கவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே !

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

சத்தி சக்திதாசன்


என்னுடல் தழுவி குளிர்மையாய்க்
கதைபேசும் இளங்காலைத்
தென்றலது ; அவள் கைகள்
அள்ளித் தெளிக்குமந்த குளிர்மையை
கூட்டி வந்ததுவே !

பார்வையெனும்
அம்பை நான்
பார்த்திருக்கும் போதெ
பாய்ச்சியவளே
பார்த்த இடமெல்லாம்
பார்க்க முடியவில்லை கண்மணியே
கூர்மையான ஆயுதத்தை

உணவின் சுவைக்காக
சிற்றுண்டிச்சாலை வந்தவன் தோழி
உனக்காவே உண்பது எனுமோர்
உளம் கொண்டது எப்படியோ ?
இன்றெனக்கு
உணவில் சுவையும் இல்லை
வாழ்வின் அர்த்தம்
புரியவுமில்லை.

உனைக் கண்ட மாத்திரத்தில்
காற்றாக நான் மாறி
கோரச் சூரியனின் அகோரம்
தணிக்க மாட்டேனோ
ஏங்கி நான் உருகி
உணர்வாய் மாறிய காலமது
கடைசிவரை நெஞ்சினின்றும் அகலாது

ஒர் வாழ்க்கை காலமதை நான்
ஓர் நிமிடத்தில் வாழ்ந்த கதை
கலர்க்கனவுகளாய் நீ
காட்சியளித்தென்னை எரித்த நிலை
அது ஒரு காலமன்றோ
அப்படியும் ஒரு கதையன்றோ !

வெறுமையாய்த்தான் வைத்திருந்தேன்
வெள்ளைக் காகிதமெனும் என்னெஞ்சை
வெற்றிடம் ஏதுமின்றி எப்படியடி
நிறைத்தாய் உன் ஓவியத்தை ?
பின் ஏன் ?
கலைத்தாய் உருவத்தை
கண்ணீரெனும் மன நீரால்

துடித்தேன் நான் ; பிடித்தாய் மனதை
தூண்டில் போட்டே
மடியவும் முடியாமல்
அறுக்கவும் தெரியாமல்
அந்தரத்தில் ஊசலாடினேன்
அவசரமாய் நீ எங்கே சென்று
மறைந்தாயோ ?

உள்ளத்தை அழுத்தித்
துடைத்தும் ஏன்
அழிய மறுக்கிறது உனது
உருவம்
கல்லில் எழுதிய
சித்திரமோ ?

தேடித் தேடிக் கலைத்த பின்
நாடி வந்திவர் கூறுகின்றார்
கதையாகிப் போனாயாம்
எனக்குத் தெரியும்
உன்னை
அவர்கள் மறைத்த இடம்
மதத்தை வாழ வைப்பதாய்க் கூறிக்கொண்டு
புதைத்தனர் மாண்புடை மனிதர்
கல்லறையில் உன்னருகே நான்
கதை பேசும் ரகசியம் அறியா
கருத்துக் குருடர் இவர்.

0000

வேதம் வேண்டாம்

சத்தி சக்திதாசன்

பசிக்குது எனக்கு ஏன் வீணே வீசுகிறீர் விலையாக வேதங்களை
பச்சையாய்ப் பொய்களை பொரிந்து தள்ளுவதால் நிறையுமோ என் வயிறு ?

எத்தனை நாட்கள் உணவின்றி நீங்கள் உண்மையாய் உணர்ந்திருப்பீர் எந்நிலமை
எழையெனைப் பற்றிப் பாடிப் பாடியே கழுத்தை நிறைத்திட்டார் மாலைகளால் !

தேர்தலில் வாக்களிக்க போனதால் இழந்திட்டேன் அன்றைய பிச்சையை – வெற்றியில்
தோய்ந்தும் ஏன் நீங்கள் நானிருக்கும் திசையில் கால் வைக்க மறுக்கின்றீர் சொல்லீரோ ?

பகட்டான வார்த்தைகளை பலரும் கேட்கும் வண்ணம் பறக்கவிடும் மனிதர்காள்
பட்டி தொட்டிகளில் பழையதைத் தேடும் எனக்கு கருத்துப் புரியவில்லை புரிந்ததுவோ ?

வானம் ஒன்றேதான் வையமும் ஒன்றேதான் ரத்தத்தின் நிறமும் நமக்கெல்லாம் ஒன்றேதான்
விடிகின்ற வேளையெல்லாம் எனக்கு மட்டும் ஏன் விடியல்கள் வருவதில்லை கூறாயோ ?

புசிக்க உணவில்லை வசிக்க இல்லமில்லை , கற்க ஓர் பள்ளியில்லை தெருவெங்கும்
புதிதாய் ஜொலித்திருக்கும் கட்சிப்பிரசுரங்கள் ஏனென்று எனக்கு மட்டும் சொல்லிவிடு

ஒன்றே ஒன்று மட்டும் கேட்டிடுவேன் மறுக்காமல் செய்திடுவீர் இனி வரும் தேர்தலில்
ஒரேயொரு சின்னம் எனக்காக வரைந்திடுவீர் அதுவே பசி தீர்க்கும் உணவுச் சின்னம்

தவறாமல் நானங்கு தவழ்ந்தேனும் வந்து உண்மையாய்ப் போட்டிடுவேன் புள்ளடியை
தினந்தோறும் தவிக்கும் எமக்கு தீர்ப்பளிக்குமா அத்தேர்தல் படித்தவரே கூறுமைய்யா

0000

sathnel.sakthithasan@bt.com

Series Navigation