காந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue


ஏம்ஸ் (அயோவா , அமெரிக்கா) பரிசோதனைச்சாலையில் உள்ள அறிவியலாளர்கள் உலகத்தின் முதலாவது காந்த குளிர்சாதனப்பெட்டியை உருவாக்கியிருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் மிகவும் விலைகுறைந்ததாகவும், உபயோகிக்கும்போது குறைந்த சக்தியை உறிஞ்சுவதாகவும், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று கருதுகிறார்கள்.

‘நாம் வரலாறு உருவாவதைப் பார்க்கிறோம் ‘ என்று கார்ல் ஷ்னேய்டர் என்ற அமெரிக்க எரிபொருள் சக்தித்துறையின் மூத்த உலோகவியலாளர் கூறினார். இந்தப் பரிசோதனைச்சாலையில் இந்த காந்த குளிர்சாதனப்பெட்டியை, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஃப்ரியான் போன்ற வாயுக்களை வெளியிடும் குளிர்சாதனப்பெட்டிகளுக்கு மாற்றாக உருவாக்க பல அறிவியலாளர்கள் பல வருடங்களாக உழைத்து வந்திருக்கிறார்கள். இந்த புதிய குளிர்சாதனப்பெட்டி ஒரு விசேஷமான உலோகத்தை உபயோகப்படுத்துகிறது. இந்த உலோகம், காந்தபுலத்துக்கு உள்ளே கொண்டுவரப்பட்டால் சூடாகிறது. காந்தப்புலம் நீக்கப்பட்டால் குளிரடைகிறது. இந்த குளிர்சாதனப்பெட்டி அறை தட்பவெப்பத்தில் நிரந்தர காந்தத்தை உபயோகப்படுத்தி இந்த குளிர்சாதன வேலையைச் செய்கிறது.

இந்த குளிர்சாதனபெட்டிக்குள் காடோலினியம் (gadolinium) என்ற உலோகக்கலவையால் ஆன சக்கரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த சக்கரம் அதிக சக்தி கொண்ட காந்தப்புலத்தின் கீழ் செல்லும்போது சூடாகிறது. இந்தப்பொருள் காந்தப்புலத்திலிருந்து வெளியே வரும்போது குளிர்கிறது. இதன் விளைவு, அதிர்வு இல்லாத அமைதியான குளிர்சாதனப்பெட்டி. ஷ்னெய்டர் அவர்கள் இந்த காந்த குளிர்சாதனம் எதிர்காலத்தில், எல்லா குளிர்சாதனப்பெட்டிகளுக்கும் உபயோகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பம் பணத்தையும் சேமிக்கும் என்றார் இவர். ஏனெனில், காந்தங்கள் வேலை செய்ய மின்சார சக்தி தேவையில்லை. ‘ஆகவே இந்த மோட்டார்கள் சுற்றுவதற்கும், தண்ணீர் குழாய்களில் தண்ணீரைச் செலுத்துவதற்கும் மட்டுமே மின்சார சக்தி தேவை ‘ என்று கூறினார். ஆரம்பத்தில் இந்த புதிய கருவி 110 வோல்ட் (அமெரிக்க மின்சார அழுத்தத் தரம். இந்தியாவில் 220 வோல்ட் – மொ பெ) மின்சாரத்தில் வேலை செய்யும். அதிவிரைவில் மற்ற மின்சார அழுத்தத்திலும், பாட்டரி சக்தியிலும் வேலை செய்யவைக்க முயல்வார்கள்.

மிக அதிக அளவில் காடோலினியம் உலோகக்கலவையை உருவாக்க சாஷா பெசாரிஸ்கி, விடாலிஜ் பெசார்ஸ்கி என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் புதிய முறையை உருவாக்கியபோதுதான் முக்கியமான சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த உலோகம், சக்தி வாய்ந்த காந்தப்புலத்தைத் தோற்றுவிக்கவும், குளிர்சாதனத்தின் சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இந்த ஏம்ஸ் அறிவியலறிஞர்கள் அஸ்ட்ரோனாடிக்ஸ் கார்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு இந்த காந்த குளிர்சாதனத்தை உருவாக்கித்தந்திருக்கிறார்கள். இந்தநிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தை மக்களுக்குக் கொண்டுவர திட்டம் தீட்டி வருகிறது.

1985இல் லாஸ் அலமோஸ் தேசிய பரிசோதனைச்சாலையில் உருவான இந்தக் கருத்தை எடுத்துக்கொண்டு, இதனை நடைமுறைக்குக் கொண்டுவர பல கோடி டாலரை இந்தக் கம்பெனி செலவு செய்திருக்கிறது. அமெரிக்க சக்தித்துறையும், ஆஸ்ட்ரானடிக்ஸ் கார்பரேஷனும் இந்தச்செலவை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஏம்ஸ் பரிசோதனைச்சாலை சுமார் 2 மில்லியன் டாலர் அரசாங்கப்பணத்தை இந்த திட்டத்திற்கு செலவு செய்திருக்கிறது. இன்னும் 8 வருடங்களில் வர்த்தக ரீதியில் இந்தக் குளிர்சாதனம் பொதுமக்களுக்கு விற்கப்படும் என்றும் கணிப்பு.

முதன் முதலில் வாங்கினால், இது மற்ற குளிர்சாதனப்பெட்டிகளை விட விலை அதிகமாக இருக்குமென்றும், ஆனால் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும்போது விலை மற்ற குளிர்சாதனங்களை விடக் குறைந்து விடும் என்றும் கூறுகிறார்கள். காந்த குளிர்சாதனம் 1920இல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இதில் முக்கிய கண்டுபிடிப்புகள் 20 வருடங்களுக்கு ஒருமுறையே நடந்திருக்கிறது என்றும் ஸ்னைடர் கூறினார்.

On the Net:

Ames Laboratory http://www.external.ameslab.gov/

Astronautics Corp. of America http://www.astronautics.com

Series Navigation