குண்டலகேசி – சில குறிப்புகள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

வளவ. துரையன்


‘வாராய், நீ வாராய்;

போகுமிடம் வெகு தூரமில்லை; நீ வாராய் ‘

எனும் பழைய திரைப் படப் பாடலை திருச்சி லோகநாதனின் குரலில் கேட்டிருப்போம். அக்காட்சியில் ஒரு கணவன் தன் மனைவியை மலையின் உச்சிக்கு இப்படிப்பாடி அழைத்துச் செல்வான்.

அவளும் மகிழ்ச்சியுடன் செல்வாள். ஆனால் உச்சியை அடைந்ததும் ‘உன்னை இங்கிருந்து கீழே தள்ளிக் கொலை செய்யத்தான் அழைத்து வந்துள்ளேன் ‘ என்று அக்கனவன் கூறுவான். மனைவி தன் அறிவுத் திறத்தால் கணவனை வலம் வந்து அவனையே தள்ளி விட அவன் இறந்து விடுவான்.

‘மந்திரிகுமாரி ‘ திரைப்படத்தில் வரும் இக்காட்சிக்கான கருவை மு. கருணாநிதி குண்டல கேசியிலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.

குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுல் ஒன்றாகக் கருத்தப்படுகிறது. இந்த ஐம்பெருங்காப்பியங்கள் என்ற பாகுபாட்டையே யார் வகுத்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சூளாமணி எனும் நூல் மிகப் பெரிய காப்பியம். ஆனால் அஃது ஐஞ்சிறுங்காப்பியங்களில் அடக்கப் பட்டுள்ளது.

நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் ஐம்பெருங்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினென் கீழ்க்கணக்கு என்று தொகைப் படுத்தியுள்ளார். ஆனால் அவரும் ஐம்பெருங்காப்பியங்கள் இவைதாம் என்று பெயர் குறிப்பிடவில்லை.

பிற்காலத்தில் தோன்றிய இப்பாடல்தான் அவற்றின் பெயர்களைக் காட்டுகிறது

‘சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்

கந்தா மணிமேகலை புனைந்தான் – நந்தா

வளையாபதி தருவான் வாசவனுக்கு ஈந்தான்

திளையாத குண்டல கேசிக்கும். ‘

இவற்றில் முழுமையாகக் கிடைத்தவை சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகியவையே!

வளையாபதி, குண்டலகேசி ஆகிய இரண்டின் கதை நிகழ்ச்சிகளை சில உரையாசிரியரின் மேற்கோள்கள் மூலமும் , பல தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் மூலமும், மேலும் கர்ண பரம்பரையாக நிலவி வரும் இலக்கியச் சான்றுகள் மூலமும் அறிய முடிகிறது.

சீவக சிந்தாமணிக் காப்பியத்தலைவனின் பெயரால் வழங்கப் படுகிறது. கண்ணகியின் காற்சிலம்பு பற்றி சிலப்பதிகாரம் பெயர் பெற்றது. மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி முதலானவை அவற்றில் வரும் தலைவிகளால் பெயர் பெற்றது எனலாம்.

வளையாபதி பற்றிச் சிறப்பான செய்தி ஏதும் அந்நூலில் இல்லை. மணிமேகலை அறத்தின் உருவாகத் தவத்தின் வடிவாகக் காட்டப் படுகிறாள். கண்ணகி தன் கணவன் பழி கொண்டு கொலையுண்டான் என்ற உடன் வீறு கொண்டெழுந்தாள்.

ஆனால் குண்டலகேசிக்கோ கொண்ட கொழுநனே கொலையாளியானான். திடாரென்று ஏற்பட்ட அச்சூழலில் அறிவும் துணிவும் கொண்டு அவள் வெற்றி பெறுகிறாள்.

குண்டலகேசியில் நிகழும் ஊடலால் வந்த விபரீதம் சிலம்பின் கானல்வரியை நினைவூட்டுகிறது. அதுபோல் கம்பன் காவியத்தில் நிகழும் சீதை-இராமன் முதல் பார்வைபோல் இதிலும் காளனும், குண்டலகேசியும் சந்திக்கின்றனர்.

