குறிப்பு

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


வளவிற்குள், மெஸ்ஸிற்கு முன்னால், நிற்பாட்டியிருந்த கம்பனி பிக்அப் ஜன்னலுக்கூடாய் துலக்கமாகத் தெரிந்தது. டிரைவர் சாப்பிட்டு வந்ததும் எயர்போட்டுக்கு புறப்பட்டு விடலாம். இருந்த அவசரத்தில், மாலையிலிருந்து மணி ஓடவில்லை போலவே எனக்குத் தோன்றியது.

இன்னும் பத்து நிமிடத்துக்குள் வெளிக்கிட்டாலும் ஒன்பதுக்குள் எயர்போட்டில் நிற்கலாம். எட்டு மணிக்குப் போகலாம் என்று சொல்லியிருந்தார் டிரைவர். நேரம் எட்டுக்கு ஐந்து. ஒன்பது பதினைந்துக்கு பிளைட் வந்தால் பத்துக்குள் வெளியே வந்து விடுவான் மூர்த்தி.

இருப்புக் கொள்ளவில்லை. வெளியே கண்ணுக்குத் தெரியாமல் பனி பெய்து கொண்டிருந்தது. எங்கள் ஊரில் என்றால் தை பிறக்க பனியின் உறைப்பு மறைந்து போகும். இங்கு, ஓமானில் பங்குனி பிறந்தும் பனியின் தொல்லை முடியவில்லை. கம்பளி கலக்காத சட்டையோடு வெளியில் இறங்கினால் உடம்பு வெடவெடத்துப் போகும். கம்பளிச்சட்டையை கை முழுக்க இழுத்து விட்டுக் கொண்டு ஜன்னலால் பார்த்தேன். இவ்வளவு நேரமாய் என்ன சொல்லிச் சாப்பிடுகிறார் டிரைவர்!

அவரில் பிழையில்லை. எனக்குத்தான் எல்லை மீறிய அவசரம். போய் வர தாராளமாய் நேரமிருந்தும் ஏனிந்த அந்தரம் ? இன்று நேற்றா இது நடக்கிறது ? லீவு முடிந்து வரும் என்னைக் கூட்டி வர மூர்த்தி எயர்போட்டுக்கு வருவதும் அவன் வரும்போது நான் போவதும் தொடர்ந்து நடக்கிற சங்கதிதானே!

மூர்த்தியும் நானும் திருகோணமலை. எட்டு வருசங்களுக்கு முன் வேலை கிடைத்து நான் ஓமானுக்கு வந்த போது ஏற்கனவே பழந்தின்று கொட்டை போட்டிருந்தான் அவன். ஊரில் கண்டு பழக்கமே தவிர கதைத்ததில்லை ஒருநாளும். கண்டதும் அறிமுகம் அவ்வளவு தேவைப்படவில்லை. அவன் என் பின்னணியை நன்றாகவே தெரிந்தவனாயிருந்தான். அவனுடைய அறைக் கூட்டாளியாய் அன்றுதொட்டு நானும் பழந் தின்னத் தொடங்கி விட்டேன். போட்ட கொட்டைகளும் ஏராளம்.

அவன் லீவு முடிந்து வருவதற்கு முதல் நாளிலிருந்தே மின்சாரம் பாய்ந்த மெலிதான கிளுகிளுப்பு கலந்த பயம் வருவது சகஜம். என் வீட்டிற்குப் போயிருப்பான். மனைவி மக்களைப் பார்த்திருப்பான். மனைவி கொடுத்த பிள்ளைகளின் பிரளிப் பட்டியல் குறித்திருப்பான். சுகசேமங்கள் விசாரித்திருப்பான். கடிதம் எழுதச் சொல்லியிருப்பான். எனக்கென்று அவள் கரிசனையெடுத்துச் செய்து கொடுத்துவிடும் முறுக்கு மில்க்ரொபி எள்ளுருண்டை எல்லாம் கொண்டு வருவான் (அவனே அரைவாசிக்கு மேல் முடித்தும் விடுவான்). அம்மா வீட்டிற்கும் போயிருப்பான். கொள்ளி வைக்கவாவது வந்து சேருவானா என்ற அம்மாவின் வழக்கமான கேள்விக்கு சிரித்து மழுப்பிச் சமாளித்திருப்பான்.

இதைவிட நேரில் வந்தபின், ‘வீட்டுக் காய்ச்சல் ‘ ஒரு பாடாக சீரான பின், கடிதத்தில் மனைவி எழுதியிருந்தும் வேண்டுமென்றே ப+ரணமாக விளக்கப்பட்டிராத பல விசயங்களை விசாலமாக தன் விமர்சனப் பார்வையில் சொல்லுவான். நான் யோசிப்பேன் என்பதால் மகனுக்குக் காய்ச்சல் வந்ததை ஒரு வரியில் பட்டும் படாமலும் சாதாரணமாக அவள் எழுதியதை ஆனாவிலிருந்து அக்கன்னா வரை ஏயிலிருந்து சட் வரை விபரிப்பான். எந்த வார்ட்டில் வைத்திருந்தது எத்தனை ஊசி போட்டது இப்ப எப்படியிருக்கு என்று மனதைப் பிழிகிற மேலதிக விபரங்கள் அவன்தான் தருவான். கதையோடு கதையாய் வருத்தம் பார்க்கப் போனபோது மகனின் கையில் கோர்லிக்ஸ் போத்தல் கொடுத்ததையும் சொல்லத் தவறமாட்டான்.

குழம்பிப் போவேன் என்பதால் ஆமி ரவுண்ட அப் விசயங்களோ ஊரில் நடக்கும் அட்டூழியங்களோ அவள் கடிதத்தில் நிச்சயமாய் இராது. அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தவணை முறையில் திகதி தப்பாமல் அறிக்கையிடுவான் மூர்த்தி.

அவைகளை அறிந்து கொள்ளத்தான் இத்தனை அந்தரமா ?

கடும் பனிக்குள்ளும் கழுத்தடி வியர்த்தது. இன்று காலையில் திருகோணமலையிலிருந்து பஸ்ஸில் கொழும்புக்குப் புறப்பட்டிருப்பான் அவன். நேற்றுக் காலை உட்துறைமுக வீதியில் ஆமி பிரிகேடியர் போன ஜீப்பிற்கு முன்னால் ஒரு பிள்ளை பாய்ந்ததாக பிபிசி செய்தியில் சொன்னார்கள். அதற்குப் பக்கத்துத் தெருவில்தான் அடியேனின் வீடு. நிச்சயமாக அந்தப் பகுதி முழுக்க ரவுண்ட் அப் பண்ணியிருப்பார்கள். பாய்ந்தது ஆர் பெற்ற பிள்ளையோ ? என்ன நிலவரமோ! என் மனைவி இதுபற்றி நிச்சயம் எழுதப் போவதில்லை. என் சுபாவம் தெரிந்தவள் அவள். இல்லாவிட்டால் இத்தனை காலமாய் என்னோடு சேர்ந்து குப்பை கொட்டியிருப்பாளா! எல்லாத்துக்கும் மூர்த்தி வந்தால்தான் நிம்மதி. வரப் போகும் கடிதத்தை விட வீட்டுப் பலகாரங்களை விட நேற்று நடந்த விபத்தின் விபரங்கள்தான் முக்கியம்.

கடந்த ஒரு மாதமாய் மூர்த்தி இல்லையென்பதால் அப்படியும் இப்படியுமாய் கிடந்த அறை இப்போது துப்புரவாயிருந்தது. அவன் வந்ததும் தண்ணீர் குடிக்க வசதியாக தலைமாட்டில் வைத்து விட்டேன். கட்டில் தட்டி புது பெட்சீட் தலையணை உறை போட்டு வந்தவுடன் சரிய தயாராயிருந்தது. அவனுக்கு வந்திருந்த இரண்டொரு கடிதங்கள், அவனுக்காக மெஸ்ஸிற்குக் கட்டிய பணக்கணக்கு எல்லாம் மேசையில் வெகு ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன.

வேறு எந்த விசயத்தில் எப்படியிருந்தாலும் காசு விசயத்தில் அவன் கட்டுமட்டு கண்டிப்பு. எதையும் விட அதற்குத்தான் முதலிடம். ஒவ்வொரு சதத்துக்கும் கணக்கு வைப்பான். ஐந்து சதத்துக்காக எத்தனை கடை ஏறியிறங்கவும் தயங்க மாட்டான். அந்த அலுப்புக்காகவே அவனோடு கடைத்தெருவிற்குப் போவதை நான் விரும்புவதில்லை. விடமாட்டான். கடைக்காரன் சொல்கிற விலையிலும் சரியாக அரைவாசிக்கும் குறைவாகவே கேட்டு வாதாடி அநேக சமயங்களில் வெற்றியும் பெற்று விடுவான். வரிக்குதிரையைப் பார்த்து வரி போட்டுக் கொண்ட கதையாய் நானும் அரைவாசி விலைக்கு கேட்கப் போய் அடிவாங்காமல் திரும்பியது பெரிய காரியம்.

நாங்க பெஞ்சாதி பிள்ளைகளை அங்க விட்டுட்டு தனிமைச் சிறையில் இருந்து கஷ்டப்பட்டு உழைக்கிற காசு. ஒரு சதத்தையும் அடாத்தா விடக்கூடாது என்று உலக வங்கி லெவலில் புத்தி சொல்வான். அவன் சொல்வதும் சரிதான். இருந்தும், இப்படியும் ஒரு கஞ்சனா என எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை.

சொன்னது போலவே டிரைவர் சரியாக எட்டு மணிக்கு ஜன்னலால் சைகை காட்டினார். மூர்த்திக்காக எடுத்து வைத்த கணக்கு விபரத்தையும் கடிதங்களையும் எடுத்துக் கொண்டேன். அவன் ரூமுக்கு வந்தபின்னும் கொடுக்கலாம். இருந்தாலும் என்னைக் கண்டதும் என்ன புதினம் என்று கேட்பான். இதைக் கொடுத்தால் நிறைவு கொள்வான்.

எட்டேகாலுக்கு என்னை எயர்போர்ட் வாயிலில் இறக்கிவிட்டு பார்க்கிங் தேடி அலையப் போனார் டிரைவர். தானாகத் திறந்து கொள்ளும் கண்ணாடிக் கதவுகள் என்னை உள்வாங்கிக் கொள்ள, எத்தனை காலமாய் எயர்போர்ட் வந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் தவறாமல் உண்டாகிற குளிர்ச்சி உணர்வோடு வழுக்குத் தரையில் நடந்தேன். கொழும்பு, ஓமான் எயர்போர்ட்டுகளுக்கிடையில் தான் எத்தனை வேறுபாடுகள்!

அங்கென்றால் எயர்போர்ட் வாசலுக்கு வந்து சேர்வதற்குள்ளேயே அறிமுகஅட்டை பார்த்து ஊர் பேர் பார்த்து தமிழா சிங்களமா கேட்டு சந்தேகக் கண்கள் பலமுறை மேய்ந்திருக்கும். எல்லாம் முடிந்து கடைசியில் குடியகழ்வு குடிவரவு கவுண்டரில் படத்தையும் ஆளையும் ஓப்பிட்டுப் பார்ப்பதிலேயே மனம் சோர்ந்து போகும் என்னடா நாடென்று. விமானத்தில் ஏறி குந்திய பிறகுதான் தப்பிப் பிழைத்த ஆறுதல் உண்டாகும். மூர்த்தி அடிக்கடி சொல்வான். இந்த அமைதியான நாட்டில பிரஜா உரிமை கிடைச்சா, போசாம குடும்பத்தோட செட்டில் ஆகிவிடலாம் என்று.

போய் வந்த பயக்களை தீருமட்டும் இப்படிக் கதைத்தாலும் அடுத்த ஒரு வாரத்துள் வீட்டை நினைக்க ஆரம்பித்து விடுவான். உண்மைதான். பிறந்த மண்ணும் சொந்தங்களும் அயலும் நண்பர்களும் நினைக்க நினைக்க பசுமையானவைதான். சொந்த வீட்டையும் சொந்தங்களையும் விடு. அது பலாப்பழத்தில் ஒட்டியிருக்கும் பால் மாதிரி நெஞ்சை விட்டு அறவே நீங்காத உறவுகள்.

என்ன மச்சான் கண்டும் காணாமல் போறாய் வெளிநாட்டுப் பாடெல்லாம் எப்படி என்று கேட்கிற நண்பர்கள். அங்க எவ்வளவு தாறான் என்று சம்பளக் கணக்கை அறிந்து கொள்ளும் ஆவலில் ஒவ்வொரு முறையும் ஒழுங்கைக்குள் நிற்பாட்டிக் கதை கேட்கும் அம்மாவின் பால்ய தோழி பொன்னாச்சிக் கிழவி. எவ்வளவுதான் பள்ளந்திட்டிகள் அதிகமாகிப் போனாலும் அடிக்கடி நடந்து போய் வரப் பிடிக்கிற பிறந்து வளர்ந்த தெரு. காலம் எவ்வளவு மாறினாலும் அதே முட்டாசிப் போத்தலும் பாண் பணிஸ் இத்தியாதிகளை மட்டும் வைத்துக் கொண்டு மாறாத அதே சிரிப்புடன் எப்ப வந்தனி எப்ப போறது என்ற மாமூல் கேள்விகளைக் கேட்கும் சந்திக்கடை வேலுப்பிள்ளை அண்ணன்.. .. .. .. .. ஆரை மறக்க முடியும்!

