கவிதைகள் சில

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

ஹரன்


கா(த)ற் சிலம்பு
கையிலுள்ள சிலம்பு எனதென்று
கர்வித்திருந்தேன்.
உடைக்கும் வேளையைப் படைத்தாய்.

தெறித்தது மறுப்பு
பறித்தது உயிர்ப்பு.

நரகந்தான் விளைவு என்ற
நிதர்சன வேளையில்
மனம் சொன்னது,
திரிசங்கு சொர்க்கமே
தெவிட்டாத இன்பம் என்று.

ஆம்
காலம் கடந்த சூர்ய நமஸ்காரம்

* * * * * * * *

உடைந்த தாஜ்மஹால்

அன்று
என் காதலைக் கொன்று( ?)
ஒரு தாஜ்மஹால் எழுப்பினேன்.

குற்றுயிராய்க் கிடந்த காதல்
இன்று
விஸ்வரூபம் எடுத்தது;
தாஜ்மஹாலை உடைத்தது;
தானும் அழிந்தது.

அன்றே நான் முழுவதுமாய்க் கொன்றிருந்தால்
எனக்கு ஒரு தாஜ்மஹாலாவது மிஞ்சியிருக்கும்.

இன்றோ
எங்கும் இடிபாடுகள்
இரத்த வெள்ளங்கள்.

* * * * * * * * *

திருமந்திரம்

பொன்விலங்கிடப்பட்ட பேதையே
புதைக்கப்பட்ட உணர்வே
உன் மெளனத்தை
ஒப்புக்கொள்கிறேன்.

என் ஆத்ம சகி!
இறுதியாக ஒரு விண்ணப்பம்.
ஒரு நாள் சேதி வரும்
அன்று
சங்கு ஊதும் முன்பு
என் செவியோடு உந்தன்
திருமந்திரம் ஓது.

அந்த மூன்று வார்த்தை மந்திரம்
தரும் நிம்மதி நிரந்திரம்.
காத்திருப்பேன் வேகாமல்.

நீ வைத்த நெருப்பை
நீயே அணைக்காமல்
யாரோ வைக்கும் நெருப்பு
என்னை அழிக்காது
சத்தியம்.

* * * * * * *

மனை-வி

உன்னிடம் பல அறைகள்
புழக்கதிற்கு வராத சில அறைகள்
திறக்கவே இயலாத சில பெட்டிகள்

உன்னிடம்
கல்விக்கு இடமுண்டு
கலவிக்கும் இடமுண்டு.

பகலில் உழைத்த மனிதனுக்கு
இரவில் நிம்மதி
உன் மடியில்.

விழாக் காலங்களில்
உனக்குப் புதுப்பொலிவு
முழு ஆபரணங்களுடன்
நீ
அலங்காரத் தேவதை.

அன்று
இளைப்பாற இரண்டு திண்ணைகள் உண்டு
இன்றோ
மெலிந்த/மறைந்த முகடுகள்
நாகரிகம் கருதி.

உன்னைக்
கட்டுவதும் சிரமம்
காப்பதும் சிரமம்
ஆனால்
நீ இல்லா மனிதன்
அனாதை
உனது கம்பீரமே
அவனின் கெளரவம்.

கள்வர்களின் முதல் கவனம்
உன் மீதே
கவனம் தேவை.

விலக்கு இல்லா விதி இல்லை
எனும் விதிப்படி
ஒரு வேண்டுகோள்
வீட்டுக்கு வெள்ளை அழகு
பெண்ணுக்கு மஞ்சளே அழகு.

இல்லம்/இல்லாள் பேணுவோம்.

(ப்ளீச்சில் முகம் வெளுத்த பெண்ணைக் கண்டு எழுதியது)
———————
harankpm@yahoo.com

Series Navigation