கால நதிக்கரையில்……(நாவல்)-21

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

வே.சபாநாயகம்


காலையில் சொன்னபடியே எட்டு மணிக்கு மருது அப்பு வீட்டுக்கு வந்து விட்டான். இருவரும் மீண்டும் சிவன் கோயில் குளத்தை நோக்கிச் சென்றார்கள். குளத்தின் கீழ்க்கரைக்குச் சென்றார்கள்.

அங்கு புளிய மரத்தடியில் ஒரு கொல்லன் உலைக்களம் இருந்தது. அங்கு ஆறுமுக ஆசாரியும் அவரது இரு மகன்களும் எப்போதும் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருப்பார்கள். சிதம்பரம் சிறுவயதில் அங்கு போய், அப்பாவு ஆசாரியின் சிற்ப வேலையைப் பார்க்கிற அதே சுவாரஸ்யத்தோடு ஆறுமுக ஆசாரியின் வேலையை ஆர்வத்தோடு பார்ப்பார். இரும்பு செக்கச்செவேலென்று பழுத்து ஒளிர்வதையும் அதைத் தணலிலிருந்து ஆறுமுக ஆசாரி இடதுகைக் குறடாவால் எடுத்துப் பட்டறை
மீது வைத்ததும் அவரது இரு மகன்களும் மாறி மாறி சம்மட்டியால் படீல்படீலென ஓங்கி அடிப்பதையும் பார்ப்பது அவருக்கு இன்னொரு பிடித்தமான காட்சியாகும்.

இப்போது அந்த இடத்தில் உலைக்களம் இருந்த சுவடே இல்லாமலிருந்தது.

“எங்கேப்பா ஆறுமுக ஆசாரி உலைக்களம்?” அன்று மருதுவைக் கேட்டார்.

“ஆறுமுக ஆசாரிக்கப்றம் அவரோட மகன்கள் காலம் வரைக்கும் பட்டறை இருந்துது. அப்பறம் அடுத்த தலமுறைக்குத் தொழில்ல நாட்டம் இல்லே. வேலையும் முன்ன மாதிரி வரலே. அதனால பசங்க எல்லாம் வெளிநாட்டுக்குச் சம்பாதிக்கப்
போய்ட்டானுவ. நடேச ஆசாரி மகன் சண்முகம்தான், தான் போன வழி அவங்க¨ளையும் அழச்சிக்கிட்டுப் போய்ட்டான்” என்றான் மருது.

“போகட்டும், அப்பிடியாவது இந்தத் தலமுறையாவது செழிப்பா இருந்தா சரிதான்”

“அப்டி ஒண்ணும் டவுன் பக்கம் மாதிரி, திரும்பி வந்து வீட்டக்கட்டி நெலம் நீச்சுன்னு வாங்குன மாதிரி இல்லீங்க. இருக்குற மனைய, நெலத்த அடமானம் வச்சு லட்சக்கணக்குலே கட்டி, வெளிநாடு போய்ட்டு வந்தா, கடனத் திருப்பறதுக்கும்
நெலத்த மூக்கறத்துமே சரியாப்பூடுது. ‘குபேரப்பட்டணம் கொள்ள போனாலும் அதிர்ஷ்டம் கெட்டவனுக்கு ஆப்பக் காம்புதான் கெடைக்கும்’கறது நம்ம ஊர்ப் பசங்களுக்குத்தான் பொருந்தும்” என்றான் மருது.

மேலும் நடந்து ஊர்த் தொழிலாளிகள் குடி இருக்கும் கடைசித் தெருவுக்கு வந்தார்கள். முனையில் இரண்டு குயவர் குடும்பம் இருந்தது. எதிரில் இருந்த சூளை எப்போதும் கனிந்து கொண்டிருக்கும். பக்கத்தில் சலவைத் தொழிலாளியின் வெள்ளாவி அடுப்பும் புகைந்து கொண்டிருக்கும். நாவிதனுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனையும் பக்கத்தில் இருந்தது. இப்போது எல்லாமே சுவடற்று இருந்தது.

