கவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

சத்தி சக்திதாசன்


நதியின் ஓரங்களில்
நடந்து கொண்டே
நான்
நினைந்த எண்ணங்கள்
நிறைந்தே
நின்றன நெஞ்சத்தில்

கரையோரங்களில் பதிந்த
காலடிகளை கரைக்கவென
கரைபுரண்டோடும் நதியின் வெள்ளம்
காலத்தின் கோலம்
காகிதக் கப்பல்.

துள்ளிப் பாடுமந்த அயர் மீன்
துவண்டு விழும் பின்
ஆழமாய் நதியினுள்

கரையோடு
காத்திருக்கும் கொக்கொன்று
கண்விழி மூடாமலே
காற்றினிலே துள்ளும் மீனைக்
கவ்விக் கொண்டே
காத தூரம் பறந்தது

அடுத்தொரு
அயர் மீன் துள்ளும்
அதற்கெனவும்
அங்கொரு கொக்கமரும்.

மீனின் வாழ்வதுதான்
கொக்கின் வாழ்வுமதுதான்
உலகம் உருளும்
விடியும் இரவுகள்

நதியின் ஓரங்களில்
நடந்து கொண்டே
நான்

தூண்டில் போட்டங்கு
துணியால் கோவணம் கட்டிய
துவண்ட மனிதனவன்
துயிலாமல் காத்திருப்பான்
துடித்து விழும் மீனுக்காய்

பசி வயிற்றைக் கிள்ள
பயம் முகத்தைக் அள்ள
அயர்மீன் துள்ள
கொக்கு அதனைக் கவ்வ
ஆச்சரியத்தில் மெள்ள
அதிசயத்தில் தள்ள

தள்ளாடிக் கொண்டே
தனியே போகின்றான்

உலகம் உருளும்
இரவுகள் விடியும்

நதியின் ஓரங்களில்
நடந்து கொண்டே
நான்

0000

அன்னையர்க்கோர் தினமன்றோ !

சத்தி சக்திதாசன்

அன்னையர் தினமிது ; அன்புக்கோர் தினமிது
ஆழமற்ற அன்புக் கடலுக்கோர் திருவிழா

அன்னையர்க்கோர் ஆலயம் எழுப்ப வேண்டுமானால்
அறுத்துவிடும் அடிமைச் சங்கிலியை அவர்தம் கால்களிலிருந்து

பூச்செண்டைப் பரிசளித்து புளாங்கிதம் அடைவதல்ல உண்மை வணக்கம்
பூம்பாவையர் இதயம் தன்னை புரிந்து கொள்ளும் மனமே

விஞ்ஞான உலகத்தின் வேர்களென வருங்கால அன்னையர் விளங்கவே
விதைத்திடுவீர் புதுமைக் கருத்துக்களை அன்னையர் தினத்தினில்

விண்வெளிக்கலங்கள் வேகமாய் ஏகுது புதுக் கிரகங்களை நோக்கியே
விரைந்து செலுத்தும் விஞ்ஞானிகளாக வளர்த்தெடுப்போம் பெண்ணினத்தை

உயிர்காக்கும் உயர்ந்ததோர் வைத்திய உலகத்தில் சாதிக்கும் எம்மாதர் தமை
உயர்த்தி எம்சமுதாயத்தில் சமபங்களித்திடுவோம்.

பாரதி இந்தப் பார் அதனில் படித்துச் சொன்ன உண்மையிது வென்பேன்
பாரதிதாசன் பலமாக எம்மத்தியில் பல கவிதை விட்டுச் சென்றான்

அன்னையர் தினம் தான் ; அணைத்திடவும் வேண்டும்தான் – உண்மை
ஆற்றலை அன்னையர் வளர்த்திட ஆற்றுங்கள் உம் பணியை

0000

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்