குழந்தைத் திருமணமும், வைதீகமும்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

கற்பக விநாயகம்


****

தில்லியில் கலை,இலக்கிய உலகில் வெகு தீவிரமாய் இயங்கிக்கொண்டு, யதார்த்தா நாடகக் குழுவையும், வடக்கு வாசல் இலக்கியப் பத்திரிக்கையையும் நடத்தி வரும் பென்னேஸ்வரன் அவர்கள், மறைந்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பா குறித்த ஆவணப்படம் ஒன்றை, செல்லப்பா மறையும் முன்பே இயக்கி வெளியிட்டிருந்தார். அப்படத்தில் பல்வேறு தகவல்கள் சிறப்பாய் பதிவாகியிருந்தன. அவற்றுள் செல்லப்பாவின் திருமண வாழ்க்கை பற்றிய அவரின் நினைவுகூறல், சென்ற நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த குழந்தைத்திருமணம் பற்றிய புரிதலுக்கு மிகவும் உதவியது.

செல்லப்பாவுக்கு திருமணம் ஆனபோது அவரின் மனைவிக்கு மிகவும் குறைவான வயது. பருவ வயதைக்கூட அடையவில்லை. ஆவணப்படத்தில் அவரே அதைச் சொல்லுகிறார் ‘கல்யாணம் ஆன பின்னே, நான் மெட்ராசுக்கு வேலையா வந்துட்டேன். அப்போ மாமிய (அதாவது சி.சு.செ.யின் மனைவி), அவங்களோட தகப்பனார் வீட்டுல விட்டாச்சு. நான் மேன்சன்ல தங்கி இருந்து கொண்டு வேலைக்குப் போய் வந்தேன். ஒரு நாள் வேலை முடித்து விட்டு ரூமுக்கு வர்ரப்போ, என் பிரண்ட்ஸ் எல்லாரும் ஏற்கெனவே அங்கு வந்துட்டாங்க. ‘செல்லப்பா, ஹூம்…ஹூம்.. டிரீட் கொடுப்பா ‘ என்று பகடி செய்றாங்க. எனக்கு விசயம் விளங்கல.. ரொம்ப சஸ்பென்ஸ்க்கு அப்புறம், அவங்க கையில இருந்து ஒரு போஸ்ட் கார்டு வருது.. விசயம் என்னென்னா, மாமி வயசுக்கு வந்துட்டாங்க. இந்த விசயத்த எனக்கு ஊர்ல இருந்து அவாளோட தகப்பனார் தெரியப்படுத்தி அவளை அழைச்சிட்டுப் போகும்படி எழுதி இருந்தார். போஸ்ட் கார்டுல எழுதிருந்ததால, நண்பர்கள் லாம் படிச்சிட்டு, ரகளை பண்ணிட்டா. அப்புறம் என்ன. நல்ல ஓட்டலா ஒன்னப் பார்த்துப் போய் அதைக் கொண்டாடினேன் ‘. இதை செல்லப்பா சொல்லும்போது, அவரின் மனைவி வெட்கத்தில் மூழ்கும் உயிரோட்டமான காட்சி அப்படத்தில் பதிவாகி இருக்கும்.

****

சென்ற நூற்றாண்டில் 20, 30 கள் வரை குழந்தைத் திருமணம் இந்து சமூகத்தில் இருந்ததாகப் பல நூல்கள் சொல்கின்றன. இன்னும் வட இந்தியாவில் சில மாநிலங்களில் இம்முறை உள்ளது.

ஆனால் சென்ற நூற்றாண்டிலும் இவ்வழக்கம் இந்து சமூகத்தின் எல்லா சாதிகளிலும் இருந்ததா என்பது அய்யத்துக்குரியதே. உடல் உழைப்பை நம்பி இருந்த பெரும்பாலான விவசாயக்கூலிகள்/சிறு விவசாயிகள் மத்தியில் இது நடைமுறையில் இருந்ததா எனத் தெரியவில்லை. திருமண வயதை, சமூகப் பொருளாதாரக் காரணிகளே நிர்ணயித்தன.

எங்கள் கரிசல் வட்டாரத்தில் அக்கால கட்டத்தில் பெண்கள் வயதிற்கு வந்த பிறகே திருமணம் செய்திருக்கின்றார்கள். இப்பெண்கள் விவசாய நிலங்களில் ‘அத்தக் கொத்திற்கு ‘ (கொத்து – தானியமாகக் கூலி பெறுவது-கரிசல் வட்டாரச் சொல். அத்த – தினசரி) வேலைக்கு சென்றவர்களாய் இருந்தவர்கள்.

அதே நேரத்தில் பெரும் பண்ணையார் வீடுகளில் சிறுமிகளுக்கும் கூட திருமணம் செய்துவிக்கப்பட்டது.

குழந்தைத் திருமணம் பெருவாரியாக சாதி இந்துக்கள் மத்தியிலும், பார்ப்பனர்கள் மத்தியிலும் நடைமுறையில் இருக்க, அச்சமூகத்தில் இளம் வயதில் கணவனை இழந்த குழந்தை விதவைகளும் பெருகி இருந்தனர். அக்குழந்தைகள் சாகும் வரை வெள்ளைச்சேலை கட்டி, பல உணவுக் கட்டுப்பாடுகளோடு, அவலமான வாழ்வை வாழ்ந்து மாண்ட கொடுமை, சாஸ்திரத்தின் பேரில் நியாயப்படுத்தப்பட்டது.

****

இக்கால கட்டத்தில், பெரியார், ரிவோல்ட் எனும் ஆங்கிலப் பத்திரிக்கை நடத்தி வந்தார். 8/5/1929 தேதியன்று வெளியான ரிவோல்ட் ல் இந்தியாவில் அப்போது இருந்த விதவைகள் பட்டியல் காணப்படுகின்றது.

‘ஒரு வயதுக்குள்ளே விதவையானோர் => 497 பேர்; 2 வயதுக்குள்ளே விதவையானோர் -> 494 பேர்; 3 வயதுக்குள்ளே விதவையானோர் -> 1257; 4 வயதுக்குள்ளே விதவையானோர் -> 2837 பேர்; 5 வயதுக்குள்ளே விதவையானோர் -> 6707; 10 வயதுக்குள்ளே விதவையானோர் -> 85,037 பேர்; 15 வயதுக்குள்ளே விதவையானோர் -> 2,32,447; 20 வயதுக்குள்ளே விதவையானோர் -> 1,74,20,820 பேர்; ‘ (அப்போது இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி என்பதையும்,அதில் பெண்கள் 15 கோடி என்பதையும் நினைவில் கொள்ளவும்)

சென்னை மாகாணக் கணக்கும் இதற்குச் சளைத்ததல்ல.

‘5 வயதுக்குள்ளே விதவையானோர் => 1,211 பேர்; 10 வயதுக்குள்ளே விதவையானோர் -> 5,692 பேர்; 15 வயதுக்குள்ளே விதவையானோர் -> 22,337; 20 வயதுக்குள்ளே விதவையானோர் -> 54,699 பேர்; 25 வயதுக்குள்ளே விதவையானோர் -> 1,42,267; 30 வயதுக்குள்ளே விதவையானோர் -> 2,02,651 பேர்; ‘

****

பாரதியார், இவ்வழக்கத்தைச் சாடி நிறைய எழுதி இருக்கின்றார். அக்காலகட்டத்தில் இந்து சமூக சீர்திருத்தவாதிகள், இவ்வழக்கத்தின் தீமைகளை எடுத்துச் சொல்லி இதை ஒழிக்க முனைகையில், ஆங்கிலேய அரசு ‘சாரதா சட்டம் ‘ மூலம் 1929ல் குழந்தைத்திருமணத்தை குற்றம் என அறிவித்தது.

இச்சட்டத்தைக் கொண்டுவரப் பெரிதும் உழைத்தவர், இந்தியப் பெண்களிலேயே முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்றவரான முத்துலெட்சுமி ரெட்டியாவார். அவர் அப்போது சட்டமன்றத்தில் எம் எல் சி ஆகவும் பணியாற்றினார். அப்போது அவர் வைதீகர்களின் பெரும் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டி இருந்தது.

(தேவ தாசி ஒழிப்பு சட்டமும், டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டியால் முன்னெடுக்கப்பட்டது. அப்போது இவர், தீரர் சத்தியமூர்த்தி அய்யரால் கடுமையாக எதிர்க்கப்பட்டதும், திலகர் நிறுவிய ‘கேசரி ‘ பத்திரிக்கை, இச்சட்டத்தை எதிர்த்து கருத்துப்போர் நடத்தியதும் தனியாய் எழுதப்பட வேண்டியவை.)

****

முத்துலெட்சுமி ரெட்டி, பெரியாரின் ரிவோல்ட் பத்திரிக்கையில், 1/9/1929 ல் ‘A Heartrending Rape ‘ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை, குழந்தை மணத்தின் காட்டுமிராண்டித்தனத்தைப் படம் பிடிக்கின்றது.

‘பூப்பெய்தாத, 11 வயசு நிரம்பிய- நெல்லூரைச் சேர்ந்த-ஒரு சிறுமியை, ஆசிரியப்பணியிலிருந்த ஒருவருக்கு மணம் முடித்தனர். சில மாதங்களில் பெற்றோரிடமிருந்த அச்சிறுமியை ஏதேதோ சாக்குகள் சொல்லித் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்ட கணவன் இரண்டு மாதம் கழித்தபின், அச்சிறுமி பூப்பெய்தி விட்டதாக மாமனாருக்குத் தெரிவித்தான். மகளைக் காணச் சென்ற அன்னைக்கு, அவள் இயற்கையாகப் பூப்பெய்தவில்லை என்றும், மாறாகச் சிறுமி வன்புணர்ச்சிக்கு இலக்காகி விட்டாள் என்றும், உறுப்புக் காயங்களினால் புலப்பட்டுப்போயிற்று!

அங்கு சென்று தங்களின் மகளைத் தம் இல்லத்திற்கு மீட்டுக்கொணர்ந்த தந்தை, காவல் துறை, மருத்துவத்துறை அலுவலர்களின் துணையுடன் மருமகன் மீது வழக்குத் தொடர, மாவட்டக் குற்றவியல் நடுவர், கணவனுக்கு ஓராண்டுக் கடுங்காவல் விதித்தார். ஆனாலும் மேல் முறையீட்டில் அவன் விடுவிக்கப்பட்டான்.இனிமேல் தாம்பத்யத்தில் ஈடுபட முடியாத அளவிற்கு அச்சிறுமி பாதிப்புள்ளாகி விட்ட நிலையில், வாழும் வகை தேடிக் கொள்வதற்கானதொரு தொழிற்பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணி உதவுமாறு தம்மைக் கோரியிருப்பதாயும் ‘ முத்துலெட்சுமி ரெட்டி கூறுகிறார்.

இதுபோன்ற நிறைய நிகழ்வுகளைத் தான் சந்தித்து உள்ளதாய்ச்சொன்ன அவர் விடுத்த கோரிக்கை ‘இப்போது அரசு, இந்தியச் சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோரின் கடமை இன்னதென்று முற்றிலும் தெளிவாகி விட்டது. தாங்களே தேர்ந்தெடுத்த (குழந்தை மணத்தடைச் சட்டக்) குழுவின் பரிந்துரைகளின்படியே அவர்கள் வழி நடத்தப்பட வேண்டும். பழமைப் பற்றாளர்களின் கருத்துக்களை அரசு கேட்டால், குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மாபெரும் நன்மைக்கேடு விளைவது மட்டுமன்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கே தடையிடுகின்றனர் ‘ எனத் தெளிவாய் வரையறை செய்கிறார்.

****

குழந்தைகள் மணச்சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையிலும், வைதீகவெறி கொண்ட சிலர் வாளாவிருக்காமல், சட்டத்தை நடப்புக்கு வராமல் தடை செய்யும் முயற்சியில் இறங்கினர். இங்கிலாந்துக்கே சென்று முறையிடத் தூதுக்குழு ஒன்றை உருவாக்கினர். அக்கால கட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்து தேசியவாதி எம்.கே. ஆச்சாரியார், நண்பர்கள் சிலருக்கு எழுதி அனுப்பிய மடல் ஒன்றை, பெரியாரின் ரிவோல்ட் பத்திரிக்கை வெளியிட்டது.

‘இம்மடல் உங்களை வந்தடைவதற்கு முன்னரே, செலெக்சன் கமிட்டி வடிவமைத்த வண்ணமே, குழந்தைகள் மணச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும். அடுத்து என்ன ? நேற்று என் திருத்த முன் மொழிவின்போது இந்தியச் சட்ட மன்றத்தில் மத நடு நிலமைக் கருத்தை வலியுறுத்தினேன். ஆனால் என் திருத்தத்திற்கு 7 ஓட்டுகளே கிடைத்தன. மதம் தொடர்பான விஷயங்களில் சட்ட மன்ற இடையீடுகள் இருப்பதை இந்துக்களாகிய நாம் ஏற்றுப் பணிந்து விடுவதா ? இந்துக்களின் தூதுக்குழு ஒன்று இங்கிலாந்து செல்லல் என்ற உங்களின் எண்ணம் உரம் வாய்ந்ததுதான். ஆனால் போதிய அளவிற்கு ஒத்துழைப்பும் சார்பும் பெற்றுவிட முடியுமா ? இங்கிருக்கும் நண்பர்களுடன் பேசிப் பார்த்து விட்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

எனினும் நமக்கென்று ஒரு நாளிதழ் கட்டாயம் தேவை. சென்னையில் ‘டெய்லி எக்ஸ்பிரஸ் ‘ கிடைக்கக் கூடியது. அதை நம் கட்டுப்பாடுக்குள் கொண்டு வர ஏற்பாடு செய்ய முடியுமா ? உடனடியாக நமக்கு 1 லட்ச ரூபா வேண்டும். வைதீகத் தென்னிந்தியா அதற்காக நாடி ஈடுபடுமா ? இப்போது அரசு நம்மை, வெறும் வாய்ப்பேச்சுக் காரர்களென்றும், முனைப்புக் கொண்டவர் அல்லர் என்றும் கருதுகிறது.

மாளாவியா ஊசலாட்டத்தில் உள்ளார். தனது தலைமையே வெற்றி, தோல்வி உறுதியற்ற போராட்ட நிலையில் இருப்பதால் அவர் உளப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். பிர்லா , ஜெயகர் (இந்து மகா சபா) போன்றவர்கள் அளிக்கும் நன்கொடைத் தொகைகள் இல்லாமல் அவர் கட்சி நடத்த முடியாது. நன்கொடையாளர்களோ சீர்திருத்ததின் எல்லை முனையில் இருப்பவர்கள்! அவர்களின் கைகளுக்குள் மாளவியா அடங்கிக் கிடக்கிறார் ‘.

எம்.கே. ஆச்சாரியார் எழுதிய இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 2 நாட்களுக்குள், தமிழ் நாட்டுப் பார்ப்பன வைதீகப் பற்றாளர்களான என் டி லட்சுமி நாராயண அய்யர், வி ஜெய ராம அய்யர், டி கே பால சுப்ரமணிய அய்யர், எஸ் மகாலிங்க அய்யர், எம் கே வைத்திய நாத அய்யர் முதலியோர் ஒன்றிணைந்து, கலந்து பேசி, வைதீகக் காப்பு (அதாவது குழந்தை மணத்தைக் காக்க) நோக்கத்திற்காக, திருச்சிராப்பள்ளியைத் தலைமையகமாகக் கொண்டு நாளிதழ் ஒன்றைத் தொடங்குவது என்றும் பங்கு ஒன்றுக்கு ரூ100

மேனி 1000 பங்குகள் திரட்டுவதென்றும் முடிவு செய்தனர். (ஆதாரம்: ரிவோல்ட் 6/10/1929)

இதே எம்.கே. ஆச்சாரியார்தான், பெரியார் காங்கிரசு தலைவராய் இருக்க, எஸ் ராம நாதன் கொண்டு வந்த ‘பிறப்பினால் எந்தவித பேதமும் கிடையாது ‘ எனும் தீர்மானத்தை எதிர்த்து காங்கிரசை விட்டு விலகியவர். பிராமணர் ஒருவர் உண்பதை, சூத்திரர் ஒருவர் காண நேர்ந்தால், அதைக் கண்டித்து 1 மாதம் வரை பட்டினி கிடப்பேன் எனும் சூளுரைத்தவராவார். மேலும் பாரதியாருடன் பிராமணர் சபைக் கூட்ட மேடையைப் பகிர்ந்து கொண்டவர்.

—-

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்