குட்டாஸ்

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

– ஸ்ரீனி.


1) ஆகாயப்பந்தல்
மின்னல் மேடை
இடிமேளம்
நீர்த்திளி அட்சதைகள்
நிலத்தில் விதை வேரூன்றும்
விவாகம்.

2) புதுத்தேனைப் பருக விட்டு
மகரந்தத் துகள் மந்திரத்தில்
மறுஜென்மம் பெறும்
கல்யாண கட்டுப்பாட்டில்லா
கன்னியர்களாம் மலர்கள்.

3) பக்கத்தில் இருப்பதனால்
பார்ப்பதற்கு பெரிதாகும்
பகுத்தறிந்து பாராவிடில்
பெரிது பல சிறிதாகும்.

4) அவன் – அவள் – அது
அவனுக்கு அவள் அதற்கு
அவளுக்கோ அவன் அதற்கு
ஆனால் அவனால் அவளுக்கு அது.
அதனால்
அவன் – அவள் – அது.

5) பீரங்கிகள் முழங்கட்டும்.
துப்பாக்கிகள் தோட்டாக்கள் துப்பட்டும்.
அணுகுண்டுகள் பாயட்டும்.
மேலும் பீரங்கிகள் செய்வோம்,
துப்பாக்கிகள் செய்வோம்,
இறப்பது மனிதன் மட்டுமே ..
வேண்டும் போது செய்து கொள்வோம்..

6) சட்டையில் நட்சத்திர பொத்தல்கள்
சவுக்குக் காட்டுத் தலைமுடி
இடுப்பில் தொங்கும் மழலை
குப்பைத்தொட்டி அட்சையப்பாத்திரச் சோறு
இருட்டை விரட்டும் கருமை
பாரதி ! கிடைத்துவிட்டாள் அவள்!

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி