This entry is in the series 20040401_Issue

எஸ். பாபு.


பேசிக்கொண்டிருந்துவிட்டுப் புறப்படும்போது
நேரம் போனதே தெரியவில்லையென்று
விடைபெறுபவர்களைப் பார்த்திருக்கிறேன்

காத்திருக்கும் பொழுதுகளில்
நிமிட முள்ளின் மெத்தன நகர்வு குறித்த
குற்றச்சாட்டுகள் அனேகரிடமும் உண்டு

ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும்
சீக்கிரம் முடிந்துவிடுவதாக சலித்துக் கொள்கிறான்
ஆறு நாட்களும் அலுவல்களைச் சுமந்து
அலைவுறும் நண்பன்

வெவ்வேறு தருணங்களில் நானும் உணர்ந்திருக்கிறேன்
ஒரு நத்தையைப் போல
அங்குல அங்குலமாய் ஊர்ந்து செல்வதையும்
பிறிதொரு சமயம்
ஆயிரங்கால் பாய்ச்சலில் விரைந்தோடுவதையும்

எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது-

இந்தக் காலம் அப்படியொன்றும்
சீராக இயங்கிக்கொண்டிருக்கவில்லை
என்பது.

agribabu@rediffmail.com

Series Navigation