காற்றுப் பை…

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


அவன்
வேறுபெயர் சொல்கிறான்.
நான்
காற்றடைத்த பை என்கிறேன்.
அவன்
“ காற்றுப் பையா ? ” என்கிறான்.

காற்றை பைக்குள் கட்டிவைத்து
பறக்கப்பார்க்கும் பரவசம்.

நூலாய் தொங்கும் வால்தனத்தை
தொட்டு விட்டு
தூண்டிவிட்ட கன்றாக ஓடும் ஓட்டம்.

கையள்ளிய காற்று மொட்டு
சிறகு முளைக்காமலே பறக்கும் சிட்டு
விரியும் காற்றின் வேடிக்கைச் சுருக்கம்
அடங்கிய பின்னும் அடங்காத பயணம்.

கனம் பொருந்திய காற்று
கைவிட்டுப் பறந்து போகாமல்
மண்தொட்டு முத்தமிடுகிறது.
கைப்பட்டுத் துள்ளிக்குதித்து
விண்ணெட்டப் பார்க்கிறது.

உலகமெனும் பைக்குள் ஊதிவைத்தக் காற்றுக்குள்
காற்றை ஊதி ஊதி
காற்றை உயிராகப் பிடித்துக்கொண்டு
நானும் அவனும் கூட
காற்றடைத்தப்பையாக….

“காயமே அது பொய்யடா….”
நினைவு வர நிற்கிறேன்.
காயமே அது மெய்யடா – அதை
கண்ணும் கருத்தாய் வையடா”
கவிஞன் சொல் நினைக்கிறேன்.

நான்
ஊதிவைத்த காற்று உள்ளிருந்து ஆட்டிவைக்க
அவனின்
கால்பறக்க வைக்கிறது
காற்றுப்பை… காற்று.

இன்னொரு அழகு அது
என்னைவிட்டு அவனை
எங்கோ இழுத்துப் போகிறது.

அது
மேடுபள்ளம் மெல்லத்துள்ள
அவன்
கால்கள் குதித்துச்செல்ல
தொடர்கிறேன்.
முள்ளிருக்கும் செல்லாதே
முனுமுனுத்து ஓடுகிறேன்.

விளையும் வயல் வேலி போல
கொடியில் முள்ளும் இருக்க
காயமில்லை பூவுக்கு.
அந்த
முட்கள் போலில்லை
முட்கள் சில.

காற்றுப்பை முள்பட்டு
கண்ணெதிரே சிதறுவதா
கண்ணிவெடி மண்புதைந்து
கால்பட்டு வெடிப்பதுவதா…. ?

காணாமல் செய்துவிடுமிந்த
கல்முள் ஆயுதமில்லாத
ஓரிடம் தேடுகிறேன்.
அவன் விளையாட
உலகிருக்க ஏங்குகிறேன்.

நான்
ஊதிவைத்த காற்று
உள்ளிருந்து ஆட்டிவைக்க
என் மகன்.

—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி