குறுநாவல் : சேர்ந்து வாழலாம், வா! – 6

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

ரெ.கார்த்திகேசு


மாரியம்மாளைச் சாட்சிக் கூண்டுக்கு அழைக்க வேண்டுமா என்பது பற்றிக் கொஞ்சமாக விவாதித்தார்கள். அழைத்து விசாரித்தால் அவள் போலீஸ் அதிகாரியின் அட்டூழியங்களை இன்னும் வலியுறித்திக் கூறுவாள் என உமா கூறினாள். ஆனால் படிப்பறிவில்லாத அவள் அரசாங்க வழக்குரைஞரின் விசாரணையில் பயந்து ஏதாகிலும் உளறி வைக்கக் கூடும் என ஆனந்தன் கருதினான். போலீஸ் அதிகாரியின் அனியாயத்தைத் தங்கள் தரப்புத் தெளிவாக நாட்டியிருப்பதால் மாரியம்மாளைக் கூண்டுக்கு அழைக்கும் அபாயத்தைத் தவிர்ப்பதுதான் நல்லது என ஆனந்தன் கருதினான். உமா அரை மனதுடன் தலையாட்டி அனுபவத்துக்கு மரியாதையுடன் வழி விட்டாள்.

அரசாங்க வழக்குரைஞர் தம் தரப்பின் இறுதி வாதத்தைத் தொகுத்துக் கூறினார்: “விவேகமான நீதிபதி அவர்களே! இது போதைப் பொருளோடு நீண்ட காலமாகத் தொடர்புள்ள ஒரு குடும்பத்தின் கதை. கணவனும் மனைவியும் சேர்ந்தேதான் இந்த விநியோகத்தைச் செய்து வந்திருக்கிறார்கள். கணவன் இப்போது தலைமறைவாகிவிட மனைவி அந்த விநியோகத்தை ரகசியமாகச் செய்து வந்து பிடிபட்டுவிட்டார். இந்தக் குடும்ப விநியோகத்தை மிக அணுக்கமாகக் கண்காணித்துப் போலீசார் அதை முறியடித்துள்ளனர். அதை மறைக்கத்தான் இப்போது அந்தப் போலீஸ் அதிகாரியின் நோக்கத்தைக களங்கப் படுத்துவதற்காக தற்காப்பு வழக்கறிஞர் அதைத் திசை திருப்புகிறார். ஆகவே இந்தப் போதைப்பொருள் குற்றவாளிக்கு சட்டம் இடமளிக்கும் அதிகபட்சத் தண்டனையை வழங்க வேண்டுகிறேன்”.

ஆனந்தன் எழுந்து பேசினான்: “விவேகமான நீதிபதி அவர்களே! கணவனும் மனைவியும் சேர்ந்து தொழில் நடத்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கணவன் வீட்டிலிருந்தவாறு இதைச் செய்யவில்லை. வெளியிடங்களிலேயே செய்து வந்திருக்கிறார். கணவர் பிடிபட்ட தருணங்களில் போலீசார் அவர் வீட்டைப் பலமுறை சோதனை செய்தும் போதைப் பொருள் ஏதும் அகப்படவில்லை. ஆகவே மாரியம்மாளுக்கும் அவர் கணவரின் குற்றத்துக்கும் எந்த வகையிலும் முடிச்சுப் போட முடியாது. ஆனால் அந்தக் கணவர் இல்லாத நேரத்தில் வீட்டைச் சோதனையிட்ட போலீஸ் அதிகாரி சுலபமாக போதைப் பொருளைக் கைப்பற்ற முடிந்திருப்பது வேடிக்கைதான். அதிகாரபூர்வமாக அவர் அந்த வீட்டுக்குப் போனதன் காரணம் அந்தக் கணவனின் ஒளிவிடம் எங்கே என்று கண்டுபிடிக்கத்தான். ஆனால் அந்த விசாரணை போதைப்பொருள் தேடும் விசாரணையாக மாறியிருப்பது இந்த அதிகாரியின் சூழ்ச்சியால். அது ஏன் என்பதற்கு நாங்கள் காரணம் காட்டியிருக்கிறோம். அந்த போதைப்பொருள் போலீஸ் பாதுகாப்பில் இருந்த போதைபொருளின் ஒரு பகுதி என்பதையும் காட்டியிருக்கிறோம். மாரியம்மாள் தன் கற்பைத் தற்காத்துக் கொள்ளப் போராடியதால் ஒரு சூழ்ச்சிக்குள் அகப்பட்டுக் கொண்டவர். ஆகவே அவர் குற்றவாளியல்ல என அவரை விடுதலை செய்து விடக் கேட்டுக் கொள்ளுகிறேன்”.

நீதிபதி தன் முன் உள்ள நாள்காட்டி டயரியைப் புரட்டிப் பார்த்தார். “வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு!” என்றார்.

உமா மாரியம்மாளின் அருகில் சென்று “தைரியமா இரு மாரியம்மா!” என்று சொல்லிவிட்டு வந்தாள்.

கோப்புகளைப் பையில் போட்டு தூக்கிக் கொண்டு நீதிமன்ற வாசலுக்கு வந்தபோது ஆனந்தன் சொன்னான்: “இன்னைக்கு நாம் சந்திக்க வேணும் உமா!”

ஏறிட்டுப் பார்த்தாள். கண்களில் ஒரு ஆர்வம் இருந்தது. “அம்மா பதில் சொல்லிட்டாங்களா?”

“சொல்லிட்டாங்க!”

“காரியம் காயா பழமா?”

“பழம்தான்!”

“சொல்லுங்க!”

“மாலையில தெளிவா சொல்றேனே… ஐந்து மணிக்கு அதே இடத்தில் டீ?”

யோசித்தாள். “அந்த இடம், அந்த நேரம் வேண்டாம் ஆனந்த்! மூடிய கண்ணாடிக் கூண்டுக்குள்ள உக்காந்திருக்கிறது, ஏர் கண்டிஷன் இருந்தாலும் புழுக்கமா இருக்கு! நல்ல செய்தியை பகிர்ந்துகிறதுக்கு அது பொருத்தமான இடம் இல்ல! திறந்த வெளி வேணும். பத்து பிரிங்கி கடற்கரைப் பக்கம் போவோமே, ராத்திரிச் சாப்பாட்டுக்கு!”

“ஓ கிரேட்! நல்ல ஐடியா! அப்ப ஒரு ஏழு மணி மாதிரி உன்னுடைய அப்பார்ட்மெண்ட் கீழ இருந்து பிக் அப் பண்ணிக்கிட்டுமா?’ என்றான் அகலச் சிரித்தபடி.

“சரி!” திரும்பி நடந்தாள். அதே குதிரை நடை. பார்த்தவாறு இருந்தான். திடீரென வழக்கத்துக்கு மாறாக நின்று திரும்பி அவனைப் பார்த்தாள். சிரித்துக் கையசைத்தாள். அவனும் கைதூக்கி அசைத்தான்.

காருக்கு நடக்கும்போது “பொய் சொல்லிவிட்டாய்!” என மனது இடித்துரைத்தது.

*** *** ***

கூட்டுப்புழு எப்படிப் பட்டாம்பூச்சியாகிறது? எங்கிருந்து வண்ணங்கள் பெறுகிறது? எப்படி வண்ணமில்லாத மழையும் வெயிலும் கலந்தவுடன் வானவில்லாகிறது? எப்படி வெற்றுச் சொற்களின் கலவை கவிதையாகிறது? எப்படி இந்தப் பெண் இப்படியானாள்?

