காஞ்சி சங்கராசாரியார் : இந்துக்களின் போப்பாண்டவர் ?

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

மஞ்சுளா நவநீதன்


எனக்கு ஆச்சரியமான விஷயம், சமீப காலமாக, இந்து மதத்துக்கு தலைவர் போல காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியை பல அரசியல் வாதிகள் தூக்கி வைப்பதுதான்.

உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில், ஜெயேந்திர சரஸ்வதி ஒரு மனுஷர் அவ்வளவுதான். அவருக்கு அதனைத்தாண்டி மரியாதை கொடுக்கவோ, அதற்குக் கீழ் மரியாதை கொடுக்கவோ என்னால் இயலாது. எங்கள் சாமிக்கும் எங்களுக்கும் இடையே இருக்கும் பூசாரியும் அந்த வேளைப் பூசாரிதான். கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் பூசாரி வேடம் கலைந்து எங்களுடன் ஏர் உழ வருகிறவர்தான் அவர். பூசாரி வர்க்கம் என்று தனியாக வைத்துக் கொண்டு அவர்களுக்கு பல்லக்கும் மரியாதையும், மடங்களும் ஏற்படுத்திக்கொடுப்பதெல்லாம், வசதி படைத்த செல்வந்தர்களுக்கானது. அந்த செல்வந்தர்களைப் பார்த்து சூடுபோட்டுக்கொள்ளும் நடுத்தர வர்க்கத்துக்கானது.

வாடிகனின் போப்பாண்டவர் போல, காஞ்சி மடாதிபதியை ஆக்கும் முயற்சி வெகுகாலமாகவே இந்த அரசியல்வாதிகளால் செய்யப்பட்டு வருவது போலத் தோன்றுகிறது. ஆனால் இந்துமதம் தான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. காஞ்சி மடத்தை ஒரு சங்கரமடம் என்று கூட பெரும்பாலான பிராம்மணர்களே ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கூறுகிறார்கள். சங்கரர் ஏற்படுத்திய மடங்களில் காஞ்சி ஒன்றல்ல என்பது பலகாலமாய் விவாதத்திற்கு உள்ளாகிற விஷயம். மறைந்த சங்கராசாரியாரை தெய்வமாகவே ஆக்கியும் வைத்திருக்கிறார்கள். அவருடைய வாக்குகளைத் தொகுக்கும் புத்தகத்திற்குக் கூட ‘தெய்வத்தின் குரல் ‘ என்று பெயர் தந்திருக்கிறார்கள். ( எனக்கு இதில் ஒன்றும் பிரசினை இல்லை. மனிதனை தெய்வம் என்று ஒப்புக்கொள்வது எனக்கும் உடன்பாடே. ) சென்னையைச் சேர்ந்த நடுத்தர வர்க்க தமிழ்/தெலுங்கு பிராம்மணர்களைத் தாண்டி காஞ்சி மடம் யாருக்கும் தெரியாது. கன்னட பிராமணர்களுக்கு காஞ்சியல்ல சிருங்கேரி தான் தலைமை பீடம். சென்னையைத் தாண்டி சங்கராசாரியாருக்கு விளம்பரம் பண்ணி அப்படித் தெரியவைக்க, பல ஆங்கில தமிழ் பத்திரிக்கைகள் பிரம்மப் பிரயத்தனம் பண்ணிக்கொண்டிருக்கின்றன. (இதில் இந்து, எக்ஸ்பிரஸ், குமுதம், ஆனந்த விகடன், கல்கி, தினமலர் அனைத்தும் அடங்கும்). திராவிடர் கழகம் கூட அவரை இந்துமதத்தின் ஒரே தலைவராகக் காண்பித்து அரசியல் பண்ணிப்பார்த்துவிட்டது. திமுகவும் ‘இது என்ன சங்கரமடமா ‘ என்று பேசி முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்துவிட்டது. விஹெச்பி போன்ற உதவாக்கரை – ஆனால் ஆபத்தான – அமைப்புக்களின் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது காஞ்சி சென்று தீர்த்தம் வாங்கி பத்திரிக்கையில் செய்தி வரும்படியும் பார்த்துவிட்டார்கள். இந்திரா காந்தி மறைந்த சங்கராசாரியாரைப் பார்க்க வந்ததும், ஒரு நாடகீயத் தன்மையில் , கிணறு செட் அமைத்து சங்கராசாரியார் தரிசனம் தந்ததும் எல்லோருக்கும் தெரியும். ஜனாதிபதி வெங்கடராமன், சேஷன், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஆகியவர்கள் காஞ்சிக்கு இடைவிடாது வருகை தந்து, விளம்பரம் கொடுத்து, காசு கொடுத்து, பல்கலைக்கழகம் ஆரம்பித்து, கிரிஸ்தவ நிறுவனங்கள் போலவே பாரபட்சமான கல்வியும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். (சாமியார் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும், வேதம் படிக்கும் மாணவர்களுக்கும் இரண்டு நிறுவனங்களிலுமே தனி மரியாதை.) இருப்பினும் யாரும் அவரைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

இதைப் பார்க்கும் போது எனக்கு இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் பண்ணிய மத அரசியலும் அதன் விளைவும் என் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஷா பானோ என்ற ஏழை முஸ்லீம் கிழவிக்கு மாதாந்திர உதவித்தொகை கொடுப்பதை தவிர்க்க சுப்ரீம் கோர்ட் வரை சென்ற முஸ்லீம் அமைப்புக்களும், அப்படிச் சென்ற முஸ்லீம் அடிப்படை வாதிகளை சந்தோஷப்படுத்த ராஜீவ் காந்தி சட்டத்தையே திருத்தி எழுதியதும் எல்லோருக்கும் தெரியும். முஸ்லீம் அடிப்படைவாதிகளை சந்தோஷப்படுத்தினால், இந்து தீவிரவாதிகளையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கோரமாட்டார்களா என்ன ? அருண் நேரு என்ற அதிபுத்திசாலி கொடுத்த அறிவுரையின் படி, இரண்டு நூற்றாண்டுகளாகப் பூட்டப்பட்டுக் கிடந்த ஒரு வில்லங்கக் கட்டடத்தின் கதவுகளை ராஜீவ் காந்தி திறந்து பாபர் மசூதியை இந்துக்களுக்கு கொடுத்தார். ஆரம்பித்தது வினை. அதாவது பாஜக. வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தமாதிரி, பாஜக பாபர் மசூதியை பிடித்துக்கொண்டுவிட்டது. இரண்டு எம்பி இடங்களிலிருந்து, 200 எம்பி இடங்களுக்கு பாஜக சென்றதன் முக்கிய காரணம் அதுதான்.

இதற்கு நடுவில், சீக்கிய மதத்தலைவராக பிந்தரன் வாலே என்ற பூசாரியை கொம்பு சீவி, அகாலிதளம் மீது ஏவ விட்டால், அது பஸ்மாஸ்வரன் மாதிரி வரம் கொடுத்த காங்கிரஸ் இந்திரா காந்தி தலையிலேயே கை வைக்கப்பார்த்து, அது பேயாட்டம் ஆடி, புயலடித்து இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது.

அதுமாதிரி, இஸ்லாமுக்கு டெல்லி ஜ்உம்மா மசூதியின் இமாம் புகாரியை ஆக்கி விட்டிருக்கிறார்கள். இவருக்கு சாமரம் வீச, சையது சஹாபுதீன் போன்ற புத்திசாலிகளும் இருக்கிறார்கள். தாலிபான் ஏதாவது செய்தால், உடனே இந்த பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் உடனே இமாம் புகாரியிடம் ஓடுவார்கள். அவர்தானே சுடச்சுட செய்தி தருவார் ? காங்கிரசின் குலாம் நபி ஆசாத்தும், பாஜகவின் சிக்கந்தர் பக்தும் முஸ்லீம் தலைவர்கள் தானே ? அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை முன்னிருத்தி, அவர்களை முஸ்லீம் தலைவர்களாகச் சித்தரித்து செய்திகள் போட்டால் என்ன ? (அவர்களைப் போட்டால் செய்தித்தாள் விற்குமா ?) பெரும்பாலான இந்துக்கள்தானே பத்திரிக்கை வாங்குவது ? அவர்கள் சூடாக பத்திரிக்கை வாங்க வேண்டுமென்றால், சூடாக இமாம் புகாரி சொன்னதைப் போட்டால் தானே விற்கும் ? விவாதத்திற்குரிய சூடான கருத்துகள். ஷபனா ஆஸ்மியைத்திட்டி புகாரி பேசியதைப் போட்டால் தான் பத்திரிகை விற்கும். இதற்கு மூல காரணம் இந்திரா காந்தி காலத்திலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. அவர்தான் முதன் முதல், இமாம் புகாரியின் வீடு தேடிச் சென்று, அவரிடம் முஸ்லீம்களின் ஓட்டுக்களை அவரது இந்திரா காங்கிரசுக்கே போடவேண்டும் என்று கோரி ஃபத்வா வாங்கியது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே ?

இதே போல இந்துக்களின் ஒரே தலைவராக காஞ்சி மடாதிபதியை உருவாக்கச் சதி நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு பலகாலச் சந்தேகம். ஆயினும், காஞ்சி மடாதிபதி சொல்கிறார் என்று எத்தனை பேர் ஒரு கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள் ? அதில்தான் சிக்கலே இருக்கிறது. சென்ற இடைத்தேர்தல்கள் சொன்ன விஷயம் மாதிரி, பெரும்பாலான மக்களுக்கு மதம் முக்கியமல்ல. யார் உருப்படியாக தொகுதிக்குச் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஓட்டு. திருநாவுக்கரசுக்கு அறந்தாங்கி மக்கள் மதச் சார்பு பார்த்தா வாக்களிக்கிறார்கள் ?

காங்கிரஸ் முஸ்லிம் ஓட்டு வங்கி என்ற ஒன்றை நம்பிப் பல காரியங்கள் செய்தது. துரதிர்ஷ்டவசமாக வாக்குகளுக்காகப் பண்ணுகிற காரியங்கள் , அந்த வாக்கு வங்கிக்கு முன்னேற்றத்தில் பயன் படவேண்டியதில்லை. உதாரணமாக, முஸ்லீம்கள் தம் வாக்கு வங்கி பலத்தைப் பயன்படுத்தி , வேலை வாய்ப்புகளிலும், கல்விஉரிமையிலும் முன்னுரிமையைக் கோரிப் பெற்றிருக்கலாம். ஆனால் ஷாபானுவிற்கு ஜீவனாம்சம் வழங்காமல் செய்து தான் தம்முடைய மத உரிமையைக் காப்பாற்ற முடியும் என்பது அவர்கள் கண்ணோட்டமாய் இருக்கிறது.

முஸ்லீம் வாக்கு வங்கியை எதிர்க்கிறோம் என்று சொல்லி, முஸ்லீம்களை மகிழ்ச்சிப் படுத்தக் கூடாது என்று சொல்லிக் கொண்டே முஸ்லீம் லீக் போலத் தொடங்கப்பட்ட ஜன சங்கம், உருமாறிய பாரதீய ஜனதா கட்சியும் இதே விஷயத்தை வேறு குழுவினருக்கு- இந்துக்களுக்கு- செய்தது. இதனால் இந்து மதத்திற்கோ, இந்து மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. அது மட்டுமல்ல, ஒரு பாதுகாப்புக்காக என்று நினைத்து இந்தக் கட்சிகளுக்கு ஓட்டுப்போட்டு ஐந்து வருடங்களுக்குப்பின்னர், வயிறு இருக்கிறபடியால், வேலையும் முன்னேற்றமும் இல்லை என்பதால் எதிர்த்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். (சும்மா சாதிக்காக ஓட்டுப் போட்டார்கள் என்பதெல்லாம் ஓரளவுக்குத்தான்)

மக்கள் இந்த மத ஏமாற்றுகளில் மாட்டிக் கொள்ளத் தயாரில்லை. இந்து மதத்தை ஒரு ஒற்றைப் பரிமாணத்தில் கட்டுவிக்க எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. அரசியல் ரீதியாக இந்துக்களின் கட்சியாய் எழுந்த பா ஜ கவும் மண்ணைக் கவ்வி விட்டது. மக்களுக்கு மதம் ஒரு நம்பிக்கையே தவிர அதுவே எல்லாமும் என்ற விதமாய் இல்லை. ஒரே ஒரு பிரதிநிதிதான் மதத் தலைவன் என்பதும் இல்லை – நல்ல வேளையாக. (சொல்லப் போனால், இந்துக்களை இப்படி ஒரு ஒற்றைப்பரிமாணத்தில் கட்ட முடியாததே இந்தியா ஜனநாயக நாடாக இருப்பதன் காரணமோ என்று எனக்கு சில வேளைகளில் சந்தேகம் வருவதுண்டு)

ஆனால் இந்த முயற்சிகள் நடப்பது – தற்காலிக துயரங்களை ஏற்படுத்துகிறது. அயோத்தியில் கோயில் கட்டுவேன் என்று பூதத்தைக் கிளப்பிவிட்டு அரசாங்கத்தை அமைத்து விடலாம் என்று கனவு கண்டவர்கள் இப்போது பூதத்தை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். விஸ்வ இந்து பரிஷத்- ஆர் எஸ் எஸ் பூதத்தோடு சேர்ந்து இன்னொரு பூதமாக , அதிகார மையமாய் காஞ்சி சங்கர மடம் எழுகிற சாத்தியம் கவலை தருவது. இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லாத சாது முகத்துடன் சங்கர மடம் தோன்றினாலும் இப்படிப்பட்ட மத அமைப்புகள் பொது வாழ்வில் முக்கியத்துவம் பெறுவது மிக ஆபத்தான விஷயம் ஆகும். இப்படித்தான் முஸ்லீம் லீக் முஸ்லீம்களின் பாதுகாப்புக்கு என்று தோன்றி, நாடு துண்டாடப் படுவது வரையில் சென்றது.

***

Series Navigation