கால நதிக்கரையில்……(நாவல்)-18

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

வே.சபாநாயகம்திரௌபதை அம்மன் கோவில் ஊரின் ஈசான்ய மூலையில் அமைந்திருந்தது. இடப்புறத்தில் சிவன் கோவில் குளம். குளத்துக்கு மேற்கில் சிவன் கோவில். திரௌபதை அம்மன் கோவிலுக்குப் பின்புறம் குளத்தங்கரையில், ஒரு பெரிய அரச மரம். அதனடியில் குளத்தில் இறங்குபவர்களைப் பார்க்கிறமாதிரி ஒரு பெரிய கல் பிள்ளையார். பிரம்மச்சாரியான பிள்ளையார் தன் அம்மாவைப்போல அழகான பெண்ணை, தண்ணீர் எடுக்க வருபரிடையே தேடிக் கண்டு பிடிக்கவே குளத்தங் கரையில் ராப்பகலாய்த் தனியாகக் காத்திருப்பதாகக் கதை சொல்வார்கள்.

சிதம்பரம் திரௌபதை அம்மன் கோவிலின் முன்புறமாகப் போகாமல் இடப் புறமாகச் சுற்றிக் கொண்டு பிள்ளையாரைப் பார்ப்பதற்காக நடந்தார்.

பிள்ளயார் அன்று பார்த்த மேனிக்கு அழிவின்றி, எண்ணெய் காணாத உடம்புடன் வறட்சியாய்த் தென்பட்டார். கழுத்திலொரு காய்ந்த பூமாலையைக்கூடக் காணோம். திரௌபதை அம்மன் கோயிலுக்குக் காட்டும் அக்கறையைப் பிள்ளை
யாருக்கு யாரும் காட்டுவதில்லை போலும்! அத்தோடு இவர் குளத்தங்கரை அநாதைப் பிள்ளையார் தானே? தனிக் கோவில் பிள்ளையார் அல்லவே!

எதிரே இருந்த குளத்தைப் பார்த்தார். குளம் முழுதும் பச்சைத் தகடுகளாய் மிதக்கும் அல்லி இலைகளையும், அவற்றினூடே இளஞ்சிவப்பில் தலை நீட்டிக் கொண்டிருக்கும் அல்லி மொக்குகளையும், பூக்களையும் காணோம். ஆங்காங்கே
மிதந்தும் குப்புற மூழ்கியும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும் நீர்க் கோழிகளையும் காணவில்லை. கரை நோக்கி மெதுவாய் நகர்ந்து வரும் அலைகளை, ஆங்காங்கே வேலிகாத்தான் முட்செடிகளும், திட்டுகளுமாய் மேடிட்டிருக்கும் குளத்தில் எதிர் பார்ப்பதெப்படி? நின்று பார்க்க விசாலமாய் இருந்த கரைகள் முழுதும், அவலட்சணக் குடிசைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சிதம்பரம் சிறுவயதில் பார்த்த குளத்தின் அழகை நிர்மூலப் படுத்தி இருக்கின்றன. நாகரீகத்தின் வளர்ச்சியும் வேகமும் மனிதனின் சுயநலத்தைக் காட்டுவதாகவே இருப்பதும் பாரம்பரிய அழகுகளைப் பேணவோ மேம்படுத்தவோ இல்லாதிருப்பதும் மனதுக்கு வருத்தத்தை அளித்தது.

சுற்றிக் கொண்டு கோவிலின் முன் பக்கம் வந்தார். கோவில் கட்டடத்தில் எந்த மாற்றமும் இல்லை. மூலஸ்தானத்தின் மேலே கவிந்திருக்கும் விமானமும், சுற்றுச் சுவர்களும் புதிதாக வண்ணம் பூசப்பட்டிருப்பதும் உற்சவ மரச் சிற்பங்கள் புதுவண்ணம் பெற்று பளிச்சென்று இருப்பதும் தான் குறிப்பிடத் தக்கதாய் இருந்தன. கோவிலின் எதிரே நெல்லடிக்கும் களம்போல பரந்த சமதளம் இருந்தது. அதில் தான் காப்புக்கட்டிய பின் இருபத்தோரு நாட்கள் தினமும் பாரதம் பாடப்படும். அங்கேதான் படுகளமும், அர்ச்சுனன் தபசும், கீசகவதம் நாடகமும் நடைபெறும். இப்போது சின்ன முற்றம்போலச் சுருங்கி அந்த இடம் மேடும் பள்ளமுமாய் பராமரிப்பு இன்றி இருந்தது. ஆன்மீகத்தில் அக்கறை பெரிதாகக் காணப்படவில்லை.

சில கிராமங்களில் மற்ற வளர்ச்சிகளுக்கீடாய் ஆன்மீக வளர்ச்சியும் பெருகி, இந்தச் சிறுதெய்வங்களான திரௌபதை, மாரியம்மன், செல்லி அம்மன் கோவில்கள் முறையாகப் பேணப்பட்டு, ஆண்டு தவறாமல் விழாக்களும் நடத்தப்பட்டு வருகையில் இங்குமட்டும் இப்படி இவர்கள் அக்கறை அற்றிருப்பது எதனால் என்று சிந்தனை ஓடியது. ஒரு ஊரின் இருப்பையும், சுமுகமான சமூக சூழலையும் காட்டும் இக்கொண்டாட்டங்கள் இங்கே மட்டும் வறண்டிருப்பது ஏன்? அரசியல் கட்சிகளின் வளர்ச்சி மட்டுமே தூக்கலாய் எங்கும் தெரிகிறது.

சின்ன வயதில் இங்கு பாரதக் கதை விடிய விடிய நடந்த கோலாகலம் சிதம்பரத்தில் நினைவில் ஓடுகிறது. அப்பாவு ஆசாரிதான் அந்தக் காலத்திலிருந்து பாரத பூசாரி. அவர் அற்புதமாக மரச் சிற்பங்களும் சுதைச் சிற்பங்களும் படைப்பவர்.
சுற்று வட்டாரக் கோவில்விமான சுதைச்சிற்பங்களும், ரிஷபம், அன்னம், மயில், மூஞ்சூறு போன்ற கோயில் மர வாகனங்களும், பல்லக்குகளும் அவர் செய்தவையாகத்தான் இருக்கும். சிவன் கோவிலை ஒட்டிய அவரது வீட்டுக்கு எதிரில் எப்போதும் சிற்ப வேலைக்காக வெட்டி வரப்பட்ட மரத் துண்டுகளும், அரைகுறையாய்ச் செதுக்கப் பட்டிருக்கும் வாகனங்களுமாய் எப்பொழுதும் நிறைந்திருக்கும். அப்பாவு ஆசாரி சிற்பங்களை மரத்தில் செதுக்கும் போது சிறுவயதில் அருகே இருந்து சிதம்பரம் ஆர்வமாய் கவனிப்பார்.

பாரதம் பாடுவது, ஆசாரியின் அப்பா காலத்திலிருந்து அவரது குடும்பம்தான். அப்பாவுடன் இருந்து கற்றதன்னியில் வில்லிபாரதம் நூலையும் பாடம் செய்திருந்தவர். தினமும் இரவு பாடுவதற்கு முன், ஒருமுறை பள்ளி ஆசிரியர் பாடம் தயாரிப்பது போல படித்து கவனம் செய்து கொண்டே பாட உட்காருவார். பெட்றொமாக்ஸ் வெளிச் சத்தில் எதிரே சிக்குப் பலகையில் வில்லிபாரதம் விரித்து வைக்கப்பட்டிருக்கும். அடிக்கடி அதை சரி பார்த்துக் கொண்டு பாடுவார். சிற்ப வேலைப்பாடு போலவே
பாரதம் பாடுவதிலும் அவ்வளவு அற்பணிப்பு!

அதோடு அவருக்கு இன்னொரு சவாலும் கூட. சிதம்பரத்தின் பெரியப்பா மகன் அண்ணன் ஒருவர் – அதிகம் படிக்கவில்லை என்றாலும் கம்பராமாயணம், வில்லி பாரதம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர். சின்ன வயதிலேயே கிட்டப்பார்வைக் குறைவினால் தடித்த சோடாபுட்டிக் கண்ணாடி போட்டவர். அவ்வªவு சிறுவயதில் அவ்வூரில் வேறுயாரும் கண்ணாடி போட்டதில்லையாதலால், அவருக்குக் ‘கண்ணாடிப் பிள்ளை’ என்ற அடைமொழியும் உண்டு. அவர் தினமும் வாசல் திண்ணையில் சிக்குப் பலகை மீது வில்லிபாரதத்தை வைத்துக் கொண்டு மிகவும் பொடி எழுத்தில் இருக்கும் பாடல்களை, கண்ணுக்கருகில் தெரிகிறமாதிரி குனிந்து ராகம் போட்டுப் படிப்பார். திரௌபதை அம்மன கோவில் காப்பு கட்டிவிட்டால அவருக்கு உற்சாகம் பீரிட்டெ ழும். தான் படித்த வில்லிபாரதத்தைச் சரியாகப் பூசாரி பாடுகிறாரா என்று எதிரே உட்கார்ந்து கூர்மையாய்க் கவனிப்பார். பாடல் விடுபட்டாலோ சொற்சோரம் இருந்தாலோ உடனே திருத்துவார். அதனால் அப்பாவு ஆசாரி தினமும் பாடம் செய்யாமல் பாட வருவதில்லை. தப்புக் கண்டு பிடிப்பதிலும், தவறு இல்லாமல் பாடுவதிலும் இருவருக்கும் தினமும் போட்டிதான்.

தினமும் பாரதம் பாடுமுன் முன்னிரவில் சுவாமி ஊர்வலம் புறப்படும். அப்பாவு ஆசாரி செய்த திரௌபதை அம்மன் மற்றும் பஞ்சபாண்டவர் சிலைகளும் ஒரே சகடையில் ஏற்றப் பட்டு உலாவரும். பெரிய செப்புக் குடத்தில் பல வண்ணங்களில் ஆன ஜண்டாக்கள் செருகப் பட்டிருக்கும் கரகமும் முன்னால் வரும். தீபத்தட்டு தரும் எல்லா வீடுகளிலும் சகடை நின்று தீபம் காட்டிவிட்டுச் செல்லும் என்றாலும் கரகாட்டம் மட்டும் முக்கியஸ்தர் வீடுகளில் மட்டுமே நடைபெறும். கோவில் பூசாரியே கரகம் சுமந்து வருவார். கொட்டு மேளத்துக்கு ஏற்ப அவர் ஒயிலாக ஆடுவது மிக அழகாக இருக்கும்.

தீபம் எடுப்பதிலும் ஒரு நடைமுறை உண்டு. பரம்பரையாய் முக்கியஸ்தர்களாய் இருக்கும் ஓரிருவர் வீடுகளில் மட்டுமே பூசாரி சகடையிலிருந்து இறங்கி வந்து தீபத்தட்டை எடுத்துப்போய் தீபம் காட்டிவிட்டுத் திரும்பக் கொண்டு கொடுப்பார். மற்ற வீடுகளில் வீட்டுக்காரர்களே தெருவில் இறங்கி சகடைக்கு அருகில்போய் பூசாரியிடம் தீபத்தட்டை நீட்டி, தீபம் காட்டியதும் வாங்கி வரவேண்டும். இந்த நடைமுறைக்குப் பல ஆண்டுகளாய் யாரும் ஆட்சேபணை எழுப்பியதில்லை. திடீரென்று ஒருதடவை இளைய தலைமுறை¨ச் சேர்ந்த ஒருவரால் ஆட்சேபிக்கப் பட்டது சுவாரஸ்யமான கதை.

சிதம்பரத்தின் அப்பாதான் ஊரின் முதல் படிப்பாளி என்பதால் அவரது பிள்ளைகள் கல்லூரிப் படிப்புப் படித்து ஊராரின் மரியாதைக்கு உரியவரானார்கள். அப்பாவின் தூண்டுதலின் பேரில் ஊரிலிருந்து மேற்படிப்புக்குச் சென்றவர்களில் ஒருவர்
கொஞ்சம் துடிப்பான இளைஞர். கல்லூரிப் படிப்பு அவருக்கு சுய மரியாதை உணர்வையும் உரிமைக்குப் போராடும் சிந்தனையையும் வளர்த்து விட்டிருந்தது. அதன் பாதிப்பால் அவருக்கு, ஒரு சிலரது வீட்டில் மட்டும் பூசாரி தீபத் தட்டு எடுப்பதும் மற்றவர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாய் ஆக்கப் பட்டிருப்பதும் உறுத்தியது. எல்லோருக்கும் சம மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று அவரது சுயமரியாதை போர்க்கொடி உயர்த்த வைத்தது.

பூசாரி யார் வீட்டிலெல்லாம் தட்டு எடுப்பதில்லையோ அவர்களைத் தனித் தனியாகச் சந்தித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கினார். “மனிதர் எல்லோரும் சமமே! அப்படி இருக்கையில் ஓரிருவர் மட்டும் என்ன உயர்த்தியாம்? பூசாரியை எல்லோர் வீட்டுக்கும் தட்டு எடுக்கச் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். மூத்தவர்கள் நடைமுறையை மாற்றத் தயக்கம் காட்டினார்கள். இளவட்டங்கள் அவருடன் சேர்ந்து கொண்டார்கள். அதன்படி பூசாரியை அழைத்து, “இனி எல்லோருடைய வீட்டிலிருந்தும் தட்டு வாங்கிப் போய் தீபம் காட்டித் திருப்பிக் கொண்டு வந்து தரவேண்டும். யாருக்கும் விசேஷ மரியாதை தர வேண்டியதில்லை” என்று சொன்னார்கள்.