குண்டலகேசி கதைச் சுருக்கம் :

பூம்புகார் நகரத்தில் செல்வம் மிக்க வணிகனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு பத்திரை எனப் பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். பத்திரையின் குழந்தைப் பருவத்திலேயே அதன் தாய் காலமாகி விட்டாள். எனவே தனது ஒரே மகளான பத்திரையைத் தந்தையாகிய வணிகன் சீரும் சிறப்புமாக வளர்த்து வருகிறான்.

குண்டலம் என்ற சொல்லுக்கு சுருள் என்பது பொருளாகும். கேசி எனும் சொல் கூந்தலைக் குறிக்கும். பத்திரை சுருண்ட கூந்தலைக் கொண்டிருந்ததால் குண்டலகேசி என்று அழைக்கப் பட்டாள்.

குண்டலகேசி தன் கன்னிப் பருவத்தில் ஒருநாள் தனது இல்லட்தின் மாடியில் தோழிகளுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பந்தானது அவள் கையிலிருந்து தவறிப் போய் வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபனின் தோளின் மீது பட்டுக் கீழே விழுந்தது.

மாடியின் மீதிருந்து குண்டலகேசி கீழே குனிந்து எட்டிப் பார்க்கவும், பந்து தோளில் பட்ட வாலிபன் நிமிர்ந்து மேலே பர்ர்க்கவும் சரியாக இருந்தது. இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று உண்ண அவர்கள் காதல் வயப்பட்டனர்.

குண்டலகேசி அவ்வாலிபன் யாரென விசாரிக்கத் தொடங்கினாள். அவன் அந்நாட்டு அமைச்சர் கருணைவேல் என்பவரின் மகனாவான். அவனது பெயர் காளன். மேலும் கொலை, களவு, கணிகையர் இன்பம் போன்ற பலவற்றிலும் ஈடுபட்டு வருபவன் என்பதையும் அவள் அறிந்தாள். அவன் தற்பொழுது காவலர்களால் பிடிக்கப் பட்டு விட்டான். அரசர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார். திறமையும் கடமை உணர்வும், நேர்மை எண்ணமும் கொண்ட அமைச்சர் கருணைவேலே தன் மகன் என்றும் பாராமல் அத்தண்டனையை முன்மொழிந்தது குறிப்படத்தக்கதாகும்.

இந்த நிலையில் காளன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதுதான் அவன் தோளின் மேல் பந்து விழ குண்டலகேசியும் அவனைக் கண்டு மனம் பறி கொடுத்தாள்.

அந்நாள்களில் பூம்புகாரில் இந்திர விழா கொண்டாட்டம் துவங்கியிருந்தது. அம்மங்கல விழாக்காலத்தில் கொலைத் தண்டனைகள் நிறைவேற்றுவதை நிறுத்தி வைப்பது வழக்கம். இதை அறிந்த குண்டலகேசி காளனை விடுவித்து மணம் செய்து கொள்ள விரும்பினாள்.

மணந்தால் காளனையே மணப்பது என்ற தன் உறுதியைத்தன் தந்தையிடம் தெரிவித்தாள். தனது ஒரே மகளின் விருப்பத்தை நிறைவேற்ற அவள் தந்தை முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் அமைச்சர் கருணைவேலரோ தண்டனையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். உடனே குண்டலகேசியின் தந்தை அமைச்சரிடம் ‘நீர் காளனைச் சிறுவயதில் சரிவர வளர்க்கவில்லை. பெற்றோர் கடமையிலிருந்து தவறியது உம் குற்றம் ‘ என்று சுட்டிக் காட்டினார்.

அப்படியும் அமைச்சர் மனம் மாறவில்லை. எனவே அவள் தந்தை அரசனிடம் முறையிட்டார். வணிகனான அத்தந்தையின் நிலையை அரசனும் அவையும் ஆய்ந்தறிந்தனர். இறுதியில் காளனின் எடைக்கு எடை பொன்னும், எண்பத்தோர் யானைகளும் அரசுக்கு வழங்கினால் காளன் விடுவிக்கப்படுவான் என அறிவிக்கப்பட்டது.

காளன் விடுதலையானான். குண்டலகேசி அவனை மணம் புரிந்தாள். இருவரும் இல்லறத்தை இன்பமாக வாழத் தொடங்கினார்கள்.

குண்டலகேசியின் வாழ்வில் விதிவிளையாடத் தொடங்கியது. காவிரியில் முதல் வெள்ளம் வர மக்கள் புதுப் புனலாடக் கிளம்பினர். குண்டலகேசியும் செல்ல விரும்பி ஒப்பனை செய்து கொள்ளத் தொடங்கினர். காளன் அருகிருந்து அவளைப் பார்வையில் பருகிக் கொண்டிருந்தான்.

அப்போது காளன் விளையாட்டிற்காக குண்டலகேசியின் குங்குமச் சிமிழை எடுத்து மறைத்து வைத்தான். அதைக் காணாத குண்டலகேசி பதறிப் போய் அங்கும் இங்கும் தேடினாள்.

காளன் சிரித்துக் கொண்டே சிமிழை எடுத்துத் தந்தான். அதை வாங்கிய குண்டலகேசியும் விளையாட்டாக ‘நீர் கள்வர் அல்லவா ? உம் மாயக்களவெல்லாம் நான் அறிவேன் ‘ என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.

இதைக் கேட்ட காளன் திடுக்கிட்டான். தனது முந்தைய வாழ்வை அவள் இடித்துக் காட்டுவதுபோல் உணர்ந்தான்; பதறினான்; சினம் கொண்டான்.

‘ஆமாம்; நான் கள்வன் தான்; அப்படியானால் நீ கள்வனின் காதலியல்லவா ‘ என்று உறுமலுடன் கூறினான். விளையாட்டு வினையானதே என்று குண்டலகேசி மனம் வருந்தினாள்.

இருவரும் சென்று புனலாடி வந்தனர். ஆனால் காளன் அவள் சொற்களை மறக்கவே இல்லை. அவை வடுப்போல் ஆழமாகப் பதிந்து விட்டன. தனக்கு அவள் மேல் இருந்த வெறுப்பை வெளிக்காட்டாமல் அவளை விரும்புவது போல் பாடியும் கூடியும் நடித்தான். அவளும் அவனை நம்பி இருந்தாள்.

ஒருநாள் காளன் குண்டலகேசியிடம் ‘நான் விடுதலையானால் மலை உச்சியில் உள்ள தெய்வத்தை வந்து வழிபடுவதாக வேண்டிக்கொண்டேன். நாளையே நாம் செல்வோம் ‘ என்று கூறினான்.

அது கேட்ட குண்டலகேசி மனம் மகிழ்ந்தாள். மலைவளம் காணவும் தெய்வத்தை வழிபடவும் கணவனுடன் புறப்பட்டாள். அவனும் அவளை ‘வாராய்; நீ வாராய் ‘ என்று மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான்.

குண்டலகேசி உச்சியை அடைந்ததும் ‘வழிபட வேண்டிய தெய்வம் எங்கே உள்ளது ‘ என்று கேட்டாள். அவனோ கபடமாகச் சிரித்துக் கொண்டே ‘என்னிடமே நீ கள்வன் என்று ஏளனம் செய்ய உனக்கு எவ்வளவு துணிவு இருக்க வேண்டும் ‘ என்று கேட்டான்.

‘என்னை அறியாமல் ஊடலின்போது நான் விளையாட்டாகக் கூறியவற்றை இன்னமுமா மறக்கவிலை ‘ என்று அவள் கேட்டாள்.

‘இல்லை; அவை என் உள்ளத்தைப் புண்ணாக்கி விட்டன. அதற்கு மருந்து நீ இறப்பதுதான். உன்னை இந்த மலை உச்சியிலிருந்து உருட்டித் தள்ளத்தான் இங்கு அழைத்து வந்தேன். நீ கடைசியாக உன் வழிபடு கடவுளை மனத்தில் வணங்கிக் கொள் ‘ என்று காளன் சீறினான்.

குண்டலகேசி மனம் உடைந்தாள். ‘எனக்கு நீங்களே தெய்வம். உங்களை மும்முறை வலம் வந்து நானே இம்மலையிலிருந்து விழுந்து உயிர் துறக்கிறேன் ‘ என்று வேண்டினாள். காளனும் கொலைவெறியில் மதிமயங்கி உடன்பட்டான்.

காளனை நடுவில் நிறுத்தி குண்டலகேசி வலம் வரத் தொடங்கினாள். திடார் என அவள் பெண்மைக் குணம் மறைந்தது. மூன்றாம் முறை வலம் வரும்போது அவள் கைகள் காளனின் விலாப்புறத்தை அழுத்தித் தள்ளின.

இதனைச் சற்றும் எதிர்பாராத காளன் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து சிதறி இறந்தான். எட்டிப் பார்த்த குண்டலகேசி இப்போது அச்சம் கொண்டாள். கணவனைக் கொன்ற தானும் ஒரு பெண்ணா என்று மனம் குலைந்தாள். வருந்தித் தானும் உயிர் விடுவது என்று முடிவு செய்தாள்.

மலைஉச்சியிலிருந்து விழ இருந்த அவளை ஒருவேடுவப் பெண் தடுத்தி நிறுத்தினாள். குண்டலகேசிக்கு வழிகாட்டுமுகத்தான் அப்பெண்ணும் அவள் கணவனும் அவளைத் ‘துறவோர் பள்ளியில் ‘ சேர்த்தனர். குண்டலகேசி மனம் மாறினாள். அருக்கச்சந்திரனிடம் உபதேசம் பெற்று புத்த பிக்குணியானாள். தலைமுடி களைந்தாள். ஆயினும் விரைவில் சுருள் முடி வளரத் தொடங்கியது. எனவே பத்திரை என்ற பெயர் மாறி குண்டலகேசி என்று அழைக்கப் பட்டாள். பல சமயவாதிகளுடன் வாதிட்டுப் பெளத்த மதத்தின் பெருமையை நிலைநாட்டினாள்.

இவ்வாறு குண்டலகேசியின் வரலாறு கூறப்படுகிறது.

நீலகேசி என்பது ஐஞ்சிறுங்காபியங்களுள் ஒன்றாகும். குண்டலகேசியால் கூறப்படுகின்ற புத்த மதக் கொள்கைகளைக் கண்டிக்கவே ஓர் எதிர்ப்பு நூலாக நீலகேசி எழுந்திருக்கலாம். நீலகேசி எனும் அந்நூலில் குண்டலகேசியைப் பற்றிய சில செய்திகள் காணப்படுகின்றன.

அதன்படி குண்டலகேசி பல மதவாதிகளை வாதத் திறமையால் தோற்கடித்துத் தென்பாஞ்சால நாட்டின் தலைநகரான காம்பிலியை அடைகிறாள். அங்கு அவளிடம் வாதிட ஆருகத சமயத்தைச் சார்ந்த ஆர்யங்கனை நீலகேசி வருகிறாள்.

குண்டலகேசிக்கும் நீலகேசிக்கும் சொற்போர் நடக்கிறது. காம்பிலியின் மன்னனே நடுவராக உள்ளான். அந்த வாதப் போரின் இறுதியில் குண்டலகேசி தோற்று விடுகிறாள்.

ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி தோற்ற குண்டலகேசி நாடு கடத்தப்படுகிறாள். ஆயினும் வாதத்தில் தோற்றது தன் தனிப்பட்ட திறமைக் குறைவினால்தான் என எண்ணிய குண்டலகேசி புத்த மதமே உயர்ந்தது எனும் கொள்கையை இறுதி வரையில் மாற்றிக் கொள்ளவே இல்லை.

அவள் நடைப்பயணமாகவே தன் சொந்த ஊரான பூம்புகார் வந்து சேர்ந்தாள். அங்கு புத்த பள்ளிகளில் சேர்ந்து தன் சமய அறிவினைப் பெருக்கிக் கொண்டாள். இனி வாதம் செய்தல் வீண் என்றும் வாதத்தின் மூலம் செருக்கும் சினமும் தற்பெருமையும் வளர்கின்றன என்பதை இறுதியாக உணர்ந்தாள்.

