கல்முலைகள் சுரக்கும் தாய்ப்பால் : ” கைலாசபதி தளமும் வளமும் ” – நு¡ல் பற்றி

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஈழத்து மகாகவியின் ”கடல் மணலைக் குவித்தாற்போல இருக்கும் கல்முலைகளைச் செதுக்கும் காலச்சிற்பி” கவிதை வரிகளின் அழகியலை சிலாகித்த கைலாசபதிக்கு இவ்வரிகளை திரும்பவும் பொருத்திப் பார்க்கலாம். ஆனால் ஒரு வித்தியாசம் இந்த கல்முலைகள் தன் குழந்தைகளுக்கு இன்னும் தாய்ப்பாலை சுரந்து கொண்டிருக்கிறது.
மார்க்சீய அறிஞர் கைலாசபதியை முன்வைத்து ஒரு தேடல் நிகழ்ந்துள்ளது. கைலாசபதி: தளமும் வளமும் ஆய்வு நூல் பதினாறு ஆய்வாளர்களின் உரையாடல்களாக தோற்றம் கொண்டுள்ளது. திறனாய்வு முறையியல், செயல்முறை விமர்சனம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இனதேசியவாதம், சாதியம், மொழிக்கட்டமைப்பு, சமுதாயவியல், மார்க்சீயம் என பன்முகப்பட்ட நிலையிலான விவாதங்களை இத்தொகுப்பு மறுவாசிப்பு செய்ய முயல்கிறது.
கைலாசபதியின் முக்கியத்துவமும், அவர் மீது சுமத்தப்பட்ட மாற்று விமர்சனங்களும் மறைவு நிகழ்ந்து இருபது ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும் இரண்டுவிதமான பங்களிப்புகளில் கைலாசபதியின் பெயர் துலக்கமுற்றிருக்கிறது.
ஒன்று கைலாசபதியால் படிப்படியாக செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மனித ஆளுமைகள். ஈழத்து தினகரன் பத்திரிகை வழியாகவும் யாழ் பல்கலைக்கழக பேராசிரியப் பணியில் கற்பித்தலின் ஊடாகவும் வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் முற்போக்கு இலக்கிய அமைப்பு செயல்பாட்டின் விளைவாகவும் அவர் உருவாக்கிய ஆள்ஓவியங்கள் பலப்பல. நு·மான், மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு, நீர்வை பொன்னையன், யேசுராசா என இதனை நீட்டித்துப் பார்க்கலாம். இந்த ஆள்ஓவியங்களின் சொந்த அனுபவங்கள், சமூக நிகழ்வுகளின் வழியாக கைலாசபதி மதிப்பீடு செய்யப்படுகிறார். கூடவே கைலாசபதியின் மா¡க்சீய தத்துவநோக்கு உருவாக்கிய விமர்சன எதிர்தரப்பினராக ஆன்மீகவாத மனஉலகில் சஞ்சரித்த எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ.) பிரபஞ்ச யதார்த்தவாதம் பேசிய மு.தளையசிங்கம், தமிழ்நாவல் இலக்கியத்தை மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என பகடி செய்த வெங்கட்சாமிநாதன் உள்ளிட்டோர் உருவம் கொள்கிறார்கள். ஈழத்து மகாகவி உயிருடன் வாழ்ந்த காலத்தில் கைலாசபதியால் கவனத்தில் கொள்ளப்படாமைக்கு காரணம் மா¡க்சீயம் – தமிழ் தேசியம் கருத்தாக்கங்களிடையே உருவான முரண்பாடே என்கிற விமர்சனக் குறிப்பும் இவ்வேளையில் முக்கியமானது. ஈழத்தின் விடுதலைக்காக எண்ணற்ற உயிர்களை பலிகொடுத்து நிகழ்வுற்றுள்ள அரசியல் சமூக போராட்ட வரலாற்றினூடே இதை மீள வாசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இரண்டாவதாக கைலாசபதியின் படைப்புலகம் மிகக் குறிப்பிடத்தக்கதாய் ஈழத்து மற்றும் தமிழக விமர்சன உலகில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியத்தை ரசனைக் கோட்பாடாக அணுகி, அதன் லயங்களில், அழகியலில் மயங்கிக் கிடந்த தமிழ் இலக்கிய விமர்சனத்தை கைலாசபதி மீட்டுருவாக்கம் செய்கிறார். வாழ்வின் இருப்பிற்கும், மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் இடையிலான உட்தொடர்புகளை ஒருமாற்றுவாசிப்பின் மூலம் உருவாக்கிக் காட்டினார். மார்க்சீய சமுதாயவியல் அணுகுமுறையும், மார்க்சீய அழகியலின் பிரதிபலிப்பு கோட்பாடும் இதற்கு துணை புரிந்தன. இந்த திசை வழியில் கைலாசபதி படைத்தளித்த பல நூல்களைக் குறிப்பிட வேண்டும். இது எண்ணிக்கையில் இருபத்து மூன்றாகும்.
தமிழின் சங்க இலக்கியத்தையும், பண்டைய கிரேக்க காவியங்களையும் ஒப்பு நோககி எழுதப்பட்டதே தமிழ் வீரயுகக் கவிதை (Tamil Heroic Poetry) நூல். அறுபதுகளில் வெளிவந்த இருமகாகவிகள் தமிழ் இலக்கியப் பரப்பில் சமகால ஒப்பீட்டு இலக்கிய ஆய்வு முறைக்கான துவக்கத்தைக் கொடுத்தது.
1966-ல் பழந்தமிழ் இலக்கியங்களின் வழியாக சமய பண்பாட்டு மானுடவியல் ஆய்வுகள் எட்டு தலைப்புகளில் ”பண்டையத் தமிழர் வாழ்வும் வழிபாடும்” நூலாக வெளிவந்தது. இதில் இடம்பெற்ற தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி படைப்பு இசைக்குழு தெய்வமான சிந்துவெளி யோகி சிவன் காலப்போக்கில் வேதங்களாலும், வைதீகத்தாலும், உள்வாங்கப்பட்டு பசுபதியாக, அர்த்த நாரீஸ்வரனாக, மேல்நிலையாக்க சாதிக்கடவுளாக உருமாற்றம் அடைந்துள்ளதை கட்டுடைத்து காட்டுகிறது. ”நாடும் நாயன்மாரும்” ஆய்வு பல்லவர்கால சமூக சமய வரலாற்றை உற்று நோக்கச் செய்கிறது. சமணர்களை அழித்தொழித்த சைவத்தின் அதிகார உருவாக்கம் பண்பாட்டுத் தளத்தில் மேற்கோப்பு தளக் காட்சியாக (Super structure) தெரிகிறது. ஆனால் ஆழ்தளத்தில் (Deep structure) சமணம்-சைவம் எல்லையைத் தாண்டி வணிக வர்க்கத்திற்கும் வேளாள நிலவுடமை சமூகத்திற்குமான – வர்க்கப் பேராக கைலாசபதியால் சுட்டிக்காட்டப்படுகிறது. இப்பார்வையினூடே பேரரசும் பெருந்தத்துவமும் வணிக சமணவாதிகளை வென்ற சைவம் எவ்வாறு ஒரு பெருந்தத்துவமாக சோழப் பேரரசு காலத்தில் நிலைபெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
பாரதி ஆய்வுகளில் முழு ஈடுபாடு கொண்டு இயங்கிய கைலாசபதியின் எழுபதுகளில் வெளிவந்த ஐந்து கட்டுரைகள் அடங்கிய அடியும் முடியும் ஆய்வுத் தொகுதி தமிழ் இலக்கிய விமர்சனப் பரப்பின் பேசப்படாத பகுதிகளை பேச எத்தனித்தது. இத்தகைய உள்ளாற்றலைக் கொண்ட படைப்புகளாக ”அகலிகையும் கற்பு நெறியும்” – புலைப்பாடியும் கோபுர வாசலும் ஆகியவற்றைக் கருதலாம். இன்றைய நிலையில் இதனை பெண்ணிய மற்றும் தலித்திய நோக்கின் முன்னோடி வாசிப்புகளாக வடிவம் பெற்றுள்ளன.
பெண் கற்பின் பிம்பத்தை கட்டமைத்த தமிழ் இலக்கியவாதிகளின் மனோபாவங்கள், அதில் கலந்திருந்த ஆணாதிக்க அரசியல் அனைத்தையும் ‘அகலிகை’ தொன்மக் கதையாடலின் வழி கட்டுடைத்துச் செல்கிறார். வால்மீகியாலும், கம்பனாலும், இராஜாஜியாலும், சுப்பிரமணிய முதலியாலும், ச.து.சு.யோகியராலும், புதுமைப்பித்தனாலும் அகலிகை எவ்வாறு வெவ்வேறுவிதமாக சார்பு நிலையோடு கட்டமைக்கப்பட்டுள்ளதே இது கூறும் செய்தி. இதில் வெளிப்படும் ஆணாதிக்க மனோநிலைகள், இரண்டாம் பாலினமாக பெண்ணை அணுகும் பார்வை அனைத்துமே மறுவிவாதத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன.
‘புலைப்பாடியும் கோபுரவாசலும்’ கட்டுரையின் நந்தன் குறியீட்டுப்படிமம் அடித்தள சாதிகளின் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைக்கு அடையாளமாக எப்படி உருவாகியுள்ளது என்பதை உணரச் செய்திருக்கின்றது. சுந்தரரது திருத்தொண்டர் தொகையிலும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் தொகையிலும், சேக்கிழார் பெரிய புராணத்திலும், கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும், முருகையனின் கோபுரவாசல் நாடகத்தினூடாகவும் நந்தன் ஒரு படைப்பிலக்கியத்தினுள் கட்டமைக்கப்பட்ட விதத்தையும், அது வெளிப்படுத்திய சாதீய ஒடுக்குமுறை அம்சத்தையும், இவைகளுக்கிடையிலான மாற்றுக்கருத்து நிலைகளையும் விவாதிக்க முயல்கிறது. இந்த வகையில் கலாநிதி.வ.மகேஸ்வரன், தெ.மதுசூதனன், முகம்மது சமீம், செ.கணேசலிங்கன், கந்தையா சண்முகலிங்கம் மலையக எழுத்தை அடையாள அரசியலாக வெளிப்படுத்திய லெனின் மதிவானம் உள்ளிட்டோரின் ஆய்வுகள் மிகுந்த நம்பிக்கையூட்டுபவையாக இருக்கின்றன.
கலாநிதி எஸ்.பாலசுகுமார் முன்வைக்கும் ”இன்றைய பின்நவீனத்துவ கோட்பாடுகளும், பின் நவீனத்துவ எழுத்துக்களும், அவருடைய எழுத்துக்கு முன் வெறுமனே ஒன்றுமில்லாததாகிவிடும்” என்ற கருத்து ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகவே இருக்கிறது. எனினும் தற்கால பின்நவீன திறனாய்வு முறையிலுக்கு கைலாசபதி முன்வைத்த பல்துறை சார் ஆய்வு நெறி (multi disciplinary Approach) முன்னோடியாகவே திகழ்கிறது.
ஒரு படைப்பு வெளிப்படுத்தும் பிரதிசார்ந்த அர்த்தம் (Textual Meaning) காலம், வெளி, கலாச்சாரப்பின்னணியில் அது வெளிப்படுத்தும் சூழல் சார்ந்த அர்த்தம் (contextual meaning) என்பதான வாசிப்பின் அரசியலை நோக்கி பயணிப்பதற்கு கைலாசபதி வழிகாட்டுகிறார். ஒரு படைப்பு பிரதிக்குள் உள்ளார்ந்து கிடக்கும் அதிகார / ஆதிக்க கூறுகளை அம்பலப்படுத்தும் ழாக்தெரிதாவின் கட்டவிழ்ப்பு விமர்சனத்தை இந்த வகை நீட்சியில் தொடர்புபடுத்தி பார்க்கலாம். வார்த்தை, சடங்கு, நடத்தை விதிகள் என வாழ்வின் அடுக்குகள் எல்லாவற்றிற்குள்ளும் உறைந்து கிடக்கும் மேலாதிக்கங்களை தகர்ப்பதன் வழியாக நுண் அரசியல் செயல்பாடு கூர்மை பெறுகிறது. பழமரபுக்கதைகள், தொன்மங்கள், சமயவியல், மானுடவியல், வரலாற்றியல், நாட்டாரியல், பண்பாட்டியல் உள்ளடக்கி ஒரு படைப்பு ஊடிழைப் பிரதியாக (Inter text) இயங்குவதை எந்த முறையில் அணுகுவது என்பதான தேடல்களுக்கு இங்கு இடமிருக்கிறது.
