கிணத்தினுள் இறங்கிய கிராமம்

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

தீபச்செல்வன்


எனது கிராமம் இப்பொழுது
கிணத்தினுள்
இறங்கியிருக்கிறது.

தவளைகள் தரித்திருக்கும்
பொந்துகளினுள்
ஒளிந்திருக்கும் அம்மாவே
உன்னைப் போன்ற
நமது கனவுகள் நிரம்பிய
பைகள்
மாமரத்தில் தொங்கியபடியிருக்கிறது.

நீயும் நானும்
நமது சனங்களைப்போலவே
இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.

காட்டில் பதுங்கியிருக்கும்
சூரியன்
பாலைமரங்களையும்
வீர மரங்களையும் விலத்தியபடி
புழுதி உதிர
நமது கிராமம் திரும்பிவிடும்.

சூரியனை காணாத
இரவோடிக்கிறது நமது நாடு.

கிணத்தினுள் நிரம்பிய
உனது வியர்வை வெளியில் வழிகிறது.

*பள்ளிப் பேருந்துமீது
ஒரு கிளைமோர் வெடிக்கிறது
பிணங்களாய் பள்ளி மாணவர்கள்
அடுக்கப்பட்டிருந்தார்கள்
புத்தக மேசைகளில்.

குழந்தை யேசுவை தூக்கி வைத்திருக்கும்
மாதாவின்
மடு தேவாலயத்தின்மீது
விமானங்கள் பறந்தடிக்கிறது.

**எனக்கு இளநீர் பருகத்தந்த
தோழன் ஒருவனின்
தலையை
விமானம் கடித்தெறிந்தது
அவனது தலை
இரத்தினபுரத்தில் கிடந்தெடுக்கப்பட்டது..

***கிராஞ்சியில் குழந்தைகளின்
கைகள் பிடுங்கி எறியப்பட்டன
கையில் கட்டியிருந்த
பாசி மணிமாலைகளும்
கிழிந்த பாய்களும் வலைகளும்
தென்னை மரங்களும்
மணல் தரையில் குருதியாய் கிடந்நது.
ரஷ்யா இன்னும் வேகமான
விமானங்களை
இந்த தலைகளின் மேலால் பறக்கவிடுகிறது.

கிணத்தினுள் தண்ணீர் ஊறுகிறது.

கருணாநிதியின்
கவிதைகளை கேட்க முடியாமலும்
ஜெயலலிதாவின் கூச்சல்களை
கேட்க முடியாமலும்
தவளைகள் கத்துகின்றன.

****கடைசியாய் இருந்த
முறிகண்டியின்
கச்சான்கடைகளாலான
வழி இறங்கு இடமும்
தகர்ந்து கிடக்கிறது
அம்மா உனது நேத்திகளும்
உடைந்த தேங்காய்களும்
தும்பிக்கை உடைந்த
பிள்ளையாரோடு.

கிராமம் கிணத்துக்குள் இறங்கிவிட
இராணுவத்தின்
கவசவாகனங்களும் ராங்கிகளும்
சேற்று நிலத்தில் புதைகின்றன
வீடு கடலில் இறங்கித் திரிகிறது.

தங்கச்சி கனவுகண்டு துடித்தெழும்பி அழுகிறாள்.

எனினும் நீயும் நானும்
நமது சனங்களைப்போலவே
இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.
—————————————————————————–

*29.01.2008 செவ்வாய்க்கிழமை
மன்னார் மடுவில் இலங்கை இராணுவம் பள்ளிப் பேரூந்துமீது ஆழஊடுறுவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 பள்ளி மாணவர்கள் உட்பட 20பேர் பலியாகியுள்ளனர்.

**02.11.2007 அன்று நடைபெற்ற விமானத்தாக்குதலில் எனது தோழன் நிர்மலசிங்கன் (கிளிநொச்சி/கனகபுரம் மகாவித்தியாலய மாணவன்) உடல் சிதறி பலியாகினான்.

***பெப்ருவரி 22 பூநகரி கிராஞ்சியில் நடத்தப்பட் விமானத்தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 8 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்.

****16.11.2007 நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் முறிகண்டியில் உள்ள மீன்பிடி படகு உற்பத்தி நிறுவனம் அழிந்தது. இது ஏ-9 வீதியில் பேருந்து தரித்து நிற்கும் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலிருக்கிறது.


deebachelvan@gmail.com

Series Navigation