குஜராத்தும் நமது அறிவுஜீவிகளும்

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

நீலகண்டன் அரவிந்தன்


குஜராத்தில் நடந்த மானுட அழிவுகள் மனிதாபிமானமுள்ள அனைவராலும் கண்டிக்கத்தக்கவை ,ஒரு வகையில் இந்தியாவின் எதிர்காலத்தையே அபாயத்தில் ஆழ்த்தக்கூடியவை என்பதை எந்த இந்தியனும் ஒப்புக் கொள்வான் .அங்கு சமபலமற்ற அடிப்படையில் நடந்த கலவரத்தில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டது கசப்பூட்டும் உண்மை. மனச்சமநிலையுள்ள ஒவ்வொரு இந்தியனும் இதை வன்மையாக கண்டிப்பதோடு குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதையும் விழிப்பாக கவனிக்கவேண்டும். கலவரத்தை அடக்குவதில் மட்டும் அரசு வெற்றிபெற்றால் போதாது . அனைத்து கலவரக் குற்றவாளிகளையும் சிறைக்கனுப்புவது எளியவிஷயமல்லதான் .ஆனால் கணிசமான பேர் குற்றவியல்தண்டனை பெற்றால் அது முக்கியமான ஓர் எச்சரிக்கையாக அமையும். இன்றுவரை இந்தியாவில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குற்றவியல்சட்டத்தின் பிடியில் அகப்பட்டதேயில்லை .இதைவிட அதிகம் நாட்கள் நடந்த ,இதைவிட அதிகமான பேர் இறக்க நேர்ந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்து பெரும் கலவரங்களில் கூட .

ஆனால் இப்போது நடப்பது பிணங்களைவைத்து நடத்தப்படும் அரசியல் விளையாட்டு . குறிப்பாக நமது தேசியநாளிதழ்களும் , முற்போக்கு அறிவுஜீவிகளும் இதை பாரதீய ஜனதா கட்சி மீதுள்ள அரசியல் எதிர்ப்பை நிலைநாட்டும் நல்வாய்ப்பாகவே கருதுகிறார்கள் . இவர்கள் அரை உண்மைகளை பொய்யால் நிரப்பி செய்யும் உக்கிரமான பிரச்சாரம் இந்திய ஜனநாயக அமைப்புமீதும் இங்குள்ள ஜனநாயக உணர்வு மீதும் இஸ்லாமிய சமூகம் நம்பிக்கை இழக்கவேண்டுமென்ற திட்டவட்டமான நோக்கத்துடன் இருக்கிறதோ என்ற ஐயமே ஏற்படுகிறது.

கலவரங்களின் பின்னணி

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த கலவரங்களில் கூட நடந்த பிவாண்டி, மொராதாபாத் கலவர அறிக்கைகளைபார்ப்பவர்கள் ஒன்றை தெளிவாக உணர முடியும். கலவரம் எப்போதுமே இஸ்லாமியர்களில் சில ரத்தக் கொதிப்புள்ள இளைஞர்களால் பின்விளைவுகளை கணிக்காமல் துவங்கப்படுகிறது.உதாரணமாக மொராதபாத் கலவரம் பள்ளிவாசில் கிணற்றில் ஒரு பன்றியின் சடலம் போடப்பட்டது என்ற வதந்தியுடன் தொடங்கியது . அது பொய்வதந்தி என பிறகு நிரூபிக்கப்பட்டது . கலவரம் படரும்போது பெரும்பாலானவர்களான இந்துக்களின் கை ஓங்குகிறது , உள்ளூர் கோபங்கள் சேர்ந்துகொள்கின்றன.இஸ்லாமியர் அதிகமாக பாதிப்படைகிறார்கள்.

இஸ்லாமியர் எப்போதுமே ஒதுங்கி வாழ்வதாலும் , தொழில் தாவாக்களில் சமூக அமைப்பாக செயல்படுவதாலும் அவர்கள் மீது பிற சமூகங்களுக்கு இருக்கும் கோபங்கள் இக்கலவரங்களில் வகிக்கும் பங்கு மிகப்பெரியது . இங்கு வணிகம் எப்போதுமே இஸ்லாம் X பிற சமூகம் என்ற இரு தரப்பாகவே நடைபெறுகிறது என்பதும் பெரும்பாலான தருணங்களில் இஸ்லாமிய சமூகம் மசூதியை மையமாக கொண்ட ஒற்றை வணிகக் குழுவாக உள்ளது என்பதும் உண்மைகள் .

கோவையில் இதை மிகத்தெளிவாகவே காணலாம் . நம்பிக்கையின் அடிப்படையில் {நிச்சயமாக கள்ளப்பணத்தைக் கொண்டு} நடக்கும் வணிகத்தில் பெரும் பணத்தை சாப்பிட்டுவிட்டு தங்கள் சமூக அமைப்பின் உதவியால் சிலர் தப்பிீத்ததன் மூலம் உருவான கோபம் கோவைக் கலவரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது . இதுவே பிவாண்டி மொராதாபாத் கலவரங்களிலும் பின்னணியிலும் இருந்தது .

குஜராத்திலும் இதுவே நடந்தது என விரிவாகவே இப்போது தெரியவருகிறது . இடைநிலை வியாபாரிகளான இஸ்லாமியர் மீது பால் உற்பத்தியாளர்களான அடித்தள மக்களான தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினர் கொண்ட கோபம் குஜராத் கலவரங்களின் அடிப்படைக் காரணங்களில் ஒன்று . அம்மக்களே இக்கலவரத்தில் அதிகமாக ஈடுபட்டார்கள் என ஆங்கில தினசரிகள் விரிவாகவே செய்திகளை அளித்தும்கூட தமிழில் எந்த இதழும் அச்செய்திக்கு முக்கியத்துவம் தரவில்லை . காலச்சுவடு போன்ற உண்மைகளில் அக்கறையற்று, தங்களது மதச் சார்பற்ற இமேஜை உண்டுபண்ணிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமுள்ள இதழ்கள் கலவரத்தில் நடுத்தர வர்க மக்களின் பங்கை மிகைப்படுத்தி அவர்கள் மட்டுமே கலவரம் செய்ததாக எழுதின . கோவையிலும் தலித்துக்களே இஸ்லாமியருக்கு எதிரான கலவரங்களில் அதிகமாக ஈடுபட்டனர் . இவர்கள் மத்தியில் ஆர் .எஸ். எஸின் சித்தாந்தப் பாதிப்பு மிகவும் குறைவுதான் . இதன் சமூகவியல் காரணங்கள் என்ன என்பதை மழுப்பி மொத்தையான ஒரு சித்திரம் இங்கு உருவாக்கப்படுகிறது .

கேரளத்தில் பெரும் எண்ணிக்கையில் கொலைகளும் கட்டாய மதமாறங்களும் நடந்த மாப்பிளா கலவரம் மதக்கலவரமல்ல அதன் பின்னணியில் நில பிரச்சினைகள் உள்ளன என 50 வருடமாக வாதிட்டு வரும் இடதுசாரிகள் அப்பட்டமாக கண்ணுக்கு தெரியும் இவ்விஷயத்தில் இது ஆர். எஸ் .எஸ் நடத்திய திட்டமிட்ட மதவெறிப் படுகொலை மட்டுமே என்ற நிலைப்பாட்டையே எடுத்து வருவது அவர்களுடைய இன்றைய குறுகிய அரசியல் நோக்கத்தின் விளைவேயாகும்.

இந்தக் குறுகிய அரசியல் நோக்கம் , அதாவது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருப்பதனால் அதை அழிக்க இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்ற ஆர்வம் , இடதுசாரிகளையும் அவர்களால் இறக்கிவிடப்பட்டுள்ள சில மதசார்பின்மைவாதிகளையும் தேசத்தை ஓர் உள்நாட்டு போர் வரை இட்டுசெல்லச் செய்கிறது என்பது வருத்தம் தருவது .உண்மையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஓர் உள்நாட்டுபோர் வெடித்தால் நல்லதுதான் என்பதே இவர்கள் எண்ணம்.

ஊடகங்களின் திரிபுகள், அரை உண்மைகள்

குஜராத் கலவரம் வெட்ககரமானது . கண்டிக்கத்தக்கது . ஆனால் இடதுசாரிகள் மற்றும் நமது இதழ்கள் இதனைப் பயன்படுத்தி விளையாடும் ஆட்டம் அபாயகரமானது .சில விஷயங்களை மட்டுமே இங்கு குறிப்பிடலாம் .

1 ] சட்டப்படி ராமஜன்ம பூமி இப்போதும் விவாதத்துக்கு உரிய இடம் அல்லவா ? நூற்றாண்டுகளாக நீளும் விவாதம் அது . பல போர்கள் அதற்காக நடந்துள்ளன. அது ராமஜன்ம பூமி என்பது ஹிந்துக்களின் தரப்பு என்றால் , பாபர் மசூதி என்பது பாபர் மசூத வாதிகளின் தரப்பு . ஆனால் சட்டத்தை வகுப்புவாதிகள் (அதாவது ஹிந்துக்கள்) மீறியதாக சொல்லும் இடதுசாரிகளும் பல இதழ்களும் அதை பாபர் மசூதி என்று அதி உச்சத்தில் இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்தன ,செய்துவருகின்றன . இன்று இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஏழை முஸ்லீம்கள் அங்கு பலவருடங்களாக இஸ்லாமியர் தொழுகை நடத்தி வந்த, நடத்தி வருகிற ஒரு மாபெரும் பள்ளிவாசல் இருந்தது என நம்பிவருகிறார்கள் என்பதற்கு காரணம் இடதுசாரிகளும், அவர்களது இதழ்களுமே. அங்கிருந்தது தொழுகை நடத்தாத ஒரு அடையாள டோம் மட்டுமே என்ற எளிய உண்மையை இப்போது சொல்ல முற்படுபவனை வகுப்புவாதி என்பார்கள் . இன்று இஸ்லாமிய தலைவர்கள் நினைத்தால்கூட பிரச்சினையில் ஒரு அங்குலம் கூட பின்னகர முடியாது என்ற நிலையை நமது மதசார்பற்றவர்கள் இங்கு உருவாக்கிவிட்டார்கள்! இதனால் தேசத்துக்கு நேரும் அழிவுப்பற்றி யாருக்குமே கவலை இல்லை .

2 ] கோத்ரா எரிப்பை ஒட்டி இதழ்கள் நடந்துகொண்ட விதம் எப்படிப்பட்டது ? கோத்ராவில் ஒரு முஸ்லீம் வியாபாரியை தாடியை பிடித்து இழுத்ததாகவும் , ஒரு 16 வயது இஸ்லாமியப்பெண்ணை கரசேவகர்கள் இழுத்துவண்டிக்குள் போட்டதாகவும் அதனால்தான் முஸ்லீம்கள் கலவரத்தில் இறங்கியதாகவும் ஒரு மின்னஞ்சல் எல்லா இதழ்களுக்கும் அனுப்பப்பட்டது .அதை எல்லா பத்திரிக்கைகளும் பரிசீலனை செய்யாமல் வெளியிட்டார்கள்.வி ஆர் கிருஷ்ணையர் அதை மிக விரிீவாக கட்டுரையாக எழுதினார் . தமிழிலும் அக்கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டது .அனைத்து இஸ்லாமிய இதழ்களும் கடுமையான செய்தியாக அதை வெளியிட்டன. குமுதம் தீராநதி உட்பட அதை வெளியிடாத இதழே இல்லை!

ஆனால் அவுட் லுக் இதழில் முதுபெரும் பத்திரிகையாளர் பிரேம் சங்கர் ஜா (பாரதிய ஜனதாவின் சித்தாந்த எதிரி இவர்) இது குறித்து விசாரித்து 25.3.2002 இதழில் மிக விரிவாக கட்டுரை எழுதினார் .இது சில நிருபர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் திட்டமிட்டு பரப்பபட்ட பொய் என்று நிரூபிக்கப்பட்டது . ஆனால் அதன் பின்பு கூட தமிழில் அச்செய்திகளை இதழ்கள் வெளியிட்டன. செய்தி வெளியிட்ட எந்த இதழும் மன்னிப்பு கோரவில்லை .[ ஜூலை மாத சமரசம் இதழில் கூட இச்செய்தி மீண்டும் பிரசுரமாகியுள்ளது .] எண்ணற்ற மின்னஞ்சல்கள் ,இணைய விவாதங்கள் வழியாக இந்த அப்பட்டமான அவதூறு இன்னமும் பரப்ப படுகிறது [ஏற்கனவே பிராமண – யூத கும்பலே அமெரிக்க செப்டம்பர் 11 தாக்குதலுக்கு காரணம் என வதந்தி கிளப்பிய மின்னஞ்சல்கள் பரவியதை நாம் அறிவோம் . அதை இங்குள்ள எல்லா இஸ்லாமிய இதழ்களும் முக்கியத்துவம் தந்து வெளியிட்டன ]

3] நியூட்டனின் விதியை மோடி சொன்னதாக வெளிவந்த செய்தி தவறு , அச்செய்தியை முதலில் வெளியிட்ட நிருபர் மோடியை சந்திக்கவேயில்லை , அவர் அதை பிறகு ஒப்புக் கொள்ளவும் செய்தார் . வேறு ஒரு நிருபர் போனில் சொன்னதை வைத்து அவர் அதை எழுதினாராம்.இன்றுவரை மோடி எங்கு எவரிடம் சொன்னார் என்று உறுதிசெய்யப்படவில்லை . இதை இனிமேல் மக்களிடையே எடுத்துச் செல்ல எத்தனை கோடி செலவிடவேண்டும்! [ சைபர்னோன் 19 மார்ச் 20002 ] இப்போதும் இப்பொய்ச் செய்தி ஒரு விஷம் போல இந்தியா முழுக்க பரப்ப படுகிறது.

4]கலவர இடத்தில் சென்று அறிக்கை அனுப்பிய இதழாளர்கள் மிக குறைவு .கணிசமான செய்திகள் வெறும் கற்பனைகள் .வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை . உதாரணமாக டைம் இதழ் நிருபரான மீனாட்சி கங்குலி வெறுப்பின் இதயத்தில் என ஒரு கட்டுரை எழுதினார் .இதில் எரிக்கப்பட்ட ஜாஃப்ரி எம் பி யின் மகள் அவர்முன் வைத்து கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டதன் சித்திரத்தை அளித்திருந்தார் . அதைப்பற்றி கூடவே நின்று பார்த்த ஒரு சிறுவன் மிகுந்த பெருமிதத்துடன் பேசியதாகவும் அவர் எழுதினார் .

தொடர்ந்து அருந்ததி ராய் தன் வலுவான சொற்களால் அச்சம்பவத்தை அவுட் லுக் இதழில் வந்த தன் கட்டுரையில் எழுதினார் . இந்தியாவில் 11 மொழிகளில் அக்கட்டுரை வெளிவந்தது . ஆனால் ஆசியன் ஏஜ் இதழில் ஜாஃப்ரியின் மகனின் பேட்டி வெளியானது . ஜாஃப்ரியின் ஒரே மகள் அமெரிக்காவில் வாழ்வதாகவும் அச்சம்பவம் முற்றிலும் கற்பனை என்றும் அவர் சொன்னார் . டைம் மன்னிப்பு கேட்டது . நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் அருந்ததி ராய் மன்னிப்பு கேட்டார் .

