காதலும் சிகரெட்டும்

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

சேவியர்


0

விட்டுவிட வேண்டுமென்று
நினைத்தாலும்,
விட முடியாமல்
வந்து
பற்றிக் கொள்ளும்.

நினைக்கும் போதெல்லாம்
சந்திக்க வேண்டுமென்று
மனசு
பரபரக்கும்.

0

முதலில்
நீ
ஆசையாய்
அழைத்துச் செல்வாய்.

பிறகு
நீ
வலுக்கட்டாயமாய்
இழுத்துச் செல்லப்படுவாய்.

0

விரல்களோடும்
உதடுகளோடும்
அளவுக்கு அதிகமான
நெருக்கத்தில்
மூச்சுத் திணறும்.

0

மோகத் தீ
நெஞ்சில் பரவி
இறுதியில்
தடயங்களில் சில
சாம்பல் துகள்களை மட்டுமே
விட்டுச் செல்லும்.

0

அட்டவணையை புறக்கணித்து
இதயத் துடிப்பு
எகிறும்,
சந்திப்புகள் குறைந்தால்
நரம்புகளெல்லாம்
பதறும்.

0

விட்டுப் போன பின்னும்
ஓர்
வாசம் மட்டும்
வட்டமிட்டுச் சுற்றும்.

0

சுவாசத்தோடு
மிகவும்
நெருங்கியே நகரும்.

0

ஒன்றுக்காய் ஒன்று
விட்டுக் கொடுத்து விலகும்,
விலகிவிட்டால்
பின்
மூர்க்கத்தனமாய் வந்து
முகத்தில் ஒட்டிக் கொள்ளும்.

0

காதலில்
சாத்தியங்கள் குறைவு
சில
நேரங்களில் மட்டுமே வெல்லும்.

சிகரெட்,
சத்தியமாய் கொல்லும்.

0

சேவியர்
Xavier_Dasaian@efunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்