இப்பெல்லாம் நிறைய மாற்றம். சந்திக்குச் சந்தி தென்னங்குதற்றி வைத்துச் செதுக்கின மண்மூட்டை மறைப்புகள். நாட்டுக்கு ஒன்று மாவட்டத்துக்கு ஒன்று திணைக்களத்துக்கு ஒன்று பிரயாணத்துக்கொன்று என நான் நானேதான் என நிரூபிக்க வேண்டிய பல்வேறு அறிமுக அட்டைகள். அவைகளை வைப்பதற்கென்றே ஒரு கொழுத்த பர்ஸ்.

நம்மட ஊர்தானே என்ற பழைய நினைப்பில் அந்தப் பையில்லாமல் மறதியில் தெருவில் இறங்கினால் தொலைந்தது. கொண்டு போன சைக்கிள் எங்கோ ஒரு சோதனைத் தரிப்பில் அநாதையாய் வெய்யில் குளிக்கும். போன பிள்ளையைக் காணவில்லையென்று வீடு பதறியடிக்கும். ஆள் பொலிசிலோ ஆமியிலோ தான் தானேதான் என நிரூபிக்க முடியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருப்பான்.

இத்தனை இருந்தாலும் ஒவ்வொரு முறையும் விடுமுறையென்றவுடன் கிளுகிளுப்புத் தொடங்கிவிடும். நான் பிறந்த மண் என் வீடு என் சொந்தம் என் அயல் கோயில் தேர் தீர்த்தம் ப+ங்காவனம் எல்லாமே காலைப் பனியில் குளித்த ப+க்கள் போல மனமெல்லாம் விரியும். லீவு முடிந்து வரும் போதோ என்னடா வாழ்க்கை இது என்றாகிவிடும். அதுவும் முதல் நாள் குண்டுத்தாக்குதல் நடந்து அந்தக் கலவரத்தோடு வீட்டையும் பிரிந்து வருவதென்றால்!

பாவம் மூர்த்தி!

கொழும்பு விமானம் இறங்கிவிட்டது என்ற குளியீடு வெளிச்சப் பலகையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்க நான் நெஞ்சிடியோடு காத்திருந்தேன். என்ன செய்தி கொண்டு வரப் போகிறானோ!

தோளில் ஒன்றும் கையில் ஒன்றுமாக பாரத்தோடு வரும் மூர்த்தியை தூரத்தில் வரும் போதே உன்னிப்பாய் பார்த்தேன். ஒரு மாத வீட்டுச் சாப்பாட்டின் செழுமை முகத்தில் தெரிந்தது. சில வேளைகளில் வெய்யலடித்து காய்ந்த கருவாடாய் வந்திருக்கிறான், நானுந்தான்.

வந்ததும் கட்டிப் பிடித்தான். கடிதங்களையும் கணக்கையும் கொடுத்தேன். பிக்அப்பில் ஏறியதும் மெஸ் கணக்கைப் பார்த்தான். மெளனமானான். இப்பதான் வந்திருக்கிறான். அதற்குள் குண்டுத்தாக்குதல் பற்றிக் கேட்கக் கூடாது. அவனாகச் சொல்லட்டும்.

வாகனம் விமானநிலைய வளவை விட்டு நீங்கி பெருந்தெருவில் ஏறி ஒரே சீரில் பயணிக்கும் போது மனங் கேளாமல் கேட்டேன்.

‘ஊர்ப்பாடெல்லாம் எப்படி ? எங்கட பக்கம் ஏதும் பிரச்னையா ? ‘

என்னத்தைக் குறித்து என் கேள்வியென என் முகக் குறிப்பைப் பார்த்த உடனேயே அவன் புரிந்து கொண்டிருப்பான்.

‘அதையேன் மச்சான் கேக்கிறாய். சாமான் சட்டின்ர விலையெல்லாம் ஏறிப் போச்சு. எதைக் கேட்டாலும் ஆனை விலை குதிரை விலை சொல்றான். ஆயிரம் ரூபாய்த்தாளை கொண்டு மாக்கட்டுக்குப் போனாலும் ஒரு சாமானும் வாங்கேலாது. அங்க மனுசன் சீவிக்கேலாது மச்சான். அது சரி, இதென்ன மெஸ் காசில 200 பைசா கூடப் போட்டிருக்கிறான் ? இவங்கள் எப்பவும் இப்படித்தான். ‘

சலித்துக் கொண்டான்.

நான் எதுவும் சொல்லவில்லை, கேட்கவுமில்லை.

***

karulsubramaniam@hotmail.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்