சிதம்பரம் கேட்பதற்கு முன்பே மருது சொன்னான். “ஒரு தொழிலாளியும் இப்ப ஊர்ல இல்லீங்க. வெலவாசியும், வேல இல்லாததுமா எத்தினி நாளைக்குத்தான் தாக்குப் புடிக்க முடியும்? எல்லாரும் டவுனுப் பக்கம் போய்ட்டான். காசு பெரட்ட
முடிஞ்சவன் வெளிநாட்டுக்குப் பறந்துட்டான். அதுமட்டுமில்லீங்க – குடி ஆளுங்களும் விவசாயத்துலே வயிறு ரொம்பாதுண்ணு டவுன்பக்கம் கொத்தன் சித்தாளு வேலைன்னு போய் வந்துக் கிட்டிருக்கானுவ. வீட்டுலே சமைஞ்சு இருக்குற பொண்ணுங்களும் டவுன் கடைகள்ள எடுபிடி வேலைக்குப் போயாச்சு. காலைலே எட்டுமணிக்கப்றம் ஊரே வெறிச்சோன்னு போயிடும்.”

“அது சரிதான். இனிமே வீட்டுலே அத்தினி பேரும் ஒழச்சாத்தான் முடியும். அப்டியாவது வீட்டுல சோம்பி இருக்காமப் பொழப்பப் பாத்துக்கிட்டா நல்லதுதான்” என்றார் சிதம்பரம்.

‘ஆனா ஒண்ணு! பொம்பளப் புள்ளைங்க எல்லாம் அப்பன் ஆத்தாள எத்¢ர் பாக்காம தங்களோட சம்பாத்தியத்திலே வேண்டியத வாங்கிக்கவும் நாகரீகமா சுடிதார், சல்வார் கமீஸ¤ன்னு விதம்விதமா உடுத்திக்கவும் குறையில்லாம இருக்கு. அப்பிடி அதுங்க நவநாகரீகமா உடுத்திக்கிட்டு வேலைக்குப் போறது ஒருவகையில முன்னேற் றம்ணுதான் சொல்லணும்” என்று ஊரின் வளர்ச்சியைச் சொன்னான் மருது.

பேசியபடி தெருக்கோடியில் இருந்த சிதம்பரம் வீட்டின் போரடி நெல் களத்துக்கு வந்தார்கள்.

ஊரிலேயே பெரிய களம் அது. நெல் அறுவடை ஆனதும் களத்தில் போராக நெல்கட்டுகள் அடுக்கி இருப்பதை இரவில் பார்த்தால் இரண்டு மூன்று யானைகள் நிற்பது போலிருக்கும். நெல்லடித்து வீட்டுக்குக் கொண்டுவரும் வரை – அப்பா மாலை அனுஷ்டானமெல்லாம் முடித்துக் கோயிலுக்குப் போய்விட்டு வந்து சாப்பிட்டுவிட்டுக் களத்துக்குக் காவலுக்காகப் படுக்க வர இரவு எட்டு மணியாகிவிடும். அப்பா வரும் வரை பண்ணையாள் தங்கவேல் துணையுடன் காவலுக்கு இருப்பது சிதம்பரம்தன்.

மாலை ஆறுமணிக்குக் கையில் லாந்தரை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கீழ்க் கோடியிலிருந்த களத்துக்கு சிதம்பரம் வரும்போது களத்துக்குத் தென்புறம் இருக்கும் ஐயனார் கோவிலை ஒட்டியுள்ள பாதை வழியாகத்தான் வரவேண்டும். பத்து வயசுக்குள்தான் அப்போது அவருக்கு இருக்கும். ஐயனார் கோயில் அருகில் வரும் போது அவருக்கு உள்ளே நெஞ்சுக்குள் இரட்டை உலக்கைபோட்டு இடிப்பது போல ‘திக் திக்’ என்று இருக்கும். திரும்பிப் பார்க்கப் பயப்பட்டு வேகமாக நடப்பார். ஒரு
சின்னக் குருவியின் சிலும்பல்கூட தூக்கிவாரிப்போடச் செய்யும். உயிரைக் கையில் பிடித்தபடி பரபரவென்று நடந்து களத்தை அடைவார். முன்னிலவு இல்லாத நாட்களில் களம் ‘கரு கும்’ மெனும் இருட்டில் முழ்கி இருக்கும். அய்யனார் குளத்துத் தவளைகள் வேறு ‘கொரா கொரா’ என்று கோஷ்டிகானம் மாதிரி வறட்டுக் கூச்சல் எழுப்பியபடி இருளின் பயத்தை அதிகப் படுத்தும்.

களத்தின் வேலிப்படலின் வாசலில் தங்கவேலு காத்திருப்பான். “பயப்படாம வந்தீங்களா சின்னபுள்ளே?” என்று வரவேற்பான். “தூக்குப் போட்டுக்கிட்டு செத்துப் போன இருளம் பொண்டாட்டிதான் இந்த எடத்துலே நாக்குட்டியா அலயுது. அது
கிட்ட வந்தா, ‘சீ!நாயே! இதப்பாரு செருப்பு!’ன்னு கால் செருப்பத் தூக்கிக் காட்டுனா கழுதை அலண்டுகிட்டு ஓடிப்போயிடும்” என்றான் ஒருதடவை. அதைக் கேட்டதும் சிதம்பரத்துக்கு மயிர்க் கால்கள் பயத்தில் சிலிர்த்தன. அதற்குப் பிறகு களத்துக்கு வரும்வரை காலருகில் நாய் தொடருவது போல் பயம் எலும்புக் குருத்துக்குள் ஓடும்.

அப்பா வருகிறவரை தங்கவேலு ஏதாவது கதை சொல்லிக் கொண்டிருப்பான். அதெல்லாம் அனேகமாகப் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, தீவட்டிக் கொள்ளைக்காரன் கதைகளாகத்தான் இருக்கும். திகிலோடு, அவனைத் தொட்டுவிடாமல் அருகில்
நெருங்கி உட்கார்ந்து கொள்ளுவார். ஒருவேளை அப்படி நெருங்கி வரட்டும் என்று தான் அவன் பயமூட்டும் கதைகளைச் சொல்லுகிறானோ என்றுகூடத் தோன்றும்.

சில சமயங்களில் ஊருக்குள், சேரிக்குள் நடக்கிற கள்ளக்காதல் உறவுகளை ரசமாக, சப்புக்கொட்டிக் கொண்டு சொல்வான். வாய்வழிப் போர்னோகிராபியாக அவை இருக்கும். சில நேரங்களில் கிராமத்து வாத்ஸாயனாராக மாறிவிடுவான். பெண்களின் வகைகளையும், சாதி வாரியாக எந்தச் சாதிப் பெண்ணுக்கு எந்த அங்கம் அழகாய் இருக்கும் என்பதையும் சின்னப் பையனிடம் பேசுகிறோமே என்கிற உறுத்தலே இல்லாமல் – சிதம்பரம் தான் அவனது மன அவசங்களை ஓடிப்போகாமல் கேட்கக்கூடிய சுமைதாங்கியென எண்ணி, விஸ்தாரமாய் விளக்கிக் கொண்டிருப்பான். அப்பாவிடம் அவன் இப்படியெல்லாம் பேசுவதைச் சொல்லலாமா, சொன்னால் ‘நீ ஏன் காது குடுத்துக் கேட்டே?’ என்று திட்டுக் கிடைக்குமோ என்று பயந்து தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டுவிடுவார் சிதம்பரம். எப்போது நெல்லடிப்பு முடிந்து களம் காலியாகி காவல் வேலைக்கு முடிவுக்கு வருமோ என்று இருக்கும்.

ஓருவழியாக அப்பா வந்ததும், கையில் லாந்தருடன் தங்கவேலு துணைக்கு வர சிதம்பரம் வீடு திரும்புவார். அவரை வீட்டில் விட்டுவிட்டு அம்மா தரும் சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு தங்கவேலு லாந்தருடன் அப்பாவுக்குத் துணையாகக் களத்தில் படுக்கத்
திரும்புவான்.

“என்ன அப்டியே சில மாதிரி நின்னுட்டீங்க?” என்று மருது சிந்தனையைக் கலைத்தான்.

“பழைய ஞாபமெல்லாம் வந்துது. சின்ன வயசுலே இங்க பயந்தபடி காவலுக்கிருந்தது, அப்பத் தொணைக்கு இருந்த தங்கவேலு – எல்லாத்தையும் நெனச்சுக் கிட்டேன். எவ்வளவு ஒட்டுதலான ஆட்கள்! பகல்ல காவல் இருந்தப்ப வேல செய்ஞ்ச பண்ணையாட்கள் வீட்டுப் பெண்களும் நினைவுக்கு வர்ராங்க. பூவாயின்னு ஒருத்தி எங்க கிட்ட ரொம்ப வருஷமா வேல செஞ்சாளே ஞாபகம் இருக்கா? அவுளுக்கு எங்கிட்ட சதா ஏதாவது வம்பு வளக்கறதிலே ஒரு சந்தோஷம்.

‘ஏங்க சின்னாண்டே! எம் பொண்ணத் தரேன் கட்டிகிறீங்களா?’ என்பாள். ‘சீச்சீ! அம்மாக்கிட்ட சொல்லுவேன்’ என்று நான் அருவருப்புடன் உதறுவேன். சாய்ங்காலம் வேல முடிஞ்சு அவங்க வீடு திரும்புறப்ப அம்மாக்கிட்ட முந்தானையை ஒதறிக் காட்டிட்டுக் கெளம்புவாங்க. பூவாயியின் மடியில ஏதோ முடிச்சு போலக் கனமாகத் தெரியறதப் பாத்துட்டு நான், ‘அதென்ன முட்டா இருக்கு? அங்க எதியாவது ஒளிச்சு வச்சிருக்கியா?’ ன்னு சிறுபிள்ளத்தனமாக் கேப்பேன். முந்தானைய மறுபடியும் ஒதறி ‘அப்றம் முழுசா அவுத்துடுவேன்!’ என்று சிரித்தபடி பயமுறுத்துவா. அம்மா ‘போடி வம்புக்காரி. அறியாப்புள்ளக்கிட்ட என்ன பேசறதுன்னு கெடை
யாதா?’ ன்னு கண்டிப்பாங்க. எவ்வளவு எளிமையான வெள்ளந்தியான ஜனங்க! இப்ப அதும் மாதிரி வேலை முடிஞ்சதும் துணிய ஒதறிக்காட்டச் சொல்ல முடியுமா?”
என்றார் சிதம்பரம்.

“அதென்னவோ நெசந்தான்! கவுடும் சூதும் படியளக்கிற பணக்காரங்கக் கிட்டதான். காலம் மாறிப்போச்சு. இப்ப அந்த ஜனங்களுக்கும் வசதி வாழ்வுன்னு வந்தப்றம் எல்லாருக்குமே கவுட்டுத்தனமும் ஏமாத்துப் புத்தியும் வளந்துட்டுது” என்றான் மருது.

“களத்துலே – கட்டுக்கட்டா நெல்லடிச்சதும், எதிரெதிரா ஆளுங்க நின்னு முறத்தாலே நெல்ல வாரி வாரி ஆகாசத்துல வீசித் தூத்துனதும், நெல் மலயாக் குவிஞ்சிருந்ததும் இன்னும் அப்பிடியெ கண்ணுல நிக்குது. வண்டியிலே நெல் மூட்டைகள அடுக்கி ஏழெட்டு நட வீட்டுக்கு ஆளுங்க கொண்டு போனதும், அதப் பட்டற கட்டி குட்டித் தேர்கள் மாதிரி வீட்டுக்குப் பக்கத்துலே கெணத்தடியிலே வச்சதும் வருஷா வருஷம் பாக்கறதுக்கு அலுக்காத காட்சி!” என்று சிதம்பரம் அந்தக் கால நிகழ்ச்சிகளை மருதுவுக்குச் சொல்கிற மாதிரி தனக்கும் சொல்லிக் கொண்டார். “பட்டற கட்டறதுக்கு களத்துலேர்ந்து நம்ம வீடுவரைக்கும் ஆளுங்க திரிச்ச வைக்கோல் பிரி, மலப்பாம்பு தெரு நெடுக்கப் படுத்துக் கெடக்கிறமாதிரி வளைஞ்சு வளைஞ்சு கெடந்ததும், அதப் பெரிய பெரிய பந்துகளா பந்துகளா ஆளுங்க சுருட்டுனதும் மறக்காத காட்சிதான். தெருவெல்லாம் வைக்கோல் சிதறி மெத்தமேல நடக்குற மாதிரி ரெண்டு நாளைக்கு நடக்கச் சுகமா இருக்கும். அப்போது பரவி இருந்த புது வைக்கோல் வாசனைகூட இப்பக் காத்துலெ மணக்குறமாதிரி ஒரு பிரமை ஏற்படுது ”

“எனக்கு வினவு தெரிஞ்சி நம்ம வீட்டுல நான் நெல்லு பட்டறயப் பாத்ததில்லியே!” என்றான் மருது.

