காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

வ.ந.கிரிதரன்-


நிலை மண்டில ஆசிரியப்பா

இருளும் விலகா கங்குற் பொழுது.

தெருவில் இன்னும் அரவம் இல்லை.

தொலைவில் இருந்து ஆலய மணியோ

காதில் கேட்க இல்லவே இல்லை.

நிசப்தம் கிழித்தே பேரூந் துருளும்.

நகரில் வசிக்கும் காரணம் அதனால்

நானும் கதிரை முந்தி எழுவேன்.

சமையல் அறையில் அம்மா தோசை

சுவைக்கச் சுவைக்க சுட்டுத் தரவே

தயார்தான் செய்யும் சப்தம் நினைவில்.

சோம்பல் முறித்து மெல்ல எழுவேன்.

தோயும் நனவிடைத் தோயல் நிறுத்தேன்.

வளவில் மாவில் குயிலும் கூவும்.

களவை மறந்து காகமும் கரையும்.

கொவ்வைக் கிளிகள் கூடிப் பறக்கும்.

கோடு கிழிக்கும் நீரின் காகமோ.

இராணுவ கவசம் உருளாக் காலமே

இயக்கம் இன்னும் இயங்கிட வில்லை.

காலைக் கதிரின் வனப்பில் குளித்து

அப்பா பின்னால் வரப்பில் செல்லும்

அந்தக் காலம் இனியும் வருமா ?

வயலின் புறத்தே உள்ள கேணியில்

அயற்சி அடையும் வரையில் நீந்தி

முயற்சி செய்து மகிழ்ந்து கிடப்போம்.

என்னே இன்பம். என்னே இன்பம்.

பின்னொரு சமயம் குளங்கள் மலிந்த

வன்னி மண்ணின் வனப்பில் திளைத்து

கள்ளினை உண்ட மந்தி எனவே

கள்ள மற்றுக் காலம் கழித்தோம்.

முதிரை பாலை வீரை முதலி

உதிரா உறுதி உள்ள காலி

என்று பலவித மரங்கள் மரங்கள்.

கொண்டைக் குருவி குக்குறு குருவி

சொண்டு மிக்க கொத்திக் குருவி

ஆட்கள் காட்டும் காட்டிக் குருவி

வாட்ட மற்று வட்ட மடித்து

ஆட்டம் போடும் உலாத்திக் குருவி

ஆறடி சிறகை விரித்துப் பறக்கும்

ஆலாக் குருவி அடைக்கலான் குருவி

குருவிப் பஞ்சம் இல்லா மண்ணே

அருவி ஓடும் வன்னி மண்ணே.

நினைவுப் பாணம் பருகின் திகட்டா

நனவிடை தோய்தல் களிப்பே களிப்பு.

நாவற் குளமும். வேப்பங் குளமும்.

பாவற் குளமும். புளியங் குளமும்.

நோக்கு மெங்கும் குளங்கள் மலிந்த

வன்னி மண்ணின் மண்ணே மண்ணே.

பாம்பு கண்டு படைதான் நடுங்கும்.

பாம்பு கண்டு நடுங்குமோ வன்னி.

கண்ணாடி விரியன் இரத்தப் புடையன்

வெங்க ணாந்தி விரியும் நாகம்

அரவம் அசையும் வனங்கள் சிறக்கும்

அரவம் நிறைந்த வன்னி மண்ணே.

பால்ய காலச் சகியாய் வாழ்ந்த

வன்னி மண்ணை நினைப்பின் களிப்பே.

நகரில் எம்ஜி சிவாஜி படங்கள்

என்றால் ஒலிபெருக் கியழைப் பாரே.

எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜி

சிங்கம் போல சிலிர்த்துச் சாட்டை

சொடுக்கி ஆணை யிட்ட பாடல்

இன்னும் காதில் ஒலித்து நிற்கும்.

தருமிப் புலவன் பாட உதவும்

சிவனாய்ச் சிவாஜி தோன்றும் காட்சி

சினிமா பார்த்த நினைவும் தோன்றும்.

தோசை அப்பம் சுட்டு வந்த

சிங்களக் கிழவியின் ராசியே ராசி.

மான்மார்க் முயல்மார்க் வெடிகள் கொளுத்தி

இன்பம் துய்த்த இனிய விழாக்கள்

இன்னும் இதய ஆழக் குழியில்.

இனியும் வருமா அதுபோல் நிகழ்வு ?

இன்னொரு சமயம் நாட்டில் புரட்சி.

சேகு வேரா என்றொரு பெயரில்.

இந்தியர் துணைதான் கொண்டே அடக்கினர்.

இரவினில் தொலைவினில் உறுமிடும் ‘கெலி ‘கள்

இறைக்கும் குண்டுகள் எண்ணி இருப்போம்.

இயந்திரத் துவக்கு கொண்டு நகரில்

இராணுவம் நகர்ந்து திரிவது தெரியும்.

தமிழர் சிங்களர் முஸ்லீம் கிறிஸ்த்தவர்

என்று பிரிவுகள் அறிந்தது தெரியா ?

சிறுசிறு பிணக்குகள் இருந்த போதும்

குறுகி உறவோ இருந்தது இல்லை.

மனிதர் என்று மதித்து இருந்தோம்.

மீண்டும் வருமா அந்தக் காலம் ?

ஒருமுறை புயலில் குலைந்தது வன்னி.

குருவிகள் குரங்குகள் கொப்புகள் மரங்கள்

சாய்ந்தன மாய்ந்தன அந்தப் புயலில்.

எங்கள் வீடு தவிர அனைத்தும்

பொங்கி வீசிய காற்றில் சிதறின.

ஓடி வந்த அயலவர் யாவரும்

கூடி இருந்தோம் கடும்புயல் கடக்கவே.

மதங்களை மொழிகளை எண்ணிடா திருந்தோம்.

மனிதராய் ஒருவரை மதித்தே யிருந்தோம்.

என்னே மனிதர். என்னே வாழ்வு!

ஆண்டுகள் மாறின/ அரசுகள் மாறின.

சட்டமும் திட்டமும் மாறின. மாறின.

மாறிய மாறலில் வன்னியும் அழிந்தது.

நண்பராய் இருந்தவர் பகைவராய் மாறினார்.

கள்ளம் நெஞ்சிலே பரவியே சிதைந்தனர்.

வெடித்திட்ட போரிலே நகரமே எரிந்தது.

இயற்கை வனப்பினை எரித்தனர் சிதைத்தனர்.

விருட்சம் வெட்டியே சமநிலை குலைத்தனர்.

மனிதம் அழியவே ஆக்கினை புரிந்தனர்.

அவலம் பெருகவே கோரம் பண்ணினர்.

சின்னஞ் சிறிய வாழ்வினில் மனிதர்

என்ன நினைத்தே யுத்தம் புரிகிறார் ?

மண்ணில் அமைதி பெருக்கிட வழிகள்

ஆயிரம் ஆயிரம் அவனியில் உண்டே.

அறியா திவரேன் ஆட்டம் போடுறார் ?

மீண்டு மொருமுறை வன்னி மண்ணில்

மாண்ட அந்தக் காலம் வருமா ?

ஆண்டவர் ஆள்பவர் அடக்குத லொழிந்தே

காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.

Series Navigation

author

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

Similar Posts