பூசாரி இளவட்டம் அல்ல. பாரம்பரிய நடைமுறையில் தகப்பன் பாட்டன் காலத்திலிருந்து ஊறிப்போனவர். இந்த புதிய மாற்றத்துக்கு ஒத்துக் கொள்ளாமல், “அதல்லாம் சரிப்பட்டு வராதுங்க. நடமுறய மாத்தாதிங்க” என்று மறுத்து விட்டார்.
“அப்படியானால் யார் வீட்டுக்கும் எடுக்கக் கூடாது. எல்லோருமே தத்தம் தட்டு களைத் தாங்களே எடுத்துப்போய்ப் பூசாரியிடம் கொடுத்துத் தீபம் காட்டலாம். அப்போது யாருக்குக்கும் தனிக் கௌரவம் இல்லாது போகும்” என்று புதிய யோசனையைச் சொன்னார் புரட்சி இளைஞர். எல்லோருக்கும் அதுவும் சரிதான் என்று பட்டது.

ஆனால் அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. பூசாரி தட்டு எடுக்கும் வீடுகளில்
சிதம்பரம் வீடும் ஒன்று. சிதம்பரத்தின் பெரியப்பா முரடர்; ஊரின் நாட்டாமை அவர். ”அதெல்லாம் முடியாது. இது என்னா புதுப் பழக்கம்? பூசாரி தட்டு எடுக்கலைன்னா நான் தீபத்தட்டே வைக்க மாட்டேன்” என்று மறுத்து விட்டார். அதனால் அவரைப் போலவே பூசாரி தட்டு எடுக்கும் வீடுகளில் எவருமே தீபத்தட்டுக் கொடுக்க வில்லை. புரட்சி இளைஞர்க்கு யாருக்கும் தனி மரியாதை காட்டாமல் தடுத்து விட்டோம் என்ற திருப்தி இருந்தாலும் தனக்குத் தோல்விதான் என்று உள்ளுக்குள் குமுறினார்.

ஆனால் பெரியப்பா அவரைவிட மிகுந்த குமுறலில் இருந்தார். எல்லோரும் ‘சமம்’ என்கிற இந்தப் புதிய போராட்டத்துக்கு சரியான பதிலடி கொடுக்கத் தீர்மானித்தார்.

அடுத்தமு¨றை திருவிழாவுக்கு வரிவசூல் செய்ய வந்தனர். புரட்சி இளஞர் தான் முன்னின்று வசூலில் தீவிரம் காட்டினார். பெரியப்பாவிடம் வந்ததும், “எப்படி வரி?” என்று கெட்டர் பெரியப்பா.

“ஏன் வழக்கம் போல் தான். காணி வரி” என்றார் இளைஞர்.

“இல்லப்பா! தலக்கட்டுவரி போட்டாத்தான் குடுப்பேன்” என்றார் பெரியப்பா.

“அதெப்டிங்க? இத்தன நாளா நடமுறையில இருக்குறதுதானே?”

“நடமுறையத்தான் மாத்திட்டியே! எல்லாரும் சமம்னு சொன்னதுக்கப்றம் வரியும் சமமாத்தானே வசூலிக்கணும்? நீ என்ன வரி கட்டுறியோ அதே வரியத்தான் நானும் கட்டுவேன்”

“என்னங்க இது – அதும் இதும் சரியா?” என்றார் இளைஞர் பெரியப்பாவின் நண்டுப்பிடியில் சிக்கியவராக.

“ஏம்’பா சரியாவாது? மரியாதை எனக்கும் உனக்கும் ஒரே மாதிரியா இருக்கனும்னா வரியும் எனக்கும் உனக்கும் ஒண்ணாத்தானே இருக்கணும்?”

இளைஞர் முகத்தில் ஈயாடவில்லை. “இவர்ட்ட பேச முடியாது. வா போகலாம்” என்று உடன் வந்த இளவட்டங்கள் பின் வாங்கின.

பெரியப்பா எகத்தாளமாகச் சொன்னார்: “படிச்சுட்டு வந்துட்டா படிக்காதவன் ‘லாம் சும்பன்னு நெனப்போ? படிச்சவன் பாய்க்கடியிலே நொழஞ்சா படிக்காதவன் கோலத்துக்கடியிலே நொழைவான்னு நீ படிக்கலையோ?”

இப்பொழுது நினக்கும்போதும் சிதம்பரத்துக்கு அந்நிகழ்ச்சி புன்முறுவல் பூக்க வைத்தது. திரௌபதை அம்மன் கோவிலிலிருந்து கிளம்பி சிவன்கோவிலை நோக்கி நடந்தார்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்