கவிதைப் பெண்ணின் கரு

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

கரு.திருவரசு


கண்ணே! கவிதைப் பெண்ணே! எனும் தலைப்பில் ‘திண்ணை ‘யிலே (இணையவெளி மின்னிதழ்) வந்த என் கவிதையைப் படித்துவிட்டு ஒரு கேள்வி கேட்டு மின்னஞ்சல் வந்தது. (Anandi Ayyar 07.18.2002) ‘அந்தக் கவிதையிலே நான் ‘கரு: இரவீந்திரநாத் தாகூர். கவிதை: கரு.திருவரசு ‘ எனக் குறிப்பிட்டிருந்ததால் எழுந்த கேள்வி ‘இது.

கேள்வி: கவிதை நன்று. இரவீந்திரநாத் தாகூரின் எந்தக் கவிதையைக் கருவாகக் கொண்டு ‘அதை எழுதினீர்கள் என ‘அன்புகூர்ந்து எனக்குச் சொல்லமுடியுமா ?

இந்தக் கேள்வி என்னை நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னே இழுத்துச் சென்றது. ‘அதற்கு நான் சொல்லும் விடையில் கொஞ்சம் இலக்கியச் செய்தி இருக்கலாமோ என்ற எண்ணத்தால் ‘அதை ஓர் செய்திக் கட்டுரையாகத் ‘திண்ணை ‘க்கே எழுதுகிறேன்.

1960களில் பெரும்பாலும் நாள்தோறும் மாலையில் எங்களூரில் இருந்த (Penang, Malaysia) தமிழ் இளைஞர் மணிமன்றத்திலே இளைஞர்களான நாங்கள் ஒன்றுகூடுவோம். எங்களையெல்லாம் இணைத்து வளர்த்தது தமிழ். அது ஒரு பொற்காலம். அந்தப் பொற்காலத்திலே எழுதியதுதான் அந்தக் கவிதை.

எங்கள் தமிழ் ஆர்வத்துக்கும் ஆசைகளுக்கும் அருவிகளாய் அமைந்த செயல்களிலே ஒன்றாக ‘அரும்பு ‘ என்னும் பெயரிலே தமிழ்த் தட்டச்சின் துணையோடு மாத இதழ் ஒன்றை வெளியிட்டோம். அந்த இதழிலே வந்ததுதான் அந்தக் கவிதை.

இந்திய தேசியப் பாடலைத் தந்தவரும் இந்தியர்களிலே நோபல் பரிசு பெற்ற இலக்கியவாணருமான வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் நினைவுநாள் (அவர் நூற்றாண்டுவிழா என எண்ணுகிறேன்) அப்போது கொண்டாடப்பட்டது. அதன் தொடர்பில் எங்கள் அரும்பிலே அவர் கவிதை வெளியிட விருப்பம். ஆனால், எங்களிடம் அவர் கவிதைநூல் எதுவும் இல்லை. நான் என்னிடமிருந்த நூல்களிலே அவரைப்பற்றி ஏதாவது கிடைக்குமா எனத் தேடினேன். ‘ஏட்டில் எழுதாக் கவிதைகள் ‘ என்றொரு நூல். அந்த நூலில் கிடைத்த கருவில் பிறந்ததுதான் அந்தக் கவிதை.

‘ஏட்டில் எழுதாக் கவிதைகள் ‘ நூல்பற்றிச் சில சொல்லவேண்டும். தமிழ்நூல் சுவைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அருமையான நூல். மக்கள் பாடல்கள், நாட்டுப் பாடல்கள், காட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள் என்றெல்லாம் சொல்லப்படும் நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பு நூல். 1959ம் ஆண்டு முதல்பதிப்பும்,1960ம் ஆண்டு இரண்டாம் பதிப்புமாக வெளிவந்த இந்நூல், சிறந்த மக்கள் தொண்டரான செ.அன்னகாமு 12 ஆண்டுகள் முயன்று தொகுத்த நாட்டுப்பாடல்களின் தொகுப்புநூல். எழுதாத கவிதைகளான நாட்டுப்புறப் பாடல்களில் எனக்கிருந்த ஈடுபாட்டால் என் கண்ணில்படும் நாடோடிப் பாடல் தொகுப்பு நூலை வாங்கிவிடுவேன். என்னிடமுள்ள அந்தத் தொகுப்பு நூல்களில் அருமையான நூல் ‘ஏட்டில் எழுதாக் கவிதைகள் ‘. (ஏட்டில் எழுதாக் கவிதைகள், தொகுப்பு-விளக்கம் செ.அன்னகாமு, காந்திகிராமம், சர்வோதயப் பிரசுராலயம், தஞ்சாவூர்.) நாட்டுப் பாடல்களின் பயன்படு தன்மை, பாடும் வகை, மெட்டுகள், வேதாந்த விளக்கம் எனப் பலவாறான இனிமையான அருமையான விளக்கங்களோடு அமைந்த தொகுப்புநூல் அது. பல்வேறு தலைப்புகளில் அன்னகாமு அவர்கள் விளக்கம் எழுதத் தொடங்கும்போது அந்தந்தத் தலைப்புக்கேற்ப தாகூர் கவிதைகளின் கருத்துகளை முன்குறிப்பாகத் தந்து தொடங்கியுள்ளார். அந்தக் குறிப்புரைகள் ஒவ்வொன்றும் அற்புதமானவை, கவிதைநயம் சொட்டுபவை. அவற்றுள் ஒன்றிலிருந்து பிறந்ததுதான் அந்தக் கவிதை.

தாகூரின் அந்தக் கவிதைக் கருத்துரையை நீங்களும் சுவைக்க நான் அதைத் தருமுன் அந்த நூலிலிருந்து சில எழுதாக் கவிதைகளைப் பார்ப்போம்.

பாடறியேன் படிப்பறியேன்! பள்ளிக்கூடம் நானறியேன்!

ஏடறியேன் எழுத்தறியேன்! எழுத்துவகை நானறியேன்!

ஏட்டிலே எழுதவில்லை! எழுதிநான் படிக்கவில்லை!

வாயிலே வந்தபடி வகையுடனே நான்படிப்பேன்!

எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதா ? சிந்துபைரவி படத்திலே சித்திரா பாடும் பாட்டுத்தான்.

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டூடே

நில்லென்று சொல்லி நிலைநிறுத்திப் போனீரே!

தலையை வகுந்து தாழம் பூச்சூடி

தலையிலே உள்ளெழுத்தைத் தாயார் அறியவில்லை!

மாலையிட்ட மங்கை படத்திலே டி.ர்.மகாலிங்கம் பாடும் பாடல் விருத்தம்.

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்தரிக்காய்

பூமணக்கும் கோகிலாபுரம் போகமனங் கூடலையே!

கண்ணுமணி பொன்னுமணி கந்தருட வேலுமணி

வேலுமணி வேணுமின்னு வெகுநாத் தவசிருந்தேன்!

ஊர்க்குருவி வேடங்கொண்டு – நீ

உயரப் பறந்தாயானால் – நான்

செம்பருந்து வேடங்கொண்டு

செந்தூக்காத் தூக்கிடுவேன்!

செம்பருந்து வேடங்கொண்டு – நீ

செந்தூக்காத் தூக்கவந்தால் – நான்

பூமியைக் கீறிக்கொண்டு

புல்லாய் முளைச்சிடுவேன்!

கானக் கரிசலிலே களையெடுக்கும் பெண்மயிலே

நீலக் கருங்குயிலே நிக்கட்டுமா போகட்டுமா!

ஒருநாள் ஒருபொழுது உங்கமுகம் பாராமே

ஓடைக்கரை மண்ணெடுத்து உருவாரம் செஞ்சுபார்த்தேன்!

பாட்டுக்குப் பாட்டெடுப்பேன் பாட்டனாரைத் தோக்கடிப்பேன்!

எட்டாத பாட்டுக்கெல்லாம் ஏணிவச்சு நான்படிப்பேன்!

மாடுரெண்டும் மதுரைவெள்ளை மணிகரெண்டும் திருநெவேலி

குப்பிரெண்டும் கும்பகோணம் குலுங்குதடி ரோட்டுவழி!

சாந்துப்பொட்டு தளதளென – நல்ல

சந்தணவாடை குமுகுமென

கூந்தலழகுக் காரியெல்லாம் – காலைக்

குதித்துக்கும்மி யடியுங்கடி!

உச்சி வகுந்து பிச்சிப் பூச்சூடி

உச்சியிலே உள்ளெழுத்தை உள்ளவர்கள் அறியலையே!

இனி, ‘கண்ணே! கவிதைப் பெண்ணே! ‘ எனும் என் கவிதையைப் பெற்றெடுத்த தாகூரின் கவிதையுரை – செ.அன்னகாமு தந்த கருத்துக் கவிதைநய உரை, அதைப்படித்து நிறைவு செய்வோம்.

‘எனது கவிதைப்பெண் அவளுடைய அணிகலன்களைக் கழற்றி வைத்துவிட்டு செய்யாக் கோலமொடு பொலிவுற்று விளங்குகிறாள். உடையிலும் அணிகளிலும் அவள் பெருமிதம் கொள்ளவில்லை. அணிகள் நம்முடைய ஒற்றுமையைக் குலைக்கும். உனக்கும் எனக்கும் இடையில் வந்து சத்தமிட்டு நினது அந்தரங்கப் பேச்சை நான் கேட்காது செய்துவிடும். நினது பார்வையில் எனது காவியப்பெருமை நாணுகிறது. ஏ கவியரசே, நினது திருவடியில் நான் அமர்ந்திருக்கிறேன். எனது வாழ்வை நாணற்குழல்போல் நேராக அமைத்து அதில் நாத ஒலி செய்தருள்வாயாக! ‘

***

thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு