குயிலே..குயிலே…

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

ருத்ரா.


எங்கிருந்து கூவுகிறாய்..
குயிலே ?
வேப்பம் இலைகள்
சூாியனைக் கசிந்து
அதன் இடுக்குகள் வழியே
ஒரு கன்னிக்குடம்
உடையும்
அந்த பிரபஞ்சத்தின்
வலி மழையோடு
உன் உயிரை
தூவுகிறாயா ?

ஆழத்தின் வலிக்குள்
இவ்வளவு இனிமையா ?
இன்னும்
கீட்ஸும் ஷெல்லியும் பாரதியும்
உனக்குள்
மூழ்கிக்கொண்டு
வார்த்தைகளின் உரசல்களில்
தீக்குளித்துக்கொண்டிருக்கிறபோது
நாங்கள்
வார்த்தைகளை
பட்டிமன்றங்களில்
கொறித்துக்கொண்டிருக்கிறோம்.
எங்கள் சாதி மதங்களுக்குள்
சாக்கடைக் கால்வாய்கள்
வெட்டிக்கொண்டிருக்கிறோம்.
உன் சங்கீத இழையில்
தொங்கிக்கொண்டிருந்த
அந்த தொப்பூள்கொடி
எங்களுக்கு புலப்படவில்லையே ஏன் ?

எங்கள் இலக்கியங்கள் எல்லாம்
வைக்கோல்கூளங்கள்
அடைத்த கன்றுகுட்டிகளூக்கும்
பஞ்சு அடைத்துவைத்த
காக்காய் குருவிகளுக்கும்
பஞ்சதந்திரக்கதைகள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன.
உன் குரல் இன்னும்
எங்களைத் தைக்கவில்லையே ஏன் ?

உன் குரல்
வானத்தையே
சுருட்டி மடக்கி சுருட்டி மடக்கி
விளையாடியதில்
வளைவான கிழிசல்களை
வானவில் என்று
சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

உன் குரலைப்பற்றியும்
எழுத்தும் இதயமும்
அதில் காதலாய்
சுருதி சேர்ந்தது பற்றியும்
ஆராய்ச்சிக்கட்டுரைகள்
ஆயிரம் செய்திருக்கிறோம்.
ஆனாலும் அவையெல்லாம்
கடற்கரையில்
தேங்காய்-மாங்காய்-பட்டாணி சுண்டல்
தின்றுமுடித்த காகிதங்களாய்
இறைந்துகிடக்கின்றன.

வானமும் கடலும்
ஒன்றின் கர்ப்பப்பைக்குள்
இன்னொன்றாய்
பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும்
இந்த இளங்காலைச் சிசுவுக்கு
இனிமை மூட்டும்
புல்லாங்குழல்
உன் குரல்கீற்றுகளில்
அல்லவா
செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால்
‘புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி… ‘
மண்ணில் மலர்ச்சி தரும்
உன் வெளிச்சங்களெல்லாம்
சில்லரைச்சத்தங்களின்
இந்த இருட்டுகளுக்கு
தீனியாகிப் போயின.

தமிளர்கள்
நிறையக் கிடைக்கிறார்கள்
இங்கே.
தமிழனைத் தான்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
டி.வி என்றால்
தினசாி நடக்கும்
‘தமிழ் வதை ‘ப் படலம்
இங்கே!
இனிய
மெல்லோசைத் தமிழ்
மெல்லும் ‘பபிள் கம் ‘
இவர்களுக்கு!

தமிழின்
சங்கப்பலகைக்கு
இவர்கள் ஆண்டுதோறும்
‘கும்பாபிஷேகம் ‘
நடத்திக்கொண்டிருந்தாலும்
பல்கலைக்கழகங்களின்
‘மார்ச்சுவாி ‘ யில் அது
இன்னும்
மல்லாந்து தான்கிடக்கிறது.
தூசி தட்டுவதற்கே
பலகோடி ரூபாய்களுக்கு
உலகவங்கியோடு
ஒப்பந்தம்
போடவேண்டியிருக்கிறது.

குயிலே
உன் குரல்பிஞ்சுகளில்
ஒளிந்திருப்பது….
சிக்கிமுக்கி கற்கள்.
அந்தக் குரல்
தீப்பொறிகளை பிரசவிக்கும்
எழுத்துக்களை யல்லவா
கனல் மூட்டுகிறது.
எங்கள் இதயத்தை
நெசவு செய்து கொண்டிருக்கும்
உன் கூவல்களின்
‘டெசிபல் ‘ கள்
எாிமலைகளைக்கூட
வருடிக்கொடுக்கும்
மயிற்பீலிகள்.
கண்ணுக்குத்தொியாத
காதலும்
முகம் தொியாத காதலர்களும்
சங்கமம் ஆகும்
கடல்கள் அல்லவா
உன் அலகுகளில்
அலைவிாிக்கின்றன.

போதை யூட்டும்..அதன்
அந்தி ‘உதடுகள் ‘
அமிழ்த்திய முத்தத்தில்
காலம் கரைந்து போனது.
சூாியனை
தக்காளி சிவப்பில்
சூப் வைத்து
குடிக்கத்துடிக்கும்
மோனத்தில்….
குயிலே
என் சுவாசக்குமிழிகள்
உனக்கு
கூடு கட்டிக்கொண்டிருக்கின்றன.

இப்போது நீ எனக்கு
சிறகு முளைத்த
ஒரு ‘உமர்க்கய்யாம் ‘ கிண்ணம்.
எழுத்துக்கள் நொதிக்கும்
நுரை ஊஞ்சலில்
குயிலே…
நீயும் நானுமாய்
ஆடிக்கொண்டிருக்கலாம் வா.
கூவிக்கொண்டேயிரு நீ.
இந்த காக்காய்கள் கூடட்டும்.
கவியரங்கங்கள் நடத்தட்டும்.
கவலையில்லை.
கூவிக்கொண்டேயிரு.
குயிலே.
கூவிக்கொண்டேயிரு.

Series Navigation

ருத்ரா

ருத்ரா