“பின் நாளுலே, பட்டறய ராவோட ராவா அறுத்துக் களவாடுன திருட்டுப் பயம் அதிகமானதும் அப்பா வீட்டுக்குள்ளவே பெரிய பெரிய மரத்தொம்பகளச் செஞ்சு அதுல நெல்லப் போட்டுட்டாங்க” என்றார் சிதம்பரம்.

“வீட்டுக்குள்ளப் பத்திரப் படுத்தி வச்சும் பத்திரமில்லாத நெலமையும் வந்துது.கடுமையான ரேஷன் அமுலுக்கு வந்தப்போ சர்க்காரு பகலிலியே ஊடுபூந்து அதிரடிக் கொள்ள அடிச்சது ஒனக்குத் தெரியுமா?” என்று கேட்டார் மருதுவை.

பதிலை எதிர்பார்க்காமலே தொடர்ந்து சொன்னார்: “ரேஷன் ஆரம்பிச்சப்போ இப்ப மாதிரி விவசாயிங்க எங்க நெல்லை அரசாங்கம் கொள்முதல் பண்ணணும்னு கேக்கலே. அப்ப நெல் விளைச்சல் இப்ப மாதிரி இல்லே. அதனாலே அரசாங்கமே கட்டாயக் கொள்முதல் பண்ணுச்சு. வீடுவீடா தாசில்தார் தம் படையோட வந்து விவசாயிகளைக் கட்டாயப் படுத்தி நெல்லை அள்ளிக்கிட்டுப் போயிடுவாங்க. கொள்முதல் கட்டாயத்துக்குப் பயந்து பலபேர் பகல்ல ஊர்லியே தென்படமாட்டாங்க.

“ஒரு தடவ ஒரு முரட்டுத் தாசில்தார் அப்பா கிட்ட ரொம்ப மரியாத இல்லாம நடந்துட்டான். அப்பா நெல் தர சம்மதிச்சாலும் விளைச்சல் முழுதுமே தரணும்னு அவன் கட்டாயப்படுத்துனப்ப, அப்பா ‘அவ்வளவையும் கொடுத்துட்டா எங்களுக்குச்
சாப்பாட்டுக்கு வேணாமா? ஆளுகளுக்குக் கூலி தர வேண்டாமா?’ ன்னு நியாயமாத்தான் கேட்டாங்க. ஆனா அந்தத் தாசில்தார், “சாப்பாடுக்கு இல்லேண்ணா கடையில அரிசி வாங்கிச் சாப்புடு. ஒரு வேள மட்டும் சாப்புடு. ஊரே பட்டினி கெடக்குறப்ப ஒனக்கு மட்டும் என்ன மூணு வேளச் சாப்பாடு?’ ன்னு ஒருமையில, ஊர் முழுக்க வேடிக்கப் பாக்க, கேவலமாப் பேசுனான். முரட்டுத்தனமா வீட்டுக்குள்ள புகுந்து தொம்பையக் காலி பண்ணி சுத்தமா அள்ளிக்கிட்டுப் போய்ட்டான். பாத்தவங்க எல்லாம் வாயுருகிப் போய்ட்டாங்க.”

“ஆமாமா! எங்கப்பா சொல்லிருக்காரு. ஆனா அந்தத் தாசில்தாரு அடுத்த மாசமே பக்கவாதம் வந்து கைகால் விழுந்து நாக்கு இழுத்துப் போச்சுன்னும் ஜனங்க எல்லாம் ‘பெரிய பூஜை பண்ணுறவர், தர்மவான் – அவரக் கண்டபடி பேசுனதாலே தான் கடவுள் வாய ஒருவழியாப் பேசாம அடைச்சுட்டார்’னு பேசிக்கிட்டதாவும்
சொல்லுவார்” என்றான் மருது.

“அறிவுபூர்வமா அப்டிச் சொல்றது சரியில்லதான். ஆனா அப்போதைக்கு அது ஏதோ அப்பா பட்ட மனக் காயத்துக்கு ஒரு ஆறுதலாத்தான் பட்டுது” என்ற சிதம்பரம், “வா அய்யனார் கோயிலப் பாத்துட்டு வரலாம் என்று நடந்தார். மருதும் நடந்தான்.

(தொடரும்)

v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்