தமிழ்பண்பாட்டுச் சூழலில் அயோத்திதாசபண்டிதரும், பெரியாரும், ஜீவாவும் நிகழ்த்திய குறுக்கீடும் எதிர்வினையும் இந்த வகையில் கவனிப்பிற்குரியது. இப்பயணத்தில் மற்றுமொரு நீட்சியாக கைலாசபதியை பதிவு செய்யலாம்.
நவீன இலக்கிய விமர்சனமுறையில் ஒவ்வொரு படைப்பின் சுயாதீனமிக்க தன்னிறைவு குறித்தும், அதன் கட்டமைப்பு, மொழி சொல்லாக்கம், அமைப்பாக்கம், உத்திகளின் பங்களிப்பு தொடர்புடைய அகக்கூறுகளில் அதிக கவனத்தைக் கோரியது. இந்நிலையில் கைலாசபதியின் திறனாய்வுமுறை தொன்மை இனக்குழு, அடிமைச் சமூகம், நிலவுடமை மற்றும் முதலாளியச் சமூகம் என்பதான வரலாற்றுக்கால பொருள் முதல்வாத அடிப்படையை மார்க்சீய கோட்பாட்டிலிருந்து தருவித்துக் கொண்டு ஆய்வினை முன்வைத்தது.
இந்திய மார்க்சீய மூலவர்களான தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, டிடிகோசம்பி, சர்தேசாய் மற்றும் ஜோர்ஜ் பொலிட்சர், ராகுல் சங்கிருத்தியாயன் சிந்தனை முறைகளிலிருந்தும், தனக்கானதொரு தனித்த இயங்கியல் பார்வையை உள்வாங்கிக் கொண்டதால் தான் கைலாசபதியால் கோட்பாட்டு சார்ந்த விரிவானதொரு ஆய்வியல் தாக்கத்தை திறனாய்வுத்துறையில் செலுத்த முடிந்தது. இதேகாலத்தில் தமிழகத்தின் பேராசிரியர். வானமாமலை, ஆர்.கே.கண்ணன், தொமுசி ரகுநாதன் மார்க்சீய ஆய்வு முறையியலை பயன்படுத்திய குறிப்பிடத்தக்க அறிஞர்களாக இருந்தனர். இன்றைய மறுவிவாதத்தில் மார்க்சீயத்தை பொருளாதாரவாதமாக ஒற்றைப்படுத்தி பார்ப்பதை தாண்டி குடும்பம், மொழி, சாதி, சடங்கு, சமயம், கலாச்சாரம், சமூக மனோபாவங்கள், ஊடக அரசியல், நகல் உண்மைகள் சார்ந்த வெளிகளை பன்மைத்தன்மையோடு அணுகுவதற்கான பார்வை உருவாகியுள்ளது. மேற்கத்திய மார்க்சீயத்திற்கு புதுப்பரிமாணங்களையளித்த அந்தோனியா கிராம்சி வால்டர் பெஞ்சமின், ஜீன்பால் சார்த்தர் என சிந்தனையாளர்களின் வரிசை தொடர்கிறது. அமெரிக்க மார்க்சியரான பிரடிரிக்ஜேம்சனின் இலக்கிய விமர்சனமான மார்க்சீயமும் உருவமும் (1961) பின்நவீனத்துவம் – பின்னை முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கம் (Post madernism or The Cultural Logie of Late Capitalism – 1991) எதிர்காலத்தின் கல்வெட்டுகள் (Archaelogies of the Future – 2005) உள்ளிட்ட பல நூல்கள் மார்க்சீய தளத்தில் தீவிரமான வாசிப்பை கோருபவை. இத்தகையதான மாறிவரும் சூழல்களை உள்வாங்கி இயங்கும் கார்த்திகேசுசிவத்தம்பி உள்ளிட்ட மார்க்சீயர்கள் கைலாசபதிக்கு பிறகான கால மற்றும் சிந்தனை இடைவெளிகளை நிரப்புகிறார்கள்.
தமிழ்நாவல் இலக்கியத்தில் கைலாசபதி முன்னிறுத்திப் பேசிய கற்பனாவாதம், இயற்பண்பு வாதம், யதார்த்தவாதம் குறித்த கருத்தாக்கங்கள் தனது பழைய இருப்பை பறிகொடுத்துள்ளன. நில பிரபுத்துவ பிரதிபலிப்பின் அடையாளமாக கற்பனாவாதமும், முதலாளித்துவ சமூக அமைப்பை சில சீர்திருத்தங்களோடு ஏற்றுக் கொள்வதான இயற் பண்புவாதமும், சோசலிச புரட்சி நோக்கிய தூண்டுகோலாக யதார்த்தவாதமும் என பொருளாதார அளவுகோலினால் மதிப்பிடும் முறையியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு படைப்பு பிரதி நிலப்பிரபு x விவசாயி / முதலாளி x தொழிலாளி / அரசு எந்திரம் x நடுத்தரவர்க்கம் என்பதான இருமை எதிர்வுகளால் மட்டுமே கட்டமைக்கப்படுகிறது என்பதான வர்க்கதார்த்தம் தனது பார்வையை கலாச்சார யதார்த்த வெளிகளிலும் விரிவுபடுத்தியுள்ளது. அடித்தளமக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், தொன்மங்கள், வாழ்வின் ரகசியங்கள், புனைவு எழுத்தாக உருக்கொள்கிறது. மையம் தாண்டி விளிம்பு நிலை வாழ்வின் யதார்த்தம் முதன்மைப்படுத்தவும் படுகிறது. துவக்கம்-நடு-முடிவு என்பதான சுழற்சியை தாண்டி நேரற்ற கதை சொல்லினில் காலத்தின் ஒழுங்கும் குலைத்துப் போடப்படுகிறது.
பின்னைக்காலனிய நாடுகளின் எழுத்து முறையாக மாந்திரீக யதார்த்தம் (magical Realism) தனது தீவிர செல்வாக்கை செலுத்துகிறது. ஒரு யதார்த்தத்தை விநோதமிக்க புனைவாக படைத்துக் காட்டும் முறையிலாகி உள்ளது.
லத்தீன் அமெரிக்க புனை கதையாளர் போர்ஹேயின் வார்த்தையில் ”அச்சாக அப்படியே சித்தரிக்கப்பட்டாலும் கதையில் வரும் கழுதை நிஜக் கழுதை இல்லை. கதைக் கழுதை. அப்படியானால் ஏன் அதற்கு ஐந்து கால்கள் இருக்கக்கூடாது” என்பதாகவும் இதனை சொல்லிப் பார்க்கலாம்.
சமகால யதார்த்தத்தை அதீத புனைவுகளின் மூலம் வேறுவிதமாக சொல்லிப் பார்க்கும் சமகாலப் படைப்புலகம் ஜால வினோதம் (magical Fantacy) கதை மீறும் கதை (metafiction) விஞ்ஞானப் புனைவு (Science Fiction) என பல வடிவம் பெற்று புதிய கதை சொல்லல் முறைகளாக மறுஉருவாக்கம் பெற்றுள்ளன. கைலாசபதியை முன்வைத்து இதுகுறித்த இவ்விவாதங்களை இன்னும் தொடர நிறைய சாத்தியங்கள் இருக்கிறது.

(கைலாசபதி தளமும் வளமும் / தொகுப்பு நூல் பக்கம்: 164, விலை : ரூ. 250/- கைலாசபதி ஆய்வு வட்டம், கொழும்பு – 6.)

mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்