கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

அக்னிபுத்திரன்


கடந்த இரு ஆண்டுகளாக திமுகழக ஆட்சியின் கீழ் தமிழகம் பல்வேறு துறைகளிலும் துரிதமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இன்றைய சூழலில் தொழிற்துறையாகட்டும் அல்லது மக்களிடம் நிலவும் பணப்புழக்கமாகட்டும் நல்லதோர் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இச்சூழலில் கலைஞரின் புகழும் திமுகழகத்தின் செல்வாக்கும் மக்கள் இடையே அதிகரித்துவரும் நிலையைச் சகித்துக்கொள்ள இயலாதவர்கள் குட்டையைக் குழப்பி அரசியல் அறுவடை நிகழ்த்தலாம் என்று எண்ணியும் ஏங்கியும் ‘நூல்’ விடத் தொடங்கியிருக்கிறார்கள். புலி வருது புலி வருது என்று புழுகிப்பார்த்தார்கள். தற்போது கூட்டணியை உடைக்க முடியுமா என்று முயன்று பார்க்கிறார்கள்.

சமுதாயத்தில் சீர்திருத்தம்; பொருளாதாரத்தில் சமதர்மக் கொள்கை; அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்திய விடுதலை” என்ற கொள்கைகளோடு தமிழர்கள்/ தமிழ்மொழி நலன்களை முன்னிருத்தி தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி செல்லும்போதெல்லாம் இந்த வக்கரப்புத்தி கொண்ட வஞ்சகர்கள் (உண்மையான) திராவிட இயக்க ஆட்சிக்கு பல்வேறு வகையிலும் தொல்லைகள் கொடுப்பார்கள். இது காலங்காலமாக தமிழக அரசியலைக் கூர்ந்து கவனிப்பார்களுக்குத் தெற்றென விளங்கும்.

அண்மையில் தினமணி செய்தித்தாளில் அரசியல் கட்டுரைகள் என்ற பெயரில் நச்சுக்கருத்துகளை நயவஞ்சகமாக அல்ல, நேரடியாகவே பரப்பி நூல்விடத் தொடங்கியிருக்கிறார்கள்.

பொறாமை, வயிற்றெரிச்சல், வஞ்சகம் இவை எல்லாம் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் இந்த அளவுக்கு நேரடியாக வெளிப்படுத்திக்காட்ட முடியுமா என்கின்ற அளவுக்குப் பத்திரிக்கைத் தர்மத்தையும் மீறிச் செயல்பட முடியும் என்பதற்கு ஆதாரமாக அமைந்தள்ளன அக்கட்டுரைகள்.

15–ந்தேதி வெள்ளிக்கிழமை அர்த்தமுள்ள அறிவுரை என்ற கட்டுரையையும்
16–ந்தேதி சனிக்கிழமையன்று கருணாநிதி கோபப்படுவது ஏன்? என்ற கட்டுரையும் தினமணி (இணையப்பக்கத்தில்) பிரசுரித்திருக்கிறது.

பிரசுரித்திருக்கிறது என்பதை விட காந்தாரிகளால் பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அதைத் தினமணி வெளியிட்டு, ஆண்டாண்டுக் கால இனப்பகையை இன்னமும் நாங்கள் மறக்கவில்லை என்று மார்த்தட்டியிருக்கின்றது.

திமுகழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சிண்டு முடியும் வேலையை இந்த சிண்டுகள் மிகக் கச்சிதமாக அரங்கேற்ற முயன்றுள்ளன. பொதுவுடைமைக்கட்சியிடமிருந்து திமுகழகத்தைப் பிரித்துத் தனிமைப்படுத்த நச்சுக்கருத்துகளை தந்திரமாகத் தந்திருக்கிறார்கள்.

கேட்பவன் கேனையனாக இருந்தால் எலி ஏரோப்பிளேன் ஓட்டியது என்கிற ரீதியில் பேசக்கூடியவர்கள் இவர்கள். தமிழர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவன் தொடையில் கயிறு திரித்த அந்தக்காலம் மலையேறிவிட்டது என்று இந்த மக்குகளுக்கு இன்னும் புரியாமல் இருப்பதுதான் விசித்திரத்திலும் விசித்திரம்.

எதை வேண்டுமானாலும் எழுதலாம் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்கும் இந்த எத்தர்களுக்கு இனி ஏமாற்றம்தான். தமிழன் இப்போது விழித்துக்கொண்டான். திராவிட ஆட்சியின் விளைவாக பெரும்பான்மையான தமிழர்கள் கல்வி மற்றும் பொருளாதாரநிலையில் வியத்தகு முன்னேற்றம் கண்டதன் விளைவுதான் பித்தலாட்டமான செய்திகள் தற்போது தமிழக மக்களிடம் எடுபடுவதில்லை.

இனி தினமணி கட்டுரைகளைச் சற்றுப் பார்ப்போம். அர்த்தமுள்ள அறிவுரை என்ற கட்டுரையில் ஏதேதோ நீட்டி முழக்கி, பொதுவுடமைக் கட்சிகளுக்கும் திமுகழகத்திற்கும் பிரச்சினை உருவாக்கி அதன்வழி திமுகழகத்தைத் தனிமைப்படுத்த முயற்சிக்கும் குள்ளநரித்தனம் தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகின்றது. பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் உண்மையின் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். மதவாத சக்திகள் பிரித்தாளும் தந்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சூழ்ச்சிவலை விரிக்க முற்படுகின்றன. அரசியல் ஆதாயத்திற்காக ‘ஆ’வென வாயைப் பிளந்துகொண்டு கூட்டணிக்கட்சிகளின் ஒற்றுமைக்கு உலை வைக்க என்னென்ன வழிகளைக் கடைப்பிடிக்கலாம் என்ற சிந்தனையில் உலவத் தொடங்கியிருக்கிறார்கள் இந்த உன்மத்தர்கள். மீண்டும் மதவாதச்சக்திகள் தலை தூக்க முயற்சிக்கின்றன. எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கம்னியூஸ்ட் கட்சிகள் சிறுபான்மையினருக்கும் திமுகழகத்திற்கும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். மதவாதச்சக்திகள் தமிழகத்திலிருந்து மொத்தமாக விரட்டியடிக்க பொதுவுடமைக் கட்சிகள் தங்கள் பங்கையாற்ற சற்றும் தயங்கக் கூடாது. இது பெரியார் பிறந்த புண்ணியபூமி என்பதை உலகுக்கு நிரூபிக்க வேண்டும்.

தினமணியின் மற்றொரு கட்டுரை கருணாநிதி கோபப்படுவது ஏன்? திமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே உரசலை உருவாக்கவும் காங்கிரஸ் கட்சி, திமுகழகம் உறவை முறித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்திலும் உருவாக்கப்பட்ட கட்டுரை இது.

அக்கட்டுரையில் ஓரிடத்தில், ”காங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தவறான கருத்து என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. எத்தனையோ தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி மிகச்சிறப்பான வெற்றி பெற்றிருக்கின்றது. முழுப்பூசனிக்காயைச் சோற்றிலே மறைக்க முயலுகிறார்கள். 1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 166 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததை இவர்கள் வசதியாக மறந்துவிட்டதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

ஆதாரமற்ற கருத்துகள் கட்டுரை முழுவதும் திணிக்கப்பட்டு என்னமோ காங்கிரஸ்காரர்களுக்குத் திமுகழகம் எட்டிக்காய் என்பதுபோல கட்டுரை தீட்டப்பட்டிருக்கிறது.

மேலும் அக்கட்டுரையில் வரும் சில கருத்துகள் இவை:

காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வாம்!

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, “ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்’ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லையாம்!!

ஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறதாம்!!!

அட அட என்ன கரிசனம் தினமணிக்கு!

கூட்டணியில் இருந்துகொண்டு வேறு ஒரு கட்சியின் தலைவரிடம் சுந்திர தெலுங்கில் அரசியல் பேசுவார்களாம். அதையும் நேரம் வரும்போது மட்டும்தான் வெளியிடுவார்களாம்! இந்நிகழ்வைத் திமுகழகம் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.

தமிழகமும் தமிழர்களும் அன்னை சோனியாகாந்திக்குக் நன்றியுடையவர்கள்தாம். ஆனால் சில காங்கிரஸ்கார்கள் நண்டு கொழுத்தால் வலையில் தங்காத ரகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.

கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

– .

Series Navigation