குப்ஜாவின் பாட்டு

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

தமிழில் அசோகமித்ரன்


சலனமற்ற கருணையற்ற மேகமற்ற

வெற்று வானத்தடியில்

எவ்வளவோ ஆண்டுகளாக

இந்த ராஜபாட்டையில் காத்துக் கிடந்தேன்.

கண்ணாடிக்குண்டுகளை போன்ற கண்களுடன்

எலும்பையும் நடுங்க வைக்கும்

கொடூரக் குளிரையும்

உதிரும் இலைகளின் துயர கீதம் ஒலிக்கும்

நீரான இலையுதிர் காலத்தையும்

ஈரமான வானத்தின் மந்த முகத்தையும்

புழுதியடிலிருந்து எழும்

வசந்தகால பகுள மலர் வாசனையும்

உணர்ந்து காத்திருந்தேன்.

அர்த்தமில்லாக் காலத்தின் கொந்தளிப்பில்

மனச் சாளரத்தோடு மட்டுமே முடிந்துவிடும்

வயோதிகத்தில் நோயுற்று

உள்ளத்தின் அடி வானத்தில்

மழையால் பளுவுற்ற மேகங்கள் எழ

கொடும் கோடைக் கடுமையை

தீவிர விசிறியாட்டலால் கடந்தபடி

ஆண்டுகளையும் மாதங்களையும் நாழிகைகளையும்

நிமிடங்களையும் எண்ணியபடி காத்திருந்தேன்.

நான் கொண்டு தரும் சந்தனத்தின்

நறுமணத்தால் மகிழ்ச்சியடைந்த கம்சராஜன்

நிறையப் பொன்னும் பொருளும் மூன்று

காணி நிலமும் நான் ஆண்டு வர

அளித்திருந்தான். அரச சபையில் சமர்ப்பிக்க

நாள்தோறும் அரைத்த சந்தனம் நிரப்பிய

பேழைகளைச் சுமந்தவண்ணம்

மதுராபுரியின் ராஜபாட்டையில்

நான் நடந்து செல்வேன்.

அரசனின் தேகம் மணம் வீச

ஆயிரம் நறுமணப் பொருள்கள் உருவாக்கும்

பரம்பரைப் பணிமகள் நான்.

எவ்வளவோ ஜன்மங்களாகக் கன்னியாக

இருந்தவள்

எனக்குக் கணவன் கிடையாது.

என் மடி என்றும்

நிறைந்ததில்லை.

வறண்ட என் இதயத் தடாகத்தில்

அலை வீசுவதில்லை.

ஒரு சலசலப்புக் கிடையாது.

என் அவலட்சண முகத்தைப் பார்த்து

யார் என்னை மணந்து கொள்வார் ?

என் பயனற்ற வாழ்வு

பாலைவனத்தில் பதியும் பாதச் சுவடு.

நான் கம்சனின் தனி அடிமை.

எனக்கு நறுமணம் கிடையாது. வண்ணவடிவம்

கிடையாது. குரலும் கிடையாது.

அழகும் கிடையாது.

எனக்கு எங்குமே அதே வண்ணமற்ற

மணமற்ற குரலற்ற மெளனத்தின் நிழல்தான்.

காலம் காலமாக

பிரளயமெடுத்துப் பிரளயமாக

நான் தீய அசுரனுக்கே பணிபுரிந்திருக்கிறேன்.

அவனுடைய கடைக் கட்டளைக்கு

அடி பணிந்திருக்கிறேன்.

அந்தப் பாழும் பாலைவனத்தில் ஒரு

எதிர்பார்ப்பும் இல்லை. ஒரு புல் அசையாது.

துளி மேகமும் காணாது.

உடல் மனம் ஆவி அனைத்திலும்

பற்றியெறியும் வெக்கை.

மனவறட்சியும் துயரமும் வேதனையும் ஒருவர்

சுமக்கவிருப்பதில்

மதுராவெனும் இந்நகரத்தில்

புனிதம் நாறுகிறது.

இந்த வறட்சி மீதுள்ள மயக்கத்தில்

உலகமே குழம்பிக் கிடக்கிறது.

கடல் சூழ்ந்து இந்த பூமி பதறுகிறது.

மதுராவில் ஜீவனில்லை.

எண்ணற்ற இறந்த உள்ளங்கள்தான்.

உள்ளன. ஒன்று இரண்டு மூன்று

கோணலுடையவள்–

இந்த மனம், அவல உடல், நெஞ்சம்–

உடலும் ஆன்மாவும் ஒருசேர மடிந்து

சாவின் குளிருணர்வில்

பாழாய்ப் போன இந்நாட்டு மக்கள்

காமத்தின் மயக்க வாசனையில்

மெய் மறந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு துளியிலும்

தூசுச் சிதறிலும்

நரம்பிலும் துடிப்பிலும்

யாழின் குழல்

தொடர்ந்து அலை அலையாகப்

பாய்கிறது.

கோடிக்கணக்கான பிறப்புகளில், கனவுகளில்,

எல்லா ரணங்களும் உடைந்த

தாங்கொணாத் தாபங்களும்

காலந்தாழ்த்திய வசந்தத்தின் துன்ப மூலையில்

சதையின் விஷக் குறிகள்

செத்து மடிந்து ஆசைக்கனவுகள் நிரம்பிய

மனத்தில் என் பல கோடி ஜன்மங்களின்

மகவுகளும்

பேரன் பேத்திகளும், கொள்ளுப் பேரக்

குழந்தைகளும் அதற்கும் முந்திய

பேரப் பிறவிகளும் பிணங்களாக

வரிசை வரிசையாகக்

கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எல்லாக் கணக்கும் இப்போது

தீர்ந்துவிட்டது

மாய்ந்த மேகங்கள், மாய்ந்த புழுதி

மாய்ந்த பூமி மகவுகள்.

எல்லோருடைய உள்ளக்கிடக்குகளையும் அறிந்த

நீயோ என்னைக் கேட்டதெல்லாம் சிறிதளவு

அரைத்த சந்தனம்தான்.

என்ன ஆச்சரியம் ‘

அதே வாசம்

வாசத்துக்குரியவளுக்கு அதன் தொடக்கத்துக்கே

திரும்புகிறது இன்று ‘

என்ன பேராசையப்பா உனக்கு ‘

அந்தப் பூச்சு சகோதரர் இருவருக்கும்

பாக்கியில்லை போலும்.

இப் பிற்பகலின் பாலையில்

கரிய நீலமேகத்தின் ஆன்மத் தீண்டல் நிழலில்

தீயும் எப்படிக் குளிர்ந்துவிட்டது ‘

குப்ஜாவாகிய நான் ஜன்ம ஜன்மாந்திரமாக

அடிமை வம்சத்தை சார்ந்தவள்

இன்று முக்தி பெற்ற மகிழ்ச்சியில்

பேரானந்தத்தில்

என் மனம் கடம்ப மலர்களுக்கும்

அப்பால் மிதந்து செல்கிறது.

இடுகாட்டின் சிதறிய எலும்புகள் மத்தியில்

இசைத் துடிப்புகள்.

உன் மாய ஸ்பரிசத்தில்

காலம் காலமாயிருந்த பிணி மறைந்தது.

உடைந்த கனவுகள் புத்துருப் பெறுகின்றன.

கிழிந்து கந்தலான ஓட்டை மனம்

மீண்டும் புதிதாகிறது.

மேகமிடை மின்னலில் மழை,

கடல் சூழ பூமி மறுபிறவி.

என் சந்தனப் பசையால்

உன் நெற்றியில் புனிதத் திலகமிட்டேன்.

ஆழ் நீல மேக சியாமளன்

அளவிடவியலா முத்தான நெஞ்சமுடையவன்–

தலையிலிருந்து உனது நாபி வரை

மதுராபுரியின் ராஜபாட்டையில்

வேத கோஷம் ஒலிக்க

வாசமுள்ள சந்தனத்தை அப்பினேன்.

உன் பாத துளியால் என் முகவாயை

உயர்த்தினாய்

புத்துரு புதுப்பிறவி புது இளமை பெற்றேன்.

ஆதியும் அந்தமுமானவனே ‘

கட்டுண்ட பாவிகளான

மதுராபுரிவாசிகளை

மீட்டுக் காக்க உன்னை வேண்டுகிறேன்

உன் பாத துளிபட்டு

பயனற்ற இந்தப் பிறவிச் சகதி

தொலையட்டும்.

இருண்மை நிறைந்த இறப்புக்கும்

துண்டு துகளான காலத்துக்கும்

முடிவு வரட்டும்.

தீய அசுர மன்னனைத் தோத்திரம்

புரிவது முடியட்டும்.

வறண்ட வானில் மீண்டும் மேகச் சங்கிலி

எழட்டும். அக்கரியத் தொடர்

தவழ்ந்து வரட்டும்.

குங்கும வண்ணனே, பீதாம்பரதாரி,

வளை கடகம் தரித்து

மார்பெல்லாம் சந்தனம் பூசி

மாலையும் தாம்பூலம் தவழும் வாயும்

இனிய நறுமணமும் ஒளியும் கொண்டவனே,

முத்தே, பவழமே,

பொன் வைர வைடூரியம் அணிந்தவனே–

ஒருகணம் உனக்கு ஓர் யுகம்

இதெல்லாம் ஆதியும் ஆரம்பமும்தான்

சியாமளனே, உனக்கு அந்தமேது ?

உடல் மனம் ஆவியின் கோடையிறுதியில்

கட்டுண்டு நிறைவுறாத கொடுந்தீயான

காலப் பயணத்தின் முடிவில்

பிணியும் உடற்கோணலும் கொண்ட

இந்த பாழ்வாழ்வின் கடைசியில்

குப்ஜாவாகிய நான்

மகிழ்ச்சி லாகிரியில்

செளந்தர்யமான உடல் உள்ளம்

நெஞ்சத்துடன்

உனக்காக

இன்று காத்திருப்பேன்.

******************************

பாகவதத்தின் எண்ணற்ற சிறு பாத்திரங்களில் ஒருத்தி கம்சனின் அரண்மனைப் பூக்காரியான குப்ஜா. மிகுந்த அவலட்சணம் பொருந்தியவள். ஆனால் மதுரா விஜயத்தின் போது கண்ணன் அவள் மீது மிகுந்த அன்பு காட்டுகிறார். அவலட்சணமான உணர்விலிருந்து அவள் விடுதலை அடைகிறாள்.

Series Navigation

author

தமிழில் அசோகமித்ரன்

தமிழில் அசோகமித்ரன்

Similar Posts