கவிக்கட்டு 45 – என்னை என்ன செய்யப்போகிறாய் ?

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

சத்தி சக்திதாசன்


கண்களைச் சிமிட்டாதே
காதலில் துடிக்கிறேன்
கைகளை அசைக்காதே
காற்றுன்னைத் தீண்டிடும்

கன்னித்திருமகளே !
கனிவாய் மொழிந்திடுவாய்
என்னை என்ன செய்யப்போகிறாய் ?

வேகமாய் நடக்காதே
வேகுதென் நெஞ்சமே
வெய்யிலில் வாடாதே
வெந்தணலாய் தகிக்கிறேன்

தங்கத் தமிழ்மகளே !
தந்திடுவாய் வார்த்தையொன்று
என்னை என்ன செய்யப்போகிறாய் ?

புன்னகை புரியாதே
புண்ணாகும் என்னெஞ்சம்
புதிராக மிளிர்ந்தவளே – என்னை
புதிதாகப் புனைந்தவளே

பெண்குலத்தின் பெருமகளே !
பேசிடுவாய் மொழியொன்று
என்னை என்ன செய்யப் போகிறாய் ?

இடையை வளைக்காதே
இல்லாதது ஒடிந்து விடும்
இரவினிலே நடக்காதே
இல்லை இரு நிலவுகள்

தாய்க்குலத்தின் தலைமகளே
தயங்காமல் மொழிந்துவிடு
என்னை என்ன செய்யப்போகிறாய் ?

காதலுக்கு இளையவளே
கணநேரம் நின்றுவிடு
கதவோரம் நின்றேனும்
காதோரம் கூறிவிடு

என்னிதயத்தின் உயிர்த்துடிப்பே
எங்குகிறேன் கூறிவிடு
என்னை என்ன செய்யப்போகிறாய் ?

****

தோழனே !

தொடர்ந்து வரும் தோல்விகளை கண்டின்று துவளாதே
தோள்களை உயர்த்திக் கொண்டே எழுந்திடுவாய் தோழனே !

இன்றைய துன்பங்கள் என்றுமே நிலைத்திடாது எனும் உண்மை
இதயத்தில் நிறுத்திக் கொண்டே இயங்கிடுவாய் தோழனே !

நாளைய உலகின் உயிர்த்துடிப்பு நீயே நலிந்து நீயும் வாடாதே
நம்பிக்கை எனும் தேரேறி நாயகனாய் வலம் வருவாய் தோழனே !

கோழையர் சூழ்ந்துன்னை உன் வீரம் ஒழித்திடவே முயன்றிடுவர்
கொள்கைவழி நடந்து சென்று இலக்கை அடைந்திடுவாய் தோழனே !

காலங்கள் எதிர்த்திடும்; கனவுகள் கூடக் கலைந்திடும் கலங்காதே
கண்ணீராலமைந்த கருத்தாயுதம் தனைக் கையிலெடுப்பாய் தோழனே !

வேதனைகள் நிலையல்ல சோதனைகள் தான் உன் துணையல்ல
வென்றிடும் உன் காலம் நிச்சயம் நானறிவேன் துணிந்திடு தோழனே !

****

sathnel.sakthithasan@bt.com

Series Navigation