கீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


குழந்தை விழிகள் மீது
தழுவிப் படியும் தூக்கம்
எங்கிருந்து வந்தது ?
எவராவது அறிவரோ ?
எவ்விடத்தில் அது
தங்கி யிருக்கு தென்றோர்
வதந்தி உள்ளது!
மின்மினிப் பூச்சிகள்
கண்சிமிட்டி
தேவ கன்னிகள் உலாவரும்
மங்கு நிழல் கானக
ஒளியி லிருந்து வருவது!
உள்ளத்தைக்
கொள்ளை கொள்ளும்
இரட்டை மலர் மொட்டுகள்
கொத்தாய்த் தொங்கும்
காட்டு வெளியி லிருந்து
வருகிறது,
மதலையின் விழி
இமைகளிடும் முத்தம்!

மதலையின் இதழ்களில்
மலர்ந்திடும் புன்னகை
எங்கிருந்து வருவ தென்று
எவரேனும் அறிவரோ ?
இலையுதிர் காலத்தில்
மறையும் முகில் ஓரத்தில்
உலவும்
பிறை நிலவின் மங்கிய
ஒளிமயத்தி லிருந்து
உதித்த தென்றோர் வதந்தி
உலவுகிறது!
பனிநீர்த் துளிகள்
கழுவிப்
பொழுது புலரும்
கனவி லிருந்து முதலில்
எழுகின்றது,
உறங்கும் குழந்தை
உதட்டில் மின்னும் முறுவல்!

எவரேனும் அறிவரோ ?
தித்திக்கும் மென்மையில்
மதலையின்
பிஞ்சு உறுப்புகளில்
மலர்ந்திருக்கும்
புதுமை எழுச்சி மணம்,
நீண்ட காலம் ஒளிந்துள்ளது
எப்படி யென்று
எவரேனும் அறிவரோ ?
சின்னஞ் சிறு
பெண்ணாய் வளரும் போது,
பெற்ற
அன்னையின் கனிவிலும்,
நெஞ்சில் ஊறிய
மெளனப் புதிர் அன்பிலும்,
பின்னிப் பிறந்தன
பிள்ளையின் இனிய
பிஞ்சு உறுப்புகள் என்று
தெரியுமா ?

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 5, 2005)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts