கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


உன்னைக் கேட்க வேண்டுமென
முன்பு நினைத்தாலும்,
வற்புறுத்திக் கேட்க
வலுவில்லை எனக்கு!
ரோஜா மாலை அணிந்திருந்தாய் நீ,
ஜோராகக் கழுத்தில்!
காத்திருந்தேன்,
காலை வேளை வரட்டும் என்று!
விழித்து நீ பிரிந்து போனபின்,
யாசிப்பவன் போல்
ஆசையுடன் தேடினேன்,
எனக்கெனப்
பூவிதழ் உதிர்ந்து
தூவிக் கிடக்குமென! ஆயினும்
படுக்கையில்
கிடந்தவை ஓரிரண்டு பூவிதழ்தான்!
அந்தோ! என் கண்கள் கண்ட தென்ன ?
காதலின் அடையாள மென்று
எதை விட்டுப் போயிருக்கிறாய் ?
பூவில்லை எனக்கு!
குங்கும மில்லை எனக்கு!
குப்பியில் நறுமணப்
பன்னீ ரில்லை எனக்கு!
பல்சுவைத்
தின்பண்ட மில்லை எனக்கு!
விண்ணில் வெடிக்கும் பேரிடி போல்
கண்ணில் தெரிந்தது,
ஒளிக்கனல் பளிச்சிடும் உனது
உடைவாள் ஒன்றுதான்!

காலை யிளம் பரிதி ஒளி
பலகணி ஊடே நுழைந்து,
படர்ந்தது உன் படுக்கை மீது!
கீச்சுக் கீச்செனப் புள்ளினம் கத்தி,
என்னைக் கேட்டன:
‘ஈகை செய்திட உன்வசம்
என்ன உள்ளது மாதே ? ‘ என்று.
ஒன்று மில்லை கொடுப்பதற்கு!
பூவில்லை என்னிடம்!
குங்கு மில்லை என்னிடம்!
குப்பியில் நறுமணப்
பன்னீ ரில்லை என்னிடம்!
பல்சுவைத்
தின்பண்ட மில்லை என்னிடம்!
என்னுடன் உள்ளது,
பயங்கர உடைவாள் ஒன்றுதான்!
ஈதொரு பரிசா வென வியந்தென் மனம்
வேதனை அடையும்!
உடைவாளை ஒளித்து வைக்க ஓர்
இடமில்லை யிங்கே!
நடுங்கிடும் என் நெஞ்சு
இடுப்பில் தொங்கவிட அஞ்சும்!
வெட்கமாய்ப் போச்சு!
வாளை மார்போ டணைத்தால்,
வலிக்கும் என் நெஞ்சம்!
கொடையாய் விட்டுச் சென்ற
உடைவாளை
உரியதாய் ஆக்கி
துயரைத்
தாங்கிக் கொள்கிறேன்!

வெற்றிகரமாய்
என் முயற்சிகள் அனைத்திலும்
வீற்றிருப்பாய் நீ! எனது
துணைவனின் இறப்புக்கு நீ
காரண மானாய்!
என்னுயிரை ஈந்து
அவனுக் குயிர் கொடுப்பேன்!
பந்த பாசக் கயிறுகள்
துண்டிக்க
உந்தன் உடைவாள் உதவும்!
இந்த உலகில்
எதற்கும் அச்சப் போவ தில்லை!
சின்னஞ்சிறு ஒப்பனை யாவும்
பண்ணப் போவ தில்லை!
உள்ளம் கவர் வேந்தே,
உனக்கினி காத்து நில்லேன்!
மூலையில் குந்தி உனக்காய்
ஓலமிட மாட்டேன்!
ஒதுங்கி வெட்கப்படேன்!
மகிழ்ச்சியாக
நடக்கத் தேவை யில்லை!
உடைவாளை தந்துள்ளாய்
ஒப்பனைக்கு!
பொம்மைத் தோரணம்
எனக்கினி
வேண்டிய தில்லை!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 29, 2006)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts