கவிதானுபவம்-1 தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

தமிழ்மணவாளன்


மூர்ச்சையான வாழ்வியக்கத்தை உயிர்ப்பிக்கும் சொற்களின் சுவாசம்
————————————–
நூல்: வனப்பேச்சி
ஆசிரியர்: தமிழச்சி தங்கபாண்டியன்
—————————-
பெருவெளிச்சத்தின் அருகிருந்து புறப்பட்டு, வெகுதூரம் வந்து திரும்பிப் பார்க்க நேர்கையில் ஒரு சிறு புள்ளியெனத்
தோன்றுகிறது அவ்வெளிச்சம். பயணத்தின் பாற்பட்ட சலிப்பும் பேரொளியின் பிரிவு தரும் தவிப்பும், அதிர்வையும் அயர்வையும் தந்து விடுகின்றன.
எதையேனும் இழந்து விடுவதும் இழந்ததை மீண்டும் பெற யத்தனிப்பதும் வாழ்வின் முடிவுறாத நிகழ்வுகளாகும் பட்சத்தில் எதை இழந்திருக்கிறோம்,
எப்படி மீட்க முயல்கிறோம் என்பது முக்கியமானது.
வாழ்வின் சுகம் எனப்படுவது லௌகீக வாழ்வின் நிறைவுறல் என்பது மனித மனத்தின் யதார்த்தமாயினும்,
பல வெற்றிடங்களைக் கொண்டே நிரப்பியிருக்கிறோமென்னும் நுட்பமான உணர்தலோடும் ஆதங்கத்தோடும், அவ்விதம் இழந்த வாழ்வை,
வார்த்தைகளைக் கொண்டு மீட்டெடுக்கும் முயற்சியாகவும், கவிஞர் தமிழ்ச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதைத் தொகுப்பில் பல கவிதைகளைக்
காணமுடிகிறது.
மூர்ச்சையான நகர வாழ்வியக்கத்தை உயிர்ப்பிக்கும் சொற்களின் சுவாசம்; குறைந்தபட்ச ஆசுவாசம்.

நினைவுகள் மட்டும் இல்லையென்றால் நிமிடங்களோடு முடிவுறும் வாழ்வு. வாழ்வின் நீளம் என்பது கூட, பிறப்புக்கும் மறைவுக்குமான
இடைவெளியெனினும், நினைவின் தொடர்ச்சியாலேயே அது முழுமையடைகிறது.
எத்தனைத் திண்மையான மனமிருந்தாலும், தன்னிலும் பலமான ஒன்றை அல்லது ஒருவரை, பலமான அல்லது பலமானவராக
இல்லையெனினும், கற்பனை செய்துகொண்டு கைகோர்த்துக்கொள்வது அவசியமாகிறது.
நல்ல நட்பைத் தேடுவதுஅ•தே. நல்ல வாழ்க்கைத்துணைக்கு ஏக்கமுறச்செய்வது அ•தே. நல்ல தலைமையை நாடுவதும் அ•தே.
இவையாவையும் மீறி அரூப உணர்வுகளுக்கு உருவம் தந்து ஒப்படைத்துவிடுவது தான் உச்சம். உலகின் எல்லா இனமக்களிடமும் இத்தகைய
ஒப்படைப்பு உணர்வு இருந்தே வந்திருக்கிறது.
தமிழ் மரபில் பார்த்தாலும் அதற்கான சான்றுகள் பல உண்டு. சிறு தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியென
இதைச்சொல்ல முடியும். முன்னோர்கள், வீரர்கள் போன்றோரின் நினைவாக நடுகற்கள் வைத்துத்தொழுவதும் இதையொட்டியே.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
என்னும் குறள் நினைவுகூரத்தக்கது.

மரங்களில் தெய்வங்களை ஏற்றி வழிபாடு செய்தலும் உண்டு.

தொன்னுறு கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை
என்று பனைமரத்திலும்,
நெடு வீழிட்ட கடவுளாலம்,
என்று ஆலமரத்திலும் தெய்வத்தை ஏற்றிய இலக்கியச் சான்றுகள் தமிழில் பலவற்றைக் காணமுடியும்.

வழிபடு தெய்வம் நிறபுறங்காப்ப
பழிதீர் செல்வமாகு வழிவழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே

என வழி வழி வந்த மரபின் தொடர்ச்சியிது.

கிராம தெய்வம், எல்லைச்சாமி, குலதெய்வமெனவும், பெயரிடப்பட்ட தெய்வங்களாய் முனியாண்டி,அய்யனார்,பேச்சியம்மன்
இப்படிப்பல; தமிழச்சிக்கு வனப்பேச்சி. வனப்பேச்சி தெய்வமல்ல. பால்ய காலத்துச் சினேகிதி. உடன்வருபவள்.அவள் முன்னே நெக்குருகி பாசுரம் பாடவேண்டியதில்லை.
கைபிடித்து அழைத்துக்கொண்டு கடைத்தெருவுக்குப் போகலாம்.

வனப்பேச்சி குறித்த இரு கவிதைகளிலும் வனப்பேச்சி இப்படியாகத்தான் வலம் வருகிறாள்.புற
வெளிச்சம் கண்கூசும் நகரவீதிகளில் நடந்துவரும் அகவெளிச்சத்தின் அடையாளமாக வனப்பேச்சி திண்ணையற்ற வீட்டை புறமொதுக்கி விமர்சிக்கிறாள்.
கிராம வாழ்வின் ஞாபகங்களோடு கவிதைகள் பலவற்றை எங்சோட்டுப்பெண் தொகுப்பில் காணமுடிந்தது.
ஞாபக அழுத்தம் அதிகரிக்க, இயலாமையின் சோகம் கிராமத்தை விட்டு அன்னியமான கால இடைவெளி நகர வாழ்வில் தன்னையே அன்னியமாய் உணரும்
அளவுக்கு அலைக்கழிக்கிறது. அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

அடி,ஆத்தா பாத்து நாளாச்சுல்ல
பக்குன்னு இளச்சுட்டீக தாயி (உயிர்ப்பு)
எனக்கேட்பதற்குக்கூட ஊர்க்காரரின் எதிர்ப்படல் தேவையாகிறது.
ஒரு கேவலுக்காய் யாசித்துக் காத்திருக்கும் மரணம். நகரத்தில், வாழ்க்கை மட்டுமல்ல மரணம் கூட
அகௌரவமாகவே அனுசரிக்கப்படுகின்றன. (யாசிப்பு)
பகிர்ந்து கொள்ளமுடியாப் பலாப்பழம், வாடும் பயிருக்கும் தண்ணீர் வார்க்கக்கூட முடியாத நட்பின்மை, இப்படியாக.

நகர வாழ்வு ஏற்படுத்தும் புழுக்கம் வெக்கை, வெயில், கோடை, அனற்பொழுது, துரோகம், குரோதம், கரிப்பு,இம்சை,
வடு என்று இவரது கவிதைகளில் வார்த்தைகளாகின்றன.
புனைவுதளத்தில் சில உச்சபட்ச சாத்தியங்களை ஆறாம் புலன்,இருண்மை, ஆழ்கை போன்ற கவிதைகள்
அடைந்திருக்கின்றன.

A power of perception, seemingly independant of the five senses, keen intuition.

ஆறாம் புலன், ஆறாம் அறிவல்ல. நேர்மறைக் கூறுகளைக் கண்டடையத் துணையாவது ஆறாம் அறிவெனில், ஆறாம் புலனுக்கு அது அத்தியாவசியமல்ல.
மிக நுட்பமாய், உள்ளுணர்வின் பீறிடலில் மெல்ல உருவாகும் ஆறாம் புலன், ஐம்புலன்களின் எதிற்மறைகளையும் சேகரித்துச் செரித்து நேர்மறையாகிப் போவதும் உண்டு.
துல்லியமான புனைவில் செதுக்கப்பட்ட முழுமையான கவிதையென மாறியிருக்கிறது, ஆறாம் புலன்.
மின்கம்பத்தில் தொங்கிய ஊழியரின் உடல் கண்டு,பிறப்பைப் போல் மரணமும் அந்தரங்கமாய்
இருக்க வேண்டும் என்று ஆதங்கப்படும் கவிமனம் கவனத்துக்குரியது.
பெண்ணியம் குறித்தான தீராதவள்,சுயம்பு, ஏவாளின் துளி, மீறுதல் போண்ற கவிதைகளை வாசிக்கிறபோது கருத்தின் மீதான தீவிரம் எவ்விதத்திலும் ஆண் விரோதப் போர்வை கொண்டதாக இல்லை என்பது முக்கியமானது.வேறு விதமாகச் சொல்வதெனில், ஆண் விரோதச்
சாயலற்ற பெண்ணியக் கவிதைகளும் கருத்தியல் சார்ந்து தீவிரத்தன்மை கொண்டவையாக இயங்கமுடியும் என்பதற்கான சான்றுகளாக இந்தக்
கவிதைகளைச் சொல்லமுடியும்.

வாலிபத்தின் கனவொன்றைத் துய்த்த ரகசியத்துடன்
பிரிந்தோம் நாம்

என்னும் வரிகளின் அழகியலும் காதலியத்தின் வெளிப்படுத்தவியலா அந்தரங்கச் சாயலின் தொனியும் கொண்டு,வாசிக்கிற போது வேதியல் மாற்றம் பெற்று
காதல் வெளியெங்கும் பனிமூட்டம் கொள்ளச் செய்கிறது.
சமகால நிகழ்வுகளை, கவிதையாக்குவதென்பது தவிர்க்கவியலாதது.தமிழச்சி தன்னைப் பெரிதும் பாதித்த விஷயங்களை
கவிதையாக்கியிருக்கிறார். காயத்தை உலரவிடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்வதும் நேற்றைய ரணத்தைக் கீறி, ஆறுவதைத் தாமதப்படுத்தச் சொல்வதும்
தஸ்லிமாவிற்கு வழங்கும் ஆலோசனையெனில் கவிமனத்தின் கடுங்கோபம் அச்சமூட்டுவதாய் இருக்கிறது.
நவீன கவிதைகளின் முக்கியக் கூறாகக் இருக்கும் புதிய உவமை உத்திகள் தொகுப்பு முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

நொறுக்கப்படும் சரளையென, சுருண்டிருக்கும் சர்ப்பமென, அபூர்வமாய் சூல்கொண்ட பெண்ணின் சோபிதத்துடன், சப்பாத்திக் கள்ளிகளில் சிக்குண்ட
சரிகைப் பாவாடையின் ஓரமென, உதாசீனப் படுத்தப்பட்ட இராப்பிச்சையின் பசியாய்
என பலவற்றை எடுத்துச் சொல்ல முடியும்.

எஞ்சோட்டுப் பெண் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கும் வனப்பேச்சி தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கும் வடிவ உத்தியில் பெரும் மாறுதலைச் சந்திக்க
நேர்கிறது. காலம் எல்லாவற்றையும் தான் மாற்றமடையச் செய்கிறது. கவிதையும் கூட. வேறு பலதளங்களிலும் யுத்திகளிலும் எழுதுவது எதிர்காலத்தில் சாத்தியமே.

உணர் படகின் சமன் குலைக்கும்
நம் உள் வெற்றிடத்தின்
எடையை ஏறுமுன்
எங்கு இறக்கி வைக்க (வெற்றிடம்)

சமன் குலைக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், வெற்றிடத்தின் எடையை ஏறுமுன் இறக்கி வைக்கவும், வார்த்தைகளே இவருக்கு
வாய்த்திருக்கின்றன.காலமும் வாழ்வும் எத்தகைய சுமையைச் சுமத்தினாலும், தேவையெனில் சுமக்கவும் அல்லவெனில் இறக்கி வைத்துவிட்டுத்
தொடரவுமான வலிமை இவரது கவிதைகளுக்குண்டு என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.

****************************************************

வெளியீடு:
உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை 600 018

*****************

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்