கலைஞர் தாக்கரே ஜெயராம் – இல்லாத வெளிக்குழுவும் எப்போதும் நம் குழுவும்

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

சின்னக்கருப்பன்


இது கலைஞர்.

”மும்பையில் மராத்தியர்களுக்குத் தான் முன்னுரிமை, மற்றவர்களை விட மாட்டோம் என்றெல்லாம் ராஜ் தாக்கரே சொல்லியிருக்கிறார். அவரது இந்தக் கருத்துக்கு மராட்டியத்திலேயே ஆதரவு இருப்பதாக நான் கருதவில்லை. ”

ஜெயராம்.

‘என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. ‘போத்து’ (எருமை) மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி ‘சைட்’ அடிக்க முடியும்?’

வடவர் நம்மவருமல்ல நல்லவருமல்ல என்ற கோஷத்துடன் இனவாத பிரிவினை பேசி அரசியலை ஆரம்பித்த இயக்கத்தை கட்டிக்காக்கும் கலைஞர், மராட்டியத்தில் அப்படிப்பட்ட நிலை வந்துவிடக்கூடாது என்று விரும்புகிறார்.

வடவராக தமிழ் பிராம்மணர்களை கற்பனை செய்து அவர்களை வெளிக்குழுவாகவும், மற்ற தமிழர்களை தன்குழுவாகவும் உருவாக்கி அரசியலை தோற்றுவித்து அதனை இன்று ஆளும் சிந்தனையாக ஆக்கியுள்ள திராவிட இயக்கம் எப்படிப்பட்ட சிந்தனாவாதிகளை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து தமிழ் பிராம்மணர்களை இழிவுபடுத்தியும் தமிழ் பிராம்மண பெண்களை இழிவு படுத்தியும் தொடர்ந்து மேடைப்பேச்சுகளையும், எழுத்தோவியங்களை வரைந்து தள்ளியிருக்கும் திராவிட இயக்கத்தினர் இன்று தமிழச்சிகள் இழிவு படுத்தப்படுவதாக கொந்தளிக்கிறார்கள்.

இதே திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல்களான சீமான் தங்கர்பச்சான் போன்றோர் (எப்போதுமே சினிமா கலைஞர்களே திராவிட இயக்கத்தின் தூண்களாக இருப்பார்கள் என்பதனால்தானோ என்னவோ சினிமா தொழிற்சாலை தவிர மற்ற தொழில்களை கலைஞர் அங்கீகரிப்பதில்லையோ?) ஜெயராமின் பேச்சுக்கு கொந்தளித்திருக்கிறார்கள். இதே சீமானும் தங்கர்பச்சானும் தமிழ் பிராம்மண பெண்களை அவதூறு செய்தபோது அது தமிழர் உணர்விலேயே படாத ரகசியமென்ன?

இப்போதும் தினமணி கார்ட்டூனிஸ் மதி, கலைஞரை கிண்டலடிக்கும் கார்ட்டூன்களை வரைந்ததும் அவருக்கு குடுமி பூணூல் போட்டுவிட்டு அவதூறு செய்வதும் கலைஞரின் பத்திரிக்கைகள்தான்.

சமூகம் என்பது ஒரு ஒப்பந்தம். ஊர் பேர் மொழி இனம் தெரியாதவர்கள் இரவில் திண்ணையில் படுத்து தூங்கிச்செல்ல வீடு தோறும் திண்ணை கட்டி கொடுத்த இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் நாம். ஏனெனில் நம் வீட்டிலிருந்தும் ஒருவர் அதே போல தேசாந்திரம் சென்றிருப்பார். எங்கோ அவர் நிம்மதியாக தூங்கிச்செல்வதற்கு மாறாக நாம் ஊர் பேர் மொழி இனம் தெரியாதவர்களுக்கு திண்ணை கட்டிக்கொடுத்தோம்.

ராமேஸ்வரத்திலிருந்து காசி சென்றோம். காசியிலிருந்து ராமேஸ்வரம் வருபவர்களை வரவேற்றோம். தீர்த்தயாத்திரை சென்றவர்களை போற்றினோம். இனமோ மொழியோ நம் மக்களுக்கு என்றும் தடையாக இருந்ததில்லை. ஆங்கிலேயர்கள் வந்த பின்னும், அவர்கள் உருவாக்கி கொடுத்த இனவாதத்தை பிடித்து அரசியல்வாதிகள் உணர்வைத்தூண்டி தன் குழு வெளிக்குழு என்று கற்பனையாக உருவாக்கி மக்களை மக்கள் வெறுக்கும் வெறுப்பு அரசியலை உருவாக்கிய பின்னரும் மக்களிடம் இயல்பான மனிதாபிமானம் மறைந்துவிடவில்லை.

நகைச்சுவையின் ஊடே நாம் சுவர்களை தாண்டுகிறோம். அதனால்தான் சீக்கியர்கள் கிண்டலடிக்கப்படுகிறார்கள். வடக்கின் உத்தர பிரதேச பையாக்கள் கிண்டலடிக்கப்படுகிறார்கள். தெற்கின் மதராஸிகள் கிண்டலடிக்கப்படுகிறார்கள். கேரளத்து மக்களின் இசை ஊடாடும் மொழி கிண்டலடிக்கப்படுகிறது. இந்த நகைச்சுவை நம் மனங்கள் உருவாக்கும் சுவர்களை உடைக்கிறது. அவர்களோடு தோழமை பாராட்ட வைக்கிறது.

ஜெயராம் செய்தது நகைச்சுவை. அல்லது நகைச்சுவையாக பேச அவரது முயற்சி. அந்த முயற்சி தோற்றிருக்கலாம். ஆனால் அது நகைச்சுவைதான். ஆனால், கலைஞரோ அல்லது தங்கர் பச்சானோ சீமானோ ராஜ் தாக்கரேயோ செய்வது நகைச்சுவை அல்ல. அது வெறுப்பு அரசியல்.

ஆன்மீகம் நம் மக்களை இணைக்கிறது. நகைச்சுவை நம் மக்களை இணைக்கிறது. தமிழில் இருக்கும் ஏராளமான வட மொழி சொற்கள் நம்மை இணைக்கின்றன. வடமொழியில் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் நம்மை இணைக்கின்றன. இப்போது இந்தியாவின் வளர்ச்சியின் காரணமாக மாநிலங்கள் தாண்டி சென்று பல்வேறு உயர் தொழில்நுட்பங்களில் வேலை புரியும் நம் இளைஞர்களும் இளைஞிகளும் நம்மை இணைக்கிறார்கள்.

ஆனால் பழங்காலத்திய வெறுப்பியல் அரசியல்வாதிகள் மறைந்துவிடவில்லை. அவர்களின் காலம் முடிந்துவருகிறது. இன்று கலைஞரின் குடும்ப தொலைக்காட்சிகள் கேரளா, கர்னாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் அந்தந்த மொழிகளில் வெளிவருகின்றன. இந்த வெறுப்பியல் அரசியலை இந்தியாவில் தோற்றுவித்த அரசியல் கட்சியின் முடிவு அப்படியிருந்தால், அது வரவேற்கத்தக்கதுதான். அதனை எவ்வளவு சீக்கிரம் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

 

Series Navigation