காங்கிரஸ் – திமுக கூட்டு ஏன் தொடர வேண்டும்?

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

அக்னிப்புத்திரன்


திரு. வருணனின் மறுப்புக் கடித்தில் அரசியல் அரைவேக்காட்டுத்தனம் ஆங்காங்கே தென்படவில்லை. ஒட்டுமொத்தமாகவே அவ்வாறுதான் காணப்படுகிறது. முதலில் யாராவது ஒருவர் நல்ல கருத்துகளை முன்வைக்கும்போது அவருக்கு அரசியல் முத்திரை குத்தி வக்கிரமாகத் தாக்கி எழுதும் சைக்கோதனமான அரசியல் அநாகரீகப்பழக்கத்தை இந்த ‘’நொள்ளை கைகள்’ என்றுதான் நிறுத்திக்கொள்ளுமோ தெரியவில்லை. ஒட்டுமொத்த கடிதத்திலும் உருப்படியாக தெரியும் ஓரிரு வினாக்களுக்கு மட்டும் கருத்து தெரிவிக்க முற்படுகிறது இக்கட்டுரை. மற்றவை அனைத்தும் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட வேண்டியவை என்பதால் அவை தவிர்க்கப்படுகின்றன.
திரு. வருண்ணின் கடிதத்தில் காணப்படும் சில வினாக்கள்:
1. காங்கிரஸ் குணம் தெரிந்த திமுக இன்னும் காங்கிரசைத் தொங்கிக்கொண்டிருப்பதன் அவசியம் என்ன? நாட்டு மக்களுக்காக உழைப்பதாக இருந்தால் அமைச்சரவையிலிருந்து விலகிக்கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டியதுதானே. பாமக, திருமாவளவனைச் சேர்த்தாலே ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்துவிடுமே. அப்புறம் ஏன் காங்கிரசை நம்ப வேண்டும்?

2. ஒரே சமயத்தில் மாற்றி மாற்றி பாஜகவுடனும் காங்கிரசுடனும் திமுக கூட்டு வைத்துக் கொண்டதே? அதைப்போலத்தான் அதிமுகவும் காங்கிரசுடன் கூட்டு வைக்க முயல்கிறது இதிலென்ன உங்களுக்கு கருத்து வேறுபாடு? ஜெ துடியாக துடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோமே. கருணாநிதி ஏன் வேண்டா வெறுப்பாக அக்கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறார்? பாஜக தற்சமயம் அக்னிபுத்திரன் கூற்று போல வலுவிழந்து இருப்பதாலா?

3. காங்கிரசைப் பற்றிய அக்னிபுத்திரன் கருத்துகளையெல்லாம் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் முதுகில் குத்துபவர்கள், கட்சிகளை உடைப்பது போன்ற அநாகரிக செயல்களைச் செய்பவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பது கருணாநிதிக்குத் தெரியாதா? அல்லது இந்த நாட்டு மக்களுக்குத் தெரியாதா? இதையெல்லாம் தெரிந்தே அவர்களோடு கூட்டு வைத்திருக்கிறீர்கள் என்றால் யார் அயோக்கியர்கள். இப்போது பாஜக பலவீனப் பட்டு இருப்பது தெரிந்து கொண்டதால்தான் அடக்கி வாசிக்கிறீர்களோ? ஒரு சமயம் பாஜக வலுவாக இருந்தால் அங்கு அப்படியே குரங்குத் தாவாக தாவி விடுவீர்களோ?
பல வடிவங்களில் ஒரே கேள்வி மாற்றி மாற்றி கேட்கப்பட்டுள்ளது. அதாவது ஏன் திராவிடமுன்னேற்றக்கழகம் மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்க வேண்டும்? ஏன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர வேண்டும்?
இதற்கு விடை மிக எளிதானது. இது ஒரு அரசியல் கணக்கு. காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தென்படுவது போல காழ்ப்புணர்ச்சியைச் சுமக்கும் கயமைத்தனம் படைத்த கண்களுக்கு இது விசித்திரமாகவும் வித்தியசமாகவும் தென்பட்டு ஒப்பாரி வைத்து ஓலமிடுகிறார்கள் திரு.வருணைப்போல ஒரு சிலர். அப்படி என்னதான் விடை மேற்கண்ட வினாவிற்கு? அந்த விடை இதுதான். தமிழும் தமிழர்களும் தமிழ்நாடும் மீண்டும் இருண்ட காலத்திற்குச் சென்று விடக்கூடாது என்ற நல்லெண்ணமே முழுமுதற்காரணமாகும். தமிழகத்தை எப்போதெல்லாம் அதிமுக என்ற சினிமா கம்பனி ஆட்சி செய்கிறதோ அப்போதெல்லாம் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்னோக்கி செல்லும் என்பது நாட்டு நடப்பை நன்கு அறிந்து வைத்திருக்கும் அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.
இதற்கு விளக்கம் தேவைப்பட்டால் அதிமுக ஆட்சிகளின் போது அரசியல் சர்வே என்ற பெயரில் இந்தியா முழுமைக்கும் ஆய்வு நடத்தி கட்டுரை வெளியிட்ட ‘இந்தியா டுடே’ என்ற பத்திரிக்கை செய்திகளைத் தேடிப்பார்த்துப் படித்துக்கொள்ளலாம். முதல்வர்களின் செயல்பாடுகள் என்ற அப்பத்திரிக்கையின் சர்வேயில் பீகார் முதல்வராக இருந்த ஊழல்மகாராணி ராப்பிரி தேவியை விட அப்போது முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா பின்தங்கியிருந்தார் அப்பட்டியலில்.
அதிமுக ஆட்சி என்று குறிப்பிடும்போது திரு. எம்.ஜி.ஆர் ஆட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக இருபதாண்டு ஆண்டுக்காலத்தை கெடுத்து வீணாக்கிய பெருமை அதிமுகவையே சாரும். எதாவது உருப்படியான வளர்ச்சிப்பணிகள் உண்டா? இருபதாண்டு தமிழகத்தினை இருட்டில் தள்ளிய இவர்கள் மீண்டும் அரியணையேறி அராஜகம் நிகழ்த்தாமல் இருக்கவே, தேவை காங்கிரஸ் கூட்டு.
திமுகவிற்குக் காங்கிரஸ் கூட்டு இல்லை என்றால் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருக்குமா? தமிழரின் கனவுத்திட்டமான சேதுசமுத்திரத் திட்டம்தான் கிடைத்திருக்குமா? (அதையும் அதிமுக கட்சி முடக்கிப் போட்டுயிருப்பது வேறு கதை)
ஒரு பக்கம் தமிழகத்திற்கு வரவிருக்கும் ஆபத்தை தடுக்கவும் மறுபுறம் எப்படியாவது தமிழ்நாட்டின் நிலையை பொருளாதாரத்தில், வாழ்க்கைத்தரத்தில் உயர்த்தவும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டு திராவிடமுன்னேற்றக்கழகத்திற்குத் தேவைப்படுகிறது.
அதிமுக தொடர்ச்சியான தோல்விகளைப் பெற்றுவருவதால் காங்கிரஸ் துணையில்லாமல் கரையேற முடியாது என்று கணக்குப்போட்டு, திமுக காங்கிரஸ் உறவைப் பிரிக்க பல்வேறு முயற்சிகளும் அறிக்கைகளும் விட்டு ஓய்ந்துபோன செல்வி. ஜெயலலிதாவின் குரலைத்தான் திரு.வருணன் மறு ஒலிபரப்பு செய்திருக்கிறார். இவர்களின் பசப்பையும் பாசாங்கையும் தமிழக முதல்வரும் சரி அன்னை சோனியாகாந்தியும் சரி நன்கு புரிந்துகொண்டதன் விளைவுதான் எத்தனை நிர்வாகப்பிரச்சினைகள் வந்தாலும், கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அல்லது உருவாக்கப்பட்டாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். இதை திரு.வருணன் புரிந்துகொண்டரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அவர் கட்சியின் தலைமை நன்கு புரிந்துகொண்டதால்தான், “ச்சீ..ச்சீ..இந்தப்பழம் புளிக்கும்” என்று காங்கிரஸ் கூட்டணி முயற்சியைக் கைகழுவிவிட்டு, நடிகர் திரு.விஜயகாந்த் வீட்டு வாசல்கதவைத் தட்டிக்கொண்டிருப்பதாகத் தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
-அக்னிப்புத்திரன்
agniputhiran@yahoo.com

Series Navigation