காதலுக்கோர் தினமாம்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

சத்தி சக்திதாசன்


காதலுக்கோர் தினமாமே
இதயங்கள் இரண்டு
பேசும்
இனிய ராகத்தை
புனிதப்படுத்தும்
புண்ணிய நாளோ ?

அன்றி

ஆலமரத்தின் கிளையினிலே
ஒன்றினை ஒன்று
தாவித் துரத்தும்
அணில்கள் இரண்டின்
அந்தரங்க நாளோ ?

அப்பப்பா !

என் முதல் காதல்
முழுதாக
விரியும் முன்னரே
இதயமெங்கும் ஆணி
அறைந்த அந்த
அணங்கியின்
பிறந்த நாளோ ?

என்னடா

காதலர் தினமென்றால்
ஒட்டிய இரு
இதயங்களின் சேர்க்கையின்
கொண்டாட்டமா ?
இல்லை
உடைந்த இதயங்களின்
சொந்தக்காரர்
ஒட்டுப்போடும்
ஒரு தினமா ?

கன்னிகையே !

இந்தத் தினத்திலே
உன் உள்ளங் கவர்ந்தவனை
களிப்பாக்குவாயா ?
இல்லை
கலங்க வைப்பாயா ?

இளங்காளையே !

உன்னிதயத்தின் காலடியில்
தன் அன்பைக்
காணிக்கையாக்கியவளை
சிதனமெனும் கொடிய
விலங்கிலிருந்து
நீ
விடுவிக்கப் போகும் தினமா ?
இல்லை
தொடர்ந்தும்
சோகமெனும்
பாலைவனத்தில்
அலைய விடப்போகின்றாயா ?

வணக்கத்துக்குரிய பெற்றோரே !

இந்தத் தினத்திலே
காதலை வாழவைக்க
முடிவெடுப்பீர்களா ?
இல்லையேல்
கல்லறைக் கதவுகளை
திறந்து
அங்கே காதலுக்கு
ஆயுள் தண்டணை
கொடுத்து
அடைக்கப் போகின்றீர்களா ?

ஏன் சிரிக்கின்றாய் ஆண்டவனே ?

என்னுடைய நாடகத்தில்
நடிக்கும் நடிகர்கள்
என்னை மறந்துவிட்டு
என்ன
கணக்குப் பண்ணுகிறீர்கள்
என்றோர்
ஏளனமா ?
இல்லை
காதல் எனும்
மூன்றெழுத்து கொடுத்த
இன்பத்தை
பிரிவு எனும் மூன்றெழுத்தால்
அழித்துவிட்டு
சாதல் எனும்
மூன்றெழுத்து கானகத்தில்
கடைசிவரை அலையவிடும்
இறுமாப்பா ?

நானோன்று சொல்வேன் கேளீர் !

இளம் சமுதாயமே
இத்தினத்தில்
ஒர் புது விதி செய்திடுவீர்

பணம் தான் உம்
குறி என்றால்
காதல் எனும் அந்த
புனித
வார்த்தை இருக்கும்
திசையில்
தலை வைத்துக் கூட
படுக்காதீர்

அன்புக்கு தலைவணங்கும்
உயர்குணம்
கொண்டவரெனின்
காதல் எனும் அந்த
வார்த்தையின் பெருமையைக்
காத்து
சீதனம் எனும் அரக்கன்
அருகே கூட
நெருங்காவண்ணம்
அன்னை தந்தை
அறிவைத் தெளிவாக்கி
இந்தத் தினத்தை
இன்னுமொரு
தீபாவளியாக்கிவிடுவீர்..

உங்களால்
முடியும் !
உங்களிடம்
உரம் இருக்கின்றது !
உங்களிடம்
லட்சியம் இருக்கின்றது !
உங்கள் கைகளில்
நம்நாட்டின்
எதிர்காலம் உஞ்சாலாடுகின்றது
அதை தரமாக
உயர்த்தி அகிலத்தில்
தமிழர் பெருமை
உயர்த்திடுவீர்
எனும்
நம்பிக்கை
என்னெஞ்சில்
நிறையவே இருக்கின்றது.
———————————————–
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்