காகித வீடு…

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


இரவெல்லாம் விளக்கெரிவது
என் வீட்டு எலிகளுக்குப்
பிடிக்குமோ பிடிக்காதோ ?

நானில்லா பகல்களில்
எலிகள்
இரவைப் போல் இருந்து கொள்கின்றன.

அவற்றின் நடமாட்டம்
நாளும் நாளும் நானறியும்படி.

நானில்லா சமயங்களில்
நானென்று என் துணிகளையும்
நானிருக்கும் சமயங்களில்
என் துணியென்று என்னையும்
இதுவரை கடித்ததில்லை.

நடு இரவில்
கண்ணயர கை தவறும் புத்தகம்
காற்றாடி போல்
காற்றாடி கீழ்
கண்ணியில் சிக்கிய பறவையாய்
சிறகடிக்கும்.

பாயில் என்னோடு படுத்துப் புரண்டு
காகிதம் கசங்குவது கண்டு
எலிகள்
சிரித்துச் சிணுங்குவது கேட்கும்
சிலநேரம் தூக்கத்தில்.

இரவெல்லாம் எரியும் விளக்கை
என்னுறக்கத்திற்குப் பின் அல்லது
தன்னுறக்கம் கெடுவதெண்ணி
எழுந்துபோய் அணைக்க
எலிகள் நினைப்பதில்லை.

இரவில் நான்
எழுதிக் கிழித்த காகிதக் கசங்கலுக்கும்
தனியே நான்
கொறித்துப் போட்ட கடலைச் சிதறலுக்கும்
எலிதான் காரணமென்று
பழி சுமக்கிறது பார்ப்பவர் கண்களுக்கு.

காகித்தைக் கிழித்துப்போட
எலிக்கும் தெரியுமென்றால்…
எலிக்கும் தெரியுமோ
கவிதை எழுத…
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி போலவா
என் வீட்டு எலியும் ?

விடியற்காலை
வீட்டுக்கு வரும் பெரியவர் ஒருவர்
எழுதிக் கிழித்த இந்தக்
கசங்கல் காகிதக் கவிதை கண்டு
“இதற்குத்தான் வேண்டும்…”
அவர் முடிப்பதற்குள்
“பூனையா ?” என்பேன்.

வீட்டுக்கு வேண்டுமென்பார்…
பெண்ணியம் பேசும் உலகில்
பெருமையாய்ப்
பெண்ணை.

(சென்னையில் வாழ்ந்த காலங்களில் சில ஆண்டுகள் தங்கியிருந்த ஒரு வாடகை வீடு.)
—- —-
thamilmathi@yahoo.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி