கவிஞரை விட்டுக் கொடுக்காத கவிஞர் விவேக்

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

பாலு மணிமாறன்


சிங்கப்பூரில் நடந்த “மியுசிக் மசாலா” இசை வட்டு வெளியீட்டு விழாவில் கவிஞர் பனசை நடராஜனும் , கவிஞர் யுகபாரதியும் இருட்டடிப்பு செய்யப் பட்டது பற்றிய சகோதரர் பாண்டித்துரையின் ஆதங்கத்தைப் படித்தேன்.

நானும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

முதலில், பெரிய அளவில் செயல் புரிய எண்ணத்துணிந்த இசையமைப்பளர்கள் ஷவ்ரோஸ்கான் & சிவரஞ்சனிக்கும், அவர்களுக்கு பக்க பலமாக இருந்த “ஐஸ்” பட நாயகன் அசோகிற்கும் வாழ்த்துக்கள். அந்த இசை வட்டில் இருந்த பாடல்கள் அனைத்தயும் கேட்டேன். சமீப கால இசைப்போக்கின் கூறுகளை உள்வாங்கி, உழைப்பைக் கொட்டி தங்களது வருகையை தெளிவாக பதிவு செய்திருக்கிறார்கள், ஷவ்ரோஸ்கானும், சிவரஞனியும்! இந்தப் பெயர்களை நீங்கள் இனி அடிக்கடி கேட்க நேரும் என்பதால் தமிழக இசை ஆர்வலர்கள் இந்தப் பெயர்களை இப்போதே குறித்துக் கொள்வது நல்லது.

மேடையில் பல விஷயங்களையும் ஐஸ் பட நாயகன் அசோக்கே முன்னின்று செய்ததை பார்க்க முடிந்தது. பெரிய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட, பலநூறு ரசிகர்கள் கூடிய இவ்விழாவில், சிறு சிறு ஏற்பாட்டு தவறுகள் இருந்தது உண்மைதான் (மேடையில் சிறப்பு விருந்த்தினர்கள் உட்கார சேர் போட ஆளில்லாமல் ஏற்பாட்டளர்கள் தவிக்க, கீழே அமர்ந்திருந்த சுப்ரீம் ஸ்டார் சரத்தும், சின்னக் கலைவாணர் விவேக்கும் தங்களது நாற்காலிகளை தலைக்குமேல் தூக்கி மேடையேறி நிஜத்திலும் நாங்கள் நட்சத்திரங்கள்தான் என்று நிரூபித்தார்கள் )

பலருக்கும் பலரும் மாலை போட்டுக் கொண்ட இவ்விழாவில், கடைசிவரை கவிஞர்கள் பெயர்கள் கொண்டு கொள்ளமல் விடப்பட்டதும், கடைசியில் சின்னக் கலைவாணர் விவேக்கின் பேச்சில் ( பாண்டித்திரை எழுதிக் கொடுத்த “துண்டுச்சீட்டின்” உபயத்தில் )” சிங்கப்பூர் தமிழர்களால் வெளியிடப்படும் இந்த இசை வட்டில் எங்கள் தமிழ்நாட்டின் பங்கும் இருக்கிறது. தமிழகத்தின் பனசையில் இருந்து சிங்கப்பூரில் வந்து பணிபுரியும் கவிஞர் பனசை நடராஜன் தான் அந்த பங்களிப்பளர்” என்று சொல்லி எங்களைப் போன்ற கவிதை ஆர்வலர்களின் நெஞ்சில் பாலை வார்ப்பதும் நிகழ்ந்தது. அதற்கப்புறம் விழா ஏற்பாட்டாளர்கள் விழித்துக் கொண்டு, பனசை நடராஜனுக்கும் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

பாண்டித்துரை எழுதிக் கொடுத்த சீட்டை தூர எறிந்துவிடும் சாத்தியமுள்ள சினிமாத்தனம் தவிர்த்து, ஒரு கவிஞனை மேடையில் கெளரவிக்க காரணமாக இருந்த சின்னக் கலைவாணர் விவேக்கிற்கு ஒரு சலாம் ! (என்னதான் இருந்தாலும் விவேக்கும் ஒரு கவிஞரில்லையா)

ஒரு பாண்டித்துரையும், ஒரு விவேக்கும் இல்லையென்றால், அங்கு ஒரு கவிஞன் அடையாளப்படுத்தப் படும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும் என்பதே உண்மை !

பாலு மணிமாறன்


paalumani@gmail.com

Series Navigation

பாலு மணிமாறன்

பாலு மணிமாறன்