ஆனால் தமிழில் இதன் பிறகு திருவண்ணாமலை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட அருந்ததி ராயின் கட்டுரை 50000 பிரதி விற்கப்பட்டது .[ மொழிபெயர்ப்பு ஆர் .குப்புசாமி ] எந்த திருத்தமும் செய்யப்படவில்லை . இக்கட்டுரையை விற்க காயல்பட்டினத்தின் இஸ்லாமியர் பகுதியில் தனி ஸ்டாலே இடதுசாரிகளால் திறக்கப்பட்டது!

5]அகமதாபாத் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிட்ட ஊடகங்கள் குஜராத்தின் செய்தியாளர் போக முடியாத கிராமங்களில் இதைவிட பலமடங்கு அழிவு ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டன . இப்போது அமைதி மீண்ட பிறகு கலவரம் அகமதாபாத் புறநகர்கள் விட்டு அதிகம் பரவவில்லை என்றும் 95 % குஜராத் கிராமங்களில் அதன் பாதிப்பே இல்லை என்றும் செய்திகள் வருகின்றன— கிராமங்களில்தான் ஆர் எஸ் எஸ் செல்வாக்கு அதிகம் என்பதை இங்கு நினைவு கொள்ளவேண்டும் . முஸ்லீம்கள் வெளியேறிய கிராமங்களில்கூட அவர்கள் அச்சத்தால் தங்கள் பெரும்பான்மை பிராந்தியங்களை நோக்கி சென்றதாகவே இப்போது செய்திகள் வருகின்றன.

அப்படியானால் இவர்கள் சொன்ன மற்ற தகவல்களின் நம்பகத்தன்மை என்ன ? சாதாரணமாக கலவரங்கள் நடக்கும்போது அவ்வுணர்வுகள் கொன்று குடியிறக்கினால் இரு சமூகங்களுக்குள் பூசல் என செய்தி வெளியிடும் இதழ்கள் தான் இவை .இப்போது மட்டும் இவை பல மடங்கு மிகைப்படுத்தப்பட்ட சித்திரத்தை கலவரம் நடக்கும்போதே ஏன் வெளியிட்டன ?கலவரச்செயல்கள் குறித்து அறிக்கையளித்த நீதிபதி ஜஸ்டிஸ் D Sதேவாடியா இதில் ஊடகங்கள் மிக பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதை குறிப்பிட்டுள்ளார் .

6] தமிழில் அரைகுறை செய்திகளை பெரிதும் மிகைப்படுத்தி வெளியிட்ட காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவிில் ஒருவரான அப்துல் ஹமீது [மனுஷ்ய புத்திரன் ] தமிழகத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எல்லா செயல்களையும் மெளனம் மூலம் அங்கீகரித்தவர் என்பது இங்கு சொல்லப்படவேண்டும் . ஹெச். ஜி. ரசூலை அடிப்படைவாதிகள் மிக மிக சிறிய விஷயம் ஒன்றுக்காக [ இத்தனை நபிகளில் ஏன் ஒரு பெண்நபி இல்லை என்று ஒரு பெண் குழந்தை கவிதையில் கேட்டதற்காக ] ஜாதிபிரஷ்டம் செய்தபோது அவரது சக மதத்தவரின் அடிப்படை வாதம் குறித்து எந்த ஒரு தலையங்கமும் அவர் வெளியிடவில்லை. இன்றுவரை அவர் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்து எதுவுமே சொன்னதில்லை . தீவிர வாத இயக்கமான முஸ்லீம் முன்னேற்ற கழக ஆதரவுடன் இவரது தங்கை கவிஞர் சல்மா வென்று ஊராட்சித்தலைவியானார் .[ஆதாரம் ஆனந்தவிகடன் தீபாவளிச் சிறப்பிதழ் 2001] .

7 ] காலச்சுவடு இதழில் குஜராத் கலவரங்களில் தேவ்பந்தி மதரசாவின் இடம் எப்படி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்பதைக் காணலாம் . இந்த ஒட்டு மொத்த சர்ச்சையிலும் பேசப்படாத பல விஷயங்களில் முக்கியமானது இது . கோத்ராவில் இயங்கும் தேவ்பந்தி மதரஸக்கள் இதில் ஆற்றிய பங்கு குறித்து இந்தியா டுடே மார்ச்சில் விரிவாக ஆதாரத்துடன் எழுதிய பிறகும்கூட தமிழக அறிவுஜீவிகள் அதை குறிப்பிடவேயில்லை! பாகிஸ்தானிலேயே இப்போது ரத்த ஆறை ஓட்டி வரும் மத வன்முறை போதிக்கும் இந்த மதரஸாக்களை இன்று அவர்களேயே கட்டுப்படுத்த முடியவைல்லை .சுதந்திரமான நிதியாதாரமும் சர்வதேச ஆதரவும் உள்ள மர்மமான அமைப்புகள் இவை. இவ்வமைப்புகள்தான் ஆப்கானிஸ்தானில் தாலிபானை நிறுவின.

காலச்சுவடை பொறுத்தவரை கோத்ரா சம்பவம் ‘ இயல்பாக வெடித்த வெளிபாடு ‘ .[அவர்கள் கோபம் கோத்ராவாக வெடித்தது]மற்றவை திட்டமிட்ட இனப்படுகொலைகள் . அவற்றுக்கு உடனடியாக பதிலடி தரப்பட வேண்டுமென்ற தொனியை தலையங்கத்திலேயே காணலாம் ‘ அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கப்போவது ஒரு ஜனநாயக அமைப்பின் நியாய உணர்வா இல்லை இஸ்லாமிய பயங்கரவாதமா ? ‘ . மொத்த கட்டுரையும் இந்திய அமைப்பின் ஜனநாயகமோ நியாய உணர்வோ இல்லை என்று வாதிடுவதன் பின்னணியில் இச்சொற்கள் எதைகுறிக்கின்றன ?

8] கஹர்ஜி , உன்சா போன்ற ஊர்களில் கலவரத்தை கட்டுப்படுத்தவும் மருத்துவ வசதிகள் செய்யவும் கடுமையாக உழைத்த ஆர் எஸ் எஸ் ஊழியர்கள் குறித்த செய்திகளை பல இந்தி நாளேடுகள் வெளியிட்டுள்ளன. முஸ்லீம் பகுதிகளுக்கு போன மருத்துவர்களில் இந்துமருத்துவர்கள் தேடிப்பிடித்து கொலப்பட்ட பின் மருத்துவர்கள் வேலைபுறக்கணிப்பு நடத்தினர். [ ஜனசத்தா மார்ச் 3] இக்கலவரத்தை கடுமையாக கண்டித்து அறிக்கைவிட்டு கட்டுப்படுத்தும்நேரடி நடவடிக்கைகளில் இறங்கிய கரோடியா போன்ற அகில இந்திய விச்வஹிந்து பரிஷத் தலைவர்கள் உள்ளனர் . இச்செய்திகள் ஊடகங்களில் வராமல் கவனித்துக் கொள்ள கடுமையான முயற்சி எடுக்கப்பட்டது .

9 ]கலவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு போல்லீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 150 .இவர்களில் 75 சதவீதம் பேர் இந்துக்கள் . ஆனால் போலீஸ் இஸ்லாமியர்களை நோக்கி மட்டுமே சுட்டது என எல்லா இதழ்களும் எழுதுகின்றன.காலச்சுவடு அதையே சொல்கிறது.