உமாவைக் காரில் ஏற்றிக் கொண்டபோது, அவளின் சுகந்தங்கள் காருக்குள் குப்பென்று பரவியபோது இப்படித்தான் கேள்விகள் அவனுள் ஓடின. இளம் பழுப்பு வண்ணத்தில் குஜராத்தி பாணியில் ஒரு லேங்கா சூட் அணிந்திருந்தாள். இடுப்பையும் தொடைகளையும் பிடித்து ரம்மியமாக எடுத்துக் காட்டும் வழு வழுப்பான பாவாடை. ப்ளவுசில் கழுத்தின் பின்னாலிருந்து ஒரு குஞ்சம் தொங்கியது. இடுப்பை வளைத்துக்கொண்டு முழங்கைகளில் தொங்கும் துப்பட்டா பழுப்பிலிருந்து கொஞ்சம் விலகிய நிறத்தில். காலில் இந்திய பாணியிலான கூர்ந்து வளைந்த செருப்பு. முகத்தில் வாசமுள்ள ஒப்பனை. கன்னத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் கொஞ்சம் ரூஜ். மயக்கம் தரும் புன்னகை உதட்டில்.

“மை கூட்னஸ்! நீதானா உமா?” என்றான்.

“ஏன்? வேற யாரையும் எதிர்பார்த்திங்கிளா?” என்றாள்.

“எப்படி தேவதையா மாறின?”

“பெண்கள் தேவைக்கேற்ப கூடுவிட்டுக் கூடு பாய முடியும், ஆனந்த்?”

“அப்ப இது என்ன கூடு?”

“ஆண்களை மயக்கிற கூடு!”

“எனக்காகவா?”

“வேண்டாமா?”

“நான் ஏற்கனவே மயங்கினவன் ஆச்சே!”

உரையாடல் இத்தனை விரைவாக இத்தனை சிருங்காரமாக மாறும் என அவன் எதிர்பார்க்கவில்லை. காதல் போதை அவன் அறிந்த எந்த மதுவை விடவும் இத்தனை விரைவாகத் தலைக்கேறும் என அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

பத்து பிரிங்கி கடற்கரைக்கு வந்து சேரும் வரை உரையாடல் உல்லாசமாகத்தான் இருந்தது. ஒரு உயர்தர உணவு விடுதியில் கடலலைகள் மோதும் சுவர்ப்பக்கமாக மேசை ஒன்றைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்த பின் பரிமாறுநர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார். “என்ன சாப்பிட்ற உமா?” என்று கேட்டான்.

சிவப்பு வைன் வேண்டுமென்றாள். அவனும் அதையே கேட்டான். பரிமாறுநர் போன பின் கடற்காற்றில் அலையும் முடியை வளையல்கள் குலுங்கும் கைகளால் ஒதுக்கிக்கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். முடியைக் கோதும் நீண்ட விரல்களில் மோதிரங்கள் மின்னின. நகங்களில் இளஞ்சிவப்புப் பூச்சு. கொல்வதற்கென்றே அணிந்து கொண்ட ஆயுதங்கள்.

சிரித்த உதடுகளுடன் கேட்டாள்: “சொல்லுங்க ஆனந்த்! என்ன செய்தி கொண்டு வந்திருக்கிங்க?”

என்ன எதிர்பார்ப்புக்களுடன் வந்திருக்கிறாள்? இன்றைய இரவில் நல்ல செய்தி வரப் போகிறது என்று நம்பிக் கொண்டாடுவதற்கு வந்திருக்கிறாள். அது கெட்ட செய்தியாக இருக்கலாம் என்ற சந்தேகம் துளியும் இருக்குமென்று தோணவில்லை. இவளிடம் என்ன சொல்ல..? பொய் சொல்லி மகிழ்விப்பதா? மெய் சொல்லி ஏமாற்றுவதா?

ஏமாற்றுவதா? இந்தத் தேவதையையா?

“செய்தி மெதுவா சொல்றேன் உமா! என்ன அவசரம்? இந்தச் சூழ்நிலையை முதலில் அனுபவிப்போமே!” என்றான்.

“எந்தச் சூழ்நிலை?”

“இந்தக் கடல், இந்தக் காற்று, அது வருடிக்கிட்டே இருக்கிற உன் முகம், உன் உடை, உன் அழகு…!”

“கலசம் நிறை அமுது வர்ரதுக்குள்ளேயே கம்பனைப் போல கவிஞனாகிட்டிங்களே!” என்றாள்.

“ஓ மை கோட்! உனக்கு அவ்வளவு தமிழ் தெரியுமா உமா?”

“தெரியும். தமிழ்ப் பள்ளிக்கூடத்தில படிச்சவதான். இன்னமும் விடாம படிக்கிறேன். உங்களுக்கும் தமிழ் நல்லாத் தெரியும்கிறதும் எனக்குத் தெரியும்!”

“எப்படி?”

“உங்க அலுவலக அறையில புத்தகங்கள் பாத்திருக்கிறேன். பாலகுமாரனோட “இரும்புக் குதிரைகள்”; சுஜாதாவோட “கனவுத் தொழிற்சாலை”; “வைரமுத்து கவிதைகள்”.

“அப்ப ஏன் ஒருபோதும் அதப்பத்தி நீ பேசில?”

வைன் வந்து இறங்கியது. எடுத்துப் பருகினார்கள்.

“சொல்லு உமா, ஏன் அதப்பத்தி பேசில?”

“எனக்கு அதில ஒரு கவிதை மனப்பாடம். “காதலித்துப் பார், காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய் / வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்!”

“ஓ மை கோட், ஓ மை கோட்! எனக்கு வெறியூட்ற கவிதை. ஏன் இதயெல்லாம் ஒளிச்சு வச்ச உமா? ஏன்?”

“அது அலுவலகம். நீங்கள் என் முதலாளி. அதுக்கின்னு ஒரு தனி மரியாதை இருக்கு!”

அவன் உள்ளம் துள்ளிக்கொண்டிருந்தது. “யுரேக்கா! இவள்தான், இவள்தான்! இன்றைக்குக் கண்டுபிடித்து விட்டேன்!” என்று உள்ளுக்குள் கூவிக்கொண்டிருந்தது.

கொஞ்ச நேரம் கவிதைகள், அதையொட்டிய சினிமாப் பாடல்கள் பற்றிப் பேசினார்கள்.
சுஜாதா, பாலகுமாரன் பற்றி வைரமுத்து பற்றி அவளுக்குத் தெரிந்திருந்தது. “அது யார் இரா.முருகன்னு ஒருத்தர்? ‘மூன்று விரல்கள்’? என்ன மாதிரி புத்தகம்?” என்று கேட்டாள்.

“ரொம்ப நவீனமான கதை. இன்றைய கம்ப்யூட்டர் தொழில் பத்தின கதை. இரா. முருகனை நீ தெரிஞ்சிக்கணும்!”

“வேற யாரெல்லாம் தெரிஞ்சிக்கணும்?”

“பா. இராகவன், ஆர். வெங்கடேஷ்; இந்தப் பைத்தியம் முத்திப்போனா சுந்தர ராமசாமி, ஜெயமோகன்”.

உணவு வந்தது. சூப்பைச் சாப்பிட்டபடி உமா கேட்டாள்.

“சரி ஆனந்த்! இன்னைக்கு நீங்க என்ன இங்க அழைச்சிக்கிட்டு வந்த விஷயத்தச் சொல்லப் போறிங்களா, அல்லது கவிதை, நாவல் பற்றியே பேசிக் கழிக்கப் போறிங்களா?”

வேளை வந்துவிட்டது. இந்த இனிய பஞ்சாமிர்தத்தில் கசப்புச் சேர்க்கும் நேரத்தை இனியும் தள்ளிப் போட முடியாத நெருக்கடி வந்து விட்டது. “சாப்பிட்டு முடிஞ்ச பின் பேசுவோமே உமா?” என்றான்.

“வேண்டாம். என்னால காத்திருக்க முடியாது. நீங்க தள்ளித் தள்ளிப் போடறதப் பாத்தா அது கெட்ட செய்தியா இருக்கும்னு நெனைக்கிறேன்!” என்றாள்.

————

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு