காதலர் தினக்கும்மி

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

பசுபதி


காதலர் நாளும்பி றந்ததடி-நம்
கண்ணியம் பண்பாடி றந்ததடி!
மேதினி போகுமிவ் வேதனையைப்-பார்த்து
வெட்கியே வானம் சிவந்ததடி!

ஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு- அது
அன்றாட வாழிவிலோர் அங்கமடி!
வேண்டாப்பொருள்களை அங்காடிகள்-சேர்ந்து
விற்கவே செய்திடும் சூழ்ச்சியடி!

காதல் கடைச்சரக்கானதடி- பணங்
காசென்னும் மீன்பிடி தூண்டிலடி!
காதலே ஒர் பரிசென்றிடுவார்-அந்தக்
காதல் பரிசால் கிடைத்திடுமோ ?

பண்டையில் காமதகனம்; இன்றோ-பரிசுப்
பண்டத்தில் காசை எரிந்திடுவார்!
வண்ணமலர்கொத்து வாங்குகிறார்-தினம்
மாலைமல்லிகைக்கதீடாமோ ?

பாதி உடையிலே ஈசுகிறார்-நடைப்
பாதை, கடற்கரை, வண்டியிலே
காதலின் உச்சமோ ‘பச்சை ‘யடி!-அதை
கட்டிலொன்றே காணவேண்டுமடி!

நேர்மை இலாதது காதலன்று-வெறும்
நேரம் கழிப்பது காதலன்று
ஈர்க்கும் உடையும், உடற்பசியும்-பருவ
ஏக்கவிளைவெல்லாம் காதலன்று!

கொச்சைப்படுத்துதல் காதலன்று!-பூங்காக்
கொட்டம் அடிப்பது காதலன்று!
இச்சை உணர்வு புனித்மெய்தி-பின்
ஈருயிர் சங்கமம் காதலடி!

(தட்டச்சு: கா.மெளலாசா)
(உங்கள் குரல், சூன் 2003, மலேசிய இலக்கிய மாத இதழ் )

Series Navigation