வரலாறாகக் கூறப்படுகின்ற கதையின் நிகழ்வுகளுக்குச் சான்றுகள் இல்லை. ஆனால் நீலகேசி நூலில் குண்டலகேசியும் நீலகேசியும் வாதிட்ட விவரங்களையும் கருத்துக்களையும் 82 பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

யோகி சுத்தானந்த பாரதியார் 219 அடிகளில் குண்டலகேசி வரலாற்றை ‘குண்டலகேசி அகவல் ‘ எனும் நூலாக பாடி உள்ளாள்.

குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார் என்று சொல்லப்படுகிறது. இக்காப்பியம் எழுதப்பட்டது புத்த மதத்தை உயர்த்திப் பிடிக்கத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்நூல் முழுமையாகக் கிடைத்திருந்தால் இந்நூலின் காலத்திய பழக்க வழக்கங்கள், சமுதாய நிலை, சமயங்களின் காழ்ப்புணர்வுகள் போன்றவற்றை நாம் தெளிவாக அறிந்திருக்கலாம்.

ஆனால் இந்நூலிலிருந்து பத்தொன்பது பாடல்களே கிடைத்துள்ளன. தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீர சோழிய உரை, நீலகேசி, சிவஞானசிட்தியாருக்கு ஞானப் பிரகாசர் எழுதிய உரை, ஆகியவற்றுல் மேற்கண்ட 19 பாடல்கள் காணப்படுகின்றன.

நீலகேசிக்குச் சமய திவாகர வாமன முனிவர் எழுதிய உரையில் குண்டல கேசியின் 99 பாடல்களின் முதற்குறிப்புகள் மட்டுமே காணப்படுகின்றன.

நமக்குக் கிடைத்துள்ள பத்தொன்பது பாடல்களிலிருந்து நாம் எந்த நிகழ்ச்சியையும் அறிய முடியவில்லை. அவை பொதுவான ஒழுக்கங்களைப் போதிக்கின்றன. இதில் கிடைத்த பத்தொன்பதாம் பாடல் முக்கியமான ஒன்றாகும்.

வேரிக் கமழ்தார் அரசன் விடுக என்ற போழ்தும்

தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்

பூரிட்தல் வாடுதல் இவற்றால் பொலிவு இன்றி நின்றான்

பாரித்ததெல்லாம் வினையின் பயன் என்ன வல்லான். (19)

மாலை சூடிய அவனை ‘விடுதலை செய்க ‘ என்ற போது அவன் மகிழ்ச்சி அடையவில்லை. பின் அவனைக் கொலை செய்யுங்கள் என்ற போதும் அவன் கவலை கொள்ள வில்லை. நடந்ததெல்லாம் வினைப்பயன் எனும் மெய்யுணர்வு அவனுக்கு இருந்ததாஅல் அவன் சலனமின்றி இருந்தான் என்று இப்பாடல் கூறுகிறது.

இப்பாடலில் காட்டப்படும் மெய்யுணர்வாளன் யார் ? அவன் ஏன் முதலில் விடுவிக்கப்பட்டான் ? பிறகு ஏன் கொலைத் தண்டனைக்கு ஆளானான் என்பதெல்லாம் தெரியவில்லை.

‘ஒன்று நடந்துதான் தீரும் என்றால் அது நடக்கப் போகிறதே என்று கவலைப்பட்டு என்ன பயன் ? ‘ என்று கேட்பார் கண்ணதாசன்.

‘நீர் வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் ‘ என்று கணியன் பூங்குன்றன் பாடுவதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டியதாய் உள்ளது.

15ம் பாடலில் அரசன் புத்த பகவனைப் போன்றவன் என்று உதாரணம் காட்டப்படுகிறது. வேறு எப்பாடலிலும் புத்த மதம் பேசப்பட வில்லை.

ஆனால் ‘அவாவினை அறுக்க வேண்டும் யாக்கை நிலையில்லாதது, உடம்பு அழுகக் கூடியது ‘ போன்ற கருத்துக்கள் பல பாடல்களில் காணப்படுகின்றன.

பாம்பும், அரக்கரும், யாளி போன்ற விலங்குகளும் சிறிது காலம் பழகினாலும், பழகியவரிடத்து அன்பு காட்டும். ஆனால் நாம் எமனோடு எவ்வளவு காலம் எப்படிக் கூடி இருந்தாலும் அவன் சிறிதும் நம்மீது இரக்கம் கொள்ள மாட்டான் என்று ஒரு பாடல்(8) கூறுகிறது.

நாம் ஏற்றுக் கொண்ட தலைவர், நெருங்கிய நண்பர் பாசமுள்ள உறவினர் ஆகியோர் மறையும் போது அழுகை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனால் நாம் நாள்தோறும் ஒவ்வொரு நொடியையும் கடந்து கொண்டு இறந்து கொண்டிருக்கிறோம். இதற்காக நாம் ஏன் அழவில்லை என்று கேட்கிறது இப்பாடல்.

பாளையாம் தன்மை செத்தும்

பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும்

காமுறும் இளமை செத்தும்

மீளுமிவ் வியல்பும் இன்னே

மேல்வரும் மூப்பும் ஆகி

நாளும்நாள் சாகின் றாமால்

நமக்குநாம் அழாதது என்னோ (9)

‘நாம் நம் தாயின் வயிற்றில் கருவாகி இருந்த நிலைவிட்டு இறந்தும், பிறகு குழந்தைப் பருவத்தைக் கடந்தும் (இறந்தும்), பின் காளைப்பருவம் இறந்தும், அதன் பின் மகளிரைக் காமுறும் பருவநிலை இறந்தும் மூப்படைகிறோம். இப்பருவத்தினின்றும் இறக்கப் போவது உறுதி. இப்படிக் கணம் தோறும் இறந்து கொண்டிருக்கும் நாம் பிறர் இறப்புக்கு அழுகின்றோம். நம் இறப்புக்கு அழுவதில்லையே ‘ எனக் கூறும் இப்பாடல் சிறந்த பாடல்களில் ஒன்றாகும்.

‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழுத்து விடின் (குறள் 280)

என்றார் வள்ளுவர். இதே போல் உடம்பில் புறத்தே வெளி வேடங்கள் போடும் தவசிகளை ஒரு பாடல் சாடுகிறது.

போர்த்தல் உடைநீக்குதல் பொடுத்துகள் மெய்பூசல்

கூர்த்த பனிஆறுதல் குளித்து அழலுள்நிற்றல்

சார்த்தர் இருபிச்சையர் சடைத்தலையர் ஆதல்

வார்த்தை இவைசெய்தவம் மடிந்து ஒழுகல்என்றான். (4)

உலகில் ஆசையை அனுபவித்துப் பிறகு துறந்து விடலாம் என்று கூறுவது நெருப்பை நெய்யூற்றி அணைக்கலாம் என்று கூறுவதற்கு ஒப்பாகும் (5)

புணர்ச்சியினால் காமத்தை அகற்றுவோம் என்று கூறுவது மிகப் பெருகின்ற வெள்ளத்தை மற்றொரு வெள்ளத்தால் தடுத்து நிறுத்துவதற்குச் சமமாகும் (6)

இவை போன்று மிகச் சிறந்த உவமைகளும் இப்பாடல்களிக் காணப்படுகின்றன.

மொத்தத்தில் குண்டல கேசி காப்பியம் முழுதும் கிடைத்திருந்தால் தமிழ் கூறும் நல்லுலகம் பெரும் பயன் பெற்றிருக்கும் என்று துணிந்து கூறலாம்.

—-

உதவிய நூல்கள்

1. குண்டலகேசி – மூலமும் உரையும் – ப. சந்தானம், நந்தனார் பதிப்பகம், சிதம்பரம். (1998)

2. ஐம்பெருங்காப்பியங்கள் தொகுதி 5 – ஜெ. சந்திரன், தமிழ் நிலையம், சென்னை – 17 (1998)

வளவ துரையன்

  • பரிபாடலில் திருமால்
  • அ முத்துலிங்கம் பற்றி
  • கிரஷ் கார்னாட் நாடகம் பற்றி
  • க மோகனரங்கன் – ‘பின் தொடரும் நிழல் ‘ பற்றி
  • ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள் பற்றி
  • பாவண்ணன்
  • புலிநகக் கொன்றை
  • நந்திக் கலம்பகம்

    Series Navigation