கவிக்கட்டு …. 47

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

சத்தி சக்திதாசன்


உருவம் உண்மை சொல்லுமா ?

உள்ளதைச் சொல்லிவிடு
உருவம் உண்மை சொல்லுமா ?

இதயத்தின் நிறத்தை
இயம்பிடுமா உந்தன் வதனம்
இல்லாத
இரக்கத்தை
இருக்கு என்றே காட்டிடுமோ ?
இயல்பான தோற்றமே !

உதயத்தின் நேரம் தொட்டு
உறக்கத்தை தழுவும் மட்டும்
உன்னுடனே கூட இருந்தும்
உண்மையைக் காணாதது
உன் குற்றமா ? என் குற்றமா ?

மதியத்தின் வெப்பம் தனை
மறைக்கும் ஒரு நிழல் போலே
மதி நிறைய குள்ளம் கொண்டு
மறைத்து நீயும் ஏனென்னை
மனிதம் மீது ஒர் வெறுப்பு
மனிதா நீ ஏன் படரவிட்டாய் ?

உள்ளதைச் சொல்லிவிடு
உருவம் –
உண்மை சொல்லுமா ?

கதியற்று நான் அன்று
கதிகலங்கி நின்றபோது
கதைகட்டி நீயும் என்
கருணையைத் திருடி விட்டாய்
கள்ளர்க்கும் ஒரு நிறம்
கடவுள் ஏன் கொடுக்கவில்லை ?

நாதியற்ற வேளையில்
நன்றி மறந்தவர்
நயவஞ்சகம் புரிந்தொரு
நலிந்த செயலாற்றியே
நல்லதொரு பாடம்
நன்றாய்ப் புகட்டினனே

உள்ளதைச் சொல்லிவிடு
உருவம் –
உண்மை சொல்லுமா ?

****

நாளை என்றொரு நாளை

பாதையோரம் படுத்திருந்து நாளேல்லாம் பசித்திருந்து
பார்த்திருக்கும் தோழனவன் நாளை என்றொரு நாளை

வீதியோரம் விழிகளிலே ஏக்கம் தேக்கி வாழும் தோழர்
விதியில்லை,அவர் காத்திருப்பர் நாளை என்றொரு நாளை

சாதியற்ற ஒரு தனியிடம் பாவம் சாதம் தான் அவர் மதம்
சமத்துவம் கொண்டு நோக்குவர் நாளை என்றொரு நாளை

நீதியற்ற உலகத்தில் நாதியற்ற மனிதரின் வேதனையறியார்
நிம்மதி தேடும் அவர் நெஞ்சம் நாளை என்றொரு நாளை

கீதையற்ற பாரதம் போல் மகிழ்ச்சியற்ற மக்களவர் அங்கே
கிடைப்பது துன்பம், வாழ்வார் நாளை என்றொரு நாளை

நாளை என்றொரு நாளை காத்திருக்கும் ஏழையர்க்கு புவியில்
நாம் இன்று அந்த நாளையை இழுத்து வரலாம் வாருங்கள்

****

Series Navigation