமுனை வளைவில் கிடைக்கும்
சொற்ப நொடி அவகாசத்தில்
மிகச் சிறிய புன்னகையோடு
திரும்பிப் பார்க்கிறாய்
அப்போது
நான் அங்கு இல்லை..

0

என்ன சொன்னால்
எழுந்து வருவாய் என்கிறாய்
எதைச் சொன்னாலும்
எழுந்து வருவதாக இல்லை
என்
மௌனம்

0

அர்த்தங்களோடு மல்லுக்கட்டும்
அதிகாலையில்
வெப்பம் குறைந்த வெயிலாக
அறைக்குள் பிரவேசிக்கிறாய்
பேச இருந்த
எல்லா வாக்கியங்களுக்கு கீழும்
நிழல் பரவுகிறது

0

நீ
கூப்பிட்டும் கேட்டிராத குரலைப்
பற்றி
கண்ட கனவில்
இதழ்கள்
பூக்களில் கிழிந்து தொங்கின

******
–இளங்கோ

Series Navigation