கிளிகளின் தேசத்தில்

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

திலகபாமா


( கல்வெட்டு சிற்றிதழில் வெளிவந்த சிறுகதை)

அந்த அறையில் அடுக்கப் பட்டிரூந்த தீபங்கள் ஜீவாலையில் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்ததாய் எழுத , எழுத்துக்களோடு நகர்ந்து கொண்டிருந்தது விழியொன்று . கருவிழி எழுத்தோடு நகர்ந்த வண்ணம் இருக்க விழி பார்த்துக் கொண்டிருந்ததா? எழுதிக் கொண்டிருந்ததா? என்ற யோசனையில் இருக்கையில் எல்லா தீபங்களும் சிதறி ஓடியது . எங்கோ வெடித்துச் சிதறிய இரத்தத் துளிகள் தேங்கிய துணிக்கற்றை வந்தருகில் விழ திடுக்கிட்டு விழித்தது அந்த கிளி . எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தி வான் பார்த்தது .
இரவில் , இருளில் வரிசைத் தீபங்கள் வானமெங்கும். பார்க்க முடிந்த வானத்தின் கீழ் இன்று இருக்க நேர்ந்திருக்க முன்பொரு நாள் காடு இருந்த நிலையை எண்ணித் திளைத்தது கிளி. எண்ணத்தில் கர்ஜனைகளும் உறுமல்களும் ,கீதங்களும் ஒன்றை ஒன்று மிஞ்சியதாய் இருக்க கூடவே குயில்களின் ‘அக்கக்கா’ குரல்களூம் , பார்த்து விட முடியா பூச்சிகளின் பேரிரைச்சலுமாக அசைகின்ற இலைகள் பூக்கின்ற பூக்கள், பூக்களை கருவுறுத்துகின்ற தேனீக்கள், உடைகின்ற கிளைகள் ,ஓடுகின்ற நதியின் மௌன மொழிகள் எல்லாமாலும் எதிரொலித்துக் கொண்டிருந்த வனம்.. யோசனை வந்தது. நிரப்பப் படாத வெற்றிடங்கள் எதிரொலிக்கும் . காடு ஏன் எதிரொலிக்கின்றது எல்லாமாலும் நிரப்பப் பட்டிருந்தும் ?.
காட்டுக்குள் சிறகடித்து மேலெலும்பி அதே வேகத்தில் காற்றை கிழித்தபடி பறந்து விட்டு இணையை அழைத்த குரலோடு கீழிறங்கி கிளை அமர்ந்த காலங்கள் வந்து போயின நினைவில். கிளைகள் தாங்கிய இலைகளை மூழ்கடித்த கனிகள் எடுத்துக் கொள்ள அழைத்திருக்க கனிகள் தின்று காற்றில் ஏகி வானை, வான் நிறைத்த காற்றை சொந்தமாக்கி கிழித்துப் பறந்த நாட்கள் . மேலே ஊதா நிற வானம் சூரியக் கதிரொளியை வாளாய் வீசிக் கிழிக்க முயன்ற காட்டின் பசுமை சுமந்த இருளும், குளிரும் பசியை மறந்திருந்த கழுகுகளும் , இரை தேடத் தேவையில்லா நிலையில் விலங்குகளுமாய் இருக்க, கழுகோடு நட்பு சம்பாசனையும் சிங்கத்தினூடே ஒய்யார சவாரியும் சாத்தியமாகியிருந்த பொழுதுகள். அஸ்தமனத்தின் போது இருள் விரட்டுகின்ற வெளிச்சங்களாய் நழுவி நழுவி காணாது போயிருந்தன. மரங்கள் சுருங்கச் சுருங்க என் உருவம் சுருங்கியது. ஆண்டாள் கை அமர்ந்த இலைக் கிளியாய் மாறிப் போனேன். பூஜைகள் முடிய புனிதமாக்கி பயபக்தியோடு பலர் வாங்கி பத்திரப்படுத்தினர் , தினம் ஒருவராக இரும்புப் பெட்டிக்குள். சுவாசம் திணறத் திணற பெட்டிகள் என் வசதிக்கென எனக்காக வடிவமைக்கப் பட்டதாய் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் கூண்டுகளாயின. உள்ளிருந்து பார்க்க வான் தெரிந்தது . தூரத்து மரம் தெரிந்தது. மரமிருந்து பறித்த இரு பழங்கள் சாறுவத்தி என் காலடியில் என்றைக்கோ போடப் பட்டுக் கிடந்தன. நான் அதைத் தின்று தீர்க்கின்ற வேளையில் புதிய பழங்கள் அல்லது அந்த வீட்டார்க்கு உதவாத நெல்மணிகள் எனக்கே எனக்கானதாய் என் முன் வைக்கப் படலாம். என் நிராகரிப்புக்காக அல்லாது, நிராகரிக்கப் பட்ட உணவுகள் பூசாணங்கள் தாங்கி துர்நாற்றம் பரப்பப் புகும் வேளை வேறு வழியின்றி என் உணவுகள் மாற்றப் படும்..
சின்னக் கிண்ணம் தாங்கிய நீர் வீட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்த மின்விசிறிக்கு அலைகள் எழுப்பி கிண்ண முடிவில் மோதி ஓய்ந்து போனது . நான் வெளிக் கிளம்ப நினைத்த ஆசைகளாய்.. நான் படபடத்து சிறகுகளை அடிக்க உதிர்ந்த இறகுகள் கூண்டுக் கம்பி வழி வழிந்து மின் விசிறி வேகத்தின் மேலெலும்பி பறந்து கொண்டிருக்க, பத்திரப் படுத்துகிறார்கள் சாட்சிகளாக்க , நான் சிறகுகள் அடித்தால் இழக்க வேண்டிவரும் இறகுகளை என்று சொல்ல
நான் நீட்டிய இறக்கைகளில் கம்பிகள் பெயர்த்துக் கொண்டன ஒரு தருணத்தில். காடுகள் வீடுகளான போதும் ஆதிக்கங்களை அதிகாரங்களை சுமந்த விலங்குகள் கூன் நிமிர்ந்த பின்னும் விலங்குகளாகவே நடமாடி வர வீடு நிறைய எனக்கு வெளிகளை நிரப்பிக் கொள்ளும் யானைகளும் கண்ட இடமெல்லாம் இருப்பதாய் தாவித் தீர்க்கும் குரங்குகளும் தலைகீழாய்த் தொங்கிக் கிடந்த பலர் பார்க்க மறந்த இரத்தம் உறிஞ்சும் வௌவால்களும் என் கருப்பை சுமந்த தலைமுறையையே குறி வைத்து குடிக்க நெளிந்த படி கூண்டேறும் பாம்புகளும் , பின்னும் பாத நகங்கள் உள்ளிழுத்தபடி சிநேக பாவம் தாங்கித் திரிந்த கடுவன்களும், உணர்வு செத்துக் கிடக்கும் உடல்களை தின்னத் தேடும் கழுகுளும். எல்லாமே என் கூண்டுக்குள் சிக்குவதில்லை. வந்து போகின்றன. கம்பிக்கு வெளியில் காத்திருந்து சிறையிருக்கின்றன. அவை வந்து போகின்ற பாதைகள் தெரிந்த போதும் என் உடல் அவை வழி ஏக முடியாததாகவே எப்போதும்
எனை துரத்தி வந்த விலங்குகள் வீட்டில் நிறைய , விலங்குகளுக்கு பயந்து வீடு எனை வெளித் துப்பியது .புனிதங்களைச் சுமந்த இலைக்கிளிகளின் பச்சையங்கள்
வீறு கொள்ள இலை நரம்புகள் வாளாகின்றன. வாட்களின் நுனியிலும் கரிசனம் இரத்தம் சுவைப்பதில்லையென. கூண்டுக் கம்பிகள் வாளின் கூர்மையால் அறுபட தூரப் போய் விழுந்த பூட்டுகள் நீள மஞ்சள் கயிறாய் மாறிப் போனதாயும் எல்லைப்புற காளி கழுத்துல் யாரோ அதைக் கட்டி விட்டதாயும் கேள்வி.
நான் சிறகு தூக்கி பறக்கின்ற வெளியெங்கும் எனக்கான காடுகள் முளைக்கின்றன எல்லா தூரங்களையும் கடந்து விட்டதாய் நான் சுவாசம் கொள்கின்ற வேளையில் எனக்கு முன்னால் புதிய காடுகள் முளைத்தெழுகின்றன எனைக் கடக்கச் சொல்லி . என் போல் இன்னும் சில கிளிகள் சிறகுகளோடு ஆளுக்கொரு கூண்டுகளையும் சுமந்த படி இருக்க கூண்டுகளை தங்களுக்கான உடைமையாய் எண்ணித் திரியும் கிளிகள். குறுக்குக் கம்பிகள் இல்லா என் அருகாமை பலருக்கு நாவில் எச்சில் ஊற கூட இருந்த கிளிகள் கூண்டுக்குள் போக அறிவுறுத்துகின்றன
என்றும் தீராத காற்றும் திகட்டாத பரிதியும் எனனக் கண்டு திகைக்கும். யாரும் தீண்டி விட்ட போதும் தீர்ந்து போகாத என் உடலும் தீண்டவே முடியாத என் உணர்வும்.
படைத்துப் போட்ட பிரம்ம சூத்திரங்களாய் நான் தின்று என் வழி கடந்த விதையொன்று முளைப்பதைப் பார்த்து சிலருக்கு அலட்சியம் ஒரு விதை எங்களை என்ன செய்யுமென்று. தனிமரம் தோப்பாகாதென்று . என்னிலேயே உறங்கிக் கிடக்கும் வல்லூறுகள் ஊர்ந்து நெளியும் நாகங்கள் , பாதம் பதிக்கும் பூனைகள் மழைக்கால விடியலொன்றில் என்னில் பூத்த புதிய மொட்டொன்று பலவாகி நூறாகி ஆயிரமாகி வாசனைகளால் காட்டை நிறைத்த போதும் தேனீக்களை அனுப்பி குடித்து விட தீர்மானிக்கின்றன. தேனுண்டு தின்று தீர்த்து விட்டதாய் மயங்கிக் கிடந்த தேனீக்களின் கால் நுனியில் எனது விதைகளுக்கான அச்சாரங்கள் அவைகளே அறியாமல்
பூக்கள் இதழுதிர்க்க கை கொட்டி சிரிக்கும் நீருண்ட மேகங்கள் அதன் சிரிப்பில் உரம் ஏறிய என் காய்கள் கனியாகும். இப்போதுதான் காடு மொத்தமும் உணர்ந்திருந்தது சாம்பலாக்கி கரைத்து குடித்தாலும் நான் சஞ்சீவி மந்திரம் பெற்றபடி மீண்டு வரும் சாதியென்று . என் காதலை சஞ்சீவி மந்திரமாய் தின்று உயிர்க்க நினைக்கும் மந்திரங்கள் பலனற்றுப் போக என் சுவாசங்கள் சஞ்சீவி மந்திரத்தின் பலம் பெறுகின்றன என்னில் உறங்கியிருந்த காலங்களின் தாலாட்டை எண்ணிப் பார்க்கும் யாரும் எவருமே எனக் கெதிராக கத்தி தூக்கி விட முடியா காலமொன்றில் எனது வாட்கள் எனது கண்களாய் மாறிப் போயிருந்தன . காதலோடு காண்பவர்கள் காதலது கொட்டுவதாயும் , கத்தி கொண்டு திரிபவர்கள் கத்தி சுமப்பதாயும் வதந்திகள் பரப்பித் திரிய தனது தேவைகளை இசைத்தபடி பறந்த கிளியின் இறக்கையில் வானம் மெல்லத் தன்னை ஒளித்துக் கொண்டது. கிளிகளின் தேசத்தில் அவரவர்க்கான இடங்கள் அவரவர்க்கானதாய் . இன்னமும் சில கூண்டுகள் அதற்குள் ஆதிக்கங்கள் அடைபட்டுக் கிடக்க கூண்டுகள் மூழ்குகின்றன .ஓயாத அலைவீசும் கடலுக்குள் வண்ணங்களற்ற ஒளிகளில் வண்ணங்களை எழுப்பியபடி கனலும் சூரியாளால் விடியலாகிக் கொண்டிருந்தது
கம்பிகளில் குறுக்காக நானிட்ட ரம்பங்கள் கைகளிலிருந்து வழிந்து ஓடுகின்ற குருதி பார்த்து மகிழ்கின்ற தருணங்களில் ரம்பங்கள் உன் பார்வையிலிருந்து மறைந்திருக்க, நட்பென சொல்லி வந்த கிளியொன்று ரம்பத்தின் மேல் அமர, அந்த அழுத்தம் என் வேலையை எளியதாக்கியிருக்க, வெறும் அமர்தல் எதற்கு என்று சொல்லாமல் கொள்ளாமல் சிறகு தூக்கி பறந்து விட அழுத்தம் சடாரென விலக என் முகத்திலும் இப்பொழுது ரம்பத்தின் கீறல் . என் கோப முகம் கண்டு, ”உனக்காக நான் உட்கார்ந்திருக்க முடியுமா? கேள்வி எழுப்புகின்றாய்? “ என் வலியின் உண்மை உணர முடியாத உனக்கு என்ன வார்த்தை சொல்லி புரிய வைக்க . தன்னந் தனியே வழியும் குருதி பொருட்படுத்தாது குறுக்குக் கம்பிகள் உடையும் வரை அறுக்கத் துவங்குகின்றேன்
கிளிகளுக்கான விடியல்கள் தங்களால் பரிசளிக்கப் பட்டதாய் பேசித் திரியும் , என் சதை தின்று விடத் துடித்த கூட்டம். எல்லாம் புரிந்திருந்தும், அறிந்திருந்தும் தெரியாததாய் எப்பவும் நீ நல்லவனென்று நம்புவதாய் காட்டித் திரிகின்றேன். நெல்மணியிட்டு சீட்டெடுக்க பத்திரப் படுத்திய கூண்டு வாழ்வால் தான், தான் உலகளந்ததாக இன்னமும் மரத்தடி காலம் கனிப்பவர்கள் , இதுவரை எனை அசைகின்ற சொத்தாய் கொண்டிருந்தவர்கள் சொல்லித் திரிய மெல்ல சிலிர்த்துக் கொண்டேன். இறகுக்களூக்கிடையே இருந்த சிறகு ஒன்று உதிர்ந்து விட அதைக் கையிலெடுத்து இதுவரை எனைக் கொண்டிருந்ததற்கான சாட்சியாய் ஆக்கிவிட துடிக்கும் மரத்தடி ஜோசியர்கள் தொங்குகின்ற அங்கவஸ்திரத்தில் கட்டி வைத்திருந்த எனது முந்தானை முடிச்சு நழுவுகின்றது. நழுவிப் போன முந்தானை களுக்காய் கவலை கொள்ளும் அங்கவஸ்திரம் ஏதாவது சொல்லி முடிச்சிட்டுக் கொள்ளப் பார்க்கின்றது. நானோ இப்போது மரத்தின் உச்சிக் கிளையில் இலைகளின் பசுமைகளோடு கலந்த படி இருந்தாலும் வசீகரிக்கும் குரலும் பேச்சும், சிறகசைப்பும். நதியொன்று தழுவிக் கொள்ள ஆசைப்பட , குளிரை என் மேல் போர்த்திக் கொள்ளும் என் ஆசைக்காய் மூழ்கி உடல் நனைந்து மீண்டு வந்தேன்
நனைந்த உடலை உலர்த்துவதாய்ச் சொல்லி காற்று கட்டிக் கொள்ள உதறிய உதறலில் நீர்த்துளிகளோடு தெறித்துப் போய் விழுந்தது காற்று . இன்னும் மேகம் துளிகளாய் அவதாரமெடுத்து வீழப் பார்த்தது என்மேல் மோகம் கொண்டு.. நிழலினடியில் வளர்திருந்த இலை எல்லா இலையிலும் பெரிதாய் இருக்க அடியில் ஒதுங்கினேன். மழைத்துளிகளின் தீண்டல்கள் தவிர்த்த பின்னும் காற்று இலை கை கொண்டு நெருங்கி நெருங்கி பெருமூச்சு விட்டபடி வர பறந்தேன் தொலைவு நோக்கி. என் ஈரம் உணர்ந்த அங்கவஸ்திரமோ எனை உலர்த்தும் உணர்வு இல்லாமல் துவண்டு கிடக்க நிராகரிப்பின் வலியை நெஞ்சில் நிறுத்தி எதையும் நிராகரிக்காது நேசக் கம்பளமேறி உலாவரும் என் சிறகுகள் . இனிய கீதமொன்றும், நெருங்கிய அன்பு சுவாசமொன்றும் உணரத் தலைப்பட்ட நேரமெல்லாம் நேசமொன்று நெருங்குவதை உணர். சொல்லாதவரை மொழியினால் பயனில்லை. உணர்ந்ததை உணர்த்தும் போதும் உலகமே உருண்ட போதும் புலப்படத் துவங்கும் நேசிக்கப் படுகின்ற உருவங்கள்
கிளியாக , சூழ இருந்தவர்கள் எனை உணரத் தலைப் பட்ட போது இரைக்கப் பட்டன நெல்மணிகள் ,சீட்டெடுத்து தந்து விடவென்று கூண்டுக்குள் அடைத்து விட பச்சை வர்ணம் கண்டு எனை கிளியாக இருள் உணரத் துவங்கிட நான் குயிலாகியிருந்தேன். அக்கக்கா குரல் தனை தேடிச் சிலர் வந்த போது காகமாகியிருந்தேன், குயில், முட்டைகளோடு என் கூட்டில் திணித்து விட இன்னும் சில பாம்புகள் ஊர்ந்து வர தோகை விரித்தாடும் மயிலாகியிருந்தேன். பீலி பிடுங்கிக் கொண்டு போய் விசிறி விட பிரயத்தனப் பட்ட அரச கட்டில்கள் நெருங்கி வர வானில் புள்ளியாய் உலாவரும் கழுகாகியிருந்தேன். வட்டமிட்ட கழுகு இறங்கி வருமென வாய் திறந்து காத்த படி இருக்க புள்ளியிலும் புள்ளியாகி கோள்களை காற்றோடு கரைய விட்டு கதிர் வெப்பமோடு உலரவிட்டு எது நான் என உணர முடியாத படிக்கு போயிருந்தேன்.
கேள்வி இப்போது பச்சை வண்ண பறவை தேடிப் பலர் திரிய நான் உதிர்த்த என் பச்சையங்கள் நீர் உள்ள நிலத்தில் ரோஜாச் செடியின் கூர் முட்களாகியிருந்தன. பாலை மண்ணிலோ கள்ளியின் நிறமாகியிருந்தன.
தன் உயிரை தானே காப்பாற்ற முடியாத திமிர் உடல்கள் ஏழுகடல் தாண்டி தன் உயிரை எனக்குள் ஒளித்து வைத்திருப்பதாய் சொல்லி எனை குகை அடைத்து வைக்க யாரும் அறியாத , விடிந்திடாத பொழுதொன்றில் நான் தூர எறிந்த அந்த உயிர் எனதுயிரையும் இழுத்துக் கொண்டு போக முயல உதறி உயிரின் ஜீவ அணுக்களை அடைகாக்கத் துவங்குகின்றேன். தான் எறிந்து விட்ட உயிருக்காக விரட்டித் திரிகிற உடல்கள். அவை என்னிடமில்லை என்று அறியாது. அதை அடையாளம் காட்டத் தெரியாது அடகுக்கென எனது அடைகாக்கப் பட்ட அணுக்களை தூக்கி பதுக்கத் திட்ட மிடுகின்றன. அதன் கனம் தன்னால் தாங்க முடியாதென்பதறியாது ..
தூக்க முடியாது கை நழுவ விட்ட அணுக்கள் வீழ்ந்து தெறித்த போதும் , துளியாய் இருந்தது. துளிகளாகிச் சிதறி உருவம் நூறு எடுத்து ஒவ்வொன்றும் தனக்குள் ஒரு பிரபஞ்சம் பிரதி பலித்துக் காண்பித்தது. சிலது சிறியதாய் , சிலது பெரியதாய் உருவத்திலிருக்க, உருவங்களின் பருமன்களும் மாறுபட்டுத் தெரிய துளிகளாய் உருண்டது வெளிகள் நிரப்பும் காற்றோடு கரைந்து வியாபிக்கிறது.

*
தூரத்து நதி மனதின் பாடலுக்கு கால்களின் தாளமிட்ட பெண்ணாய் படுத்துக் கிடக்க அலையெழுப்புகிறது. நான் மோதும் போது மட்டும். இதோ என்னைக் கிழித்தபடி ஒரு கிளி வந்தமர்கின்றது ஆறு உலர்ந்து விட விசிறிவிட்டுக் கொண்டிருந்த மரத்தின் தோள்களில். தீர்ந்து போகாத நுனி கொண்ட நதியே நகன்று கொண்டிருக்க , சும்மா இருந்தாலே நகர முடியும் என்றறியாது நகலவென நீந்திக் கொண்டிருந்த மீன். மீனோடு நதியில் போட்டியிட்டுக் கொண்டிருந்த செவுல்கள் இல்லா சிறுவன்., சொல்லித் தர முன் வருகின்றான். தான் நீச்சல் கற்ற விதத்தை மீன்களுக்கு. . மீன்களின் அமைதியை அறிவின்மையாய் நிறுவ முயன்ற சிறுவனை நிராகரித்து மீன்கள் நீரைக் கிழித்துப் போக மூச்சுத் திணறல்களோடு வெளியே வந்து ஈரமோடு விழுகின்றான்
மரத்திலிருந்த கிளி சிறுவனின் கண்ணில் பட தோளமரக் கூப்பிடுகின்றான் நெல்மணிகளும் , பழங்களும் தருவதாய் ஆசை காட்டுகிறான்.. கூடமைத்து தருவதாய் இனிக்கப் பேசுகின்றான்.
கிளியின் கேள்வி எனக்கெதுக்கு நெல்மணிகள் வயலிலிருந்து எடுக்கத் தெரியாதா? மரம் மிகுந்த பழங்கள் நீ ஏன் தரணும், கூடு கட்டும் எனக்கு உனது இரவல் கூடெதற்கு,கேள்வியின் பின் கிளி சிந்திக்கு முன்னரே கவட்டை ஏந்துகின்றான் கல்லோடு
தோள்களை நிராகரித்து பறக்கத் துவங்குகிறது கிளி கவட்டையிலிருந்து கிளம்பிய கல் கிளியோடு பறந்து தொடர்ந்து வர முடியாது புவியின் ஈர்ப்பு விசைக்குள் தன் எதிர் விசையை தொலைத்து மரித்துப் போக. கிளி புவியீர்ப்பு விசை மீறி எதிர்த்த காற்றைக் கிழித்து , அரவணைக்க வந்த காற்றை சிறகோடு புறம் தள்ளி முன்னேறுகிறது.

கிளியை நிமிர்ந்தபடி பார்த்திருந்த சிறுவனின் நீண்டிருந்த நிழலும் குறுகிப் போக உச்சிக்கு வந்த சூரியன் கண் கூச, பறந்த கிளி எங்கே என தொடர முடியாது. சூரியனாய் மாறியதோ என எண்ண மிட்டு காண முடிகின்ற மாலைச் சூரியன் வரும் வரை தொடருகிறான் தவத்தை.
சூழுகின்றன புற்றுகள் அசையாதிருந்த அவனை. நிழல் நீளுகின்ற வேளையில் அவன் நிமிரத் தலைப்பட புற்றுகள் இறுக்கி வைத்திருக்கின்றன. காதுகளில் கிளிகள் கூடு திரும்பும் ஒலிகள். பறந்து போன ஒரு கிளி இன்று வானின் நிறத்தை பச்சையாக்கும் வண்ணம் சிறகுகளால் வான் மூடி காற்று வெளியை கூடாக்கி, பூமியை கொத்தும் தானியமாய் பார்த்தபடி பறக்க கிளிகளின் தேசத்தில் கிளியாக மாறுபவர்களுக்கு மட்டுமே இடமிருந்தது. கிளிகளின் தேசத்திற்குள்: நுழைந்து விட வந்த வல்லூறுகளும் தன்னிலும் வலிமை கொண்ட கிளிகளின் சிறகுகளைக் கண்டு தானும் கிளியாகிப் போனது.. . கிளியின் குண்டூசி நுனியளவு கூர்மையான கோபம் காற்றை பலூனுக்குள் நிரம்பியிருந்ததை வெளியோடு கலக்கச் செய்ததை அறிந்த துப்பாக்கிகள் தோள் சுமந்த பலூன்காரன் முதன் முறையாக பயப்படத் துவங்குவான். குண்டூசி முனைகளுக்கே. சுவாசிக்கும் போது நீ காற்றின் மேல் ஆதிக்கம் செலுத்து. சுவாசித்த பின் உன் மேல் அது ஆதிக்கம் செலுத்தும், இருந்தும் உள்ளிருப்பையும், வெளியேறலையும் தானே சுதந்திரமாய் தீர்மானிக்கும் பொழுதொன்றில் சீரான வாசத்தோடு கிளிகளின் தேசம் மரித்தலிலிருந்து உயிர்த்தெழுந்தது. முதன் முறையாய் சந்தோசப் பட்டது. சிலுவைகளில் அறைந்து கொண்ட ஆதிக் கிளியின் செய்கை உயிர்த்தெழுகையில் அங்கீகாரம் பெற ஒற்றை ஆதிக் கிளி ஒரு தேசமாய் உருமாறியிருந்தது
————————————————-
mathibama@yahoo.com

Series Navigation