கவிக்கட்டு 32-வாழ்க்கை வியாபாரம்

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

சத்தி சக்திதாசன்


அன்பை அடகு வைத்ததினால்
அறிவை வட்டியாய்ச் செலுத்தி
அழுந்தியது இங்கே
அறியாமை எனும் இருளிலே

ஆசையெனும் தொட்டிலில்
ஆடி என்றும் அடங்காது
ஆவல் எனும் கள்வன் மனதை
ஆக்கிரமித்துக் கொண்டான்

இருப்பதை அனுபவிக்க மறந்து
இழந்ததை எண்ணி வருந்தி
இன்பத்தை நழுவ விட்டு
இங்கு வாழ்ந்து மறைவர்

ஈட்டி போல் துயரம் பாய்ந்தும்
ஈன்ற செல்வங்கள் கோடி இருந்தும்
ஈகை மறந்து இரும்பாக்கிக் கொள்வர்
ஈக்கள் போலே இறுதியில் விழுவர்

உணர்ச்சி இருந்தும் ஏனோ
உள்ளம் தனை மறந்து
உயர்ச்சி கொள்ளும் குணத்தை
உணரார் இறுதி வரையிலும்

ஊசிகள் போல வார்த்தைகள் வீசுவர்
ஊனம் கொண்ட சிந்தை கொள்வர்
ஊளைகளிடுவர் தம் பெருமைகளை
ஊரழிந்தும் உணர்ச்சி கிறங்கார்

என்றும் தாம் வாழ்வார் எனும்
எண்ணம் மனதில் கொள்வர்
எங்கும் எதிலும் சுயநலமொன்றே
எப்போ உண்மை உணர்வார் இவரே

ஏற்றம் கொண்ட வாழ்விருந்தும்
ஏழைகள் நிலையை எண்ணிப்பாரார்
ஏணியின் துணையால் உச்சியடைந்து
ஏறிய ஏணியை எட்டி உதைப்பர்

ஜயம் கொண்டே எதையும் பார்ப்பர்
ஜக்கியம் என்றொரு சொல்லை மறப்பர்
ஜயித்ததும் தமது சொந்தம் துறப்பர்
ஜகத்தின் சிறப்பை துதிக்க மறுப்பர்

0000

கனவு கண்டேன்

சத்தி சக்திதாசன்

கனவு கண்டேன் என் தோழா நேற்றிரவில்
கதைபோல் ஒரு நிகழ்வு கண்டேன்

உணவு இல்லை எனும் உயிர் ஒன்றும் இல்லை
உண்மை அறிவு மூடிய விழிகளில்

வினவு இந்நிலை உண்மையோ என்று என் மனமும்
விதைத்தது கேள்வியை என்னெஞ்சில்

தனது நினைவுகள் இரவு வேளையில் கனவு என
தந்த கருத்து தரணியில் நிஜமாய் நிகழ்வு

எனது வேதனை பசித்தவனின் வயிற்றை நிறைக்குமா
என்னால் முடியுமா வறுமையை ஒழிக்க

மனது தவிக்குது உள்ளம் துடிக்குது ஆயினும் ஏனோ
மறக்கச் சொல்லுது குடும்பச்சுமைகள்

0000

sathnel.sakthithasan@bt.com

Series Navigation