காங்கிரசின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு கடிதம்

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

ஜடாயு


அன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய டாக்டர் மனமோகன் சிங்ஜி அவர்களுக்கு,
நலம். நலமறிய அவா. நாட்டின் தலைவராகிய நீங்கள் உடல்நலம் தேறி தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது. உற்சாகத்துடன் தேர்தல் பிரசாரத்தில் கூட பங்கெடுத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் நீங்கள் தான் காங்கிரஸ் கூட்டணியின் அதிகாரபூர்வ வேட்பாளர் என்று சோனியா காந்தி அறிவித்தார். உடனே தேர்தல் சரவெடி ஒன்று உதிர்க்க வேண்டும் என்று எண்ணிவிட்டீர்கள் போலிருக்கிறது. வேறு ஏதோ ஒரு தொடர்பில்லாத கேள்விக்கு பதிலாக “அத்வானி இந்த தேச நலனுக்கு என்ன செய்திருக்கிறார்?” என்று கேட்டு அதிர வைக்கிறீர்கள்! வழக்கமாக மிக மென்மையாகவும், அமர்ச்சையுடனும் பேசும் நீங்கள் அப்போது மிகவும் படபடப்பாக இருந்தீர்கள்.
ஐயா, இதே கேள்வியை நேருக்கு நேர் ஒரு தொலைக்காட்சி விவாத்தில் அத்வானிஜியிடம் நின்று முகம் கொடுத்து, உங்களால் கேட்க முடியுமா?
நீங்கள் மேடையில் மந்தகாசத்துடன் அமர்ந்திருக்க, சோனியா காந்தி சொல்கிறார் – “பிரதமர் ஆவதற்கு யார் யாரோ ஆசைப் படுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருவர் கூட டாக்டர் மன்மோகன் சிங் முன்பு நிற்க முடியாது” என்று.
எப்படி நிற்க முடியும்? உங்களுக்கு எதிராக நிற்பதற்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் தானே நிற்க முடியும்? மக்களவைத் தொகுதி ஒன்றில் நின்று போட்டியிடுவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையா அல்லது அந்த அஸ்ஸாம் தொகுதி மீது ஏதாவது கோபமா அல்லது காங்கிரசின் பிடி தளர்ந்துவரும் அந்த மாநிலத்தில் விளைவு என்னாகுமோ என்று எண்ணித் தயக்கமா, புரியவில்லை, அந்தத் தொகுதியின் ராஜ்யசபை பிரதிநிதியாகவே இருந்து வருகிறீர்கள். ஏதேனும் காரணம் இருக்கலாம். ஆனால் அதை சோனியா காந்தி இப்படியா போட்டுடைக்க வேண்டும்? இந்த குரூர இத்தாலிய அங்கதம் உங்களுக்கும் புரிந்திருக்கும். ஆனாலும் அப்படி அமைதியாக இருக்கிறீர்களே!
வாக்குச் சீட்டில் மக்களைச் சந்திப்பதற்கே இவ்வளவு யோசிக்கும் நீங்கள் விவாதத்தில் மக்களை எதிர்கொள்வீர்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான்.
அத்வானி இந்த தேச நலனுக்கு என்ன செய்திருக்கிறார்?
கடல் நீரை அளவிட முடியாது என்று உங்களுக்கும் தெரியும். பேச்சுக்கு ஒன்றே ஒன்று. இந்த தேசத்தின் ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்தையும் எமர்ஜென்சி என்ற பெயரில் உங்கள் காங்கிரஸ் கட்சி சிறையிட்டுப் பூட்டிய அந்த நான்கு வருடங்களும், தன் வாழ்வின் அத்தனை சுகங்களையும் மறந்து கொடுஞ்சிறையின் நான்கு சுவர்களுக்குள் வாடியிருக்கிறார் ஐயா அத்வானி. இன்று நீங்களும் நானும் அனுபவிக்கும் இந்த சுதந்திரம், எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் தேர்தலில் நீங்கள் இன்று கேள்வி கேட்கும் இந்த ஜனநாயக உரிமை நமக்குக் கிடைப்பதற்காக. இன்றைக்கு உங்கள் பிரதமர் பதவியையே உறுதி செய்கிறதே இந்திய அரசியல் சாசனம், அந்த சாசனம் மீறப்பட்டபோது, மிதிக்கப் பட்டபோது, அதன் மாண்பை மீட்பதற்காக. (சமீபத்தில் இது பற்றி அவர் தன் இணையதளத்தில் எழுதியும் இருக்கிறார் – http://blog.lkadvani.in/blog-in-english/from-jail-to-freedom-park ) என் தலைமுறைக்கே இது தெரியும் போது நீங்கள் எப்படி மறந்தீர்கள்?
அத்வானி தீவிர வாசகர், நிறைய படிக்கவும் செய்வாராம். ஆனால் 1000+ பக்கங்கள் அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறாரே, அதிலும் “என் தேசம், என் வாழ்க்கை” என்று சொல்கிறாரே, இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன் அதன் சுருக்கத்தையாவது படித்துப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா ஐயா? நீங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கற்ற அறிஞர் என்பதையும் நாடறியும்.
”நலன்” பற்றிக் கேட்கிறீர்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே மிகச் சிறந்த அளவில் மக்கள் நலத் திட்டஙகளை செயல்படுத்தும் மாநில அரசுகள் பாஜக அரசுகள் தான் என்பதும் மத்திய அரசை நடத்தி வரும் உங்களுக்குத் தெரியாததல்ல. ஒவ்வொரு கிராமத்திற்கும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கச் செய்த குஜராத் அரசின் “ஜோதிர்கிராம்” திட்டமாகட்டும், குழந்தைகளின் நலன் பேணும் மத்தியப் பிரதேச அரசின் அற்புதமான “லாட்லி லக்‌ஷ்மி யோஜனா”வாகட்டும், பெண்கல்வியை மிகப் பெரிய அளவில் மாநிலமெங்கும் கொண்டு சென்ற முந்தைய ராஜஸ்தான் அரசின் சாதனையாகட்டும். இவற்றைத் தந்த தலைவர்களை உருவாக்கிய மகா தலைவர் அல்லவா அத்வானி? தலைமை என்பது ஒரு எக்ஸிக்யூட்டிவ் பதவி மட்டும் அல்ல, அது பல சுடர்களை உருவாக்கும் ஒரு ஒளிப்பிழம்பு.
தில்லி, வாரணாசி, பெங்களூர், மும்பை, சம்ஜௌதா எக்ஸ்பிரஸ், மாலேகாவ், ஹைதராபாத், உத்திரப் பிரதேசம், ஜெய்பூர், அகமதாபாத் என்று 13 பெரிய அளவிலான ஜிகாதி தீவிரவாதத் தாக்குதல்கள் உங்கள் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்துள்ளன. ஏறக்குறைய ஆயிரம் இந்தியர்கள் இவற்றில் கொடுமையாக பலியாகியுள்ளனர்.
2004 முதல் 2008ன் இறுதி வரை இந்தக் கொடூரத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவும், இவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளை வேட்டையாடித் தண்டிக்கவும் ஒரு உருப்படியான நடவடிக்கையைக் கூட, சிறிதளவும் உங்கள் அரசு எடுக்கவில்லை. 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு தான் உலுக்கினாற்போல விழித்துக் கொண்டு அடிப்படையான பாதுகாப்பு உள்கட்டமைப்பு விஷயங்களைப் பற்றி யோசிக்கவே ஆரம்பிக்கிறது அரசு. எத்தகைய கிரிமினல்தனமான மெத்தனம்!
ஆனால் இந்தத் தேர்தல் பிரசாரத்தில், தீவிரவாத்தைப் பற்றி எழும் ஒவ்வொரு விவாத்த்திலும், இதற்கு முன்பு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாராளுமன்ற தாக்குதல் நடக்கவில்லையா? கண்டஹார் விமானக் கடத்தல் நடக்கவில்லையா என்பதையே மொண்ணைத் தனமாகக் கேட்கிறீர்களே, இதற்கு என்ன பொருள்? அப்போது சில இந்தியர்கள் மாண்டார்களே, இப்போது அதைப் போல 10 மடங்கு இந்தியர்கள் தான் மடிந்திருக்கிறார்கள்..நீங்களூம் கொஞ்சம் செத்துப் போனால் தான் என்னவாம் என்று மக்களைக் கேட்கிறீர்களா? அதுவும், பாராளுமன்றத் தாக்குதலுக்காக மரண தண்டனை விதிக்கப் பட்ட அப்சலின் தண்டனையை நிறைவேற்றக் கூட வக்கில்லாத ஒரு அரசின் சார்பாக? ஆஸ்திரேலியாவில் தீவிரவாதத் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்ட முகமது ஹனீஃபின் குடும்பத்தினரை டிவியில் பார்த்து “அன்று இரவு முழுக்க எனக்குத் தூக்கம் வரவில்லை” என்று தழுதழுத்த குரலில் உருக்கமாக சொன்னீர்கள். ஆனால் இந்தத் தீவிரவாத்த் தாக்குதல்களில் தங்கள் துணையை, குழந்தைகளை, சுற்றத்தாரை, நண்பர்களை இழந்த இந்தியக் குடிமக்களான தாயருக்கும், தந்தையருக்கும், மக்களுக்கும் அதே போன்று அழுத்தமாக ஆறுதல் சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? உங்களுக்கே வெளிச்சம். ஆனால் இதெல்லாம் இந்த்த் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு மறந்து விடவில்லை என்பது நினைவிருக்கட்டும்.
“அத்வானியின் ஒரே சாதனை பாபரி மசூதியை இடித்ததில் பங்கு வகித்த்து தான்” என்று இன்னொரு முத்தையும் உதிர்த்திருக்கிறீர்கள். அந்த பாப்ரி அமைப்பு மசூதி அல்ல, அங்கு தொழுகை நின்று போய் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் ஆகிறது, ராம நாம பஜனை தான் 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. எல்லா அரசு ஆவணங்களும், நீதிமன்றக் குறிப்புகளிலும் கூட “சர்ச்சைக்குரிய கட்டிடம்” (disputed structure) என்று தான் சொல்லப் படுகிறது. இதெல்லாம் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஜெயமோகன் என்று ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் இருக்கிறார். சமீபத்தில் “அரசியல் சரிநிலைகள்” என்று ஒரு கட்டுரை (http://jeyamohan.in/?p=1330) எழுதியிருந்தார். அதில், ஒரு மலையாளக் கதை பற்றிக் குறிப்பு வரும். சோஷலிச சார்பு உடைய, அதே சமயம் நேர்மைக்கும், நடுநிலைக்கும் பெயர்போன சுயநலமற்ற ஒரு மூத்த தலைமுறை பத்திரிகையாசிரியர். 1992ல் அந்தச் செய்தி வரும்போது, உதவியாசிரியர்கள் நாளிதழின் முதல்பக்கச் செய்தியாக ‘சர்ச்சைக்கிடமான கட்டிடம் இடிக்கப்பட்டது’ என்று சரியாக அச்சு கோர்த்திருக்கிறார்கள். ஆசிரியர் ஒருகணம் யோசித்து விட்டு அதை எடுத்து வெட்டிவிட்டு ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டது’ என்று செய்தியை மாற்றுகிறார். இது தான் கதை. இதன் வரலாற்று விளைவுகளை அந்தக் கட்டுரையில் பின்னர் ஜெயமோகன் அலசுகிறார்.
சட்டத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் நீங்கள், நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் மேடையில் நின்று கொண்டு இந்தத் தருணத்தில் பாபர் *மசூதி* என்று சொல்கிறீர்களே? அதற்கு என்ன பொருள்? இதன் உள்நோக்கம் என்ன?
இந்த்த் தேர்தல் கடந்த காலத்தின் காயங்களைக் கிளறுவதோ, ஆறிக் கொண்டிருக்கும் வடுக்களை மறுபடிக் கீறுவதோ பற்றியது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படிச் செய்வதாயிருந்தால் ஏன் பாப்ரியோடு நிறுத்த வேண்டும்? 1984ல் தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலை பற்றியும் பேசலாம். பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்து விடப் பட்ட மதக்கலவரங்களைப் பற்றியெல்லாம் பேசவேண்டியிருக்கும். வேண்டாமே!
பொருளாதாரம், தேசப் பாதுகாப்பு, மக்கள் நலம் ஆகிய எந்த விஷயத்திலும் பாஜகவை குற்றம் சாட்டவோ, பாஜக மீது விரல் நீட்டவோ எந்த முகாந்திரமும் இல்லை என்று உங்களுக்கே தெரிந்திருக்கிறது. அதனால் தான் “மதவாதக் கட்சி” என்று ஊசிப்போன உளுத்தை வாத்த்தை இந்த நேரத்தில் கையில் எடுக்கிறீர்கள். இது தான் உண்மை, இல்லையா?
இந்தத் தேர்தல் இப்போது எரிந்து கொண்டிருக்கும் பிரசினைகளைப் பற்றியதாகவே இருக்க வேண்டும், அப்படியே இருக்கும். நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பணவீக்கம் (inflation) பூஜ்யத்திற்கும் கீழே போய் பணப் பிதுங்கல் (deflation) வரும் அபாயகரமான நிலை ஏற்பட்டிருக்கிறது, உலக அளவில் எல்ல நாடுகளும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க புதியவகை நடவடிக்கைகளை எடுத்து வந்தபோது, உஙக்ளைப் போன்ற ஒரு பொருளாதார நிபுணர் தலைமையில் இயங்கும் அரசு, ரிமோட் கண்ட்ரோல் நெருக்கடிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நிலைமை தானாக சீரடையும் என்ற கரும்பாறை நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் அரசுகள் ஊக்கத் திட்டங்கள் (stimulating packages) தீட்டி வந்த சமயத்தில், உங்கள் அரசு தன் “சாதனைகளை”ப் பற்றி செய்தித் தாள்களில் விளம்பரங்கள் மட்டும் அளித்து ஊடகங்களை மட்டும் ஊக்குவித்து வந்தது!
வாஜ்பாய் அரசு ஆரம்பித்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் போன்று மிகப் பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களை உங்கள் அரசு இழுத்து மூடியது. அது ஒன்றும் மதவாத அஜெண்டா இல்லையே, அனைத்து மக்களும் பயன்பெறும் சீரிய செக்யுலர் திட்டம் தானே.. பழங்கால மன்னர்கள் பஞ்ச காலத்தில் தான் பெரிய கோயில்களும், அரண்மனைகளும் கட்டுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு பெருக வேண்டும், மக்கள் கையில் பணம் சென்றடைய வேண்டும் என்பதற்காக. லக்னோவின் இமாம்பாராவும்,ஜோத்பூர் அரண்மனையும் அப்படிக் கட்டப் பட்டவை தான். இந்தப் பழைய பொருளாதாரம் (old economics) உங்களைப் போன்ற ஒரு நிபுணருக்கு எப்படி மறந்து போயிற்று?
இதன் விளைவுகள் பயங்கரமான இருக்கின்றன. ஏராளமானோர் வேலையிழந்து வருகின்றனர். ஏற்றுமதி இறக்குமுகத்தில் இருக்கிறது. எல்லா தொழில்துறைகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. இதைச் சீர்செய்வதற்காக உங்கள் கட்சியிடம் உருப்படியாக ஒரு திட்டமும் இல்லை. ஒப்பீட்டில் பா.ஜ.க தெளிவான, தீர்க்கமான செயல்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் முன்வைத்திருக்கிறது.
உதாரணமாக, பா.ஜ,கவின் ஐ.டி துறை முன்னேற்ற வளர்ச்சித் திட்ட ஆவணம் – http://www.scribd.com/doc/13267908/BJPs-IT-Vision-Document-Elections-2009
எல்லாவற்றும் அடிப்படையான தேவை தலைமை. இந்தத் தேர்தலில் மிக மிக முக்கியமான கேள்வி அது தான்.
ஒருபுறம் உறுதியான, தீர்க்கமான முடிவுகளை சுயமாக எடுக்கும் தலைமை நிற்கிறது. இன்னொரு புறம், தலைமை என்ற பண்புக்கு மகா சுமாரான மாற்றாக, உங்கள் “வாடகை தலைமை” (surrogate leadership) நிற்கிறது. எந்த உறுதியான முடிவையும் எடுக்க முடியாமல் துவண்டு, தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கக் கூட அது தயங்குகிறது. ”பதவிக்கு மட்டும் பிரதமர், அதிகாரத்திற்கு அல்ல” ( PM in office, not in power) என்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைமையைப் பற்றி சர்வதேசப் பத்திரிகைகள் வரை எழுதும் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளது. அரசாட்சி (governance) என்பதே நடக்கிறதா இல்லையா என்றே சந்தேகம் வரும் அளவில் இந்த அரசின் செயல்பாடுகள் இருந்துள்ளன.
”உறுபசியும், ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு” என்று திருவள்ளுவர் என்கிற தமிழ் முனிவர் சொல்கிறார். இதில் ஒவ்வொரு விஷயத்திலும் உங்கள் அரசு தோல்வியைத் தழுவியுள்ளது.
இன்றைய இந்தியா பெரும் முன்னேற்ற தாகத்துடன் இருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை அது விழைகிறது. தன் சுதந்திரத்தையும், தேசப் பாதுகாப்பையும் எந்த சக்தியிடமும் சமரசம் செய்துகொள்ளாத அரசையும், தலைமையும் அது வேண்டி நிற்கிறது.
இந்தியா இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறது. India deserves better. இந்தியா மாற்றத்தை விரும்புகிறது. அதை உணர்ந்தே அது வாக்களிக்கும்.
குட்பை!
அன்புடன்,
ஜடாயு
http://jataayu.blogspot.com/

Series Navigation