10] திரிபுகள் எண்ணற்றவை ,ஊடகங்களின் அறிக்கையை கூர்ந்துபார்த்தால் அவை வந்து கொண்டே இருக்கின்றன. எல்லைப்புற மாகாணமான குஜராத்தில் தொடர்ந்து மதரஸாக்களை பாகிஸ்தான் நிறுவிவருவதையும் , வனவாசிகள் மத்தியில் பெரும் பணச்செலவில் கிறிஸ்தவ மதமாற்றத்தை சர்ச்சுகள் நடத்தி வருவதையும் அரசு கண்காணித்ததை இன அழித்தொழிப்புக்கான பயங்கரமான முன்திட்டம் , கொலைக் கணக்கெடுப்பு என்று ரவிக்குமார் சித்தரிக்கிறார் . இத்தனைக்கும் குஜராத் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை , வெறுமே கணக்கெடுப்பு மட்டுமே நடத்தியது . இந்த கண்காணிப்பு 40 வருடம் முன்புவடகிழக்கு மாநிலங்களிலும் 30 வருடம் முன்பு காஷ்மீரிலும் செய்யப்பட்டிருந்தால் இீன்று நாம் அளிக்கும் பெரும் விலை தவிர்க்கப்பட்டிருக்கும்.

சேவை அமைப்புகளுக்கு வெளிநாட்டு பணவரவை கண்காணிப்பதை இந்திய புத்திஜீவிகள் எப்போதுமே பெரும்பாவமாகவே கருதிவருகிறார்கள்.{அப்படி கணக்கெடுக்காத அரசு ஏதேனும் உண்டா என அவர்கள் சொல்வதில்லை}. காரணம் இந்தியாவில் பல இடங்களில் பலவிதமான அரசியல் நோக்கங்களுடன் இயங்கிவரும் என் ஜி ஓ என்ற அரசு சாரா அமைப்புகளின் மறைமுக நிதி உதவிகள் பெறாத அறிவுஜீவிகள் மிக மிக குறைவு. [ உதாரணமாக மதுரையில் செயல்பட்டு வரும் தலித் ஆய்வு மையம் என்ற கிறிஸ்தவ என். ஜ ி. ஒ அமைப்புக்கும் ரவிக்குமார் நடத்திய நிறப்பிரிகை இதழுக்குமான தொடர்பு அவ்விதழ்களிலேயே பதிவுசெய்யப்பட்ட ஒன்று ] எங்கிருந்தென்று தெரியாமல் இவற்றுக்கு வரும் நிதி அன்னியசெலவாணி வருகை என்ற கோணத்தில் பார்க்கப்பட்டு கடந்த காலத்தில் தாராளமாக அனுமதிக்கப்பட்டது .அதன் தூர விளைவுகள் தேச விரோதமானவை என நிரூபணமான பிறகே நரசிம்மராவ் காலம் முதல் அவை கண்காணிக்கப்படுகின்றன. குஜராத் அரசு செய்த அதே கணக்கெடுப்பை மேலும் விரிவாக தன் தொண்டர்களையும் பயன்படுத்தி மேற்கு வங்க அரசு செய்தது , செய்து வருகிறது.

கலவரத்தின் மறு தரப்பு என்ன ?

கோத்ராவிற்குப் பின் பாதிக்கப்பட்டவர்கள் ஜனநாயக முறைப்படி நீதிமன்றம் போனால் என்ன ஆகும் ? முதல் பரபரப்புகள் ஓய்ந்ததும் இதழ்கள் நேர்மாறான செய்திகளை வெளியிட ஆரம்பிக்கும். உண்மையிலேயே குற்றவாளி யார் என கேட்பார்கள் மதசார்பின்மைவாதிகள். கடைசியில் கரசேவகர்கள் தங்களைதாங்களே எரித்தார்கள் என வாய் கூசாமல் கூறுவார்கள். .எவருமே தண்டிக்கப்பட மாட்டார்கள் , இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை . அவர்களை தண்டிக்காமலிருக்க நாட்டின் அத்தனை இதழ்களும் அணிதிரளும் என்று கலவரச் சார்பாளர்கள் தங்கள் செயலை நியாயப்படுத்தும்பொருட்டு கூறினார்கள்.

இங்கு நிகழும் நிகழ்வுகள் பல அவ்வாறுதான் உள்ளன. தமிழகத்தில் ஓர் அரசியல் தலைவர் மீது , ஒரு தலைமை அலுவலகம் மீது கைவைத்தால் என்ன ஆகும் ? ஆனால் தமிழக இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் நடுத்தெருவில் வெட்டப்பட்டு நீண்டநாள் சிகிழ்ச்சைக்கு பின்பு உயிர்தப்பினார் .தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் 18 தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் . ஆர். எஸ். எஸ். மற்றும் இந்துமுன்னணி அலுவலகங்கள் குண்டு வைத்து தாக்கப்பட்டு மொத்தம் 30 பேர் மரணமடைந்தார்கள் . இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இருந்த குண்டுதான் வெடித்தது என முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் லத்தீப் கூறியது தினமலரில் குண்டுவெடிப்புக்கு மறுநாள் இதழில் வெளியாகியது . முஸ்லீம் இதழ்கள் அப்படி மீண்டும் மீண்டும் எழுதின.புலன் விசாரணையில் உண்மை வெளியான போது எவருமே மன்னிப்பு கோரவைல்லை .

இதற்கு தமிழகத்தில் எவர் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் ? தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பெரும்பாலான இஸ்லாமிய தீவிரவாதிகள் பள்ளிீவாசல்களை ஒட்டிய பகுதிகளில் கைது செய்யப்பட்டிருப்பது நீதிமன்றத்திலேயே முன்வைக்கப்பட்ட போலீஸ் குறிப்புகள் சொல்லும் விஷயம். எந்த இஸ்லாமிய தலைவர் கண்டித்திருக்கிறார் ? எந்த அறிவுஜீவி கண்டித்திருக்கிறார் ? இவ்வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை ,இதை கண்டிக்கிறோம் என எந்த அமைப்பாவது சொல்லியுள்ளதா ? { ஒரு முறை ஒரு ரயில் குண்டு வெடிப்பில் நம் புரட்சி கவிஞர் இங்குலாபும் மாட்டிக் கொண்டார் .அது குறித்த நேரடி அறிக்கையை அவர் ஆனந்த விகடனில் எழுதினார். குண்டு வைத்த அமைப்பு மற்றும் கொள்கை மீது சிறு கண்டனம் கூட அவரால் தெரிவிக்கப்படவில்லை }

மதுரை பேராசிரியர் பரமசிவம் [இந்துமுன்னணி ] கொல்லப்பட்ட வழக்கின் விசாரணைக்காக ஒரு நண்பர் சென்னையில் இருந்து வந்திருந்தார் .அவ்வழக்கில் எதிரிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் , வழக்கு அப்படித்தான் ஜோடிக்கப்பட்டிருக்கிறது என்றார் . ‘ இந்த சூழலில் ஒரு வன்முறையை தொடர்ந்து மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதை எப்படி தடுக்க முடியும் ? ‘ என்றார் அவர் .இப்போது பரமசிவம் கொலைவழக்கில் அனைவருமே விடுதலை என்ற செய்தி வந்துள்ளது

இதோ கோத்ராவில் முஸ்லீம்களல்ல ஆர் எஸ் எஸ் காரர்கள் தான் ரயிலை எரித்தார்கள் , ஏற்கனவே இன ஒழிப்பை நிகழ்த்தும் திட்டம் முழுமையாக போடப்பட்டிருந்ததனால் அதற்கு ஒரு காரணம் தேவை என்பதற்காக இது நிகழ்த்தப்பட்டது என்கிறார்கள் மனிதாபிமானிகள் . இஸ்லாமிய இதழ்கள் இதை நிரூபிக்கப்பட்டுவிட்ட உண்மை என சொல்கின்றன! அதாவது தங்களுக்கு நீதி கிடைக்க இங்குள்ள மதசார்பற்ற முகாம் அனுமதிக்காது என்பதே கலவரத்தில் இறங்கியதற்கு காரணம் என்று வன்முறையாளர் கூறுவது இப்போது நிரூபிக்கப்பட்டுவருகிறது!

கோத்ராவில் கரசேவகர்கள் தற்கொலை -புதிய மனிதாபிமான தேசபக்த கண்டுபிடிப்பு!

ஜூன் 30 அன்று குஜராத் தடய அறிவியல் துறை சில கண்டுபிடிப்புகளை முன்வைத்தது . அதன்படி 1] ரயில் பெட்டிக்குள் வெளியேயிருந்து பெட் ரோல் டப்பாக்கள் வீசப்படவில்லை , அதற்கான் வாய்ப்பு இல்லை காரணம் பெருமளவு பெட் ரோல் தேவை .2] பெட் ரோல் ரயில்பெட்டிக்குள்ளேயே இருந்து எரிந்தது 3]பெட் ரோல் குண்டுகள் வீசப்படவில்லை , பெட் ரோல் நனைக்கப்பட்ட துணிகள் வீசப்பட்டிருக்கலாம் . தீ பெட்டியின் உள்ளிருந்தே எழுந்தது. 4] கிட்டத்தட்ட 60 லிட்டர் பெட் ரோல் இதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் ,அது ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல வண்டிகளின் பெட் ரோல் டாங்கில் இருந்து எடுக்கப்பட்டதல்ல . இச்செய்தியை அரைகுறையாக திரித்து வீக் இதழ் வெளியிட்டது .

இதனடிப்படையில் காங்கிரஸும் மதசார்பற்ற மனிதாபிமானிகளும் பெட் ரோல் கரசேவகர்களால் கொண்டுவரப்பட்டது , தீவைத்ததும் அவர்களே என மிக விரிவான பிரச்சாரத்தை கிளப்பினார்கள். தமிழக இஸ்லாமிய இதழ்களிலெல்லாம் இது நிரூபிக்கப்பட்ட உண்மை என்று செய்தி வெளியிடப்பட்டது . ஜூலை மாத சமரசம் , உணர்வு முதலிய அனைத்துஇஸ்லாமிய இதழ்களுக்கும் தலைப்பு செய்தி இதுவே . தமிழகமெங்கும் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

உண்மை என்ன ? இந்தியாடுடே 14 – 20 இதழில் இதன் முழுவிபரமும் வெளிவந்துள்ளது . கல்வீச்சுக்கு பயந்தும் திருப்பித்தாக்கவும் ஆண்கள் இறங்கி ஓடிவிட தீவைத்தவர்கள் பெண்கள் மட்டுமே இருந்த பெட்டியின் பின்பக்கமாக அங்கிருந்த இணைப்பு கான்வாஸ் ஐ கிழைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட் ரோல் நிரம்பிய ஜெரிகேன்களை வீசிய பின்பு தீப்பந்தம் எறிந்து கொளுத்தியுள்ளார்கள் . இவர்கள் பின்னணியில் இருந்து இதை செய்தபோது ஒரு கும்பல் முன்னால் நின்று கல்வீசிக் கொண்டிருந்தது . ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்துடன் இது மிகவும் ஒத்துப்போகிறது இது . [ பார்க்க http://www.rediff.com/news/2002/jul/15train.htm ]

மோடி கலவரக்காரர்கள் 60 லிட்டருக்கு மேல் பெட் ரோல் பயன்படுத்தினார்கள் , ரயில்பெட்டிக்குள் சென்று அதை வைத்தார்கள் என்ற தகவல் கிடைத்தபின்பே இது முன்கூட்டியே திட்டமிட்ட சதி என்று சொன்னார் .குஜராத் போலீஸின் செய்தியறிக்கைகள் மிகத்தெளிவாகவே என்ன நடந்தன என்று குறிப்பிடுகின்றன.எந்த முரண்பாடும் காணப்படவில்லை.

கோத்ரா என்ற ஊர் எப்படிப்பட்டது ? தொடர்ந்து அந்த இடத்தில் இந்துக்கள் கொலை செய்யப்படுவது ஒரு வழக்கமாகவே நடந்துள்ளது . சுதந்திரத்துக்கு பிறகு மட்டும் அங்கு நடந்த வகுப்புவாத கொலைகள் , கூட்டக் கொலைகள் எட்டு .1980 ல் இப்போது சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்ட அதே சிக்னல் ஃபாலியா என்ற இடத்தில் 5 இந்துக்கள் [ இரு குழந்தைகள் உள்பட] முஸ்லீம் வகுப்புவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டார்கள் . இதற்கு தலைமைதாங்கியவர் ஒரு இஸ்லாமியப்பெண்மணி . அவர் பெயர் ஆமினா பீபி . 1990 ல் இரு பெண்கள் உள்பட நான்கு ஆசிரியைகள் அங்கு வகுப்புவாதிகளால் கொல்லப்பட்டார்கள் .[ Praveen Shah, Pravina Dave, Kamlesh Pandya and Saroj Barot. ஆகியோர் ] இவை நீதிமன்ற ஆவணங்கள் . இப்பகுதி ஒரு உச்சகட்ட கலவரப்பகுதியாக கண்காணிக்கப்பட்டு வருவது , இத்தகவலை இந்தியா டுடேயும் வெளியிட்டுள்ளது

ஜஸ்டிஸ் D Sதேவாடியா தலைமையில் மத்திய அரசு அமைத்த ஐந்து உறுப்பினர் கொண்ட உண்மையறியும் குழு [ Justice D S Tewatia, Former Chief Justice of the Calcutta High Court, Prof. Kuthiala, who is the Dean, Faculty of Media Studies at G J University, Hissar, Dr J C Batra, Senior Advocate in the Supreme Court, academician Dr Krishan Singh and journalist Jawaharlal Kaul. ] அளித்த அறிக்கை சிலவிஷயங்களை திட்டவட்டமாக குறிப்பிடுகிறது . இந்த செயல் தெளிவாக திட்டமிடப்பட்டது ,வெளிநாட்டு நிதியுதவியுடன் செய்யப்பட்டது, இரு காங்கிரஸ் எம்பிக்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர். கள்ளக் கடத்தலை தொழிலாகக் கொண்ட இளைஞர்கள் நிரம்பிய கோத்ரா பகுதி போலீஸால் அணுகப்பட முடியாத ஒரு குற்றப் பிராந்தியமாக எப்போதுமே இருந்துள்ளது .

இப்பகுதியில் கடந்த 15 வருடங்களாக செயல்பட்டுவரும் தேவ்பந்தி மதரஸாவுக்கு சந்தேகத்துக்குரிய / அனுமதி பெறாத அந்நியர் வருகை மிக அதிகம் என பலமுறை போலீஸ் அறிக்கை அளித்துள்ளது . குஜராத் மாநில செய்தித்தாள் அறிக்கைகளை 5 வருடங்களுக்கு தொகுத்து பார்த்தாலே கோத்ராவின் வரலாறு எப்படிப்பட்டது என்று புரிந்துவிடும் .[இதை புரிந்து கொள்வது மிக எளிது .இன்றும் காயல்பட்டினம் ,சாயல்குடி , கீழக்கரை போன்ற பல தமிழக ஊர்களில் உள்ளூர் மதரஸாக்களின் அனுமதியின்றி போலீஸ் நுழையமுடியாது , அன்னியர் நடமாட முடியாது , ஐயமிருப்பவர்கள் சோதித்துப் பார்க்கலாம். ]

ஆனால் இஸ்லாமிய இதழ்களும் மற்ற மனிதாபிமானிகளும் ஆர். எஸ். எஸ் தான் கரசேகவகர்களை கொன்றது , அதற்காக அது பெட் ரோலை அயோத்தியிலிருந்தே கொண்டுவந்தது என்று உச்சகட்ட பிரச்சாரம் செய்கிறார்கள் . யாரை இவர்கள் காப்பாற்ற நினைக்கிறார்கள் ? எந்த நடவடிக்கைகளை முடக்க திட்டமிடுகிறார்கள் ? ஆக , கோத்ராவை தொடர்ந்து நிதானமானமுறையில் ஒரு சட்ட நடவடிக்கை எடுக்கப்படிருந்தால் இவர்கள் அத்தனை குற்றவாளிகளையும் காப்பாற்றியிருப்பார்கள் என்பதே உண்மை .இவர்கள் கொடுக்கும் நெருக்கடியை பலவீனமான நம் அரசுகள் அஞ்சுவதானலேயே இந்தியா முழுக்க ஐ. எஸ். ஐ இஸ்லாமிய பயங்கரவாதத்தை வளர்த்தது என்பதும் உண்மை .

நிதியின் ஆதாரம்

காலச்சுவடு குஜராத் நிகழ்வுக்காக நிதிபிரிப்பது நல்ல விஷயம் . ஏழைகளான பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மகத்தான கருணைச் செயல்பாடுதான். ஆனால் அது அச்செயலை அரசியலாக்குகிறது . அப்போது அதற்கு மறுபக்கமும் முக்கியம் . சவூதி அரேபியா முதலான தேசங்களில் இருந்து இங்குள்ள மசூதிகள் மற்றும் மதரஸக்களுக்கு எத்தனை கோடி வருகிறது என அவற்றை தூர நின்று பார்த்தாலே தெரிந்துகொள்ள முடியும் .

இந்நிதிவசூல் நடந்து கொண்டிருக்கும்போதே கேரளத்தில் இஸ்லாமிய தீவிரவாத மாவட்டமான மலப்பூரத்திலும் பாலக்காட்டிலுமாக லார்ட் கிருஷ்ணா வங்கி , கத்தோலிக் சிரியன் வங்கிகள் மூலம் 360 கோடி ரூபாய் யாரென்றே தெரியாத இரு ஏஜெண்ட்டுகளுக்கு [சவூதி அரேபியாவில் இருந்து வேறுவழிகளினூடாக என்று கருதப்படுகிறது ]வந்துள்ளது .ஒரே நாளில் அது சுரேந்திரன் என்ற ஏஜெண்ட் மூலம் நோட்டுகளாகவே எடுக்கப்பட்டு மறைந்து விட்டது [நோட்டுகளாக பணத்தை எடுப்பதன் உச்சவரம்புகள் பற்றி மிககடுமையான ரிசர்வ் வங்கி சட்டங்கள் உள்ளன . அனைத்துமே மீறப்பட்டுள்ளன]

இது தற்செயலாக வெளிவந்த செய்தி ,ஏற்கனவே இது நடந்துள்ளது . கோவை கலவரங்களுக்கு ஐந்து வருடங்கள் முன்பாக யாரென்றே தெரியாத , அனுமதிபெறாத , ஒரு அராபியர் குழு கேரளத்தின் முக்கியமான பலரை சந்தித்து விட்டு போலீஸ் கையில் சிக்காமல் தப்பியது பல காலம் தலைப்பு செய்தியாக இருந்தது .அப்போது வந்த பெரும்பணமே பி டி பி என்ற அமைப்பாக மாறி கேரள இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு அடிப்படை அமைத்தது என இப்போது உறுதி செய்யப்படுள்ளது /.மிகபரபரப்பாக பேசப்பட்ட இவ்வழக்கில் எவருமே கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோஇல்லை. பத்திரிகைகள் அங்கு ரகளை செய்கின்றன.ஆனால் தேசிய இதழ்களுக்கு இது மூன்றாம் கால மூலைச்செய்தி மட்டுமே. இப்போது சுரேந்திரன் சரணடைந்து விட்டார் . சட்டம் அவரை மட்டுமே தண்டிக்க முடியும் , அதுவும் சிறு விதிமீறலுக்காக மட்டும் . பணம் எங்கே போயிற்று ? அதை இனி கண்டுபிடிக்க முடியாது என்கிறது சி .பி .ஐ. அப்பணம் இஸ்லாமிய தீவிரவாதத்துக்காக அனுப்பப்பட்ட தொகையாக இருக்கலாம் என்கிறது அது .

காலச்சுவடு 60000 ரூ வசூல் செய்கிறது . தன் உழைப்பில் இருந்து நூறு ரூபாய் தரும் எளிய இந்தியகுடிமகன் இதன் மறுபக்கத்தையும் தெரிந்திருக்கவேண்டுமல்லவா ? தீவிரவாதத்துக்கு கோடிகள் அள்ளி அளிக்கும் இஸ்லாமிய நாடுகள் பட்டினி கிடப்பவர்களுக்கு 10000 கூட அளிக்காது என தெளிவுபடுத்தும் பொறுப்பு காலச்சுவடுக்கு உண்டா இல்லையா ?குறைந்த பட்சம் தன் உச்ச கட்ட பிரச்சாரத்தால் உணர்வுகள் தூண்டிவிடப்படும் இஸ்லாமிய இளைஞர்களிடமாவது இவற்றை அது சொல்லியாகவேண்டுமல்லவா ?

மேலும் சில சொந்த நாட்டு அகதிகள்

பங்களாதேஷில் ஏன் இந்துக்கள் எண்ணிக்கை கடுமையாக குறைந்து வருகிறது ,ஏன் பல்லாயிரம் பேர் வருடம் தோறும் அகதிகளாக இங்கு வருகிறார்கள் என்று எவருமே எழுதியதில்லை .[ திீண்னை வெளியிட்ட கட்டுரையில் கூட வங்காளிகள் என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது .இந்துக்கள் என்ற சொல் அல்ல .ஆனால் ஒரு நாளைக்கு இத்தனை என இந்துக்களை கொல்லும்படி பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிீட்ட செய்தியை அவர்கள் இணையதளத்திலேயே சென்று காணலாம் ] அவர்களுக்காக எவருமே நிதி வசூல் செய்தது இல்லை. அதாவது ஒரு விஷயம் செய்திகளில்பரபரப்பாக பேசப்பட்டால் மட்டுமே நம் கருணையை அது தூண்டுகிறது . தஸ்லிமா நஸ்ரீன் விவகாரம் வெடித்தபோது தமிழ் நாட்டின் ஒரு இஸ்லாமிய தலைவரோ எழுத்தாளரோ அவரது உணர்வுகளை மதிப்பதாக கூட எழுதவில்லை. மாறாக நஸ்ரீனை ஆதரித்து எழுதியமைக்காக எப்போதுமே இஸ்லாமியர்களை ஆதரித்து எழுதும் இடதுசரி அறிஞர் எஸ் வி ராஜதுரை இந்து வகுப்புவாதி என வசைபாடப்பட்டார் .அது குறித்து அவர் வருந்தி நந்தன் சிற்றிதழில் எழுதினார் . தஸ்லீமாவுக்கு ஆதரவாக ஒரு சொல் கூட காலச்சுவடு எழுதவில்லை .

இன்றும் காஷ்மீர் பண்டிதர்கள் கால் லட்சம் பேர் அகதிகளாக சொந்த நாட்டில் கடும் குளிரில் துணிக்குடிசைகளில் வாழ்ந்து வருகிறார்கள். நம் தேசிய நாளிதழ்கள் இவர்களை ‘இடம் பெயர்ந்தோர் என்று குறிப்பிடுகின்றன. நமது இஸ்லாமிய தலைவர்கள் எவரேனும் இவர்களுக்காக ஒரு அனுதாப வார்த்தை இதுவரை பேசியதுண்டா ? நமது மதசார்பற்ற அறிவுஜீவிகள் பேசியதுண்டா ? சரி ,இவர்கள் பிராமணர்கள் , வேண்டியதுதான் .

