காமதகனம்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

அன்பாதவன்


1.
மறந்து போனதுதான் உடல்வாசம்
மவுன கிறுக்கத்தில்
மூடிக் கொண்டிருக்கும்
புலன்களின் கதவுகளை
நுகரத் திறந்துவிடு முழுமையாய்
புரண்டெழுந்து மணக்கட்டும்
என் மீதும்.

2.
சிறிய பிளவுகளில்
என்னை அனுமதிக்க
தேவையாயிருக்கிறது
பெரிய பொய்கள்.

3.
தேன் வழியும் மென் மலருள்
நான் நுழைய
கத்திருக்க வேண்டியுள்ளது
மவுனங்களடங்கிய சாமத்திற்காய்.

4
முத்தங்களின் சுவையறியாமலேயே
முடிஞ்சு போச்சு
என் காலம்.

5.
மோக மயக்க முனகளூடாக
உச்சம் நெருங்கும்
ஷனத்தில் அழைக்கும்
தூரத் தொலைபேசியொலி.

6
தூரத்தில் ஒலிக்கும் ரயிலோசையின்
‘தடக் தடக் ‘ ஒலியோடு
வானொலித் திரையிசையின்
வேக லயத்தில்
தொடங்கியது முதல் உறவு.

7
விடியலில் எழுப்பி
அழைப்பாய் அறைக்குள்
இளமையின் தகிப்பு உடல்பரவ
தீவிரமாய் பற்றிப் படர்ந்து
ஆடைவிலக்கையில் ஒலித்த
இருமலொலிக் கேட்டு
எழுந்தோடிப் பறந்தவளைத்
தெடுகிறேன் இன்னமும்.

8.
பரந்த முதுகை
பருத்த தொடையை
வாத்சல்யத்தோடு வருடு
அலையாய் பொங்கும்
காமம்.

9
மழலையர் பள்ளியின்
மதிய உணவு இடைவேளையொன்றில்
காய்ந்து துய்த்த
முயக்கத்தின் நெடி
இன்னமும் வீசுகிறது எனக்குள்
எங்கு தொலைந்தாய் அடா.

10
அடர்ந்த கருங்கூந்தல் விலக்கி
பிடரி கழுத்தில் பதித்தேன்
பெருமுத்தமொன்று
‘வே….ண்….டா….ம் ‘
முனகிய சிலிர்ப்பில்
கைகலென்னைத் தேடின
கட்டிக் கொள்ள.

11
நகக்குறி பதித்து
நீயளித்த
கனமான முத்ததின்
வெப்பத்தில் உருகியவனுக்கு
இன்னமும் கிடைக்கவில்லை
பிறிதொரு முத்தம்.

12

வளர்ந்த பிள்ளைகள்
தூங்கியாச்சென்றே முடிவு பண்ணி
மெல்ல உசுப்பேற்றி
மெதுவாக முன்னேறுகையில்
புரண்டு படுத்த மகளின்
கட்டில் சப்தத்தில்
முற்றுப் பெறாமல்
முடிந்ததொரு முயக்கம்.

13
பீடத்தை
தொட்டுத் தடவ
கிளர்ந்தெழுந்த கொங்கைப்பூ
பீய்ச்சிய காமத்தில் உணர்ந்தேன்
எரிமலைக் குழம்பின் தகிப்பை.

14
மேகமூட்டமான மதியத்திற்காய்
காத்திருந்து கதவடைத்து
ஆடை தளர்கையில்
அழைக்கும் உறவின் குரல்

15
உரிமையானத் தோட்டதினினும்
சுவையாய்க்
கள்ளக் கனியின் போகசுகம்.

16
மது விடுதியின்
ஒலி குறைந்த அறைக்குள்
உன்னையும் அமரவைத்து
குப்பிகளைத் திறந்த போது
நினைத்திருப்பாய்
‘பெரிய காமந்தகாரன்
இவனென ‘
இல்லை தோழி
காமத்தின் முகவரிகள் எழுதிய
கதவெண்களும் தெரியும்
தூயத் தோழமையை போஷிக்கும்
நட்பெல்லையும் புரியும்.

அன்பாதவன்

jpashivammumbai@rediffmail.com

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.