கழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

ராபின்


தொடக்கமும் முடிவும் தெரியாத எண்ணற்ற விஷயங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் போர்களும் ஒன்று. மனிதனின் வரலாற்றில் அடிப்படைத் தேவைகளுக்குப் பஞ்சம் இருந்திருக்கின்றது, இருக்கவும் செய்கின்றது, ஆனால் போர்களுக்கு என்றேனும் பஞ்சம் ஏற்பட்டதில்லை. விஞ்ஞான, தொழில் நுட்பங்களின் வளர்ச்சி நிலைகள் மூலம் போர் உத்திகளை நவீனமயமாக்கியிருப்ப்து ஒன்றுதான், இதுவரை நிகழ்த்திய போர்களிலிருந்து மனிதன் கற்றுக் கொண்ட பாடம்.

உலகின் பல பகுதிகளில் தொடரும் போர்களும், வன்முறைகளும் செய்திகளின் புள்ளிவிவரங்களாக வரும் வேளையில், இராக்கின் மீது தான் தொடர்ந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலான போரின் இறுதிக்கட்டத்தை தனக்கேயுரிய துல்லியமான கணக்கீடுகள், திட்டமிடுதல்கள் மற்றும் இதற்கெனவே தயாரிக்கப்பட்ட இயந்திர நுட்பங்கள் மூலம் அமெரிக்கா முடிவிற்குக் கொண்டு வந்ததையடுத்து ஊடகங்களின் விவாதப் பொருளாக ‘போர் ‘ (மறுபடியும்) உருவாகியிருக்கிறது.

இயல்பாகவே, போர் என்பது மனிதனைக் கவர்ந்திழுக்கும் அம்சமாகவே இருந்து வருகிறது. எந்தவொரு தகவல்களையும், கவர்ச்சியம்சங்களின் பரிணாமத்திற்கு உட்படுத்தித் தருவதில் வணிகம் செய்யும் ஊடகங்கள் சிரமங்கள் அதிகமின்றி போர் குறித்த சுவாரஸ்யமான பல செய்திகளை வெளியிட முடிந்தது. வழக்கங்களின் தொடர்ச்சியில் சலிப்புற்ற வாழ்க்கை நடத்தி வரும் மக்கள் பலருக்கு, இராக் மக்களின் துயரங்களிற்கு அனுதாபம் காட்டவும், வீசும் மணற்புயலில் அயராது தீரத்துடன் முன்னேறிய ராணுவம் குறித்துப் பெருமை கொள்ளவும், வன்முறைகளிற்கெதிரான தங்களின் அகிம்சைக் கொள்கையினை போராட்டங்கள் நடத்திக் காட்டிக் கொள்வதற்கும், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதற்கான நல்லதொரு வாய்ப்பாகவும், எதிரி நாட்டின் தலைநகரின் சாலைகளில், டாங்குகளில் பவனி வரும் தமது நாட்டின் ராணுவத்தினரின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளவும், போரில் செயல்படுத்தப்பட்ட உத்திகளை ஆராய்ந்து தம் மதி நுட்பத்தினைப் பெருக்கிக் கொள்ளவும், சட்டங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டதால், தம் வலிமையின் திறமை மூலம் பொருட்கள் பல சேகரித்துக் கொள்ளவும், மேற்கூறிய மற்றும் விடுபட்ட செயல்களின் மூலம் தங்கள் இருத்தலை ஓரளவிற்கேனும், எவ்விதமாகவேனாயிலும் அர்த்தப்படுத்திக் கொள்ளவும், நடந்து முடிந்த போர் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தது. இதுபோன்ற சந்தர்ப்பங்கள் மறுமுறை வருமுன் சென்ற சந்தர்ப்பங்களில் நாம் நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சனங்கள் செய்து கொள்வது நலமாயிருக்கும்.

