கீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஅது அவனேதான்!
ஆத்மாவின்
உட்கருவுக் குள்ளே உறைபவன்!
கரத்தால் என்னை ஆழத்தில்
தொட்டெழுப்பி
விழிக்க வைப்பவன்,
அனுதினமும்.
அது அவனேதான்!
எந்தன் இரண்டு விழிகளுக்கும்
மந்திர சக்தி யூட்டுபவன்!
பல்வேறு வழிகளில்
போகம், சோகம் பின்னிய
கீதங்களில்
இதய வீணையின் நரம்புக் கம்பிகளை
உவகையுடன் மீட்பவன்,
அது அவனேதான்!
துள்ளி விட்டு மறையும்
வெள்ளி, பொன்னிற மயத்தில்
பச்சை, நீல வண்ணத்தில்
மாய வலைதனை நெய்பவன்!
மடிப்புகள் ஊடே எட்டிப் பார்க்கும் அவன்
பாதங்களின்
பஞ்சுத் தொடுகையில்,
நெஞ்சம் மறந்திடும் என்னிலை!
நாட்கள் நகரும், யுகங்கள் கடக்கும்
எனினும் எப்போதும்
என்னிதயத்தை இயக்குபவன்,
அது அவனேதான்,
பலப்பல பெயர்களில்,
பலப்பல வேடங்களில்,
உன்னத மகிமையில் உவப்பூட்டும்
பலப்பல இன்ப துன்ப
உணர்வுகளில்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 22, 2006)]

Series Navigation