ஆனால் வடகிழக்கின் நிலைமை என்ன ? அங்குள்ள நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் இவை . 2002 ல் மகர சங்ராந்தியை கொண்டாடிய குற்றத்துக்காக பாப்டிஸ்ட் சர்ச் ஆதரவு பெற்ற NLFT தீவிரவாதிகள் 5 வயது சிறுமி உட்பட 12 பேரை இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். 2002 ல் மட்டும் மிசோரமில் துரத்தியடிக்கப்பட்ட மதம் மாற மறுத்த வனவாசிகள் 20000 வரை .

இப்பகுதி சீனாவின் மடியில் இருக்கும் ஒரே காரணத்துக்காக அமெரிக்கா சர்ச்சுகளை பெரும் பண வல்லமையுடன் இங்கே அனுப்பி வனவாசிகளை மதம் மாற்றி அடுத்த 25 வருடத்துக்குள் ஒரு கிறிஸ்தவ நாட்டை அங்கு உருவாக்க முனைகிறது என அறியாத பத்திரிகையாளர் எவரும் இல்லை . அப்படிஉருவானால் அது அடுத்த 100 வருடம் இந்தியாவுக்கு தலைவலி என்பதும் , நிரந்தரமாக இந்தியவை வறுமையில் ஆழ்த்தும் போராட்டமாக அது அமையும் என்றும் நேர்ப் பேச்சின் போது இடதுசாரிகள் மிகுந்த கவலையுடன் ஒத்துக் கொள்வார்கள் .இது பற்றி புத்த தேவ் பட்டாசாரியா மிகுந்த கோபத்துடன் பேசியதுமுண்டு .

ஆனால் கட்டாய மதம்மாற்றம் காரணமாக கோபம் கொண்ட ஒருவனால் ஒரிஸ்சாவில் ஒரு பாதிரியார் கொல்லப்பட்ட போது இந்த விவகாரம் அப்படியே அமுக்கப்பட்டு மிக ஒற்றைப்படையான ஒரு மறு சித்திரம் உருவாக்கப்பட்டு பிரம்மாண்டமாக பரப்ப பட்டது . இடது சாரி அறிவுஜீவிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் மேற்குநாடுகள் முழுக்க இந்தியா ஒரு காட்டுமிராண்டி தேசம் என்ற எண்ணத்தை உருவாக்க அரும்பாடுபட்டனர்.மதமாற்றத்துக்கு புதிய உத்வேகம் அளிக்கப்பட்டது . மிஷனரிகளின் தேச விரோத செயல்பாடுகளை கண்காணிக்க மிகவும் பிந்தி அரசால் எடுக்கப்பட்ட சில அரைமனதான நடவடிக்கைகளையும் கூட இந்த சந்தடியை பயன்படுத்தி ஒரேயடியாக நிறுத்தி விட்டார்கள். பிறகு வெளிவந்த பாதிரியார் ஸ்டேன்ஸின் மதவெறிமிக்க மறுபக்கம் குறித்த செய்திகளை சில ஊடகங்கள்[இந்தியாடுடே] தவிர பிற புறக்கணித்தன. அவரை தேவதூதராக சித்தரிப்பதிலேயே நம் இதழ்கள் ஆர்வம் காட்டின .அவர்கள் எவருக்கும் மிசோரமில் கொல்லப்பட்ட ஆதிவாசிக் குழந்தைகள் ஒரு பிரச்சினையாகவே படவில்லை

அறிவுஜீவிகளுக்கு ஓர் விண்ணப்பம்

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கோபம் இந்தியாவையே அழித்தாலும் ஆறாது என்ற இடத்துக்கு இடது சாரிகளை இட்டுசென்றுள்ளது . தங்களை மனிதாபிமானப் பிழம்புகள் என்று காட்ட விரும்பும் உயர்குடிகள் அத்தனை உண்மைகளையும் மூடிமறைத்து பிரசங்கம் செய்கிறார்கள் . இவர்கள் தகர்ப்பது எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் இன்னமும் சமத்துவ ஜனநாயக உரிமைகளை அளிக்கும் இந்திய தேசியத்தையே என்பதுகூட இவர்கள் கவனத்துக்கு வருவதில்லை . இந்தியாவை அழிக்க விரும்பும் சக்திகளின் கைப்பாவைகளாக ஆகிவிடக்கூடாது என்ற சிறு கவனம் கூட இவர்களிடமில்லை . இந்திய ஜனநாயக அமைப்பே இவர்களுக்கு இந்த சுதந்திரத்தை அளிக்கிறது , இந்தியாவை சுற்றி எங்குமே அது இல்லை என்பதுகூட இவர்கள் கவனத்திற்கு வருவதில்லை. தேசப்பற்று என்பதை பிற்போக்குத்தனம் என நம்பும் இவர்களே இன்றைய இந்தியாவின் சுமைகள் .

அனைத்தையும் விட முக்கியமானது கருத்து சுதந்திரத்துக்கு நம் அறிவுலகில் உள்ள இடம் . இந்திய பத்திரிகைகள் நடத்திய மோசடி செய்திகள் அனைத்துமே இணையம் மூலமே அம்பலமாயின. இணையம் இல்லாவிட்டால் இவை வெளிவர பல வருடங்கள் ஆகியிருக்கும் . யார் மறுத்தாலும் இந்த கட்டுரை ஒரு ஆதாரபூர்வமான மறுதரப்பு என்பதை மறுக்க முடியாது . இக்கட்டுரையும் இணையத்திலேயே இடம் தேடவேண்டியுள்ள து! இதுதான் இங்குள்ள கருத்து சுதந்திரம் . அறிவுஜீவிகளின் தரம் .

குஜராத் வன்முறைகளுக்கு ஏதாவது சிறு நியாயமாவது உண்டு என்று சொல்ல இக்கட்டுரையில் முற்படவில்லை ,எவ்வகை மாற்றுத்தரப்பும் இங்கு உடனடியாக அப்படித்தான் சித்தரிக்கப்படும் எனினும் . இந்திய வரலாற்றிலேயே அக்கலவரம் ஒரு களங்கம் என்பதை எவரும் மறுக்க முடியாது . ஏதோ ஒரு வகையில் மேற்கத்திய நாடுகளுக்கும் சீனாவுக்கும் சவாலாக வளர்ந்து வரும் இந்தியாவை பொருளதார ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சீர்குலைக்கச் செய்யப்பட்டுவரும் சதிகளில் உடந்தையாக இதழ்களும் அறிவுஜீவிகளும் அமைந்து விடலாகாது என்ற ஆதங்கமே இக்கட்டுரையின் நோக்கம் . வெறும் முற்போக்குப் பாவனைக்காக அறிவு ஜீவிகளும் , விற்பனைக்காக இதழ்களும் இம்மாதிரி மிகைப்படுத்தல்கள் திரிபுவேலைகளில் இறங்குவது அபாயகரமானது . தேச விரோதிகள் அதை பயன்படுத்திக்கொள்ளவே அது வழிவகுக்கும் .

இந்த விஷயத்தில் சறேஎனும் நேர்மையும் தேசப்பற்றும் இருந்தால் இதழ்கள் எப்படி நடந்துகொண்டிருக்கவேண்டும் ? குஜராத் கலவரங்களின் உண்மைத்தகவல்களை மட்டும் வாசகர் மத்தியில் முன்வைத்திருக்கவேஎண்டும் . வெளியிடும் செய்திகளுக்கு திட்டவட்டமான ஆதாரம் இருப்பதை உறுதிசெய்திருக்கவேண்டும் . மாற்றுத்தரப்புக்கும் உரிய இடம் அளித்திருக்கவேண்டும் .அதன் பிறகு தார்மீகமான இடத்தில் தன்னை நிறுத்தி கடுமையான விமரிசனங்களை செய்திருக்கவேண்டும் .சிறந்த உதார்ணம் இந்தியாடுடே . மோடி போகவேண்டும் என அட்டை கட்டுரை போட்ட இதழ்தான் அதுவும் . அதுவும் கலவர காட்சிகளை பிறரைவிட மிக விரிவாக போடவும் செய்தது .ஆனால் இதன் பின் உள்ள பாகிஸ்தானிய சதியையும் அது அம்பலப்படுத்தியது . அரை உண்மைகளின் மறுபக்கத்தையும் காட்டியது .

யோசித்து பாருங்கள் , இந்திய இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு இந்தியாவின் ஒற்றுமையை குலைக்கும் பாகிஸ்தானின் செயலையும் சேர்த்தே சொல்லி , இஸ்லாமியர்களில் அச்சதிக்கு துணைப்போனதையும் கண்டித்துவிட்டு குஜராத் கலவரங்களின் உண்மையான காரணங்களுடன் அதை காலச்சுவடு கடுமையாக கண்டித்திருந்தால் அதற்கு தேசபக்தி உண்டுஎன்று சொல்லலாம் . ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் வேண்டுமென்றே தங்களில் சிலரை எரித் துவிட்டு பழியை இஸ்லாமியர் மீதுபோட்டு முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு இனப்படுகொலையை இந்தியப் பெரும்பான்மை மதத்தவர் செய்தனர் என்றும் இங்குள்ள அரசு , நீதி அமைப்புகள் மற்றும் பெரும்பான்மை சமூகம் எல்லாம் அதற்கு துணைபோயின என்றும் முற்றிலும் பொய்யான சித்திரத்தை அவ்விதழ் எளிய இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் எடுத்துசெல்வதனால் ஏற்படும் விளைவு என்ன ? அதற்கு தற்காலிகமாக ஒரு இமேஜ் கிடைக்கிறது ,சில பிரதிகள் அதிக விற்பனையாகலாம் .ஆனால் அதற்கென தேசத்தை விற்பது நியாயமா ? அமெரிக்க அரைக் குடியுரிமைக்க்காக தவம்செய்து வரம்பெற்றுள்ள நம் மனிதாபிமானிகளின் குடும்பங்கள் தப்பிவிடலாம் , ஏழை இந்தியர்கள எங்கு போகமுடியும் ? இதற்கு யார் பொறுப்பேற்பது ?

அனைத்துக்கும் மேலாக இம்மாதிரி பொய்ப் பிரசாரத்தின் விளைவாக இங்கு மதப் பயங்கரவாதம் வலுப்பெற்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டுமல்ல எதிர்விளைவாக இந்து பயங்கர வாதமும் தான் வலுப்பெறும் என்ற எளிய அறிவுகூடவா இவர்களுக்குஇல்லை ?

ஸ்டேன்ஸ் கொலைக்கு பின் வடகிழக்கு மிஷனரி செயல்பாடுகள் மீது எளிய கண்காணிப்பை கூட நடத்தமுடியாதபடி இந்தியாவை அமெரிக்கா சர்வதேச மனித உரிமை அமைப்புகளை பயன்படுத்தி அடக்கியது என்பது உண்மை . அப்படியானால் அச்சம்பவத்தை மிகைப்படுத்தி ரத்தக் கண்ணீர் வடித்த அறிவுஜீவிகளையும் இதழ்களையும் உண்மையில் பயன்படுத்திக் கொண்டது யார் ? இப்போது குஜராத் பற்றி கிளறிவிடப்படும் உணர்வுகளை சீனாவும் அதன் ஆயுதமான பாகிஸ்தானும் தான் பயன்படுத்திக் கொள்ளும் என்பதும் வெளிப்படை . {இதை அதிகார பூர்வ சீன ஆதரவு ஏடான தி ஹிந்துவின் தீவிரமே காட்டுகிறது .} .

தயவு செய்து உணர்ச்சிகளை கிளறிவிடாதீர்கள் ,அதன் விளைவுகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது . அதன் தொலைதூர விளைவுகள் இங்குள்ள கோடிக்கணக்கான அரைவயிற்று ஜனங்களும் அவர்கள் குடும்பங்களும் அ ன்னிய ஆதிக்கசக்திகளுக்கு இரைகளாக ஆகவே வழிவகுக்கும். தயவு செய்து அரை உண்மைகளை உங்கள் மொழித் திறனாலும் தர்க்கத்திறனாலும் வளர்த்தெடுக்காதீர்கள் அது இங்குள்ள ஊடகங்கள் மேலும், ஜனநாயகம் மேலும் ஆழமான ஐயத்தை உருவாக்கி விடும். அறிவுஜீவிகளே, மனிதாபிமானிகளே , நீங்கள் வழிபடும் சீனாவிலும் ஆதரிக்கும் பாகிஸ்தானிலும் நீங்கள் செயல்படமுடியாது என்பதையாவது சற்று நினைவு கூருங்கள்

இதோ ஒரு முக்கியமான ஆதாரம்

குஜராத் கலவரத்தின் உச்ச சமயத்தில் தி வீக் இதழ் வெளியிட்ட அட்டைப்படம் இது[படம் 1] .இப்புகைப்படத்தின் மூல வடிவம் கவனக்குறைவாக {ஊடகங்களிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததனால் } ஏற்கனவே ஃப்ரண்ட் லைன் இதழிலும் இணையத்திலும் வெளியாகிவிட்டிருந்தது .[படம் 2]

அசல் புகைப்படத்தில் கும்பல்கள் மோதலுக்காக நிற்பது தெரிகிறது . எரியும் தீ ஜுவாலைகள் எதுவும் இல்லை. வீக் இதழ் அதில் கிராஃபிக்ஸ் மூலம் திரிசூலத்தை இணைத்தது . அருகே தீ யை உருவாக்கியது. போதிய திறமை இல்லாமல்தான் இது செய்யப்பட்டுள்ளது . புகைப்படம் பார்க்கும் அனுபவமுள்ள ஒருவர் வெறுமே பார்த்தாலே இதைக் கண்டு பிடித்துவிடலாம் .ஆனால் இன்றுவரை எவருமே இதை சுட்டிக் காட்டவில்லை.

1] திரிசூலத்தின் அளவை அங்கு நிற்பவர்களின் தலையின் அளவுடன் ஒப்பிட்டுபார்த்தால் அது ஒரு பானர் போல அவ்வளவு பெரிதாக இருந்திருக்கவேண்டும் . 2] இரு திரிசூலங்களும் ஒரே படம் தான் என ஒளியும் நிழலும் அதன்மீது விழுந்திருக்கும் விதம் மூலம் அறியலாம் 3] நெருப்பின் பிரதிபலிப்புக்கும் திரிசூலத்துக்கும் சம்பந்தமே இல்லை .

மூலப்படத்தை தேடியெடுத்தால் எல்லா ஐயங்களும் தீர்கின்றன .இந்த மோசடிக்கு பெயர் மனிதாபிமானமா ? ஜனநாயகப் பற்றா ? இதழியல் தர்மமா ? இல்லை தேசப்பற்று என்றே சொல்லிவிடுவார்களா ?

===

hindoo_humanist@sify.com

Series Navigation

நீலகண்டன் அரவிந்தன்

நீலகண்டன் அரவிந்தன்