காலச்சுவடு… வீழ்தலின் நிழல் .. ரிஷான் ஷெரீஃப் .. எனது பார்வையில்

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

தேனம்மை


நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம்.. சூழ நீரிருந்தும் வாழ வழியற்று வீழ்ந்து கிடக்கும் நம்மின மக்கள் பற்றிய ரிஷானின் ஆதங்கமே வீழ்தலின் நிழல்…இது காலச்சுவட்டின் வெளியீடு. விலை ரூ 60.

வாழ்வதன் ஆவலையும் கவலையையும் குறித்துப் பேசும் இதில் இளவயதின் காதல் ஏக்கங்களும்., வாழ்வியல் துயரங்களும்., புலம் பெயர் நிலையும்., எதையும் சீர் செய்யவியலா கையறு நிலையும்., தணிக்கவியலா தனிமையும்., நட்புகான தேடலும்., பொங்கிக் கிடக்கிறது .

எரிக்கப்பட்டவர்களையும்., நசுக்கப்பட்டவர்களையும்., அழிக்கப்பட்டவர்களையும் அவர்களின் வலியையும் ., வலுவற்றவர்களாக ஆக்கப்படுவதுமான ஆதங்கம் விரவிக் கிடக்கிறது

கொழுத்த வெய்யில் ஆதிக்கக் குறியீடாகவும்., வீழும் நிழல் இயலாமையின் குறியீடாகவும்.,கோடை எல்லயற்ற வன்மமும் அழிவும் கொண்டதாகவும்., விருட்சம் தொன்மையின் பிரதிபலிப்பாகவும்.., காற்று புலம் பெயதர்லாகவும்., மழை எல்லா இடத்திலும் பெயரும் இருப்பற்ற இருப்பாகவும்., துயரங்களின் சாட்சியாகவும்., பறவைகள் நிம்மதியின்மையைக் குறிப்பனவாகவும்.,பூக்கள் விள்ளவொணா துயரின் வெளிப்பாடாகவும்., தீ., நெருப்பு எரிமலை உக்கிரம் உள்ளடக்கிய உணர்வின் ., இருப்பின் வெளிப்பாடாகவும்., நாகம் ., பாம்பு வன்முறையின் குறியீடாகவும்., குருடன் . அந்தகன் எதுவும் மாற்றவியலா கழிவிரக்கமாகவும்., சுயமும்.காதலும்., தேடலும்., நிம்மதியும்., நட்பும்., தனிமையும் கொண்டு தாய் தேசத்தில் இன்னும் வாழும் எண்ணற்ற மனிதர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாய் இருக்கிறது.

மனிதன் இயற்கையின் நடுநிலையை குலைப்பவனாக நடுநிசி தன் பாடலை நிறுத்துவதில் ஆரம்பிக்கும் ரிஷானின் கவிதைகள்., நிலவு தின்னும் நட்சத்திரங்களும் ., இருள் விழுங்கும் நிலவையும் ., காப்பரணில் கிடத்தப் பெறும் குழந்தை கற்றுக் கொள்ளும் முதல் மொழி குறித்தான கவலையுடன் தொடர்கிறது..

சூறாவளியின் பாடல் ஒப்பாரியாவதும்., அநீதிப் பருக்கைகள் தின்னும் காக்கைகளின் எரிச்சலும்., கோடையின் வன்மமும்., புலம் பெயர்ந்தவர்களாவது நிம்மதியாயிருக்கிறாரா எனக் கேள்விஎழுப்புவதும்., கடவுளின் கூற்றுவனை சபித்தும்., ஏழு ஜென்மமும் வதைக்கும் வலி மிகுந்த துயரமும்.,உள்ளங்கைகளில் சிதறவிடும் நினைவின் கணங்களின் சுமையும்.. நம்மை தணிக்கவியலா ஏக்கத்துள் தள்ளுகின்றன..

காதலின் ரேகைகள் மழைக்கரமாய் அழைப்பதும்., காத்திருப்பின் தவிப்பும்., மீன்தொட்டித் தாவரம் புலம் பெயர்ந்து கண்ணாடிக்கூண்டுக்குள் சமுத்திரம் தேடும் விழைவும் ., சுதந்திரமெனும் மாயமான் தேடுதலின் கனவிலும்., விருட்சம் அறியாப் பூவின் வலியும்., எதையும் சீர்படுத்தவி்யலா ஏக்கமும்.,

வன்முறையெனும் பாம்பின் வாயில் சிக்கியவர்கள் கலகக்காரார்களாக சித்தரிக்கப்படுவதும்.,சாட்சிகளேதுமற்ற மழையில் தெருக்களில் கேள்வி கேட்பாரற்று அழிக்கப்பட்ட மக்களுக்கான துக்கமும் ., செவிட்டூமைக்குருடனின் தவிப்பும்.,கிழச்சிங்கத்தின் கதையும்., தேவதைகளும்., சாத்தான்களும் ஒருமித்துக் கொடியேற்றுவதுமான கனவும்.,

வார்த்தைகளின் வீச்சம் தாங்கிய கருந்தழும்பும்., இயற்கையை சீரழிக்கும் மனப்போக்கை கண்டிக்கவியலா தன்மையும்., காதலியின் அன்பு நடுகல்லாய் வியாபிப்பதும்.,

புலம் பெயர் நாடோடிப் பறவையின் துயரமும்., ஒருமித்துப் போராடாமல் சிதறிய மழைத்துளியாய் போன ஒற்றுமையும்.,
பகிரப்படாத அன்பும்., எலும்பு மலைகள் உருவாக்கிய போரின் விளைவும்., அநீதியான குருதிச் செங்கோலும்., மெல்லிசை அழிவதும்., பொம்மைதேசத்தில் அன்பு கூட சலிப்பதும்.,

இரு இன மக்களும் துவேஷமுற்றவர்களாய்ப் பிரிவுற்றதும்., வீழ்தலின் நிழலில் சுயமற்றுப் போவதும்., ஆணாதிக்கத்தில் பெண் வாழ்வும்.,சித்தம் பிசகியவனின் கோடையும்., சாகசகாரியின் வக்கிரமும். பாவப்பட்ட மனதும்., காவல் நாகமே கொன்றழிப்பதும்., அகதிப் பட்சியின் அவலமும்., விசித்திரக் கூடு கட்டும் அதன் முன்னெச்சரிக்கைத்தனமும்., தாய் தேசம் புதைகுழிவீடானதும்.,

வன்புணர்வுக்கு ஆளான பெண்களின் இறப்பும்., பின்னங்கால் வடு ஏந்தும் இழந்த சொந்தங்களின் நினைவும்., சாம்பல் நிற மரணமும்., வன்கொடுமைக்கு ஆளாகி இறந்தவனது விரிந்திருந்த விழியின் ஏக்கமும் ., காதல் நெருப்பு விழுங்கும்பறவையாய்., முடிவற்ற துர்சாவுகள் முடிவிலியாகவும்., புதியன மோஹித்து பழையன கழிதல் விருட்சதுரோகமாகவும், குணவிலங்குகளும்.,

வீண்பழி சுமத்திய காதல் எண்ணங்களும் வண்ணங்களும். ஊடலாய்., காதலி நிலாத்திருடியாகவும்., நிராகரிப்பின் பெருவலியாகவும்., காதல் ., காமமற்ற நட்பும்., பேரன்பின் தேவதையின் வருகையும் ., வெற்றி்யை சூடத்தரும் நேசத்துக்குரிய எதிரியும்.,

தனித்துப் பசித்திருக்கும் சுயமும்., முயன்று தோற்றதும்., அநீதிகள் நிறைந்த செஞ்சாயக் கருங்குருதி ஈழமும்..

இப்படி என்னை புரட்டிப் போட்ட புத்தகத்தை இதுவரை நான் படித்ததில்லை… ஒவ்வொரு கவிதையையும் உள்வாங்கி உருப்படுத்திக்கொள்ள வெகு நேரமாயிற்று எனக்கு..

படித்துப்பாருங்கள் வாழ்வென்பது எவ்வளவு மகத்துவமானது எனப் புரியும்..

என் எண்ணங்களில் தாங்கவொணா பாதிப்பை ஏற்படுத்திய எழுத்து ..பகிர்வு இது..

நன்றி அறியத்தந்த அரிய கவிஞர் ரிஷானுக்கும்., இந்தப் புத்தகத்தைப் பரிசளித்த சகோதரர் டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் வேடியப்பனுக்கும்.

Series Navigation

தேனம்மை

தேனம்மை