பெரும்பாலான இந்தியர்களின் நிலைப்பாடுகள் புராதனமான, இருவிதமான சார்பு நிலைகளையே எடுத்தது. போர் என்பது நல்ல, தீய சக்திகளுக்கிடையிலான மோதல் என்ற பெரும்பாலானோரின் கருத்துக்கள் நல்லவை, தீயவை என வரையரை செய்வதிலுள்ள குறைபாடுகள் மற்றும் வரம்புகளால் மலினமடைந்து விடுகின்றன. சார்பு நிலைப்பாடுகளுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் வலுவிழந்து போனதிற்கு இதுவே காரணம். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போக்கினை கண்டிக்கும் கட்டுரைகள் அனைத்தும் இராக் ராணுவம் தீரத்துடன் போரிட்டு வருவதாகக் குறிப்பிடத் தவறியதில்லை. ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே அமெரிக்க ஆதிக்க மனப்பான்மையுடன், இராக் குவைத்தின் மீது கைக்கொண்டதை இவர்கள் மறந்து அல்லது மன்னித்து விடுகின்றனர். கால ஓட்டத்தில் இவர்கள் தங்களது சார்பு நிலைகளை மாற்றிக்கொள்வார்களே தவிர போருக்கெதிரான எண்ணங்களை எண்ணியும் பார்க்க மாட்டார்கள். போரின் தாக்கங்களை இந்தியப் பத்திரிக்கைகள் எதிர்கொண்ட விதங்களை சற்று அலசிப் பார்க்க வேண்டும்.

இந்தியா டுடே போன்ற, விற்பனையில் முண்ணனி வகிக்கும் இதழ்கள் இந்தியாவின் இரண்டும் கெட்டான் நிலைப்பாட்டை சாடியதுடன், அமெரிக்காவிற்கெதிரான தோற்றத்தைக் கைவிட்டு இராக்கின் மறுநிர்மாணப் பணிகள் ஏற்படுத்தும் வணிக வாய்ப்புக்களை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதை வெகுவாக வலியுறுத்தின. இந்தியா மட்டுமல்லாது அனைத்து நாடுகளின் நிலைகளும் இரண்டும் கெட்டான் தன்மையுடையவையே. ஐ.நா சபையில் இராக்கிற்குக் காலக்கெடு விதிக்கும் தீர்மானத்தை எதிர்த்த பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகள் ஐ.நா சபையின் அனுமதியின்றி போரில் ஈடுபட்ட நாடுகளின் மீது எவ்விதக் கண்டனத் தீர்மாணங்கள் கொண்டு வருவதற்கு முனைப்பேதும் காட்டவில்லை. இவர்கள் அனைவரின் கவனமும் அமெரிக்காவுடனான கருத்து வேறுபாடுகளை (இவை போருக்கெதிரானதல்ல…) சரிசெய்து கொண்டு இராக்கில் தங்கள் வியாபார நோக்கங்களை நிறைவேற்றுவதுதான். இரண்டாம் உலகப்போரின் போது ஏறத்தாழ சமமான இரு நாடுகள் இருந்ததால் தாங்கள் வெற்றி கொண்ட நாடுகளை பகிர்ந்து கொண்டன. இப்போது அதுபோன்ற சிக்கல்கள் ஏதுமில்லை. வலிய சிங்கங்கள் வேட்டையாடி உண்டபின் விட்டுத்தரும் எச்சங்களிற்காக காத்து நிற்கும் கழுதைப் புலிகளைப் போல் இவை வரிசையில் நிற்கின்றன. சந்தர்ப்பவாதிகளால் மட்டுமே சுரண்டல் குறித்த குற்றவுணர்வேதும் இல்லாது பொருளாதார விருத்தி செயதல் இயலும்.

ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து எந்தவொரு போரினையும் தவிர்க்கும் வலிமையற்ற ஐ.நா சபையின், ‘பாதுகாப்பு மன்றம் ‘ என்ற பெயரில் இயங்கும் வெற்று அரட்டை மன்றம் தேவையான ஒன்றுதானா ? இந்த மன்றத்தில் ‘சமாதானம் ‘ என்ற வாக்கியம் ஒலிக்காத நாள் ஏதும் இருந்திருக்க சாத்தியங்கள் இல்லை. உயர்ந்த நோக்கங்களின் பெயரில் பாசாங்குகளால் எழுப்பப்பட்ட இத்தகைய மன்றங்களை விட, வெளிப்படையாக இயங்கும் இரவு நேர கேளிக்கை மன்றங்கள் எவ்வளவோ தேவலாம்! தன்னால் இயலாத விஷயத்தினைக் குறித்த கற்பனைகளையும், கால விரயத்தினையும் கைவிட்டு, பாதுகாப்பு மன்றத்தினைக் கலைத்துவிட்டு, தன்னால் ஆகக்கூடிய, மற்றவர்கள் மறந்து போன மனிதாபிமானச் செயல்களை மட்டும் வரையறுத்துக் கொண்டு செயல்படுவது ஒன்றுதான் ஐ.நா சபை தனது இழந்துபோன அர்த்தங்களில் சிலவற்றை திரும்பப்பெறும் வழியாக இருக்கும்.

குறிப்பிடத்தக்க இலக்குகளுடன் செயல்படும் இலக்கிய இதழ்களின் ஆழமற்ற கருத்துக்களும் மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவே உள்ளன. சில விதிவிலக்குகளைத் தவிர, படைப்பாளிகள் சமூக விமரிசனங்களை, கட்டுரைகளாக அதிகம் எழுதுவதில்லை என்பதும், அவற்றிற்கான தளங்கள் தமிழில் அதிகம் இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை. படைப்புக்களின் புனிதம் கெட்டுவிடக் கூடாதென்பதாக, படைப்பாளிகள் உலக விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை என்று குறைபட்டுக்கொள்ளும் சுந்தர ராமசாமி (தீராநதியில்), மற்ற அடிப்படைக் காரணங்கள் குறித்துக் கூறியவை ஜாதீயப் பிரிவுகளை மட்டும் மையமாகக் கொண்டு இருப்பதல்லாமல் பெரியாரைக் குறித்த மற்றுமொரு முழுமையற்ற, அதர்க்கமான தாக்குதலாகவும் இருக்கிறது. பெரியார் செய்துகொண்ட சமரசங்களையும், சர்வாதிகார மனப்பான்மையினையும் அவரது காலத்திலேயே மிகக்கடுமையாக விமரிசித்த ப.ஜீவானந்தம் போன்ற கம்யூனிஸ்டுகளிடமிருந்த அடிப்படை நேர்மை கூட சு.ராவின் குற்றச்சாட்டில் இல்லை. உலக விஷயங்களிலிருந்து விலகி, பிராமணீயத்தின் கொடுமைகளை நீர்த்துப் போகாமல் தக்கவைத்துக் கொள்ள தந்திரங்கள் செய்தார் என்று சொல்வது, பெரியார் ஏற்படுத்திய நல்ல தாக்கங்களையும் ஒட்டு மொத்தமாக மலினப்படுத்தும் முயற்சியாகத் தோன்றுகிறது. ஜாதீயக் கொடுமைகளும், மற்ற அடக்குமுறைகளும் அவையாகவே நீர்த்துப் போய்விடும் என்பது போன்ற கருத்துக்களை சு.ரா முன்வைக்க முயலுகிறாரா என்ன ?

பொதுவான படைப்பாளிகளிற்கு போர்கள் என்பது தங்கள் படைப்புக்களின் தாக்கங்களை அத்துமீறிய செயல்கள் என்பதால், இயல்பாகவே விரக்தி தோன்றிவிடுகின்றது. இதன் காரணமாக போர் குறித்த இவர்களின் பார்வைகள் தங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத காரணிகளால் உருவானவையாக உருவகப்படுத்திக் கொள்கின்றனர். இரு அழிவு சக்திகள் தங்களுக்குள் மோதிக்கொண்டு அழிவதாக ஜெயமோகன் இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டது இதைப்போல்தான். அவரின் அளவுகோலின் படி பார்ப்போமாயின், எந்தவொரு நாட்டினையும் அழிவு சக்தி அற்றது எனக்குறிப்பிட முடியுமா ? போர்களுக்கான தார்மீகப் பொறுப்பை ஈடுபடுவோர் மட்டுமன்றி அனைத்து மனிதர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதையும், போர்கள் உருவாவதன் அடிப்படைக் காரணங்களையும் எந்த ஒரு கட்டுரையும் வலியுறுத்தவில்லை; அவர்களின் பங்கு ஏதாவது ஒரு சார்பை சாடுவதுடனும், மற்றவர் துயரங்களில் அனுதாபம் காட்டுவதுடனும் முடிந்து விடுகிறது.

நடந்து முடிந்த போருக்கு அமெரிக்கா என்ற ஒரு தனி நாட்டினை மட்டும் எவ்வாறு குற்றம் சொல்ல இயலும் ? அமெரிக்காவின் நிலையில் மற்ற நாடுகள் இருந்திருந்தால் மாற்றமேதும் இருந்திருக்குமா ? டிசம்பர்-13 பாராளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு இந்தியாவின் எதிர்வினை எவ்வாறு இருந்தது ? எவ்வித பலன்களும் அளிக்காத, மாற்றங்களேதும் ஏற்படுத்தாத போர் முஸ்தீப்பு பாவனைகளுக்கு இந்திய அரசாங்கம் செலவழித்த தொகையினைக் கொண்டு, திட்டத்திலுள்ள காஷ்மீர் – கன்னியாகுமரி அகல விரைவுப்பாதையினை முடித்திருக்கலாம். தனது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளத் தெரியாத ஒருவன் மற்றவரின் பிரச்சனைகளில் தலையிடுவது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதையே, இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு எடுத்துக் காட்டியிருக்கின்றது. சோவியத் ரஷ்யா இல்லாமல் போனதன் விளைவை இப்போது நடக்கும் போர் உணர்த்துவதாக, ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் ஆதங்கப்பட்டிருந்தார், தீராநதி இதழில். வாழ்வில், வரலாற்றின் பயன்பாடு குறித்த நீட்ஷேயின் கருத்துக்களை இவர்கள் படிப்பது நல்லது. கடந்த காலம் விட்டுச்சென்ற எச்சங்களின் மேல் தங்களுக்குச் சாதகமான அனுமானங்களை எழுப்பிக் கொண்டு, ஆறுதல் தேடும் இவர்களுக்கு நீட்ஷேயின் சில வரிகளை மேற்கோள் காட்ட வேண்டியதாகிறது, ‘To be sure, we need history. But we need it in a manner different from the way in which the spoilt idler in the garden of knowledge uses it, no matter how elegantly he may look down on our coarse and graceless needs and distresses. That is, we need it for life and action, not for a comfortable turning away from life and action or merely for glossing over the egotistical life and the cowardly bad act. We wish to use history only insofar as it serves living. But there is a degree of doing history and a valuing of it through which life atrophies and degenerates. To bring this phenomenon to light as a remarkable symptom of our time is every bit as necessary as it may be painful. ‘ சர்வாதிகார துயரங்களின் அழுத்தம் தாளாது உடைந்து சிதறிய சோவியத் யூனியன் இந்தப் போரினைத் தவிர்த்திருக்குமென்று எண்ணிக்கொள்வது ஒருவருக்குத் தரும் ஆறுதலாக இருக்க முடியாது; பல காலம் மூடிவைக்கப்பட்ட மது தரும் அதீத போதையாகத்தான் இருக்கவியலும்.

ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனத்திலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அடையாளங்கள் சார்ந்த பிரிவினைகள் மற்றும் பிளவுகள், ஆதிக்க மனப்பான்மையுடன் போர்களாக வெளிப்படுவதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ‘அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் ‘ என்கிறது ஒரு பைபிள் வசனம். வேற்றுமையின் வித்துக்கள் உரமூட்டப்பட்டு வளர்க்கப்படுகையில் விளைவு, போர்களும், வன்முறைகளுமாகத்தான் இருக்கும். நாடுகளின் அரசியல் ஆதாய அமைப்புக்கள், மத நிறுவனங்கள், ஜாதிச் சங்கங்கள், மொழி வெறி அமைப்புக்கள் மற்றும் பல சமூகக்காரணிகள் தன்னில் ஏற்படுத்தியிருக்கும் அடையாளங்களை உதறித்தள்ளி இயற்கையின் பரந்த வெளியில் தனது தனிமையினை உணரும் தனிமனிதனால் மட்டுமே மற்றொருவனை முழுமையாக நேசித்தல் என்பது இயலும். அப்துல் கலாமின் மேன்மைகளைச் சிலர் புகழ்வதில் ஆட்சேபனைகளேதுமில்லை; சமுதாயத்தின் அடிநிலையிலிருந்து தனது உத்வேகத்தினால் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்து, பல இளைஞர்களிற்கு முன்னோடியாக இருக்கிறார். ஆனால் ‘இந்தியா-2020 ‘ என்ற தனது தொலைநோக்குப் பார்வையில் நாட்டின் வளர்ச்சிக்கு, அனு அழிவு ஆயுதங்களையும், போர் வியூக வலிமையினையும் முக்கியமென அவர் வலியுறுத்துவதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா ? இதிலுள்ள முரண்பாட்டினை உணர இயலாத அளவிற்கு ஒருவன் நாட்டின் எல்லைகளுக்குள் குறுகிப்போக வேண்டுமா ? வேற்று மொழி பேசும் மக்களின் ஆற்றாமைக் கனவுகளின் நாயகரை, தனது மொழி பேசும் ஒருவன் காட்டிற்குக் கடத்திச் சென்று, மொழி சார்பான கோரிக்கைகள் சிலவும் முன்வைக்கையில் அவனது மொழியுணர்வை மெச்சிய முதல்வருக்கும், தமிழ் தேசியம் பேசி வரும் அறிவு ஜீவிகளுக்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது ? குறிப்பிட்ட தனது ஜாதி மக்கள் அதிகம் கொண்ட பகுதிகளைப் பிரித்து தனிமாநிலம் உருவாக்க வேண்டுமென்ற அரசியல்வாதியின் உள்நோக்கம் எப்படிப்பட்டது ? மனிதனிற்கு மீட்புத் தருவதற்கென வந்த மதங்கள் போர்களை உருவாக்குவதன் காரணிகளாக ஆனபின்னும் அம்மதங்களில் குளிர்காய்வது அவசியமா ? ‘கொஞ்சமோ பிரிவினைகள் ? ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ ? ‘

தனக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்பதை உணர்ந்ததினால், கவசங்கள் அணிந்து கொண்டு, பதுங்கு குழிகளில் பதுங்கியவாறு, தாம் அஞ்சும் பாதிப்பை மற்றவர்களுக்கு ஏற்படுத்த முயலும் அறியாமை கொண்ட மனிதர்கள் எப்படி வீரர்கள் ஆவார்கள் ? வாழ்வின் பிரம்மாண்டத்தை, புதிர்த்தன்மைகளை நேரடியாக எதிர்கொள்ளும் மனோதைரியம் அற்று, பல தலைமுறைகளாக சுமந்து வரும் வகுப்பு முறைகளின் கூண்டுகளுக்குள் அடைக்கலம் தேடும் மனிதர்களுக்கும், தான் சுமக்கும் ஓட்டினுள் சுருண்டுகொள்ளும் நத்தைகளிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ? வாழ்வை அதன் அர்த்தத்தில், முழுமையில் எதிர்கொள்வது ஒன்றுதான் உண்மையான வீரம்.

போர்களின் வன்முறைகள் நிரம்பிய வரலாற்றின் குரூரத்தை, தங்களது சுயஉணர்வின் உச்சநிலை உணர்ந்த சில மகான்களின் கருணையினால் வெற்றி கொள்ள இயலுமானால், ஒவ்வொரு தனிமனிதனும் ஏன் தன்னளவில் முயற்சிக்கக் கூடாது ? இவர்களே மெய்ஞான வீரர்களாயிருப்பர்.

— ராபின்

amvrobin@yahoo.com

Series Navigation