கல்வியா வீரமா : ராணுவச்செலவும் இந்திய அரசாங்கமும்

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

மஞ்சுளா நவநீதன்


இந்திய அரசாங்கத்தின் ராணுவச் செலவு மிக அதிகமாக இருக்கிறது அதனைக் குறைக்க வேண்டும் என்று இந்து பத்திரிக்கையில் (வேறெதில் வரும் ?) வந்திருக்கிறது.

பாகிஸ்தான் தன் மொத்த ஜிடிபி (GDP) யில் 2.8 சதவீதத்தை ராணுவத்துக்காகச் செலவழிக்கிறது. இந்தியா 2.5 சதவீதம் செலவழிக்கிறது. எனவே இந்தியாவும் அதிகமாகச் செலவழிக்கவேண்டும் என்று பரவலாக வந்திருக்கும் கோரிக்கையை இது விமர்சிக்கிறது. இந்தியா 65000 கோடி ரூபாய்களை ராணுவத்துக்காக செலவழிக்கிறது என்றும், வறுமையை ஒழிக்க திட்டங்களுக்கு செலவிடாமல் இப்படி பணத்தை ராணுவத்தில் கொட்டுவது சரியல்ல என்றும் எழுதுகிறார் கட்டுரையாளர்.

அது உண்மைதான். பிரச்னை பாகிஸ்தான் அல்ல என்று புரிந்துகொண்டால் கட்டுரையாளருக்கும் நல்லது படிப்பவர்களுக்கும் நல்லது. பிரச்னை சீனா.

சென்ற வருடத்திலிருந்து இந்த வருடம் இந்தியா 7.9 சதவீதம் பாதுகாப்பு செலவு அதிகரித்துள்ளது. அதாவது 13.3 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதமாகப் பார்த்தால், இது 2.5 சதவீதம். ஆனால் பாகிஸ்தானின் செலவு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.8 சதவீதம். சீனாவின் செலவு 3 சதவீதம். அதாவது இந்தியா தான் ராணுவத்திற்கு மிகக் குறைவான சதவீதம் செலவு செய்கிறது. இந்தியாவின் ராணுவச்செலவு அதிகரித்ததன் அளவு 10 சதவீதம் என்று எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். சில செலவினங்களை ராணுவச்செலவில் சேர்க்காமல் இருக்கிறது என்பது ‘இந்து ‘வின் வாதம். அதே வருடத்தில் (2001-ல்) சீனாவின் ராணுவச்செலவு அதிகரித்ததன் அளவு 18 சதவீதம். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 35 சதவீதம் ராணுவச் செலவு சீனாவிற்கு அதிகரித்துள்ளது. இந்தச் செலவினத்தில் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிக்காகச் செய்யும் செலவும் சேர்ந்தது.

ஆனால் சீனாவில் எவ்வளவுக்கு ராணுவத்துக்குச் செலவு செய்கிறார்கள் என்ற விமர்சனக் கட்டுரையை பீஜிங்கில் எழுத்துக்கோர்க்கப்பட்ட இந்துப்பத்திரிக்கையில் எதிர்பார்க்க முடியுமா என்ன ? சீனா பாதுகாப்புக்கு செலவிட்ட தொகை 17 பில்லியன் டாலர்கள். சீனா அடுக்கி வைத்திருக்கும் அத்தனை அணுகுண்டு ஏவுகணைகளும் நிரந்தரமாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் குறிவைக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த காரணத்தினாலேதான், ஜப்பானும், அமெரிக்காவும், சீனா சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகின்றன. (ஆமாம்.. உண்மைதான். என்பிலதனை வெயில் காயும்)

அத்வானி சொன்னது சரிதான். அமார்த்யா சென், ராணுவத்தை விட்டுவிட்டு, கல்விக்கு நிறையச் செலவு செய்யவேண்டும் என்று சொல்வது சரியல்ல. கல்விக்கு நிறையச் செய்யவேண்டும்தான். ஆனால், ராணுவம் இல்லையேல் எத்தனை கல்வியிருந்தும் பிரயோசனமில்லை.அமார்த்ய சென்னின் நோக்கம் அப்பழுக்கற்றது என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கு இல்லை. ஆனால், ஒரு கை தட்டி ஓசை எழும்பாது. ராணுவச் செலவுக் குறைப்பு என்பது தன்னிச்சையாக இந்தியா மட்டும் மேற்கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது மட்டுமல்ல, மிக அபாயகரமான ஒரு யோசனை. வலிமையில்லாத ராணுவம் இருந்தால், பாகிஸ்தான் இன்றைக்கு ‘சரி என் தீவிரவாதிகளை நிறுத்திக்கொள்கிறேன் ‘ என்று சொல்லாது. உலகத்தின் நம்பர் ஒன் ராணுவமாக இந்தியா இருந்தால், அமெரிக்கா இந்தியாவுக்கு வந்து அறிவுரை சொல்லாது. அமெரிக்கா இன்று வலுப்பெற்று விளங்குவதன் காரணமும், சோவியத் யூனியன் அமெரிக்காவிற்கு நிகராக முன்பு விளங்கியதன் காரணமும் ராணுவ வலிமையே. ஆனால் ராணுவ வலிமை மட்டுமே போதாது, ஒரு ஜனநாயக மரபும் கூட ஒரு வலிமையான நாட்டுக்கு முக்கியம் என்பதை சோவியத் யூனியன் வீழ்ச்சி காட்டுகிறது.

அணுகுண்டு போடுவேன் என்று அடிக்கடி பாகிஸ்தான் சொன்னதால், கோபம் கொண்ட ஒரு ஜப்பானிய அமைச்சர், ஜப்பான் தன்னுடைய அணுகுண்டு எதிர்ப்பு கொள்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பேசினார். உடனே சீனா குய்யோ முய்யோ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஜப்பான் அரசாங்கத்தையே பின்வாங்க வைத்திருக்கிறது. (ஜப்பான் அணுகுண்டு தயாரிப்பில்லாத நாடு என்றாலும் , அமெரிக்கா தன் ராணுவக்குடையின் கீழ் – அணுகுண்டு பாதுகாப்பு உட்பட- வைத்திருக்கும் நாடுகளில் ஜப்பான் ஒன்று.) சீனாவின் அப்படிப்பட்ட அடாவடித்தனம் தான் மற்ற மேல் நாடுகளைப் பயமுறுத்தியிருக்கிறது. சீனாவை ‘நல்வழிப்படுத்த அதில் முதலீடு செய்கிறேன் ‘ என்ற பெயரில், மேல் நாடுகள் சீனாவுக்கு பணம் கொடுக்க காரணம் ஆகிறது. அந்தப்பணம் கொஞ்சம் ஏழைகளுக்கும் கல்விக்காகச் செல்கிறது.

ராணுவச் செலவு என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு, பிற முக்கியமான துறைகளிலிருந்து செலவினத்தைத் திசை திருப்புகிறது என்பது உண்மைதான். ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா எப்படிப்பட்ட அண்டை நாடுகளைக் கொண்டுள்ளது ? பாகிஸ்தான் இந்தியாவின் மீது மதரீதியாகவும், மற்ற விதங்களிலும் பகைமை கொண்டுள்ளது. சீனா ஏற்கனவே போர்முனையில் இந்தியாவைச் சந்தித்திருக்கிறது.

1999- கணக்குப் படியே சீனா மொத்தம் 400 அணுகுண்டுகளை வைத்திருந்தது. இவற்றில் 20 கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடியவை. அதாவது, சீனாவிலிருந்து அமெரிக்கா , ஐரோப்பா செல்லக் கூடியவை. 230 குண்டுகள் விமானம், ஏவுகணை ஆகியற்றில் பொருத்தப்படத் தக்கவை.

ஐரோப்பிய நாடுகள் நேட்டோ போன்ற ஒரு அமைப்பில் ஒன்றுபட்டு தம்முடைய ராணுவச் செலவைக் குறைக்கும் வழியில் ஒப்பந்தம் இட்டிருக்கின்றன. அப்படியொரு ஒப்பந்தம் ஏற்படுத்தும் அளவு சுமுகமான உறவு கொள்ளும் நிலையில் பாகிஸ்தானும், சீனாவும் இல்லை. ராணுவச்செலவை இந்தியா குறைக்க வேண்டுமென்றால் பாகிஸ்தானின் ராணுவ அரசு இந்தியாவுடன் சமாதான வழியில் ஈடு பாடு காட்ட வேண்டியிருக்கும். அதற்கு பாகிஸ்தான் ராணுவத்தலைமை தயாரில்லை. அது மட்டுமல்லாமல் மேநாட்டு அரசுகளும் இங்கு சண்டை அல்லது சண்டை மாதிரி ஒரு நிலவரம் நிலவுவதையே விரும்புகின்றன.

கட்டுரையாளர் விமர்சிக்க வேண்டியது ராணுவத்தையும் கல்வியையும் எதிர் எதிர் முனையில் வைத்து அல்ல. ராணுவச்செலவைக் குறைப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவானால் தான் ராணுவச்செலவைக் குறைப்பதென்பது முடியும். ராணுவச்செலவை குறைத்தால் உடனே கல்விக்கு செலவழிக்கலாம் என்பது பகல் கனவே. இந்தியா என்ற நாடு பல முனைகளிலும் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் ராணுவத்தை பலவீனப்படுத்துவது என்பது , காஷ்மீர் மக்களை பாகிஸ்தானுக்கு தாரை வார்ப்பதாகும்.

ஏழை நாடுகளின் உண்மையான எதிரிகள் இப்படி தளவாட வியாபாரத்திற்காக , சிக்கல்களை உருவாக்கி ஒரு நாட்டினை இன்னொரு நாட்டிற்கெதிராகக் கிளப்பிவிடும் மேல் நாடுகளே. இதை இந்த ஏழை நாடுகள் உணரும் வரையில் விமோசனம் இல்லை.

அமெரிக்காவும் சீனாவும் எதிர்பார்ப்பது போல, இந்தியாவில் வலிமையற்ற ராணுவம் இருக்க வேண்டும் , தொடர்ந்து இப்படி சீனாவும் பாகிஸ்தானும் வலுப்பெற வேண்டும் என்றுதானே இந்துப் பத்திரிக்கை எழுதும் ?

***

http://www.janes.com/defence/news/jdw/jdw010307_2_n.shtml

http://www.china.org.cn/english/2002/Mar/28261.htm

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation