கால்களின் அசமகுறைவு

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

நட்சத்திரவாசி


உங்களின் பரிபாஷையில் எவ்வொரு
மாற்றுச்சொல்லினையாவது
அவனுக்காய் உபயோகியுங்கள்
பையித்தியம் என்பதை தவிர
அவனது ஆடைகளில் படிந்திருக்கும்
கறைகளையாவது
துர்மணத்தையாவது
விமர்சனம் செய்யாமல் விட்டுவிடலாம்
அறுந்த வாரைகட்டி பூட்டியிழுக்கும்
கால்களின் அசமகுறையை பெரிதுபடுத்த வேண்டாம்
கையிடுக்கில் வைத்திருக்கும்
அழுக்கு துணிமூட்டையை பற்றி
ஆராவாரத்துடன் கேள்வி கேட்பதையாவது
தடுத்துநிறுத்துங்கள்
அவன் சாலையோரங்களில்
நின்று வித்தைகாட்டுவதாய் வரும்
புகார்களை தள்ளிவிடலாம்
வீசியெறியப்பட்ட சிகரெட்,பீடித்துண்டுகளை
அவன் புகைத்து விட்டுதான் போகட்டுமே
அவனை குறித்து ஓயாது சொல்லும்
ஒவ்வொரு பேச்சுகளிலும்
அவனின் தரப்பு இல்லாமல்
இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்
எவ்வொரு நாளிலும் அவன்
காணாமல் போய்விடலாம்
அல்லது மனநல மருத்துவ வாகனத்தில்
கடத்தப்படலாம்
அல்லது வாகன விபத்திலோ
அல்லது ஆளொடுங்கிய பகுதிலோ
மாண்டிருக்கலாம்
அல்லது உங்களின் நிமித்தம்
அவன் பையித்தியமாகியிருக்கலாம்
மேலும் விசேச கவனத்தை எதன்பாலும்
திருப்பும் பொருட்டு உங்களுடனேயே கலந்திருக்கலாம்
கவனம்.அவன் கடவுளாக கூட
வாய்ப்பிருப்பதாக உங்களில் ஒருவன்
ஓயாமல் கத்துகிறதை
நீங்கள் கேட்கிறீர்களா?

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

நட்சத்திரவாசி

நட்சத்திரவாசி