கவிக்கட்டு 18 – எங்கே அவர்கள் ?

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

சத்தி சக்திதாசன்


எனது வரவிலே மகிழும்
அவர்கள் எங்கே ?

நான் காற்றாகி முகிழுடன்
சங்கமித்து அதனால்
குளிராகி மீண்டும்
மண்மீது பொழியும்
வேளையிலெல்லாம் குதித்து
விளையாடி மகிழும் அந்தச்
சிறுவர் கூட்டம் எங்கே ?

எனைத்தேடி ஏங்கி
ஆலயங்கள் தோறும்
அர்ச்சனைகள் புரிந்து
ஆரவாரிக்கும் அந்த
உழைப்பாளர் கூட்டம் எங்கே ?

நான் பொழிவதால் உருவாகும்
குட்டைகளில் காகிதக்கப்பல் செய்து
கனவுகளை அனுப்பி வைக்கும்
வெள்ளை உள்ளம் கொண்ட
குழந்தைக்கூட்டம் ஒன்று
அன்று ஆடி வருமே ?
இன்று அவர்கள் எங்கே ?

நானற்று வறண்ட பூமிகள்
என்னைத்தேடும் மாந்தர்கள்
எனக்கண்டு பூரிக்கும் மழலைகள்
இவர்கள் இருக்கும் இடம்
தெரியவில்லை என்றால்
ஆழியிலே அலைகளுடன் அசைந்தாடிக்
காலமெல்லாம் வாழ்ந்திருப்பேன்

அவசியம் என் மற்றம் என்று இந்த
அவசரப் பூமியிலே மழையாக
ஆகுவதைத் தவிர்த்திருப்பேன்

இல்லங்களுக்குள் இன்று
இயற்கை இன்பத்தை அடகு வைத்து
இல்லாத உலகம் ஒன்றை தொலைக்காட்சி
பெட்டிகளினுள் கண்டிருக்கும் சிறுவர்கள் தான்
இன்றைய உலகத்தின் நாளைய நாயகர்கள்
உண்மை அறியாமல் வீணே நான் ஏன் என்
உருவத்தை மாற்றிக் கொண்டேன்

ஊற்றாக நான் உருவெடுத்து
நதியாக அன்னை மலைதனில் தவழ்ந்து
உங்களுக்காய் ஓடிவரும் வேளையிலே
யாருக்காய் பிறந்தேனோ ? அவர்களை
என்றுமே அடையாமல் அணைகட்டி எனை
அடைத்து வைக்கும் மனப்பான்மை கொண்டவர்தான்
மனிதரென்றால் இனிநான் மழையாக
மாறமாட்டேன் , உங்களிடம்
நதியாக சேர மாட்டேன்

எனை நீங்கள் தேட வேண்டாம்
எனக்காக பூஜை ஒன்றும் பண்ண வேண்டாம்
என்னைத் தேடும் வெள்ளை உள்ளங்கள்
எங்கே மறைந்தன ? அதை மட்டும்
கூறிவிடுங்கள்

வாழவழியின்றி கன்னியர் பலர்
சிந்தும் கண்ணீரும் என் நதியில்
சேருதென்றால் இழந்துவிட்டேன்
மண்ணில் தவழ்ந்த மகிமைதன்னை

மழை நான் மனிதருக்காய் பொழிகிறேன்
மானிடரே நீர் ஏன்
மானுடத்தை மறந்து விட்டார் ?

என் வரவைக் கண்டு குதூகலிக்கும்
வெள்ளை உள்ளம் படைத்தவர்கள்
எங்கே அவர்கள் ?

தவழ்ந்து நான் நதியாக
உங்களுக்காய் படும்
துயரோ ஆயிரமாம்
தன்னலச் சேற்றினிலே சிக்கித் தவிக்கும்
தனிமனித வியாபார உலகிற்கா நான்
தரணியிலே விரைந்து வந்தேன் ?

அன்று நான் கிராமங்களை நனைக்கும் போது
அழகாய்த் துள்ளி ஆடி என்னால் தம்மை நனைத்து
ஆனந்தம் காணும் அந்த அற்புத மனிதர்கள்
அடங்கிப்போய் இன்று தொலைக்காட்சிகளில்
தொலைத்து விட்டார் தமது வெள்ளை உள்ளத்தை !

நாளை நான் மீண்டும் காற்றாகி முகிலுடன் கலப்பேன்
நல்லதைப் பேசி நயமாய் நடக்கும் மனிதர்
மிகையாய் வாழும் ஒரு நிலை வந்தல் மட்டுமே
மானிடரே உங்கள் புவியில் நான் மீண்டும்
மழையாய் வருவேன் அதுவரை நீங்கள்
மனிதத்தை மட்டும் இழக்கவில்லை
என்னையும் தான் !

0000

வேண்டாம்

சத்தி சக்திதாசன்

உண்மையை உள்ளத்தில் பூட்டி வைத்து வாய்ப்பேச்சில் இனிமை வைத்து
உறவாடும் நண்பர்களே நீங்கள் இனி எனக்கு காட்சி தர வேண்டாம் !

இரக்கத்தை லாபத்திற்கு விற்று நேசத்தை பணத்திடம் அடகு வைத்த
இதயமற்ற வியாபரிகளே என் ஊரில் நீங்கள் கடை போட வேண்டாம் !

பேராசைகளை தேவைகளாக்கி அநியாயத்தை ஆயுதமாய்க் கொண்டு
பொருள் சுருட்டும் வரதட்சணைக் கூர்க்காக்கள் என் நகருக்கு காவல் வேண்டாம் !

ஆண்டவனை ஆரதித்துக் கொண்டு உள்ளங்களை வருத்தும் ஜென்மங்கள்
ஆலயங்களில் அர்ச்சனை புரியும் அனர்த்தம் என் கண் முன்னே வேண்டாம் !

நீதியற்ற வழக்குகளை வாதத்திறமையால் நியாமாக்கும் ஒரு கூட்டம்
நீதியின் காவலர்களாக என் நாட்டுக் கோர்ட்டுக்களில் வலம் வர வேண்டாம் !

நிச்சயமற்ற வாழ்க்கையிலே நிலையற்ற செல்வம் தனை அளவுக்கதிகமாய்
நேசிக்கும் மனிதர்கள் சமுதாயத்தலைவர்களாக என் சமூகத்தில் வேண்டாம் !

0000
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்