காவளூர் அமர்ந்த கந்தப்பெருமான்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

கோ. தில்லை கோவிந்தராஜன்


அருணகிரிநாதரின் அருள்வாக்கு

மானை நேர்விழி யொத்தம டந்தையர்
பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர்
வாச மாமலர் கட்டும ரம்பைய ரிருதோளும்
மார்பு மீதினு முத்துவ டம்புரள்
காம பூரண பொற்கடகம்பொர
வாரி நீலவ ளைக்கைபு லம்பிட அநுராகம்
ஆன நேரில்வி தத்திர யங்களும்
நாண மாறம யக்கியி யம்பவும்
ஆடை சோரநெ கிழத்தியி ரங்கவும் உறவாடி
ஆர வாரந யத்தகு ணங்களில்
வேளி னூல்களை கற்றவி ளம்பவும்
ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை யடைவேனோ
சான கீதுய ரத்தில ருஞ்சிறை
போன போது தொ குத்தசி னங்களில்
தாப சோபமொ ழிப்பஇ லங்கையு மழிவாகத்
தாரை மானொரு சுக்கிரி பன்பெற
வாலி வாகுத லத்ததில்வி ழுந்திட
சத வாளிதொ டுத்தமு குந்தனன் மருகோனே
கான வேடர்சி றுக்குடி லம்புன
மீதில் வாழித ணத்திலு றைந்திடு
காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு மணிமார்பா
காவு லாவிய பொற்கமு கின்திரள்
பாளை வீசம லர்த்தட முஞ்செறி
காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி பெருமானே

– எனத் தலத்தின் பெருமைகளை அருணகிரிநாதர் தம்முடைய திருப்புகழில் (பா 892 இல்) பாடுகிறார். வேடர்கள் குடியில் பிறந்து தினைப்புலம் காத்த குறவர் இனப் பெண்ணான வள்ளியுடன் பாக்கு மரங்கள் நிறைந்த காவளூரில் வீற்றிருக்கும் முத்தமிழும் தெரிந்த பெருமானே என்று சிறப்பித்துக் கூறுகின்றார்.

சீதா தேவியைச் சிறை கவர்ந்ததால் இலங்கையை அழித்த முகுந்தன் ஆன இராமனின் மருகோனே என்று புராணக் கதையினைச் சிறப்பித்து இத்தலத்துடன் விளக்குகிறார். தற்பொழுது இக்காவளூர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்ததாக உள்ளது.

வரலாற்றுச் சிறப்பு:

இக்காவளூர் நித்தவினோத வளநாட்டு கிழார் கூற்றத்து ஆயிரத்தளியை சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

கி.பி.1000ம் ஆவது ஆண்டுக்கு முன்பு ஆட்சி செய்த சோழ அரசர்களில் மதுரை கொண்ட பரகேஸ்சரி முதலாம் பராந்தகன் என்னும் அரசனுக்குக் கீழ் அரசியல் தலைவராக இவ்வூரினைச் சேர்ந்தவர் விளக்கினார் என்பது திருச்சோற்றுத்துறை மற்றும் கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயில் கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.

சிற்றரசன்:

‘காவளூருடையான் வில்லவன் பேரரையன்’ என்றும், ‘வில்லவன் பேரரையன் (S.I.I.Vol.V No.691 and S.I.I. Vol No.V No.621) என்கிற சிதுபாயம் பாண்டன்’ என்றும் குறிப்பிடப்பட்ட இவர் “திருச்சோற்றுத்துறைக் கோயிலில் நுந்தா விளக்கை 25 கழஞ்சு பொன் காசு வட்டியினால் எரிக்கவும். 105 துளைப்பொன் காசு நாகேஸ்வர சுவாமிக்கு தானமாகக் கொடுத்தார்” என கல்வெட்டினால் தெரிகின்றது.

சிற்பங்கள்:

மேற்சொன்ன பேரையன் சிற்பம் சன்னதியின் இரண்டாம் மண்டபத்தின் தென்பகுதியில் வடக்கு நோக்கிக் காணப்படுகிறது. இச்சிற்பம் நின்ற நிலையில் கரம் சேவித்த நிலையிலும் கரங்கள் இடையில் ருத்திராட்ச மாலை கொண்டும், காதினில் ருத்திராட்ச குண்டலமும், கழுத்தினில் ஆரமும், கையின் மணிக்கட்டில் ருத்திராட்சத்தினால் ஆனவளையமும் அணிந்த நிலையில் காணப்படுகிறது. இடையில் குறுவாள் உறையுடன் கூடியதாகக் காணப்படுகின்றது. மற்றும் முறுக்கேறிய மீசையும், தலையில் இடதுபுறம் சரிந்த கொண்டையும் கொண்டு உள்ளார். இச்சிற்பத்தில் மூக்குப் பகுதி சிறிது உடைந்துள்ளது.

இம்மண்டபத்தின் உட்புறம் தெற்கு நோக்கி தலையில் உத்திராட்ச மாலையும் கரம் கூம்பிய நிலையில் கைகளின் இடையில் ருத்திராட்ச மாலையும் கொண்டு காணப்படும் சிற்பம் அருணகிரிநாதரைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

முன்மண்டபம்:

திருக்கோயிலில் நுழைந்தவுடன் தென்புறமாக காசி விசுவநாதரும், வடபுறம் விசாலாட்சியும், கிழக்குதிசை நோக்கியுள்ளார். மேலும் மேற்குதிசை நோக்கி விசாலாட்சி எதிர்புறமாக சூரியன், பைரவர் சிற்பங்கள் அமைந்துள்ளன. பழைய பைரவர் சிற்பம் காலவெள்ளத்தினால் சிதைக்கப்பட்டதினால் புதியதாக மாற்றி அமைக்கப்பட்டதாகும்.

தலச்சிறப்பு:

கந்தபெருமான் செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை ஆவார். அங்காரக தோஷம் எனப்படும் செவ்வாய் தோஷத்தால் வரும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்றவை நீங்க இத்தலத்தில் வழிபாடு செய்தால் சகல தோஷங்கள் நீங்கி வளமையடையலாம். திருக்கருகாவூர் ஆலயத்திற்குச் செல்லுமுன் இத்திருக்கோயிலை வணங்கிச் சென்றால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

தென்வடலாகப்போகும் உத்திரவாகினியாகிய வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது. காசிக்கு சமமான ஸ்தலமாகும்.

பிதுர்வேஷ நிவர்த்தி:

பிதுர்காரன் ஆன சூரியன், மாதுருகாரனான சந்திரன் இருவர் பலகோயில்களில் காணப்படுவர். ஆனால் இங்கு பிதுர்காரனான சூரியன் மட்டுமே உள்ளான். பிதுர்கருமா செய்ய வேண்டியவர் இவ்வெட்டாற்றங்கரையில் ஆடி, தை அமாவாசையில் தர்பணம் கொடுத்துவிட்டு காசிவிசுவநாதர், விசாலாட்சியை வணங்கி பின்னர் இக்கந்தனை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெற்று சகல செல்வங்களும் பெறுவர்.

கோயில் அமைப்பு:

இக்கோயிலின் படிகட்டுகள் 12 ராசிகளைக் குறிப்பனவாக அமைந்துள்ளன. மண்டப அமைப்பு கொண்டு, மூலஸ்தானத்தின் மேல் சட்கோணமாகவும் (அறுகோணமாக) அதாவது குமரக்கடவுளின் ஆறுமுகங்களைக் குறிப்பதாக அமைந்துள்ளது. திரிதளம் எனப்படும் மூன்றுதள அமைப்பு கொண்டது.

திருவிழாக்கள்:

2001 ஆண்டு முதல் சித்திரா பௌர்ணமி விழா சிறப்பாகக் கொண்டாடத் துவங்கியுள்ளனர். ஆடி, தை அமாவாசைகளில் சிறப்புப் பூசை செய்ய உள்ளனர்.

திருப்பணிகள்:

1.8.1960லும், பின்னர் 1992லும் திருப்பணி செய்து கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்துள்ளனர், தற்பொழுது கோயில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகமும் செய்ய இவ்வூர் வழிபாட்டு மன்றத்தினர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் ஆனி 29 13.7.2006 அன்று.

செய்தித்தாள்களில்:

இக்கோயிலைப் பற்றிய கட்டுரையாளரின் செய்தி 19.2.2003 அன்று தினத்தந்தி நாளிதழில் “செவ்வாய் தோஷம் போக்கும் காவளூர் கந்தன்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2003 ஞான ஆலயம் ஆன்மீக மாத இதழில் “கல்யாணத் தடை நீங்கும் முருகன்” என்ற தலைப்பில் கட்டுரை ஆசிரியரின் கருத்துக்கள் திரு.வி.பி.கே. மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டுள்ளன.

thillai.g@gmail.com

Series Navigation

கோ. தில்லை கோவிந்தராஜன்

கோ. தில்லை கோவிந்தராஜன்