கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


சிறிய இப்பூவைப்
பறித்து
மாலை தொடுக்க
எடுத்துக்கொள், தாமதப்
படுத்தாமல்!
இல்லாவிடில் இம்மலர்
வளைந்துபோய்
கீழே வீழ்ந்து
புழுதி மண்ணில் துவளும்
என்று அஞ்சும்
என் மனம்!
இப்போது நீ பறிக்கா விட்டால்
கோர்க்கும் உன்
ஆரத்தில் அம்மலர்
ஓரிடம் பெறாமல்
போய்விடலாம்!
சிறிது சிரமப்பட்டு
பொறுமையுடன் உந்தன் கையால்
பறித்திடு அம்மலரை
அதற்குரிய
மரியாதை அளித்து!

உனக்கு பூமாலை
சமர்ப்பித்து
வணங்கும் நேரம் தவறிப் போய்,
இன்றைய பொழுதும்
எனக்குத் தெரியாமல்
முடிந்து போய்விடும் என்று
நடுங்கும் என் நெஞ்சம்!
அழுத்தமான வண்ணம்
பளிச்செனத் தோன்றாமல்,
நறுமணமும்
சிறிதளவே
நாசி நுகர்ந்து வந்தாலும்,
அம்மலரை
கரத்தால் பறித்து, உந்தன்
திருப்பணிக்கு
அர்ப்பணித்திடு,
இன்றைய
பொழுது
கழிந்து போவதற்குள்!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 21, 2004)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா